Thursday 28th of March 2024 07:56:34 AM GMT

LANGUAGE - TAMIL
ஓட்டைப் பானையில் நீரை வார்க்கும் நிலையில் அரசியல் சாணக்கியம்!
ஓட்டைப் பானையில் நீரை வார்க்கும் நிலையில் அரசியல் சாணக்கியம்!

ஓட்டைப் பானையில் நீரை வார்க்கும் நிலையில் அரசியல் சாணக்கியம்!


போராட்டமே தமிழ் மக்களின் வாழ்க்கையாக மாறிப் போயுள்ளது. தொழில் வாய்ப்பு, வாழ்வாதாரம், மீள்குடியேற்றம், காணி விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுவிப்பு, காணாமல் போனோருக்கான பொறுப்பு கூறுதல், அரசியல் தீர்வு என பல்வேறு விடயங்களுக்காகத் தமிழ் மக்கள் இன்று போராடிக் கொண்டிருக்கின்றார்கள். இந்தப் போராட்டங்கள் தனி நபர் என்ற ரீதியில் தொடங்கி குழு நிலை மற்றும் அரசியல் கட்சி, கூட்டிணைந்த அரசியல் கட்சிகளின் போராட்டம் என பல பரிமாணங்களில் விரிவடைந்துள்ளன.

ஆனால் போராட்டங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட வகையில் பயன்களை விளைவிக்கத்தக்க வகையில் மேற்கொள்ளப்படுகின்றதா என்பது கேள்விக் குறியாக உள்ளது. தந்திரோபாய ரீதியில் அரசியல் இராஜதந்திர வழிமுறைகளை இந்தப் போராட்டங்கள் கைக்கொண்டிருக்கவில்லை என்பதும் கவனத்துக்கு உரியது.

தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைகளுக்காகக் ஏழு தசாப்தங்களாகப் போராடி வருகி;ன்றார்கள். அந்தப் போராட்டங்களை அடக்கி ஒடுக்குவதற்கான அரசாங்கங்களின் அடக்குமுறை நடவடிக்கைகளும் தொடர்ச்சியாகவும் அழுத்தங்கள் மிகுந்த வகையிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சாத்வீகப் போராட்டங்களில் ஆரம்பித்து, ஒத்துழையாமை மற்றும் அழுத்தங்களைப் பிரயோகிக்கும் வழிமுறைகளிலான இந்தப் போராட்டங்கள் ஆயுதப் போராட்டம் வரையில் நீடித்து இப்போது தளர் நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது.

தீர்க்கரிசனமும், தந்திரோபாயச் செயற்பாடுகளும் நிறைந்ததாகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரியவில்லை. அரசியல் ரீதியாகப் பரிணமித்து, இனத்துவ சமூக நிலையில் நிலைகொண்டு, அரசுக்கும் அரச இயந்திரங்களுக்கும் எதிரான போராட்டங்களாக வலுப் பெற்றிருந்த இந்தப் போராட்டங்கள் இப்போது நிலைமாறிய நிலையில் முன்னெடுக்கப்படுவதாகவே தோன்றுகின்றது.

இந்தப் போராட்டங்கள் அதிகார மட்டத்திற்கும், அரச கொள்கை நிலைப்பாடுகளுக்கும் எதிரானவையாக ஆரம்பிக்கப்பட்டிருந்தன. ஆனால் இந்தப் போராட்டங்கள் புதிய பரிமாணங்களில் அழுத்தங்களைப் பிரயோகித்து, முன்னேற்றம் காண்பவையாக வளர்ச்சிப் போக்கில் முன்னெடுக்கப்படுவதற்குப் பதிலாக குறுகிய நோக்கங்களைக் கொண்டதாகவும், இலக்குகள் தவறி திசைமாறிய போராட்டங்களாகவும் மாற்றம் பெற்றிருக்கின்றன.

இந்த வகையில் இந்தப் போராட்டங்களை வீச்சுடன் முன்னெடுப்பதற்காகத் தன்னெழுச்சி பெற்று எழுந்த மக்கள் குழுவினரைத் தமது குறுகிய அரசியல் நலன்களுக்காகப் பயன்படுத்துகின்ற மோசமான அரசியல் போக்கும் இப்போது தாராளமாகத் தலையெடுத்திருக்கின்றது.

ஒழுங்கமைக்கப்பட்ட போராட்டங்கள்

உரிமைகளுக்கான போராட்டங்கள் குறித்தே சாதாரண மக்கள் சிந்திக்கின்றார்கள். சமூக மட்டத்தில் பாதிப்புகளுக்கு ஆளாகியவர்கள் சமூக ரீதியில் ஒன்றிணைந்த நிலையில் அவர்களுடைய சிந்தனை அமைந்துள்ளது. அதேநேரம், சுய அரசியல் இலாபங்களுக்காக இந்தப் போராட்டங்களின் இலக்கும் கவனமும் திசை திருப்பி விடப்பட்ட நிலைமைகளையும் தாராளமாகக் காண முடிகின்றது.

குறிப்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாதிக்கப்பட்ட மக்களை ஒன்று திரட்டி, அவர்களுடைய போராட்டங்களுக்கான சக்தியை வழங்கி, அரசியல் இராஜதந்திர ரீதியில் அவர்களை வழிநடத்துவதற்குரிய ஆளுமை மிக்க தலைமைகளை இன்று காண முடியவில்லை.

உரிமைக்கான போராட்டங்கள், உரிமைகளை மறுப்பவர்களுக்கு எதிராகவும், அடக்குமுறைகளைப் பயன்படுத்துவோருக்கு எதிராகவுமே முன்னெடுக்கப்பட வேண்டும். ஆனால் தமிழ் மக்களின் போராட்டங்கள் இத்தகைய ஒன்றிணைந்த சரியான இலக்கை நோக்கிய வடிவத்தில் இருந்து திசை திருப்பப்பட்டிருக்கின்ற அவலமான அரசியல் நிலைமைகளையே காண முடிகின்றது.

அரசியல் போட்டியில் ஈடுபட்டுள்ளவர்கள் தமது போட்டி அரசியலுக்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் போராட்டங்களைப் பயன்படுத்திக் கொள்கின்றார்கள். ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள், போராட்டத்திற்கான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக அரச தரப்பிருக்கு எதிராகப் போராடுவதிலும் பார்க்க, தம்மைச் சார்ந்த அரசியல் கட்சிகள் அரசியல் தலைவர்களுக்கு எதிராகப் போராடுவதை ஒரு போராட்ட உத்தியாகப் பயன்படுத்துகின்றார்களோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

போராட்டங்களைத் திசை திருப்புகின்ற இந்தத் தந்திரோபாய கைங்கரியத்தை, தமிழ் மக்களுக்கு எதிர்த்தரப்பில் அதிகாரத்தில் உள்ளவர்களும், அரசும், பேரின அரசியல் சக்திகளும் திட்டமிட்ட வகையில் முறையானதொரு நிகழ்ச்சி நிரலின் கீழ் முன்னெடுத்து வருகின்றன.

ஆனால் அந்த அதிகார சக்திகளையும், அந்த அதிகார மட்டங்களையும், இனவாத – மதவாத ரீதியிலான சக்திகளையும் எதிர்த்து நடத்தப்பட வேண்டிய போராட்டங்கள் திசை மாற்றப்பட்டுள்ளன. அடக்குபவர்களையும் ஒடுக்குபவர்களையும் நோக்கிய போராட்டங்களில் கருத்தொருமிக்க வேண்டிய போராட்டச் சக்திகள், தமக்கிடையிலான போராட்டங்களில் கவனம் செலுத்துகின்ற ஓர் அவல நிலைமையே தமிழ்த்தரப்பில் இன்று தாராளமாகக் காணப்படுகின்றது.

போராட்டம் என்பது சரியான இலக்கை நோக்கியதாக, வலுவான செயன்முறை வடிவங்களைக் கொண்டிருத்தல் அவசியம். அடக்குமுறைகள் ஒடுக்குமுறைகளின் தன்மைக்கேற்ப பல நிலைகளிலும் பல்வேறு வடிவங்களிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியதும் முக்கியம். ஆனால் தமிழ்த்தரப்பினருடைய போராட்டங்களில் இத்தகைய ஒழுங்கமைப்புக்களைக் காண முடியவில்லை.

போர்நிறுத்தமும் பேச்சுவார்த்தைகளும்

சாத்வீகப் போராட்டத்தில் தொடங்கி ஜனநாயக வழிமுறைகள் பலவற்றை உள்ளடக்கியதாகத் தீவிரம் பெற்று ஆயுதப் போராட்டம் என்று உச்சத்தைத் தொட்டுள்ள தமிழ்த் தரப்பின் போராட்டம் இப்போது மீண்டும் ஆரம்பப் புள்ளியில் வந்து நிற்கின்றது.

ஆயுதப் போராட்டம் தீவிரம் பெற்றிருந்த காலப்பகுதியில் தமிழ்த்தரப்பின் முழுக்கவனமும் அதிலேயே குவிந்திருந்தது. அந்தப் போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டமாகச் சித்தரித்து உலக நாடுகளினதும் வல்லரசுகளினதும் ஒத்துழைப்புடன் சிதைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது, போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்குரிய மாற்று வழிகள் குறித்துச் சிந்திக்கப்படவில்லை. இதுவே தமிழ்த்தரப்பின் போராட்டத்திற்கு ஏற்பட்ட மோசமான பின்னடைவுக்கு மிக முக்கிய காரணமாகியது.

ஆயுதப் போராட்டத்தை மிகத் தீவிரமாக முன்னெடுத்திருந்த விடுதலைப்புலிகள் ஏனைய போராட்ட சக்திகளுக்கு இடமளித்திருக்கவில்லை என்ற போர்க்காலச் சூழலின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள முடிகின்றது. ஆயினும் ஆயுதப் போராட்டத்தின் வெற்றிகரமான முடிவு என்பது அரசியல் ரீதியான இணக்கத்திலேயே நிலை கொண்டிருக்கின்றது.

அத்தகைய அரசியல் ரீதியான இணக்கப்பாடு இல்லையேல் ஆயதப் போராட்டத்தின் வெற்றி பயனற்றதாகவே அமையும். இந்த யதார்த்தத்தை அரசியல் வழியில் செயற்பட்டத் தலைவர்கள் தீர்க்கதரிசனமாக சிந்திக்கத் தவறிவிட்டார்கள் என்றே கூற வேண்டி உள்ளது.

விடுதலைப்புலிகளுக்கும் அரசுக்கும் இடையில் 2002 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட யுத்த நிறுத்தத்தின்போது இணக்கத் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அந்தப் பேச்சுவார்த்தைகளின் வெற்றியையும் தோல்வியையும் தீர்மானிக்கின்ற சக்தியாக ஆயுத பலமே திகழ்ந்தது.

விடுதலைப்புலிகளின் எழுச்சி மிக்க ஆயுதபல சக்தியே அரச தரப்பை ஒரு போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கும் உந்தித் தள்ளியிருந்தது. இரு தரப்பும் அந்தப் போர்நிறுத்தத்தில் சம பலமுள்ளவர்களாக சம அந்தஸ்துடையவர்களாகக் கையெழுத்திட்டிருந்தார்கள்.

தொடர்ந்து இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளிலும் சம அந்தஸ்துடையவர்களாகக் கலந்து கொள்வதற்குப் பின்னணி ஆதாரமாக ஆயுத பலமே திகழ்ந்தது என்பதை மறுக்க முடியாது. ஆனால் பேச்சுவார்த்தைகள் சுமுகமாக இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டபோதிலும், முரண்பாடுகள் நிறைந்ததாகவும் இணக்கத்தை எட்ட முடியாத கடுமையான நிலைப்பாடுகளைக் கொண்ட நிலையிலுமே தொடர்ந்தன. இந்த நிலைமைகள் பேச்சுவார்த்தைகள் வெற்றிபெற மாட்டா என்பதையும், போர்நிறுத்த ஒப்பந்தம் எந்த வேளையிலும் முறிவடைந்து எந்தக் கணத்திலும் மீண்டும் போர் வெடிக்கலாம் என்ற யதார்த்தத்திற்குரிய உறுதியான அறிகுறிகளாக வெளிப்பட்டிருந்தன.

தடுமாற்றம்

ஆயுதப் போராட்டம் வெற்றிபெறாவிட்டால் அடுத்த கட்டம் என்ன என்பது குறித்து விடுதலைப்புலிகள் தரப்பில் தீர்க்கமான சிந்தனையோ முடிவோ இருந்ததாகத் தெரியவில்லை. போராட்டத்தின் தீவிர நிலைமைகளில் அத்தகைய சிந்தனைக்கு சந்தர்ப்பம் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், ஜனநாயக வழியில் - நாடாளுமன்ற அரசியலில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் தலைவர்கள் இதுகுறித்த சிந்தனையில் ஆழ்ந்திருந்ததாகவும் தெரியவில்லை.

தமிழ்த் தரப்பின் ஆயுதப் போராட்டத்தை விடுதலைப்புலிகள் மிகத் தீவிரமாக முன்னெடுத்திருந்த வேளையில், ஜனநாயக வழிமுறையிலான அரசியல் செயற்பாட்டில் ஒன்றிணைந்த மக்கள் சக்தியுடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பே திகழ்ந்தது.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் படிப்படியாக முன்னேறிய அரசாங்கம் 2009 ஆம் ஆண்டு யுத்தத்தில் வெற்றி பெற்று ஆயுதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்த போது, தமிழ் மக்களின் அரசியல் தலைமைப் பொறுப்பு முழு அளவில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலையிலேயே வந்திறங்கியது.

இத்தகைய முழுமையானதோர் அரசியல் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டிய ஒரு நிலைமை உருவாகும் என்பதைத் தமிழ்த்தலைவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. முன்கூட்டியே அது குறித்துச் சிந்தித்திருந்ததாகவும் தெரியவில்லை. ஏனெனில் அந்த அரசியல் பொறுப்பை ஏற்க வேண்டிய சூழல் 2009 ஆம் ஆண்டு ஏற்பட்டபோது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் அதற்குத் தயாராக இருக்கவில்லை. ஒரு வகையில் அரசியல் ரீதியாக அதிர்ச்சி நிலைமையிலேயே அவர்கள் காணப்பட்டார்கள்.

யுத்தத்தில் வெற்றிபெற்ற அரசாங்கம் மனிதாபிமான ரீதியிலும், தாராளவாத அரசியல் போக்கிலும் தமது பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் என்றே யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட தமிழ் மக்கள் கருதினார்கள். எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் மக்களில் இருந்து வேறுபட்டு எதிர்காலம் குறித்த சிந்தனையிலும் எதிர்காலத்திற்கான ஆயத்த நிலையிலும் இருந்திருக்க வேண்டிய தமிழ் அரசியல் தலைவர்களும் சாதாரண மக்களைப் போன்ற அரசியல் மன நிலையிலேயே இருந்தார்கள்.

யுத்தத்தின் பின்னர் வெற்றி பெற்ற தரப்பாகிய அரச தரப்பினரும் பேரின அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல் சக்திகளும் யுத்தவெற்றி என்ற போதைக்குள் ஆழ்ந்திருக்கக் கூடும் என்று சந்தேகிக்கவில்லை. சிந்தித்திருக்கவுமில்லை. அதனால் சாதாரண மக்களைப் போலவே அவர்களும் யுத்தத்தின் பின்னர் யுத்தத்தில் வெற்றிபெற்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மேற்கொண்டிருந்த நடவடிக்கைகள் மற்றும் அவருடைய அரசியல் செல்நெறி காரணமாக மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகியிருந்தார்கள். அந்தச் சூழ்நிலையில் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறுகின்ற ஒரு நிலைமைக்கே தள்ளப்பட்டிருந்தார்கள் என்றுகூடக் கூறலாம்.

மரமேறி விழுந்தவனை மாடேறி மிதித்த நிலை

யுத்தத்திற்குப் பின்னரான பத்து வருட காலத்திலும் தமிழ்த்தரப்பு அரசியல் முன்னேற்றம் காணாத நிலைமைக்கே ஆளாகியிருக்கின்றது. எதிர்ப்பரசியல் வழிமுறையும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வழிவகுக்கவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட 2015 ஆம் ஆண்டு இணங்கிச் சென்று பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு மேற்கொண்ட முயற்சிகளும் வெற்றியளிக்கவில்லை.

நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து அமைத்திருந்த நல்லாட்சி அரசாங்கக் காலம் தமிழர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு வாய்ப்பான அரசியல் சந்தர்ப்பமாகக் கிடைத்திருந்தது. இந்த அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியிருந்த போதிலும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பினால் இக்கட்டான நிலைமைகளில் இருந்து அரசாங்கத்தைப் பாதுகாக்க முடிந்ததே தவிர, அந்த அரசியல் வாய்ப்பைப் பயன்படுத்தி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியவில்லை.

புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கு அரச தரப்பினர் மேற்கொண்டிருந்த முயற்சியின் மூலம் அரசியல் தீர்வை எட்டி, பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம் என்ற வழிமுறையிலேயே தமிழ்த்தேசிய கூட்டமைப்பு செயற்பட்டிருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. இருந்த போதிலும், பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரச தரப்பின் மீது போதிய அளவில் அழுத்தங்களைப் பிரயோகிக்கத் தமிழ்த் தலைவர்கள் தவறிவிட்டார்கள் என்ற கூற்றை அவர்கள் மீது வலிந்து சுமத்தப்பட்ட குற்றச்சாட்டாகக் கொள்ள முடியாது.

யுத்த அழிவுக்குப் பின்னரும் பிரச்சினைகளுக்கும் நெருக்கடிகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் தமிழ் மக்கள் ஆளாக நேரிட்டிருக்கின்றார்கள். யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த பின்னர், பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை என்பது ஒருபக்கம் இருக்க புதிய புதிய வடிவங்களில்; பிரச்சினைகள் ஆக்கிரமிக்கின்ற நிலைமை உருவாகி இருப்பது மரத்தில் இருந்து விழுந்தவனை மாடேறி மிதித்த நிலைமைக்கே தமிழ் மக்களைத் தள்ளியுள்ளது.

யுத்த மோதல்களின்போது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்ததனால் தமிழ் மக்கள் இடம்பெயர நேர்ந்தது. சொந்த வீடுகளையும் கிராமங்களையும் பிறந்து வாழ்ந்த மண்ணையும் விட்டு இடம்பெயர்ந்த போதிலும், சொந்த இடங்களுக்குத் திரும்பிவிடுவோம் என்ற நம்பிக்கை மனங்களில் ஆழமாகப் பதிந்திருந்தது.

ஆனால் யுத்தம் முடிவடைந்த பின்னர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற, இன மத ரீதியிலான ஆக்கிரமிப்புச் செயற்பாடுகளினால் தமிழ் மக்கள் தமது சுயத்தை இழக்க நேர்ந்துள்ளது. வரலாற்று ரீதியான சொந்த இடங்களிலேயே அவர்களின் இருப்பு கேள்விக்குறிக்கு உள்ளாகி வருகின்றது.

நாளுக்கு நாள் மோசமடைந்து செல்லும் இந்த நிலைமையில் தமிழ் மக்களின் அரசியல் சக்திகளும், தமிழ் மக்களின் சமூக சக்திகளும் மக்களை ஒன்றிணைத்து தாங்களும் ஓரணியில் ஒற்றுமையாகத் திரட்சி பெற்று நிலைமைகளை எதிர்த்து நிற்க முடியாதவைகளாகவே இருக்கின்றன.

பலமுனைகளில் பரந்துபட்ட ஆக்கிரமிப்பு

அரசியல் கட்சிகள் ஆளுக்கொரு போக்கையும் நேரத்திற்கொரு பேச்சுமாகச் செயற்படுகின்றனவே தவிர, தமக்குள் ஒன்றிணைந்து மக்களுடன் இணைந்து சவால்களையும் பிரச்சினைகளையும் எதிர்கொள்ள முடியாதவைகளாகவே இருக்கின்றன.

நிலைமையின் தீவிரத் தன்மையை உணர்ந்து மக்கள் தங்களுக்குள் ஒற்றுமையாகவும் ஒரணியாகவும் திரண்டுள்ள போதிலும் தமிழ் அரசியல் சக்திகளும் பொது அமைப்புக்களும் அவர்களைப் பின்பற்றத் தவறியிருப்பதையே காண முடிகின்றது. உண்மையில் மக்களை ஒன்று திரட்டி அவர்களுக்குத் தலைமையேற்று வழிநடத்திச் செல்ல வேண்டிய அரசியல் கட்சிகளும் அரசியல் அமைப்புக்களும் மக்களின் வழிநடத்லைப் பின்தொடர்ந்து செல்லும் நிலைமைக்கு தமிழ் அரசியல் ஆளாகியுள்ளது.

கட்சி ரீதியான அரசியல் நலன்களும், கூட்டுக்களின் சுய அரசியல் நலன்களுமே தமிழ் அரசியல் பரப்பில் இப்போது முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு உறுதியாக முகம் கொடுப்பதற்கு ஏதுவாகத் தங்களுக்குள் ஒன்றிணைவதற்குத் தமிழ் அரசியல் கட்சிகளினாலும், தமிழ் அரசியல் தலைவர்களினாலும் முடியாமல் இருக்கின்றது.

தாயகம், வடக்கு கிழக்கு இணைப்பு, சுயநிர்ணய உரிமை, பகிரப்பட்ட இறையாண்மை, பிராந்திய சுய ஆட்சி என்ற சமஸ்டி வழிமுறையிலான அரசியல் உரிமைகள் பற்றியே எல்லோரும் பேசுகின்றார்கள். இவற்றின் அடிப்படையிலேயே தங்களுடைய அரசியல் கொள்கைகளும் செயற்பாடுகளும் அமைந்திருப்பதாகவே அனைவரும் கூறுகின்றார்கள். ஆனால் இவ்வாறு அடிப்படையில் பொதுவான கொள்கைகளையும் நிலைப்பாட்டையும் கொண்டிருக்கின்ற போதிலும், அனைவரும் ஓரணியாக ஒன்றிணைய முடியாதிருக்கின்றனர்.

புதிய புதிய கட்சிகளையும் அமைப்புக்களையும் தோற்றுவிப்பதில் காட்டப்படுகின்ற அக்கறையும் கரிசனையும் தீவிரமும் தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியாக அவர்களின் இருப்புக்கே ஆபத்தானதாக உருவாகி வருகின்ற சிங்கள பௌத்த தேசியத்தின் கபளீகரப் போக்கிலான நிலைமை குறித்து உரிய வகையில் கவனம் செலுத்தப்படாத நிலைமையே காணப்படுகின்றது.

புத்தரின் பெயரிலும், பௌத்த மதத்தின் பெயரிலும் ஆக்கிரமிக்கப்படுகின்ற புராதன வணக்கத் தலங்கள், புராதன சின்னங்கள் நிறைந்த இடங்கள் என்பன கண்முன்னாலேயே தோலிருக்க சுளை விழுங்கும் வகையில் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. தொழில் ரீதியாகவும், குடியேற்ற ரீதியாகவும் பிரதேசங்களை ஆக்கிரமிக்கின்ற நடவடிக்கைகள் ஒருபுறம் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பௌத்தத்திற்கே உரிய விசேட தினங்கள், பண்டிகைகளும் ஆக்கிரமிப்பு ரீதியில் தமிழ்ப்பிரதேசங்களில் முழு அளவிலான அலங்காரச் செயற்பாடுகளின் ஊடாக ஆக்கிரமிக்கப்படுகின்றன.

மறுபுறத்தில் மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்கள் உள்ளிட்ட போர்க்குற்றச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டவர்களும் அவற்றின் அடிப்படையில் விசாரணைகளுக்கும் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கும் ஆளாகி இருப்பவர்கள் விடுதலை செய்யப்படுவதும் பொறுப்பான பதவிகளை அவர்களே ஆக்கிரமிக்கும் வகையில் அவர்களை நியமனம் செய்திருப்பதுவும் பாரதூரமான விடயங்களாகும்.

ஓட்டைப் பானையில் நீர்வார்க்கும் நிலைமைக்கா செல்வது?

மறுபுறத்தில் சிறிய அரசியல் கட்சிகளை அரசியல் நீரோட்டத்தில் நிலைத்து நிற்க முடியாத நிலைமைக்கு ஆளாக்கும் வகையில் தேர்தலில் வாக்குகளின் வெட்டுப்புள்ளியில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் முறையை மறுசீரமைப்பதற்காகக் கொண்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ள தனிநபர் பிரேரணையொன்றில் அரசியல் கட்சியொன்றின் தேர்தல் வெற்றிக்கான வெட்டுப்புள்ளி 5 வீதத்தில் இருந்து 12.5 வீதமாக அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்தப் பிரேரண நிறைவேற்றப்படுமானால், சிறிய கட்சிகள் தமது நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை இழக்க வேண்டிய நிலைமை உருவாகும். பெரிய கட்சிகள் அதிகாரத்தையும், செல்வாக்கையும், பண பலத்தையும் பயன்படுத்தி தேர்தலில் அதிகப்படியான வாக்குகளைப் பெற்று சிறிய கட்சிகளின் வாக்குகளைக் கபளீகரம் செய்ய முடியும்.

அத்தகைய நிலைமையில் சிறிய கட்சிகள் தொகுதியெர்னறில் 12.5 வீத வாக்குகளைப் பெற்றுக் கொள்வதென்பது மிகக் கடினமான காரியமாகவே இருக்கும். இது படிப்படியாக சிறிய கட்சிகளின் மக்கள் ஆதரவை இல்லாமல் செய்து அவற்றின் ஆயுளையே முடிவுக்குக் கொண்டு வருவதற்கு வழிவகுத்துவிடும்.

சிறிய கட்சிகள் எனும்போது இனரீதியான நன்மைகளை நோக்கிச் செயற்படுகின்ற சிறுபான்மை இனங்களின் கட்சிகளுக்கும் இந்த நிலைமையே ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. இது ஒரு வகையில் சிறுபான்மை இன மக்களின் அரசியல் உரிமைகளை சட்ட ரீதியாகவும் ஜனநாயகம் என்ற போரிவையிலும் அப்பட்டமாக மீறுகின்ற ஒரு நடவடிக்கையாகவே அமையும்.

இத்தகைய ஆபத்தான சூழல் தேசிய மட்டத்தில் மூன்றாது நிலையில் உள்ள ஜேவிபிக்கும் ஏற்படக் கூடிய நிலைமை உருவாகும் என்று தேரதல் நடவடிக்கைகளில் அதிக அனுபவமம் பரிச்சயமும் உள்ளவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த நிலையில் தமிழ்க் கட்சிகளின் நிலைமை என்னவாகும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

அதிலும் குறிப்பாக தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து ஒரே அமைப்பாகச் செயற்படுவதற்கு முன்வர வேண்டும் என அரசியல் சூழ்நிலைகள் நிர்ப்பந்திக்கின்ற தருணத்தில் கட்சிகள் பிளவுபடுவதும் புதிய புதிய கட்சிகள் தமிழ் மக்கள் மத்தியில் இருந்து வெளிக்கிளம்புவதும் தமிழ் மக்களை அரசியல் நீரோட்டத்தில் முடமாக்குவதற்கே வழிவகுக்கும்.

பத்து இருபது கட்சிகளாகப் பிரிந்து நின்றுகொண்டு போராட்டங்கள் நடத்தப் போகிறோம். தமிழ்த்தேசியத்திற்காக அரசியல் செய்கிறோம். தமிழ்த்தேசியத்துக்காகப் பாடுபடுகிறோம் என்ற அரசியல் பிரசாரங்கள் அனைத்தும் ஓட்டைப் பானையில் வார்த்த நீராகவே போகும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்

அருவி இணையத்துக்காக பி.மாணிக்கவாசகம்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE