Friday 19th of April 2024 04:46:42 PM GMT

LANGUAGE - TAMIL
இயன் மோர்கன் அதிரிடியால் தொடரை வென்றது இங்கிலாந்து!

இயன் மோர்கன் அதிரிடியால் தொடரை வென்றது இங்கிலாந்து!


தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையே நடைபெற்ற ரீ-20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது இங்கிலாந்து அணி.

தொடரை தீர்மானிக்கும் முக்கிய போட்டி!

முதலில் நடைபெற்ற இரு போட்டிகளிலும் தலா ஒவ்வொரு வெற்றிகளை இரு அணிகளும் பெற்றிருந்த நிலையில் தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் முக்கியமான போட்டியாக மூன்றாவதும் இறுதியுமான போட்டி இன்று செஞ்சூரியனில் நடைபெற்றது.

தென்னாபிரிக்கா-222 ஓட்டங்கள் குவிப்பு!

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்றிருந்த தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடியாது. அதிரடியாக விளையாடிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 222 ஓட்டங்களை பெற்றது.

அணியின் சார்பில் அதிகபட்சமாக க்லாசென் நான்கு 6 ஓட்டங்கள், நான்கு 4 ஓட்டங்கள் உள்ளடங்கலாக 33 பந்துகளில் 66 ஓட்டங்களையும், பவுமா மூன்று 6 ஓட்டங்கள், நான்கு 4 ஓட்டங்கள் உள்ளடங்கலாக 24 பந்துகளில் 49 ஓட்டங்களையும், குயின்டன் டீ கொக் நான்கு 6 ஓட்டங்கள், ஒரு 4 ஓட்டங்களுடன் 35 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்திருந்தனர். டேவிட் மில்லர் இரண்டு 6 ஓட்டங்கள், மூன்று 4 ஓட்டங்களுடன் 20 பந்துகளில் 35 ஓட்டங்களை விளாசி ஆட்டமிழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் கர்ரன் மற்றும் பென்ஸ் ஸ்ரோக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தனர்.

223 என்ற கடினமான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி அணித்தலைவர் இயன் மோர்க்கனின் அதிரடி ஆட்டத்தின் மூலம் வெற்றி இலக்கை அடைந்து போட்டியில் வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியிருந்தது.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ரோய் 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த போதிலும் பட்லர்(57) மற்றும் பெய்ற்ஸ்ரோவ்(64) ஆகியோர் நிலைத்து நின்று அதிரடியாக ஆடி ஓட்டங்களை குவித்தனர. இருவரும் இணைந்து 49 பந்துகளை எதிர்கொண்டு 91 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று நல்ல அடித்தளத்தை ஏற்படுத்தியிருந்தனர்.

சந்திக்கும் ஒவ்வொரு பந்தையும் அதிரடியாக ஆடுவதன் மூலமே வெற்றியை பெறலாம் என்ற நிலையில் அதிரடியாக விளையாடிய இங்கிலாந்து அணி 19.1 ஓவர்களில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 226 ஓட்டங்களை பெற்று 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

கடைசி 2 ஓவர்களில் 17 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இரண்டு 6 ஓட்டங்களுடன் 12 பந்துகளில் 22 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஸ்ரோக்ஸ் நிகிடி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இருந்தும் துவண்டுபோய்விடாத மோர்கன் மொய்ன் அலியுடன் இணைந்து அதிரடியாக விளையாடி தென்னாபிரிக்க அணியை அதன் சொந்த மண்ணில் வைத்து வீழ்த்தியதுடன் தொடரையும் கைப்பற்றியுள்ளது.

இறுதிவரை ஆட்டமிழக்காதிருந்த இயன் மோர்கன் ஏழு 6 ஓட்டங்களுடன் 22 பந்துகளை எதிர்கொண்டு 57 ஓட்டங்களை விளாசியிருந்தார்.

பந்துவீச்சில் நிகிடி அதிகபட்சமாக 2 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.

சிக்ஸர் மழை!

இந்த ஆட்டத்தில் சிக்ஸர் மற்றும் பவுன்டரிகள் அதிகளவில் விளாசப்பட்டிருந்தது ரசிகர்களுக்கு பெரு விருந்தாக அமைந்திருந்தது.

அந்த வகையில் தென்னாபிரிக்க அணி பதின் மூன்று 6 ஓட்டங்களையும் பதினைந்து 4 ஓட்டங்களையும் விளாசியிருந்தது. இங்கிலாந்து அணி பதினைந்து 6 ஓட்டங்களையும் பத்தொன்பது 4 ஓட்டங்களையும் விளாசியிருந்தது.

இரண்டு அணிகளும் சேர்த்து இன்றைய ஆட்டத்தில் 304 ஓட்டங்களை சிக்ஸர், பவுன்டரிகளாக மட்டுமே பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆட்டநாயகனாகவும் தொடரின் நாயகனாகவும் இங்கிலாந்து அணித் தலைவர் இயன் மோர்கன் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE