Wednesday 24th of April 2024 03:01:40 PM GMT

LANGUAGE - TAMIL
சூறாவளி, தீ, வெள்ள அனர்த்தங்களால் திண்டாடுகிறது அவுஸ்திரேலியா!

சூறாவளி, தீ, வெள்ள அனர்த்தங்களால் திண்டாடுகிறது அவுஸ்திரேலியா!


மேற்கு அவுஸ்திரேலியாவின் சில பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமையும் காட்டுத் தீ தொடர்ந்து பற்றி எரிந்துவருகிறது.

அதேநேரம் நாட்டின் சில பகுதிகள் கடும் சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில் கடும் மழையால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் உயிருக்கு ஆபத்தான சூழல் ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் பல மாதங்களாக பற்றியெரிந்துவரும் காட்டுத் தீயால் மில்லியன் கணக்கான ஹெக்டேர் காடுகள் எரிந்து கருகின. 35 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 100 கோடி விலங்குகள் கருகி அழிந்தன. 2000 வரையான வீடுகளும் தீக்கிரையாகின.

இந்நிலையில் வானிலை மாற்றம் காரணமாக சமீபத்திய வாரங்களில் கடும் மழை, ஆலங்கட்டி மழை, புயல்கள், கடுமையான காற்று என தொடர் இயற்கை அனர்தங்களால் அவுஸ்திரேலியா திண்டாடி வருகிறது.

மேற்கு அவுஸ்திரேலியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை 12 இடங்களில் காட்டுத் தீ எரிகிறது. பல மாவட்டங்களில் கடுமையான தீ ஆபத்து இருப்பதாக தீயணைப்பு சேவைகள் மற்றும் மாநில வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சில மாவட்டங்களில் பகல்நேர வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸ் (108 டிகிரி பாரன்ஹீட்) வரை அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

வெப்பமண்டல டேமியன் சூறாவளி நேற்று சனிக்கிழமை அவுஸ்திரேலியாவின் மேற்கு பகுதிகளைத் தாக்கியது. இந்தப் பகுதிகளில் மணிக்கு 200 கி.மீ வேகத்தில் கடும் காற்று வீசியது.

எனினும் இந்தச் சூறாவளியால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.

டேமியன் சூறாவளி நேற்று கர்ரதா மற்றும் டாம்பியர் ஆகிய பகுதிகளைத் தாக்கிய பின்னர் பலவீனமடைந்துள்ள போதிலும், டாம் பிரைஸ் மற்றும் பராபர்டூவைச் சுற்றியுள்ள பகுதிகளில்; குறிப்பிடத்தக்க மழைப் பொழிவு மற்றும் சீரற்ற காலநிலை நீடித்து வருகிறது என அவுஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் ருவிட்டரில் தெரிவித்துள்ளது.

இதேவேளை, அவுஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலங்களில் இன்றும் வெள்ளப்பெருக்கு ஆபத்து நீடிக்கிறது.

1998-ஆம் ஆண்டுக்குப் பின்னர் அதிக மழை வீழ்ச்சி இந்தப் பகுதிகளில் பதிவாகியுள்ளது. இன்று மூன்றாவது நாளாகவும் இப்பகுதிகளில் கடும் மழை பெய்து வருகிறது.

நாட்டின் சில பகுதிகளில் மழை வீழ்ச்சி ஆண்டு சராசரியின் பாதி அளவை நெருங்கியது.

ஆபத்துக்கள் உள்ளபோதும் 2019 ஆம் ஆண்டு கடும் வரட்சியை எதிர்கொண்ட அவுஸ்திரேலியாவில் இந்த மழை வீழ்ச்சி சற்றே நின்மதியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ச்சியான கடும் வறட்சி காரணமாக நீர் நிலைகள் வற்றியுள்ளதால் ஆறுகள், நதிகள் பெருக்கெடுக்கும் அபாயம் குறைவாகவே உள்ளது.

எனினும் வாழ்விடங்களில் பெருக்கெடுக்கும் வெள்ளத்தால் அபாய நிலை உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE