Thursday 28th of March 2024 09:59:51 AM GMT

LANGUAGE - TAMIL
உருவாகிவரும் புதிய அரசியல் கலாசாரம்!
உருவாகிவரும் புதிய அரசியல் கலாசாரம்!

உருவாகிவரும் புதிய அரசியல் கலாசாரம்!


தண்டனைகளில் இருந்து விலகி இருக்கின்ற கலாசாரம் ஒரு புதிய போக்காக அரசியலில் பரிணமித்திருக்கின்றது. இதனை நிரந்தரமானதோர் அரசியல் கலாசாரமாத் தொடர்ந்து கடைப்பிடிப்பதற்கான தந்திரோபாயச் செயற்பாடுகளே இப்போது முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

நல்லாட்சி அரசாங்கம் பெயரளவில் மட்டுமே நன்மையானதாக ஐந்து வருட காலத்தைக் கழித்துவிட்டு அடங்கிப் போனதன் பின்னர் புதிய ஆட்சியில் இந்த அரசியல் போக்கு வலிமை மிகுந்தாகத் தலையெடுத்துள்ளது.

நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டபோது, மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்கள், போர்க்குற்றங்கள் போன்றவற்றில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த மகிந்த ராஜபக்ச அரசு தேர்தலில் தோல்வியடைந்தது.

யுத்தத்தில் வெற்றி பெற்று சிங்கள மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த ஓர் அரசுக்குக் கிடைத்த இந்தத் தேர்தல் தோல்வியை, அதன் ஆட்சியாளர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. பேரதிர்ச்சியாக வந்திறங்கிய அந்தத் தோல்வியில் அவர்கள் துவண்டு போனார்கள்.

தேர்தலில் வெற்றிபெற்றிருந்த நல்லாட்சியை உருவாக்கியவர்கள் குற்றச் செயல்களிலும், ஊழல்களிலும் மோசடிகளிலும் ஈடுபட்டிருந்த முன்னாள் ஆட்சியாளர்களைத் தண்டித்து நாட்டில் ஒரு நல்ல ஆட்சியை நடத்தப் போவதாக வாக்குறுதி அளித்திருந்தார்கள். ஆனால் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பின்னர், அந்த உறுதி மொழியை அவர்கள் நிறைவேற்றவே இல்லை. அதேபோன்று இறுதி யுத்தத்தின்போது இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான உரிமை மீறல்கள், போர்க்குற்றச் செயற்பாடுகள் என்பவற்றிற்கு பொறுப்பு கூறுவதாக ஐநா மனித உரிமைப் பேரவைக்கு அளித்த உறுதி மொழியையும் அவர்கள் முறையாக நிறைவேற்றவில்லை.

யுத்தத்தின் பின்னர் நிலைநிறுத்தி இருக்க வேண்டிய நிலைமாறுகால நீதியை நிலைநாட்டுவதற்குரிய பொறிமுறைகளை உருவாக்கி பொறுப்பு கூறும் கடப்பாட்டை நிறைவேற்றப் போவதாக ஐநா மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்களுக்கு நல்லாட்சி அரசாங்கம் இணை அனுசரணை வழங்கி உறுதியளித்திருந்தது.

ஆனால் அதற்குரிய பொறிமுறைகளை நிறைவேற்றுவதில் காலத்தை இழுத்தடித்து, மேலும் மேலும் கால அவகாசத்தைப் பெறுவதிலேயே அவர்கள் குறியாக இருந்தார்கள். சர்வதேசத்திற்கு அளித்த அந்த உறுதிமொழியை நிறைவேற்றுவதற்குரிய நடவடிக்கைகளை அவர்கள் முறையாக முன்னெடுக்கவில்லை.

இதனால் நல்லாட்சி அரசாங்கத்தில் ஊழல்கள், மோசடிகளில் ஈடுபட்டவர்களும், தண்டனை பெற வேண்டிய மோசமான உரிமை மீறல்கள், போர்க்குற்றச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தவர்களும் தண்டனை பெறுவதில் இருந்து தப்பி இருந்தார்கள்.

முன்னதாகக் குற்றம் புரிந்தவர்கள் தண்டனை பெறுவதில் இருந்து தப்பிக் கொள்வதை, உரித்துடைய நடவடிக்கையாக யுத்தத்தில் வெற்றி பெற்றிருந்த முன்னாள் ஜனாதிபித மகிந்த ராஜபக்ச அரசாங்கம் அனுமதித்திருந்தது. அந்தத் தண்டனை விலக்கீட்டு சலுகைக்கு அல்லது உரிமைக்கு அந்த ஆட்சியில் ஓர் அரசியல் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது என்றே கூற வேண்டும். ஏனெனில் மனித உரிமை மீறல்களிலும், சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்களிலும், போர்க்குற்றச் செயற்பாடுகளிலும் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் பலருக்கும் அப்பொது பதவி உயர்வு வழங்கப்பட்டது. வெளிவிவகாரம் தொடர்பிலான இராஜதந்திர அந்தஸ்திலான பதவிகளில் அவர்களுக்கு நியமனங்களும் வழங்கப்பட்டது.

எதேச்சதிகார ஆட்சி நடத்திய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்திற்குப் பதிலாக நல்லாட்சியை உருவாக்கி ஜனநாயகத்திற்கு உயிர் கொடுக்கப் போவதாக மக்களிடம் ஆணை பெற்று ஆட்சி அமைத்த நல்லாட்சி அரசாங்க ஆட்சியாளர்களும் கிட்டத்தட்ட முன்னைய ஆட்சியாளர்களின் போக்கையே கடைப்பிடித்திருந்தனர்.

போர்க்குற்றம் புரிந்தவர்களுக்குப் பதவி உயர்வும் புதிய பதவிகளும் வழங்கப்பட்டன. ஊழல்கள் மோசடிகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக ஒப்புக்காக விசாரணைகள் நடத்தப்பட்டு பெயரளவிலேயே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. முறையான விசாரணைகள் நடத்தப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக நீதிவிசாரணைகள் நடத்தப்பட்டு தண்டனை வழங்கப்படவுமில்லை.

இதனால் நல்லாட்சி அரசாங்கத்திலும் தண்டனை பெறுவதில் இருந்து தப்பிக் கொள்கின்ற கலாசாரம் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. நல்லாட்சியின்போது, நாட்டு மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை. அவர்கள் எதிர்பார்த்த வகையில் ஆட்சி நடத்தப்படவில்லை அவர்கள் தேர்தலில் அளித்த ஆணைகளும் நிறைவேற்றப்படவில்லை. இதனால், நல்லாட்சி குறித்து அதிருப்தி உணர்வுக்கே அவர்கள் ஆளாகி இருந்தார்கள்.

மறுபுறத்தில் 2015 தேர்தலில் தோல்வியைச் சந்தித்து துவண்டிருந்த ராஜபக்சக்கள் தொடர்ந்து சோர்ந்தவர்களாக இருக்கவில்லை. மாறாக தோல்விகளையே வெற்றிக்கான படிக்கற்களாகப் பயன்படுத்துகின்ற திறமைசாலிகளின் போக்கைப் பின்பற்றி, 2019 ஜனாதிபதி தேர்தலை திட்டமிட்ட ரீதியில் எதிர்கொள்ளத் தம்மைத் தயார்ப்படுத்திக் கொண்டார்கள்.

நல்லாட்சி அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்திருந்த சிங்கள மக்களின் மனங்களை அவர்கள் சரியாகப் புரிந்து கொண்டு அந்த அதிருப்தி உணர்வைத் தமது தேர்தல் வெற்றிவாய்ப்புக்குரிய ஒரு நிலைமையாக மாற்றுவதில் தீவிரமாகச் செயற்பட்டிருந்தார்கள்.

அவர்களுடைய முயற்சிக்கான பரீட்சார்த்த களமாக நல்லாட்சி அரசாங்க காலத்தில் இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் அமைந்தது. அந்தத் தேர்தல் அவர்களுடைய முயற்சிக்குப் பாரிய வெற்றியை அளித்திருந்தது.

கூட்டாக ஆட்சி அதிகாரத்தைக் கொண்டிருந்த ஐக்கிய தேசிய கட்சியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இந்தத் தேர்தலில் தோல்வி அடைந்தன. ராஜபக்சக்களினால் புதிதாக உருவாக்கப்பட்ட பொதுஜன பெரமுன என்ற புதிய கட்சி சிங்கள மக்கள் மத்தியில் மட்டுமன்றி சிறுபான்மை இன மக்கள் மத்தியிலும் செல்வாக்கைப்பெற்று, சிறிலங்கா சுதந்திரக் கட்சியை தேர்தலில் படுதோல்வி அடையச் செய்திருந்தது.

அந்தத் தேர்தல் வெற்றியையே தனது அடுத்த தேர்தலுக்கான முதலீடாகக் கொண்ட ராஜபக்ச அணியினர் இனவாத பிரசாரத்தை வலிமையாக முன்னெடுத்தார்கள். அந்தப் பிரசாரத்தின் மூலம் 2019 ஜனாதிபதி தேர்தலில் அவர்கள் அமோகமாக வெற்றியீட்டினர். தேர்தலில் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டிருந்த முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், எதேச்சதிகாரப் போக்கில் ஆட்சி நடத்திய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சகோதரருமான கோத்தாபாய ராஜபக்ச வரலாற்றுப் பெருமை மிக்க வகையில் வெற்றியடைந்தார்.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தகாலத்தில் பாதுகாப்பு அசைம்சின் செயலாளராக இருந்த கோத்தாபாய ராஜபக்ச மீது மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் உள்ளிட்ட விடயங்களில் குற்றங்கள் சுமத்தப்பட்டிருந்தன. சர்வதேச அளவிலும், உள்நாட்டிலும் இந்தக் குற்றச்சாட்டுககள் முன்வைக்கப்பட்டு வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அத்தகைய ஒருவரையே சிங்கள மக்கள் ஏகோபித்த வாக்களிப்பின் மூலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தெரிவு செய்தனர்.

ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள ஒருவருக்கு எதிராகக் குற்றம் சாட்டவோ, நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவோ முடியாது. அந்த வகையில் ஜனாதிபதியாக உள்ள ஒருவருக்கு அரசியலமைப்பில் குற்ற விலக்கீட்டு உரிமை அளிக்கப்பட்டுள்ளது.

இதனயைடுத்து கோத்தாபாயவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்குகள் செயலற்றுப் போயின. குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நடத்தப்பட்டு வந்த விசாரணைகளும் மற்றுப் பெறாமலே கிடப்பில் போடப்பட்டன.

.இந்தப் பின்னணியில் ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் பணி ஓய்வு பெற்றுள்ள மேஜர் ஜெனரல் கமால் குணரட்னவை ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமித்தார். ஆனால் பாதுகாப்பு அமைச்சராக எவரும் நியமிக்கப்படவில்லை. அவரும் அந்த அமைச்சை பொறுப்பேற்கவுமில்லை. அதற்கு 19 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் இடமளிக்கவில்லை. அதனால், பாதுகாப்பு அமைச்சுப் பொறுப்பை தன்னுடன் வைத்துக் கொள்ள அவரால் இயலாமல் போய்விட்டது.

தனி ஒரு அமைச்சின் கீழுள்ள சட்டம் ஒழுங்கு விவகாரங்களையும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்ததுடன், புலனாய்வுத் துறையின் முக்கிய பதவிகளில் ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச தனக்கு வேண்டிய இராணுவ துறைசார்ந்தவர்களை நியமனம் செய்தார்.

அவரால் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன மீது ஏற்கனவே போர்க்குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இறுதிச் சண்டைகளின்போது, போர்க்களத்தில் இராணுவத்தினருக்குத் தலைமை தாங்கிய மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மீதும் ஏற்கனவே மனித உரிமை மீறல்களும் போர்க்குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்பட்டிருந்தன. ஆயினும், இவரை லெப்டினன் ஜெனரலாகத் தரமுயர்த்தி இலங்கையின் இராணுவத் தளபதியாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்திருந்தார்.

இந்த இரண்டு நியமனங்களும் சர்வதேச அளவில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகின. இந்த நியமனங்கள் இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் சீரடைவதற்கப் பதிலாக மோசமடைந்ததன் அளவீடாகவே சர்வதேசத்தினால் நோக்கப்படுகின்றன.

மேஜர் ஜெனரல் கமால் குணரட்னவின் நியமனம் உள்ளிட்ட விடயங்களுடன் புதிய அரச தலைவராகிய ஜனாதிபதி கோத்தாபாயவின் தலைமையிலான அரசாங்கம் நிற்கவில்லை. மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றச் செயற்பாடுகள் தொடர்பிலான பொறுபு;பு கூறுகின்ற கடப்பாட்டிலான ஐநா மனித உரிமைகள் தீர்மானங்களை ஏற்கப் போவதில்லை என்றும் அதிரடியாக தெரிவித்துள்ளது. ஐநாவின் 30-1 தீர்மானத்தை மறுபரிவீலனை செய்வது குறித்தும் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் அரசாங்கத்தரப்பில் இருந்து ஒன்றுக்கும் மேற்பட்டவர்களின் கருத்துக்கள் வெளியாகி இருக்கின்றன.

தொடர்ந்து ஐநா பிரேரணையில் வலியுறுத்தப்பட்டவாறு பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கி புதிய சட்டம் ஒன்றைக் கொண்டு வருவதற்காக ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டிருந்த நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தையே தொடர்ந்து நடைமுறையில் கைக்கொள்ளப் போவதாகவும் அரச தரப்பில் இருந்து அறிவித்தல் வெளியாகி உள்ளது.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடுமையாக விமர்சித்துள்ளது. அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த நிலைப்பாட்டுக்கு எதிராக பொருளாதார ரீதியில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற தொனியிலான கருத்துக்களும் வெளியிடப்பட்டிருக்கின்றன.

போருக்குப் பின்னரான காலப்பகுதியில் மனித உரிமைகள் சார்ந்த விவகாரங்களில் சில நன்மைகள் அல்லது முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்தன. அவற்றை சீர்குலைக்கின்ற நடவடிக்கையாகவே பயங்கரவாதத் தடைச்சட்டத்தைத் தக்க வைப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சியை மனித உரிமைகள் கண்காணிப்பகம் நோக்கியுள்ளது.

மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது அறிக்கையில் போர்க்கால மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவும், புதிதாக நியமனம் பெற்றுள்ள ஏனைய அதிகாரிகளும் அண்மைக்காலமாக மனித உரிமைகள் சார்ந்த விவகாரங்களில் அடைந்துள்ள நன்மைகளை சிறிதும் தாமதிக்காமல் சீர்குலைக்கின்றனர் என்று குற்றம் சுமத்தி உள்ளது. குறிப்பாக பயங்கரவாதத் தடைச்சட்டத்தை ராஜபக்ச அரசாங்கம் தழுவி நிற்பதென்பது இலங்கையர்களின் உரிமைகள் பெரும் ஆபத்தில் இருக்கின்றன என்பதைக் காண்பிக்கும் அறிகுறியாகும் என்று சுட்டிக்காட்டி உள்ளது.

மனித உரிமைகள் கண்காணிப்பகம் அத்துடன் நிற்கவில்லை. மனித உரிமைகளுக்கான பாதுகாப்பு குறித்த உத்தரவாதத்தின் பேரில், ஐரோப்பிய ஒன்றியம் வர்த்தக வாய்ப்புக்களை இலங்கைக்கு வழங்கியுள்ள நிலையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்த வேண்டும் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்ரி வரிச் சலுகையானது, இலங்கையின் பொருளாதாரத்தில் முக்கிய அம்சமாக நோக்கப்படுகின்றது. இந்த வரிச்சலுகையைப் பெறுவதற்கு நாட்டின் மனித உரிமைகள் சர்வதேச தரத்தில் பாதுகாக்கப்பட வேண்டும். ஜனநாயக உரிமைகளும் அதேபோன்று பேணப்பட வேண்டும் என்ற நிபந்தனைகளின் அடிப்படையிலேயே இந்த வரிச்சலுகை வழங்கப்பட்டு வருகின்றது.

மனித உரிமை நிலைமைகள் நாட்டில் மோசமடைந்த ஒரு கட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியம் ஜிஎஸ்ரி வரிச்சலுகையை நிறுத்தி இருந்தது. மனித உரிமைகளில் முன்னேற்றம் காணப்பட்டதையடுத்தே மீண்டும் அந்த வரிச்சலுகை வழங்கப்பட்டது. இந்த வரிச்சலுகைகள் நிறுத்தப்பட்டபோது, அவற்றை மீளப் பெற்றுக்கொள்வதற்காக அப்போதைய அரசு பகீரத முயற்சிகளை மேற்கொண்டிருந்தது என்பது கவனத்திற்கு உரியது.

தற்காலிகமானது என 1978 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம் தன்னிச்சையான கைதுகள் மோசமான சித்திரவதைகள் என்பவற்றுக்கு வழிவகுத்திருந்தது. இந்தச் சட்டத்தின் கொடூரத் தன்மை குறித்து 2017 ஆம் ஆண்டிற்கான மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாதத் தடுப்பு தொடர்பிலான ஐநாவின் விசேட அறிக்கையாளர் எப்போதைக்குமான ஒழுங்குபடுத்தப்பட்ட சித்திரவதைக்கு வழிசமைத்திருந்ததாகக் குறிப்பிட்டிருந்தார். இதனையும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது அறிக்கையில் குறித்துக் காட்டியுள்ளது.

மிகக் கொடூரமாக மனித உரிமைகளை மீறுவதற்கும், அமைதி வழியில் எதிர்;ப்பு வெளியிடுவதை ஒடுக்குவதற்கும் ஒரு சட்டரீதியான அதிகாரத் தன்மையை இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டம் பல தசாப்தங்களாக அரசுகளுக்கு வழங்கி வந்துள்ளது. அத்தகைய சட்டத்தை ராஜபக்ச அரசாங்கம் தழுவி நிற்பதென்பது, இலங்கையர்களின் உரிமைகள் பெரும் ஆபத்தில் இருக்கின்றன என்பதையே காணிப்பிக்கின்றது என்று மனித உரிமைகள் காப்பகம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

மனித உரிமை மீறல்களுக்கும் சித்திரவதைகளுக்கும் மட்டும் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டம் அரச தரப்பினருக்கு அதிகாரம் வழங்கவில்லை. அத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் சட்டத்திற்கு உட்பட்ட வகையிலேயே செயற்பட்டார்கள் என்ற பாதுகாப்பு கவசத்தையும் அது வழங்குகின்றது.

எனவே பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் அதிகாரபூர்வமாக மனித உரிமைகளை மீறுபவர்களும், சித்திரவதைகளில் ஈடுபடுபவர்களும் அரச அதிகாரிகள் என்ற அந்தஸ்தில் குற்றச் செயல்களுக்கான தண்டனைகளைப் பெறுவதில் இருந்து தப்பிக் கொள்வதற்கும் இந்த நிலைமை வழியேற்படுத்துகின்றது.

இது அதி உயர்ந்த அரச மட்டத்தில் இருந்து பாதுகாப்புத் துறை சார்ந்த சாதாரண மட்டம் வரையிலான அரச அதிகாரிகள் அதிகார அந்தஸ்து பெற்றவர்களுக்கு உச்ச கட்டத்தில் தண்டனை விலக்கீட்டு உரிமையை சட்டரீதியாக வழங்குவதற்குரிய சந்தர்ப்பத்தை வழங்குகின்றது.

இந்தப் போக்கானது இழைக்கப்பட்ட குற்றங்களுக்குத் தண்டனை பெறுவதில் இருந்து விலக்கு பெறுகின்ற அரசியல் கலாசாரத்தை உருவாக்கி உள்ளது என்றுதானே பொருள்படுகின்றது?

இதனை புதிய ஆட்சியின் தண்டனை விலக்கீட்டுக் கலாசார அரசியல் என்று குறிப்பிடுவதில் தவறிருக்க முடியாதல்லவா?

அருவி இணையத்துக்காக பி.மாணிக்கவாசகம்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE