Friday 19th of April 2024 02:01:45 PM GMT

LANGUAGE - TAMIL
காட்டுத் தீயிலிருந்து தப்பி வெள்ளத்தில் சிக்கியுள்ள அவுஸ்திரேலிய விலங்குகள்!

காட்டுத் தீயிலிருந்து தப்பி வெள்ளத்தில் சிக்கியுள்ள அவுஸ்திரேலிய விலங்குகள்!


அவுஸ்திரேலியாவில் பேரழிவை ஏற்படுத்திய காட்டுத் தீயை அடுத்து அங்கு பெய்துவரும் மழை விவசாயிகள் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு ஆறுதலைக் கொடுத்துள்ளபோதும், மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காட்டு விலங்குகளுக்கு மற்றொரு ஆபத்தாக மாறியுள்ளது.

இது பூர்வீக விலங்குகளை காப்பாற்ற வேண்டிய புதிய போராட்டங்களுக்கு வழிவகுத்துள்ளது.

வியாழக்கிழமை முதல் அவுஸ்திரேலியாவில் பெய்துவரும் பலத்த மழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மாநிலத்தின் ஆயிரக்கணக்கான கோலாக் கரடிகள் காட்டுத் தீயால் அவற்றின் இருப்பிடங்களை இழந்துள்ள நிலையில் உயிர் பிழைக்க வெள்ளத்தோடு போராடும் நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் மழை மற்றும் காற்றால் எரிந்து காய்ந்துபோன மரங்கள் முறிந்து விழுகின்றமையும் காட்டு விலங்குகளுக்கு ஆபத்தாக மாறியுள்ளதாக நியூசவுத்வேல்ஸ் மாநில அவசர சேவைகள் துறை எச்சரித்துள்ளது.

வெள்ளியன்று நியூசவுத்வேல்ஸ் கிழக்கு கடற்கரையில் உள்ள அவுஸ்திரேலிய ஊர்வன பூங்காவை பெரு வெள்ளம் சூழ்ந்தது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பூங்காவில் இதுபோன்ற வெள்ளத்தை நாங்கள் பார்த்ததில்லை என பூங்கா இயக்குனர் டிம் பால்க்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

எங்கள் முழு அணியினரும் விலங்குகளைப் பாதுகாக்கவும் வெள்ளம் மேலும் சூழாமல் இருக்கவும் தேவையான ஏற்பாடுகளுடன் தயாராக உள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

சில பகுதிகளில் மழை கொட்டினாலும் நாட்டின் பல பகுதிகள் இன்னமும் வறண்டு கிடக்கின்றன.

நியூ சவுத் வேல்ஸின் பிற பகுதிகளில் 82 இடங்களில் காட்டுத் தீ இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது. இவற்றில் 30-க்கும் மேற்பட்டவை கட்டுப்படுத்த முடியாத நிலையில் எரிகின்றன.

விக்டோரியா மாநிலத்தின் தென் பகுதியில் கடும் காற்று காரணமாக பஃபலோ மலையில் பாரிய தீப்பரவல் ஏற்பட்டதால் மாநிலத்தின் ஆல்பைன் பகுதி மக்கள் கடந்த இரு நாட்களுக்கு முன் மீண்டும் வெளியேற்றப்பட்டனர்.

இதேவேளை, மழை ஓய்ந்தால் காட்டுத் தீ நெருக்கடி மீண்டும் மோசமடையலாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மழை பெய்த பகுதிகளில் சேற்று சாம்பல் ஆறுகள் மற்றும் ஏரிகளில் அடித்துச் செல்லப்படும் என்ற புதிய கவலைகள் உள்ளன.

இது நீர் நிலைகளை நஞ்சாக்கி நீர் வாழ் உயிரினங்கள் அதிகளவில் இறந்துபோகக் கூடிய நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது எனவும் அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவுஸ்திரேலியாவில் கடந்த ஐந்து மாதங்களாக தொடர்ந்து பற்றி எரியும் காட்டுத் தீயால் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காணாமல் போயுள்ளனர். 2,000 வீடுகள் எரிந்து அழிந்துள்ளன. பல மில்லியன் ஏக்கர் காடுகளும் எரிந்து சாம்பலானது குறிப்பிடத்தக்கது.

IMAGE_ALT

IMAGE_ALT


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE