Wednesday 24th of April 2024 02:31:18 AM GMT

LANGUAGE - TAMIL
யாழ். சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் எங்கட புத்தகத் திருவிழா
யாழ். சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் எங்கட புத்தகத் திருவிழா

யாழ். சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் எங்கட புத்தகத் திருவிழா


யாழ்;ப்பாணத்தில் தனித்துவமானதொரு புத்தகத் திருவிழாவாக எங்கட புத்தகங்கள் என்ற காட்சிக்கூடம் அமைந்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் இலங்கை எழுத்தாளர்களின் படைப்புக்களாகிய புத்தகங்களை மட்டுமே இது கொண்டிருக்கும் என்பதே இதன் சிறப்பம்சமாகும்.

எங்கட புத்தகங்கள் என்ற பெயரிலான இந்தப் புத்தகத் திருவிழா வர்த்தக நோக்கமும், சுய இலாப நோக்கமும் அற்ற நிலையில் வாசிப்பையும் எழுத்தையும் ஊக்குவிப்பதற்கும், அதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்குமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குலசிங்கம் வசிகரன் என்ற தனிமனிதனது புத்தகங்கள் மீதான திவிரப் பற்றுதலும், வாசிப்பின் மீது அவர் கொண்டுள்ள அளவற்ற ஆர்வமுமே இந்த, புத்தகக் கண்காட்சியாகிய புத்தகத் திருவிழா உருவாகக் காரணமாகின.

இலங்கை எழுத்தாளர்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்கள். ஆற்றல் மிகுந்தவர்கள். கற்பனை வளமும் சிந்தனை வீச்சும் கொண்டவர்கள். அவர்களுடைய படைப்பிலக்கியப் பலம் உலகளாவிய ரீதியில் வெளிப்படுவதற்குரிய களம் இதுவரையில் உருவாகவில்லை என்றே கூற வேண்டும்.

அவர்கள் தாங்கள் எழுதிய புத்தகங்களை விற்பனை செய்வதற்கு உரிய சந்தை வாய்ப்பற்றவர்களாக உள்ளனர். இன்னும் பலர் எழுத்தாற்றல் இருந்த போதிலும் தங்கள் எழுத்துக்களைப் புத்தகங்களாக்குவதற்குரிய பொருளாதார வசதியற்றவர்களாகக் காணப்படுகின்றார்கள்.

எழுத்தாளர்களே புத்தகங்களைப் பிரசுரித்து வெளியிட வேண்டிய ஓர் இக்கட்டான நிலைமையிலேயே இலங்கை எழுத்தாளர்கள் இன்னும் இருக்கின்றார்கள். வர்த்தக உலகில் எத்தனையோ உத்திகளும், வசதிகளும் வாய்ப்புக்களும் உருவாகியுள்ள போதிலும், இலங்கை எழுத்தாளர்களுக்குக் கைகொடுப்பதற்குரிய பதிப்பகங்களும் வெளியீட்டு நிறுவனங்களும் இன்னும் உருவாகவில்லை என்பது மிகப் பெரிய குறைபாடாகும்.

ஒருசில நிறுவனங்கள் புத்தகங்களைப் பிரசுரிப்பதற்கு உதவிகளை வழங்கி எழுத்தாளர்களை ஊக்குவித்து வருகின்ற போதிலும் பிரசுரிக்கப்பட்ட புத்தகங்களை சந்தைப்படுத்தவதற்குரிய சந்தை வலையமைப்பை அவைகள் கொண்டிருக்கவில்லை. அந்த புத்தகங்களுக்கான சந்தை இல்லாத நிலைமையும் காணப்படுகின்றது.

இலங்கை எழுத்தாளர்களின் புத்தகங்களை பிரசுரித்து வெளியீடு செய்வதற்கான பதிப்பகங்கள் அல்லது வெளியீட்டு நிறுவனங்கள் பணபலமுள்ளவைகளாக இருக்க வேண்டியது இன்றைய வர்;த்தக உலகில் அவசியம். பணபலம் இருந்தால்தான் இந்திய பதிப்பகங்கள் மற்றும் வெளியீட்டு நிறுவனங்களைப்போன்று புத்தகங்களைப் பிரசுரித்து வெளியிட்டு அவற்றைச் சந்தைப்படுத்த முடியும்.

நிறுவனங்களினால் செய்ய முடியாத கைங்கரியத்தைத் தனி மனிதர்களாகிய எழுத்தாளர்கள் செய்வது என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. ஒரு சில எழுத்தாளர்களின் தனிப்பட்ட செல்வாக்கும் அவர்களுக்கு கிடைக்கின்ற நிதியுதவி மூலங்களும் அவர்கள் பல புத்தகங்களை எழுதி வெற்றிகரமாக வெளியீடு செய்ய உதவி இருக்கின்றன. ஆனால் இந்த வாய்ப்பும் வசதியும் அனேகமானவர்களுக்குக் கிடைப்பதில்லை. அமைவதுமில்லை.

IMAGE_ALT

இந்த நிலையில் எழுத்தாளர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்குவிப்பதற்கான வழிமுறைகளை அடையாளம் காண்பதற்கும், வாசிப்புப் பழக்கத்திற்கு ஊக்கமளித்து, வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் இடையே ஓர் அன்னியோன்னியமான உறவைக் கட்டியெழுப்புவதற்கான சிந்தனைக்கு வலுவூட்டுவதற்கும் யாழ் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியின் எங்கட புத்தகங்கள் காட்சிக்கூடத்தின் செயற்பாடு வழி சமைக்கும் என்று நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.

எழுத்துத் திறன்

இந்தக் கண்காட்சியில் 120க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் 175க்கும் மேற்பட்ட புத்தகங்களுடன் பங்கேற்கின்றார்கள். இந்தப் புத்தகங்கள் பல்வேறு வகைப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

கவிதை, சிறுகதை, நாவல், குறுந்திரைப்படம், நாடகம், இலக்கியம், போரியல், சமூகம், அரசியல், பொருளாதாரம், வரலாறு, ஆன்மீகம், விஞ்ஞானம், தொழில்நுட்பம், மொழியியல், கலை, கலாசாரப் பண்பாடு என்று பல துறைகளிலும் படைக்கப்பட்ட நூல்களை எழுத்தாளர்கள் இங்கு காட்சிக்காகக் கையளித்திருக்கின்றனர்.

இந்தக் கண்காட்சி குறித்த தகவல்கள் விரிவான முறையில் வெளியிடப்படவில்லை என்பதை அதன் ஏற்பாட்டாளராகிய வசீகரன் ஒப்புக்கொள்கின்றார். இதனால் பல எழுத்தாளர்கள் தங்களுடைய புத்தகங்களைக் குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் தங்களிடம் கையளிக்க முடியாமல் போனதாகத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் முதலில் ஜனவரி 15 ஆம் திகதியை இறுதித் தினமாகக் கொண்டிருந்ததை 17 ஆம் திகதி வரை நீடித்து, அதுவும் போதாது என்ற நிலைமை காரணமாக 20 ஆம் திகதி வரை புத்தகங்களைக் கையேற்பதை நீடித்திருந்தாக அவர் கூறியுள்ளார்.

இது இந்தக் கண்காட்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்த எழுத்தாளர்களின் ஆர்வத்தையும் வேட்கையையும் வெளிக்காட்டியுள்ளது. பல எழுத்தாளர்கள் தங்களுடைய புத்தகங்களைப் பொது வெளியில் காட்சிப்படுத்தவும், விற்பனைக்கு விடவும் முடியாத நிலைமையில் இருப்பதே இதற்கு முக்கிய காரணம்.

இலங்கை எழுத்தாளர்கள் தமிழக எழுத்தாளர்களுடனோ அல்லது வசதியும் வாய்ப்பும் மிக்க உலக அளவிலான எழுத்தாளர்களுடனோ போட்டியிட்டுச் செயற்பட முடியாத நிலைமை காரணமாகவே எங்கட புத்தகங்கள் என்ற ஒரு தளத்தில் தங்களுடைய படைப்புக்களைக் காட்சிப்படுத்து ஆர்வத்துடன் முன்வந்துள்ளார்கள்.

IMAGE_ALT

S

ஆகவே எங்கட புத்தகங்கள் என்ற தலைப்பானது பரந்து விரிந்த ஒரு சிந்தனை நோக்குடன் பார்க்கப்பட வேண்டியது. அதனை எங்களுடையது என்று குறுகிய வட்டத்திலான ஒரு கூட்டத்தின் அல்லது பல்வேறு இலாப நோக்கங்களைக் கொண்ட ஒரு சாராரின் முயற்சியாக நோக்குவது ஆரோக்கியமாக இருக்கமாட்டாது. எங்கட புத்தகம் என்பது எழுத்தளார்கள் அனைவரும் வர்க்க ரீதியாக ஒன்றிணைந்து குரல் கொடுப்பதாகவே கருதப்பட வேண்டும். காலப்போக்கில் இந்தப் புத்தகத் திருவிழா பரந்து விரிந்த ஒரு தளத்தில் இடம்பெறும் என்று நிச்சயமாக நம்பலாம்.

இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள ஒரு புத்தகத்தின் பெயர் ஃ (அகேனம்). இதுபோன்று பல்வேறு வகையான தலைப்புக்களைக் கொண்ட புத்தகங்களை இங்கு தரிசிக்க முடியும். உதாரணத்தி;ற்குச் சில தலைப்புக்கள் பின்வருமாறு அமைந்திருக்கின்றன.

காக்கா கொத்திய காயம்

ஒரு லண்டன் பொடியன்

இவள் கிறுக்கி

அகதியின் வலி நிறைந்த பயணங்கள்

நான் அவளுக்கு ஒரு கடலைப் பரிசளித்தேன்

நதிமேல் தனித்தலையும் சிறு புல்

யுத்தத்தின் முதலாம் அதிகாரம்

மொழிபெயர்க்கப்பட்ட மௌனம்

நறுக்கென்று மூன்று விரல் கேள்விகள்

வாழத்துடிக்கும் வடலிகள்

வாழத்துடிக்கும் வன்னி

கால அதிர்வுகள்

அல்வாய்ச் சண்டியன்

புலவொலி

ஏனிந்த தேவாசுர யுத்தம்?

IMAGE_ALT

இந்தப் புத்தகத் திருவிழாவில் பல வகையினரான எழுத்தாளர்கள் பங்கேற்றுள்ளனர். அவர்களில் இருவர் கட்புலப் பாதிப்பைக் கொண்டவர்கள். இருவரும் கவிதைத் தொகுப்புக்களை வெளியிட்டிருக்கின்றனர். அவர்களுடன் மாற்றுத்திறனாளிகளான எழுத்தாளர்களும் இதில் பங்கேற்றுள்ளனர் என்பது இந்தப் புத்தகத் திருவிழாவின் சிறப்பம்சமாகும்.

இந்த எழுத்தாளர்களில் மேலும் இருவர் இன்னும் சிறப்பான கவனத்தைப் பெறுகின்றார்கள். அவர்கள் இருவரும் சிறைச்சாலையில் இருந்து புத்தகங்களை எழுதியுள்ளார்கள். அவர்களுக்கு வேண்டியவர்கள் வெளியில் அவற்றைப் பிரசுரித்து வெளியிட்டுள்ளார்கள். ஒருவருடைய புத்தகம் கவிதைத் தொகுப்பு. அது இரண்டாம் பதிப்பைக் கண்டுள்ளது. இன்னும் சில கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்புக்களையும், கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பையும் வெளியிடுவதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபட்டுள்ளார். மற்றவர் தனது சிறுகதைத் தொகுப்பை இங்கு கையளித்திருக்கின்றார். இவர் ஏற்கனவே இரண்டு நாவல்களை வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு பல வகைகளில் சிறப்பு பெற்றதாக அமைந்துள்ள எங்கட புத்தகங்கள் புத்தகத் திருவிழா யாழ் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

அருவி இணையத்துக்காக பி.மாணிக்கவாசகம்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE