Thursday 25th of April 2024 08:24:27 AM GMT

LANGUAGE - TAMIL
இலங்கைக்கு இரகசிய ஆயுத விற்பனை அவுஸ்திரேலியாவின் குட்டு அம்பலமானது!

இலங்கைக்கு இரகசிய ஆயுத விற்பனை அவுஸ்திரேலியாவின் குட்டு அம்பலமானது!


போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டுவரும் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு அவுஸ்திரேலியா இரகசியமாக ஆயுதங்களை ஏற்றுமதி செய்து வருவதாக அந்நாட்டு மனித உரிமை அமைப்புக்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.

இவ்வாறான செயற்பாடுகள் 'நினைத்துப்பார்க்க முடியாதவை' என மனித உரிமைகள் குழுக்கள் விசனம் வெளியிட்டுள்ளன.

2018-19-ஆம் ஆண்டில் கொங்கோ ஜனநாயகக் குடியரசிற்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்ய அவுஸ்திரேலிய அரசு ஒப்புதல் அளித்ததாக தி கார்டியன் செவ்வாய்க்கிழமை வெளிப்படுத்தியது.

இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு 80 க்கும் மேற்பட்ட ஆயுத ஏற்றுமதி அனுமதிகளையும் அவுஸ்திரேலியா வழங்கியுள்ளது.

பல தசாப்தங்களாக வன்முறை, கிளர்ச்சிகள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் அரசியல் கொந்தளிப்புகள் மத்தியில் கொங்கோ அகப்பட்டுள்ளது.

அங்கு இனப் படுகொலைகள் மற்றும் கற்பழிப்புகள் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்தது.

கொங்கோவில் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் எனத் தெரிவித்துள்ள ஐ.நா. சிறுவர் பாதுகாப்பு நிதியம், அங்கு மில்லியன் கணக்கான குழந்தைகளுக்கு அவசர மனிதாபிமான உதவி தேவைப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதுபோன்ற சூழலில் உள்ள நாடுகளுக்கு தங்கள் அரசாங்கம் ஆயுத விற்பனை செய்வதை அவுஸ்திரேலியா மக்கள் அறிந்து அதிர்ச்சியடைவார்கள் என ஐ.நா. சிறுவர் பாதுகாப்பு நிதியத்தின் அவுஸ்திரேலியா தலைமை நிர்வாகி பால் ரொனால்ட்ஸ் கூறினார்.

அவுஸ்திரேலியா கொங்கோவுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்கிறது என்பதை நாங்கள் முன்னர் அறிந்திருக்கவில்லை என ரொனால்ட்ஸ் கார்டியனிடம் கூறியுள்ளார்.

போர்க்குற்றம் சாட்டப்பட்டுள்ள நாடுகளுக்கு மிக இரகசியமாக அவுஸ்திரேலிய ஆயுதங்களை விற்பனை செய்வது அங்கு நிலைமைகளை மேலும் சிக்கலாக்கக்கூடும்.

அவுஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் எங்கு செல்கின்றன? என்பதை அறிய பொதுமக்களுக்கு உரிமை உண்டு.

கொங்கோவில் 1997 முதல் 2003 வரை இடம்பெற்ற மிருகத்தனமான உள்நாட்டுப் போரில் ஐந்து மில்லியன் மக்கள் கொல்லப்பட்டனர்.

கொங்கோவுக்கான ஆயுத விற்பனை அவுஸ்திரேலியாவில் தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த தடை 2008 இல் நீக்கப்பட்டது. இருப்பினும் அனைத்து ஆயுத விற்பனையும் ஐ.நா.பாதுகாப்புக் குழுவிற்கு அறிவிக்கப்பட வேண்டும்.

எனினும் அவ்வாறு இல்லாமல் மிக இரகசியமாக கொங்கோவுக்கு அவுஸ்திரேலியா ஆயுதங்களை விற்றுள்ளது.

2018-19 நிதியாண்டில், அசுஸ்திரேலியா ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு 45, சவூதி அரேபியாவிற்கு 23, இலங்கைக்கு 14 மற்றும் கொங்கோ ஜனநாயக குடியரசிற்கு நான்கு ஆயுத ஏற்றுமதி அனுமதிகளை வழங்கியது.

இலங்கை உள்ளிட்ட நாடுகள் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவுஸ்திரேலியாவின் வெளிநாடுகளுக்கான இரகசிய ஆயுத விற்பனை, விற்கப்பட்ட ஆயுதங்களின் தொகை ஆகியவற்றை தகவல் அறியும் உரிமையின் கீழ் கார்டியன் பெற்று வெளிப்படுத்தியுள்ளது.

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ள நாடுகளுக்கு அவுஸ்திரேலியாவால் விற்கப்படும் ஆயுதங்கள் துஷ்பிரயோகங்களுக்கே வழிவகுக்கும் என மனித உரிமைகளுக்கான சர்வதேச சேவையின் இயக்குனர் பில் லிஞ்ச் தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இலங்கை மற்றும் கொங்கோ ஆகிய நாடுகளில் உள்ள அரசாங்கங்களும் இராணுவ மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களும் மிக மோசமான மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பானவர்கள். அல்லது உடந்தையாக இருந்தவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் தமது பொருட்கள், சேவைகள் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவோரிடம் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும் அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கும் நிறுவனங்களுக்கும் கடமை உள்ளது.

அவுஸ்திரேலியாவின் வெளிநாட்டு ஆயுத விற்பனையின் இரகசியம் நியாயமற்றது எனவும் மனித உரிமைகளுக்கான சர்வதேச சேவையின் இயக்குனர் பில் லிஞ்ச் கூறினார்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE