Thursday 28th of March 2024 03:26:22 AM GMT

LANGUAGE - TAMIL
மனிதனில் மனிதம் காண்பது கலை
மனிதனில் மனிதம் காண்பது கலை - வீரசிங்கம் பிரதீபனின் நேர்காணல்

மனிதனில் மனிதம் காண்பது கலை - வீரசிங்கம் பிரதீபனின் நேர்காணல்


மனிதன் பிரச்சினைகளுக்குள்ளே வாழ்கிறான். குடும்பம், சமூகம், பொருளாதாரம், அரசியல் என பல்வேறு நிலைமைகளுக்குள்ளே தனது வாழ்க்கையை நடத்திச் செல்ல வேண்டிய தேவை அவனை சூழ்ந்திருக்கின்றது. அந்தத் தேவையில் இருந்து அவனால் விடுபட முடியாது. மனித வாழ்க்கை அத்தகைய கட்டமைப்பைக் கொண்டிருப்பதே அதற்கு முக்கிய காரணம். இந்தக் கட்டமைப்புக்குள்ளே பல்வேறு பிரச்சினைகள் முட்டி மோதுகின்றன. அவனது மனம் அடிக்கடி இதனால் அலைக்கழிகின்றது. இவ்வாறு அலைக்கழியும் மனதுக்கு ஆறுதலும், ஆற்றுப்படுத்தலும் அவசியம்தானே? இதனால்தான் மனிதனை ஆற்றுப்படுத்துகின்ற கலையை அவன் நாடுகிறான். கலையைத் தனது வாழ்வியலின் ஓர் அம்சமாக இணைத்துக் கொண்டிருக்கின்றான். இத்தகைய பின்னணியிலேயே மனிதனை ஆற்றுப்படுத்துகின்ற மருந்தாகக் கலை பயன்படுகின்றது என வீரசிங்கம் பிரதீபன் கூறுகின்றார்.

'மனிதனை ஆற்றுப்படுத்தும் மருந்தே கலை எனலாம். எவ்வளவு தான் மனச் சஞ்சலம் இருந்தாலும் கலையோடு சங்கமிக்கும் உள்ளம் அவற்றையெல்லாம் மறந்து அமைதி பெறுகிறது. அது மட்டுமல்ல ஒரு இனத்தின் அடையாளமாகவும் மிளிர்வது கலையே. அக் கலைக்கு சேவை புரிவது ஆன்ம திருப்தியையும், ஆனந்தத்தையும் தருகின்றது. அது ஈடேற்றத்தை வழங்கவல்லது. அந்த வகையில் மனிதனில் மனிதத்தைக் காண்பதே கலை' என அவர் குறிப்பிடுகின்றார்.

வவுனியா பிரதேச கலாசார உத்தியோகத்தராகப் பணியாற்றுகின்ற பிரதீபன் தனது அரச பணி வழியாக மட்டுமல்லாமல் இயற்கையாகவே கலையுணர்வு கொண்டவர். தமிழ்க் கலை கலாசாரத்தில் ஆழமான ஈடுபாடு கொண்டவர். ஆக்கத்திறன் மிக்கவர். கடுமையாக உழைப்பவர். இதனைத் தனது கலை, இலக்கிய, கலாசார செயற்பாடுகளின் மூலம் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையில் 1969 ஆம் ஆண்டு பிறந்த இவர் மானிப்பாய் புனித அன்னம்மாள் ரோமன் கத்தோலிக்கப் பாடசாலையில் தனது கல்வியை ஆரம்பித்தார். பின்னர் யாழ் இந்துக் கல்லூரியில் கற்று பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பிரவேசித்து கலைப்பட்டதாரியாக வெளியேறியதுடன், ஆரிய திராவிட பாட அபிவிருத்திச் சங்கத்தின் பண்டிதர் வகுப்பில் கல்வி கற்றார்.

ஆசிரிய பணியில் இணைந்த பிரதீபன் 17 வருடங்கள் யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களில் பணியாற்றிய பின்னர் 2012 ஆம் ஆண்டு கலாசார உத்தியோகத்தராக முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் நியமனம் பெற்றார்.

நீங்கள் பிரதேச கலாசார உத்தியோகத்தராகப் பொறுப்பேற்றபோது புதுக்குடியிருப்பு பிரதேச நிலைமைகள் எப்படி இருந்தன?

பதில்: அந்தப் பிரதேசம் பெரும் அழிவுக்குள்ளாகி இருந்தது. மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தன. பல்வேறுபட்ட மரபியல் கலை நுட்பங்கள் நிறைந்த அந்தப் பிரதேசத்தின் . கிராமியக்கலைகள் மற்றும் சிந்துநடை, முல்லை மோடி போன்றவை சோபை இழந்திருந்தன. அங்கு கலைஞர்களுடன் எனது நேரத்தின் பெரும் பகுதியை செலவிட்டேன். பல அண்ணாவிமார் தங்களின் கலைச் செல்வங்களை எல்லாம் இழந்து பெலிவிழந்திருந்தனர். கலை வழுவாது வாழ்ந்த கலைஞர்களுடன் பழகியபோது, அவர்களின் மன வேதனைகளே எனக்குப் பரிசாகக் கிடைத்தன. அழிந்து போயிருந்த இலக்கியங்கள் அண்ணாவிமாரின் மனங்களில் அடங்கிக் கிடந்தன. மெல்ல மெல்ல அழிந்து கொண்டிருந்த கலை வரலாற்றுக்குப் புத்தூக்கம் கொடுக்கவேண்டிய பொறுப்பை நான் அப்போது உணர்ந்தேன்.

இவற்றையெல்லாம் தேடிப்பெற்று அச்சேற்றிய பணியில் பெரும் பங்கு கொண்டேன். அதன் தொடர்ச்சியாக யுத்த வடுக்கள் நிறைந்திருந்த முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள் குடியேற்றத்தின் பின் முதன் முதலில் கலாசார விழாவினை ஒழுங்குபடுத்தி நடத்தும் பேறு எனக்குக் கிட்டியது. அந்த விழாவையொட்டிய புதுவையாள் என்னும் பிரதேச மலரினூடாக புதுக்குடியிருப்பின் வரலாறு முதன் முதலில் ஆராயப்பட்டது. அது அந்தப் பிரதேசத்திற்கு கலாசார ரீதியாகப் புதிய முகவரி ஒன்றை வழங்கியது. தொடர்ந்து 4 வருடங்கள் அந்நூல் பிரதேச நூலாக மலர்ந்தது.

கேள்வி: சோர்வடைந்திருந்த அந்தப் பிரதேசத்து கலைஞர்களின் செயற்பாடுகளை எந்த வகையில் நீங்கள் ஊக்கப்படுத்தினீர்கள்?

பதில்: கலாசார உத்தியோகத்தராகப் பணியேற்ற 2012ம் ஆண்டில்தான் புதுக்குடியிருப்பின் முதலாவது கலாபூஷணம் பட்டத்தை அண்ணாவியர் இராசாரத்தினம் பெற்றார். தொடர்ந்து திறனும் தகுதியும் பெற்றிருந்த கலைஞர்களை இனங்கண்டு பலரைத் தெரிந்தெடுத்து, அவர்களுக்கு கலாபூஷணம் பட்டம் வழங்கப்பட்டது.

பன்றிப்பள்ளு, அரிவுச்சிந்து, குருவிப்பள்ளு, வேழம் படுத்த வீராங்கனை ஆகிய பிரதேச இலக்கியங்களை ஆவணப்படுத்தினோம். குடமுந்தல் கும்மி எனும் கிராமிய வடிவம் மீளுருவாக்கப்பட்டு மேடை கண்டது. முல்லைமோடி கோவலன் கூத்து மீள்குடியேற்றத்தின் பின் முதன் முதலில் புதுக்குடியிருப்பிலேயே அரங்கேறியது. காத்தவராயன் சிந்துநடைக்கூத்து 3 முறை மேடை கண்டது. பிரதேசத்தில் உள்ள பறை இசைக்கலைஞர்களை ஒன்று கூட்டி 'பறை விருந்து' என்ற பெயரில் கச்சேரி நிகழ்வு ஒன்றையும் ஏற்பாடு செய்தேன்.

'தேன் குரல் தேர்வு' என்ற பெயரில் அப்பிரதேச கலைஞர்களிடையே நடத்திய போட்டி ஒன்றில் சிறந்த குரல் வளமுள்ள மூவர் தெரிவு செய்யபட்டு பரிசில்களும் வழங்கப்பட்டன. 'புதுவையாள்' என்ற பெயரில் அப்போது நுண்கலைக்கல்லுரி ஒன்றை ஆரம்பித்து மாணவர்களுக்கு மிருதங்கம், வயலின், இசை, நடனப்பயிற்சிகளை வழங்க ஆவன செய்து கொடுத்தேன். ஆனால் அந்தக் கல்லூரியின் செயற்பாடுகள் எனது இடமாற்றத்துடன் அஸ்தமித்து விட்டன என்பது கவலைக்குரியது. முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாறு, தொல்லியல் என்பவற்றை வெளிப்படுத்தும் வகையில் 3 கருத்தரங்குகளை நடத்தினேன். இந்தக் கருத்தரங்குகள் அந்தப் பிரதேசத்தின் கலை உணர்வுகளையும் படைப்பாற்றலையும் வெளிப்படுத்தவதற்கு முக்கிய நிலைக்களனாக விளங்கியது.

புதுக்குடியிருப்பையடுத்து, ஒட்டுசுட்டான் பிரதேச கலாசார உத்தியோகத்தராகவும் பணியாற்றினேன். பின்னர் வவுனியா பிரதேச செயலகத்திற்கு இடம் மாற்றம் பெற்று கலாசார உத்தியோகத்தராகப் பணியாற்றி வருகிறேன்.

கேள்வி: ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் உங்களுக்கு எத்தகைய அனுபவம் கிடைத்தது?

பதில்: ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் மிகப்பிரமாண்டமான அளவில் முதல் முதல் நடத்தப்பட்ட இலக்கிய விழாவை ஒழுங்கமைத்து சிறப்புற நடத்துவதில் பெரும் பங்கேற்றிருந்தேன். ஒட்டுசுட்டானின் புராதன வரலாறுகள் அடங்கிய நூல் ஒன்றை வெளியிட்டேன். அந்தப் பிரதேசத்தின் தனித்துவ மலராக முத்தொழில் என்ற பெயரில் 2013ம் ஆண்டு வெளியிடப்பட்ட மலர் தொடர்ந்து வெளிவருகின்றது.

புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான் பிரதேச கீதங்கள் என்னால் வடிவமைக்கப்பட்டன. பண்டார வன்னியன் நாடகம் மீள்குடியேற்றத்தின் பின் முதன் முதல் ஒட்டுசுட்டானில் மேடையேற்றினோம்.

'சாகித்ய ரத்னா' விருது பெற்ற முல்லைமணி அவர்களுக்கு முதல் பாராட்டுவிழாவை ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் ஒழுங்கமைத்தேன்.

கேள்வி: வவுனியாவில் கலாசார உத்தியோகத்தர் என்ற வகையில் உங்களுடைய கலைப்பணிகள் எவ்வாறிருக்கின்றன?

பதில்: வவுனியாவிலும் 2016 ஆம் ஆண்டு முதல் பல்வேறு கலை, கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றிருக்கின்றன. அவற்றிற்கு பெரும் பங்களிப்பு செய்துள்ளேன். அந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரதேச கலாசார விழாவை நடத்துவதில் எனது பங்கேற்பு முக்கியமாக இருந்தது.

வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்த கலைஞர்கள் 6 பேருக்கு 2016, 2017, 2018 ஆகிய மூன்று வருடங்களில் கலாபூஷணம் விருது பெற்றுக் கொடுக்கப்பட்டது. இநதப் பிரதேசத்துக் கலைஞர்கள் சுமார்ர் 200 பேரின் விபரங்கள் திரட்டப்பட்டு, அதற்கான ஆவணங்களின் அடிப்படையில் கலைஞர்கள் பற்றிய விபரக் கொத்து ஒன்றைத் தயாரித்துள்ளோம். அதேபோன்ற கலாமன்றங்களின் விபரங்களும் ஆவணப்படுத்தப் பட்டிருக்கின்றன. அது மட்டுமன்றி, வவுனியா பிரதேசத்தின் புராதன இடங்களைத் தேடி அறிந்து அவை பற்றிய ஆவணம் ஒன்றும் தயாரிக்கப்பட்டுள்ளது. கலைஞர்களின் ஆவணங்கள் ஒழுங்கமைக்கப்பட்டு கலைஞர் விபரம் தயாரிக்கப்பட்டது.

கேள்வி: கலைத்துறையில் உங்களை ஈடுபடச் செய்வதற்குத் திருப்புமுனையாக அமைந்த சம்பவம் ஏதேனும்......? பதில்: திருப்புமுனையான சம்பவம் என்று கூறுவதைவிட என்னுடைய வாழ்க்கையில் திருப்புமுனையை பல ஆசான்கள் ஏற்படுத்தினர் என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும். அந்த வகையில், பண்டிதை தில்லைநாயகி இராசரத்தினம், பண்டிதர் மாவை சச்சிதானந்தன், கலாநிதி க.குணராஜா, திரு.அ.நாகரத்தினம், கலாபூஷணம் லீலா செல்வராஜா, சங்கீதபூஷணம் தனலக்சுமி சுந்தரலிங்கம் அவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இளவயதில் என்னை அன்புடன் அரவணைத்த செல்வி பண்டிதை தில்லைநாயகி, தாய்மையின் வடிவில் எனது கல்விக்கண்ணை திறந்து வைத்தார். பாடல் பாடவும், நாடகங்களில் நடிக்கவும் அரிச்சுவடு இட்ட எனது ஆசான் அவரே.

இலகுவில் எவராலும் அணுக முடியாத ஆசான் எனக்கு கிடைத்தது இறைவன் வரமே. மரபு இலக்கியப் பரீட்சியத்தை நான் பெறுவதற்கு எனக்கு வழிகாட்டியவர் அவரே. மரபுச் செய்யுளாக்கம், யாப்பு முறைமைகளை எனக்கு விளங்கப்படுத்தி கவிதை எழுத வழிதிறந்து விட்டவர். எழுது எழுது என்று எனக்கு ஊக்கம் வழங்கிய ஒரு மாமனிதர். நான் எழுதத்தயங்கும் நேரங்களில் அதற்கான வழிமுறைகளையும் கூறி என்னைத்தடடி எழுப்பிய ஆசான்.

நான் உயர்தர வகுப்பில் கற்றபோது, தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிப் புலமை கொண்ட திரு.அ.நாகரத்தினம் அவர்கள் எங்களுக்கு தமிழ் ஆசானாகக் கிடைத்திருந்தார். அவர் ஓர் இலக்கண வித்தகர். பாடசாலையை வீடாகக் கருதி ஆசிரிய பணி செய்தவர்.

நான் ஆசிரிய நியமனம் பெற்றபோது, மானிப்பாய் மகளீர் கல்லுரியில் மாபெரும் கலைஞர்கள் சிலரைச் சந்திக்கும் பாக்கியம் கிடைத்திருந்தது. அதில் ஒருவர் கலாபூசணம் லீலா செல்வராஜா மற்றவர் சங்கீதபூசனம் தனலக்சுமி சுந்தரலிங்கம். எனது தமிழ்ப்புலமையை அடையாளம் கண்டவர்கள் இவர்களே. தங்களின் கலைக்குழுமத்தில் என்னையும் அவர்கள் இணைத்தக் கொண்ட பெருந்தகைகள். பல நாட்டிய நாடகங்களை நானே பிரதியாக்கம் செய்யவும் பல கீர்த்தனைகளை எழுதவும் களந்தந்து என்னை ஊக்குவித்து வழிநடத்திய இரு அன்னையர் இவர்கள்.

கேள்வி: கலைப்பட்டதாரியாகி தமிழ்ப்புலமை கொண்ட பண்டிதர்களிடம் கல்வி கற்றதைவிட உங்களது கலைத்துறைக்கு ஊக்கமளித்த அல்லது உறுதுணையாக இருந்த அம்சங்கள் என்ன?

பதில்: எனது குடும்பமே ஒரு கலைக்குடும்பம் என்பது குறிப்பிடத்தக்கது. என் தாய்வழிப்பூட்டன் சிறந்த இசை நாடக மேதை. சத்தியவான் சாவித்திரி, வள்ளி திருமணம், சுபத்திரை கல்யாணம் என பல இசை நாடகங்களை பாடி நடித்தவர். சத்தியவான் வேடம் இவருக்கு கன கச்சிதமாகப் பொருந்தியமையால் 'சத்தியவான் வேலுப்பிள்ளை' என்னும் பட்டப் பெயரைப் பெற்றவர். எனது தாயாரின் தந்தையார் சிறந்த சோதிட விற்பன்னர் மட்டுமன்றி சிறந்த மரபு வைத்தியரும் கூட. நான் சோதிடக் கலையைப் பயில்வதற்கு உறுதுணையாக இருந்தவர். எனது தாயாரின் தாயார் சிறந்த கிராமியப் பாடகி மட்டுமன்றி இராமாயணம், பாரதம், விக்கிரமாதித்தன் கதை என்பவற்றில் துறைபோனவித்தகி. ஆனால் பாடசாலை படிப்பறிவு அற்றவர். ஆயினும் அவர் வாயில் இருந்து வரும் மாரியம்மன் தாலாட்டை கேட்க கூடும் கூட்டமே பெரிது. உடுக்கு வாசிக்கும் திறமையும் பெற்றவர். இவ்வாறான கலை உள்ளங்களின் மத்தியில் என்னைப் படைத்த ஆண்டவனுக்கு நன்றிகள்.

கேள்வி: உங்களது கலை உலக வாழ்க்கை அனுபவம் எப்படியானது?

பதில்: ஆரம்பத்தில் ஆசிரியத் தொழிலில் இருந்தாலும் எனது எண்ணம் கலை உலகைச் சுற்றியே வட்டமிட்டது. எதை எழுதலாம், எந்த நாடகத்தை நெறியாழ்கை செய்யலாம், எந்தப் பாட்டை எழுதலாம் என்ற ஆவலே மேலோங்கி இருந்தது. அந்த உந்துதலில் நான் பலவற்றை எழுதிக்குவித்தேன். மறுபுறத்தில் நடிப்பிலும் என் மனம் பெரும் நாட்டம் கொண்டிருந்தது. பத்து வயதிலேயே 'சிறந்த நடிகன்' என்ற பாராட்டு எனக்குக் கிடைத்தது.

கலைமாமணி நற்குணசேகரம் அவர்களின் நெறி ஆள்கையில் 'உண்மையின் பரிசு' எனும் நாடகத்தில் ஓர் ஏழைக் குடும்பத்துச் சிறுவனாக நடித்தேன். அந்த நாடகம் முதற் பரிசு பெற்றது. எனது நடிப்புத் திறமைக்கும் பரிசு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து 'வாணி சபதம்' 'தோல்வி நிலையல்ல' 'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு' எனப் பல நாடகங்களில் முக்கிய வேடமேற்று நடித்தேன்.

யாழ் இந்துக்கல்லுரியில் கல்வி கற்ற காலங்களில் பட்டிமன்றம், கவியரங்கம், விவாதம், பேச்சு என இயற்துரைசார் விடயங்கள் பலவற்றில் கலந்து கொண்டதோடு மூன்று முறை தலைமையேற்று வில்லுப்பாட்டும் செய்திருந்தேன். இதன் பிற்பாடு எனது கலைப் பயணத்தில் ஒரு நீண்ட இடைவெளி நிலவியது.

கலைப்பட்டதாரியாகிய 1995 ஆம் ஆண்டின் பின் ஆசிரிய பணியுடன் எனது கலைப்பயணம் மறுமலர்ச்சி கண்டது. மானிப்பாய் மகளிர் கல்லுரியில் கலை உலகில் பல்வேறு அனுபவங்களைப் பெற்றேன். ஏராளமான நாடகங்களை பிரதியாக்கம் செய்தேன். அத்தோடு இசை நாடகம், நாட்டிய நாடகம், வில்லுப்பாட்டு பிரதிகளை ஆர்வத்துடன் எழுதினேன்.

கேள்வி: கலை, கலாசாரச் செயற்பாடுகள் குறித்த விபரங்களைக் கூறினீர்கள். நீங்கள் புத்தகங்கள் ஏதேனும் எழுதியிருக்கின்றீர்களா? அது பற்றிய விபரங்களைக் கூற முடியுமா?

பதில்: வவுனியாவில் மாத்திரம் 6 புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளேன். சங்க இலக்கியங்கள், தமிழ் இலக்கிய மூலவர்கள், பாரதி முதல் வேலுப்பிள்ளை வரை, வழிப்படுத்தும் இந்துமத வழி முறைகள், தமிழர் மரபுக் கலைகள் என்ற 5 புத்தகங்கள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. ஆறாவதாக சிறுவர் சிந்தனைத் தமிழ் என்ற சிறுவர்களுக்கான கவிதை நூலை கடந்த 10 ஆம் திகதி (நவம்பர்; மாதம்) வெளியிட்டேன்.

இதைவிட இநதப் பிரதேசத்தைச் சேர்ந்த 6 ஆலயங்களுக்கான திருவூஞ்சல் பாடல்களை எழுதியுள்ளேன். அரசர்பதி கண்ணகை அம்மனுக்கான சிந்து ஒன்றையும் எழுதியுள்ளேன். குருவிச்சி நாச்சியார், ஞானசவுந்தரி ஆகிய இரண்டு முல்லைமோடி நாட்டுக்கூத்துக்களுக்கான பிரதிகளையும் பள்ளு பா நாடகத்தையும் எழுதியிருக்கின்றேன்.

அத்துடன் பல நாடகங்களையும், இசை நாடகங்கள், நாட்டிய நாடகங்கள் மூன்று வில்லுப்பாட்டுக்களையும் எழுதியுள்ளதுடன், பல கவிதைகளையும் பல கீர்த்தனங்களையும் எழுதியுள்ளேன். பட்டிமன்றம், கவியரங்கு என்பவற்றில் நடுவராகப் பங்கேற்றுள்ளேன்.

கீர்த்தனங்களில் தாளையடி வைரவர் கீதம், உலகளந்த பிள்ளையார் கீதம், என்பன ஒலிப்பேழைகளாகவும் வெளியிடப்பட்டிருக்கின்றன என்றார் பிரதீபன்.

கலை இலக்கியத்துறையில் தமிழ் வாரிதி, கலைப்புலவன், இலக்கிய வித்தகர் உள்ளிட்ட பல்வேறு பட்டங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ள அவரிடம் கலை பற்றிய உங்களுடைய கருத்து என்ன என வினவினேன்.

பதில்: மனிதனை ஆற்றுப்படுத்தும் மருந்தே கலை எனலாம். எவ்வளவு தான் மனச் சஞ்சலம் இருந்தாலும் கலையோடு சங்கமிக்கும் உள்ளம் அவற்றையெல்லாம் மறந்து அமைதி பெறுகிறது. அது மட்டுமல்ல ஒரு இனத்தின் அடையாளமாகவும் மிளிர்வது கலையே. அக் கலைக்கு சேவை புரிவது ஆன்ம திருப்தியையும், ஆனந்தத்தையும் தருகின்றது. அது ஈடேற்றத்தை வழங்கவல்லது.

போருக்குப் பிந்திய காலத்தில் தமிழர்களின் கலையையும் கலை வடிவங்களையும் நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்: தமிழினம் சந்தித்த போர்க்காலம் எம் மத்தியிலே பலவற்றை இல்லாது செய்துவிட்டது. அவற்றுள் எமது கலையின் நுணுக்கமும் ஒன்றாகும். யுத்தம் முடிவடைந்து மீள்குடியேறிய மக்கள் வாழ்வில் அவர்களுடைய வாழ்க்கையைப் போலவே கலையும் தழைக்கத் தொடங்கி இருந்தது. காலம் எனும் அரு மருந்து பல மாற்றங்களை ஏற்படுத்த படிப்படியான மீள் உருவாக்கத்தினை கலை இன்று பெற்றுள்ளது. பழைமையும், நவீனத்துவமும் கைகோர்த்த புது வடிவிலான தமிழர் கலைத்துவம் வளர்ந்து வருகின்றது. முத்தமிழும் புத்துயிர் பெற்று வருவது கண் கூடு. அந்த வகையில் நவீன கலை வடிவங்கள் தமிழரிடையே இன்று வழங்கி வருவதுடன், பழைய கிராமியக் கலைகளின் மீள் எழுச்சியும் சமாந்தரமாக வளர்வதை நோக்க முடிகின்றது.

இன்றய இளைஞர்களிடம் கலையை பாதுகாக்க வேண்டும் என்ற வேட்கை உருவாகி வருகின்றது. பல கலாமன்றங்களில் உள்ள இளைஞர்கள் வில்லுப்பாட்டு, கூத்துக்கள், பறை, இசை, சிந்து, பள்ளு, போன்ற புராதன கலை வடிவங்களை மேடையேற்றி வருகின்றனர். இதன் மூலம் பழைமைபாடிச் செழுமை தேடும் விதத்தில் இன்று தமிழரின் கலை சிறப்புறுவது மகிழ்ச்சியைத் தருகின்றது.

பி.மாணிக்கவாசகம்

நன்றி - வீரகேசரி


Category: கட்டுரைகள், நேர்காணல்
Tags: இலங்கை, வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE