Thursday 28th of March 2024 11:52:48 AM GMT

LANGUAGE - TAMIL
தனிச் சிங்களத்தில் தேசிய கீதம் பாடி இனமுறுகலுக்கு வித்திடாதீர்!!

தனிச் சிங்களத்தில் தேசிய கீதம் பாடி இனமுறுகலுக்கு வித்திடாதீர்!!


"ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய அரசு கையாளும் மாற்றமானது எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத விதத்தில் அமைந்துள்ளது. இதுவரை காலமாக தமிழ் மக்கள் உணர்ந்துவந்த அடக்குமுறை மேலும் பலமடையும் வகையில் இந்த அரசு செயற்படுகின்றது. தமிழ்மொழியில் தேசிய கீதம் பாட வேண்டாம் எனவும், தனிச் சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம் பாட வேண்டும் எனவும் கோட்டாபய அரசு கூறுவதானது மீண்டும் இந்த நாட்டில் இனங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்த இந்த அரசே வித்திடுவதாக அமையும்."

- இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா நேற்றுத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

"சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகளில் நாம் இன்று கலந்துகொண்டிருந்தோம். வடமராட்சி கிழக்கு - கட்டைக்காடு பிரதேசத்தில் நான் கலந்துகொண்டிருந்த நிகழ்வில் தேசியகீதம் சிங்கள மொழியில் மாத்திரம் பாடப்பட்டது.

அந்த நிகழ்வில் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியும் இருந்தார். இதுவரை காலமாக தமிழில் பாடப்பட்ட தேசிய கீதமானது இப்போது புதிய அரசு வந்த பின்னர் நிறுத்தப்பட்டுள்ளது.

இன்று தமிழ் மக்கள் முழுமையாகப் புறக்கணிக்கப்படும் விதத்தில் இந்த அரசு செயற்படுகின்றது. இதனை நான் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி முன்னிலையிலேயே கூறினேன்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்து அமைத்துள்ள புதிய அரசு செய்துவரும் மாற்றங்கள் எதுவும் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.

நாம் கடந்த காலங்களில் நல்லிணக்கம் உருவாக்கப்பட வேண்டும், தேசிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் மிகவும் பொறுமையாகச் செயற்பட்டு பேச்சுகள் மூலமாக சுமுகமாக நிலைமைகளைக் கையாண்டு வந்தோம். ஆனால், இன்று அரசு தமிழ் மக்களை இலக்கு வைத்து முன்னெடுக்கும் செயற்பாடுகள் தமிழ் மக்களை பொறுமை இழக்க வைக்கும் விதத்தில் அமைகின்றது.

"இந்த நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த போதிலும் தமிழ் மக்களுக்கு இன்னமும் சுதந்திரம் கிடைக்கவில்லை" என்று தந்தை செல்வா ஒருமுறை கூறினார். அதை மீண்டும் மீண்டும் உறுதிப்படும் வகையில் இந்த அரசு செயற்பட்டு வருகின்றது.

கடந்த காலங்களில் தமிழ் மக்கள் நிம்மதியாகச் சுவாசிக்க சற்று இடம் கிடைத்தது. அதற்குள் மீண்டும் இந்த அரசு இனவாதம், பிரிவினைவாதக் கொள்கைகளை முன்னிறுத்தி தமிழ் இனத்தை ஓரங்கட்ட வைக்கின்றது.

இந்த நாட்டில் பிளவுகள் ஏற்பட வேறு யாரும் காரணம் அல்ல. அரசே இவை அனைத்துக்கும் பொறுப்புக்கூற வேண்டும்.

ஒருவேளை வருகின்ற சுதந்திர தினத்தன்று தமிழ் மொழியில் தேசிய கீதம் பாட வேண்டாம் என அரசு கூறுமானால் அன்றில் இருந்து இந்த நாட்டில் இன முரண்பாடுகள் மற்றும் பிளவுகள் பலமடையும் என்பதை ஜனாதிபதிக்கும் இந்த அரசுக்கும் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்" - என்றார்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE