;

Monday 13th of July 2020 04:31:09 AM GMT

LANGUAGE - TAMIL
“மகா சங்கம் நியாயப்படுத்திய உயிர்க்கொலைகள்”
“மகா சங்கம் நியாயப்படுத்திய உயிர்க்கொலைகள்”

“மகா சங்கம் நியாயப்படுத்திய உயிர்க்கொலைகள்”


“துட்டகாமினியால் கொல்லப்பட்ட தமிழர்கள் பௌத்தத்தின் மேல் நம்பிக்கையில்லாதவர்கள். பைசாச வழிபாட்டை அனுஷ்டிப்பவர்கள் பாவம் செய்தவர்கள். இவர்கள் விலங்குகளை விட மேலானவர்கள் அல்லர். இவர்களைக் கொல்வதால் பாவம் சேராது”

இந்த வார்த்தைகள் ஒரு ஹிட்லரைப் போன்ற ஒரு கொடிய சர்வதிகாரியாலோ அல்லது போர்வெறிகொண்ட ஒரு படைத்தளபதியாலோ கூறப்பட்டவையல்ல.

சிங்கள பௌத்தர்களின் வேதம் எனப்போற்றப்படுவதும், சிங்கள இனத்தின் வரலாற்றை பதிவுசெய்யும் ஒரு காவியப் பொக்கிசம் எனவும் போற்றப்படும் மகாவம்சம் போதிக்கும் முக்கியமான போதனைகளில் ஒன்றாகும்.

மகாவம்சம் விஜயனின் இலங்கை வருகை தொடக்கம் கி.பி 4ம் நூற்றாண்டில் அனுராதபுரத்தை தலைநகராக கொண்டு ஆட்சிசெய்த மகாசேனன் காலவரையான அரசர்களையும் அவர்களின் ஆட்சிகளையும் பதிவுசெய்திருந்தாலும் இராமாயணம் எவ்வாறு இராமனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட காவியமாக வரையப்பட்டதோ அவ்வாறே மகாவம்சமும் துட்டகாமினியை பாட்டுடைத்தலைவனாகக்கொண்டு படைக்கப்பட்டுள்ளது. அவன் தொடர்பாக வரும் அத்தியாயங்கள் அவனின் பிறப்பு முதல் இறப்பு வரை அவனை ஒரு அவதாரபுருசனாகவே சித்தரித்துள்ளன.

செங்கோல் ஆட்சியை மேற்கொண்டு மக்களின் பேரபிமானத்தைப் பெற்ற தமிழரசனான எல்லாளன் போன்ற ஒரு மன்னனை வெற்றிகொள்வதும் அவ்வெற்றிக்கு மக்கள் ஆதரவை திரட்டுவதும் அவ்வளவு இலகுவான விடயங்கள் அல்ல. எனவே துட்டகாமினியும், “நான் அரசபோகங்களுக்காக இந்த யுத்தத்தில் இறங்கவில்லை. பௌத்த சாசனத்தின் உன்னதத்திற்காகவே இப்போரை தொடுக்கிறேன்” என்ற கவர்ச்சிகரமான சுலோகத்தை முன்வைத்ததுடன் தனது படையுடன் பௌத்த பிக்குகளையும் கூட்டிச்சென்று போரை நடத்தினான். இப்போருக்கு பின்னால் சிங்கள மக்களை அணிதிரட்டுவதற்கு இச் சுலோகமும் புத்த பிக்குகளை இணைத்தமையும் காமினியின் வெற்றிக்கு ஒரு சாதகமான வாய்ப்பை உருவாக்கியது. ஆனால் காமினி போரில் வெற்றி பெற்று அனுராதபுர அரசனாக முடிசூடிக்கொண்ட பின்பு அவன் பௌத்த தேரர்களிடம் இப்போரில் தான் ஆயிரக்கணக்கானோரை கொன்றுவிட்டதாகவும் அதனால் தன் மனம் அமைதியை இழந்துவிட்டதாகவும் கூறி வருந்தினான்.

ஆனால் பௌத்த சங்கத்தின் துறவிகளோ தமிழர்கள் பௌத்தத்தில் நம்பிக்கை அற்றவர்கள் எனவும், பிசாசுகளை வழிபடுபவர்கள் எனவும் அவர்கள் விலங்குகளை விட மேலானவர்கள் அல்ல எனவும் அதனால் அவர்களைக் கொல்வது பாவம் அல்ல எனவும் அவனுக்கு அறிவுரை கூறினர்.

18ம் நூற்றாண்டின் கடைசிக் கால்பகுதியிலும், 19ம் நூற்றாண்டின் முதல் கால்பகுதியிலும் அநகாரிக தர்மபாலாவின் தலைமையில் சிங்கள பௌத்த தேசியத்தை பாதுகாத்து செழுமைப்படுத்துவது என்ற பேரில் சிங்கள் மக்கள் மத்தியில் ஏனைய தமிழ் முஸ்லீம் மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வும், பொறாமையுணர்வும் கட்டி வளர்க்கப்பட்டன. ஆனால் 5ம் நூற்றாண்டிலேயே தாது சேன மன்னனின் அரசவைக் கவிஞனாக இருந்த மகாநாமதேரர் மகாவம்சம் என்ற பாளி மொழியிலான காவியத்தின் மூலம் துட்டகாமினி எல்லாள யுத்தத்தை அடிப்படையாக வைத்து தமிழர்கள் கொல்லப்படுவது பாவம் அல்ல என்ற கருத்தை சிங்கள மக்களுக்கு ஊட்டியிருந்ததை அவதானிக்க முடியும்.

எனவே சிங்கள பௌத்த இனவெறியும் சிங்கள பௌத்தர் அல்லாத ஏனைய இனங்கள் மீதான வெறுப்புணர்வும் கி.பி 5ம் நூற்றாண்டிலேயே உருவாக்கப்படும் முயற்சிகள் தீவிரமாக ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. இவற்றின் மூலாதாரமாக தேரவாத பிக்குகளே இருந்து வந்தனர். என்பதை பல சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன. சிங்கள மன்னர்கள் சில சமயங்களில் நியாயமாக நடக்கமுயலும் போதும் மதத்தின் பேரால் அவர்களின் சிந்தனையை திசைதிருப்பி தமிழர்களுக்கு எதிரான அநீதிகளை எப்படி பிக்குகள் மேற்கொள்ள வைத்தனர் என்பதை மகாவம்சத்தில் மேற்படி சம்பவம் ஆதாரப்படுத்துகிறது. மேலும் மகவம்சத்தில் பல இடங்களில் தமிழினம் தொடர்பாக குரோத உணர்வு காமினியின் தாயாரான விகாரமாதேவி மூலம் கொடூரமான முறையில் வெளிப்படுத்தப்படுகிறது.

தனது மதிய உணவின் முன்பு விகாரமாதேவி பிக்குகளுக்கு உணவு வழங்குவதை வழமையாகக் கொண்டிருந்தாள். அவ்வாறு அவளிடம் தானம் பெறும் பிக்குகளில் ஒருவரான திசமாறகமவை சேர்ந்த கோத பர்வத தேரர் என்ற பிக்கு மரணத்தறுவாயில் இருந்தபோது விகாரமாதேவி தனக்கு பிள்ளை வரம் வழங்கும்படியும் தேரரே பிள்ளையாக பிறக்கவேண்டும் எனவும் வேண்டிக்கொன்டாள். அவரும் அவளுக்கு ஆறு சக்திகளை வரமாக வழங்கியதுடன் அவரே அவளின் வயிற்றில் கர்ப்பமானார்.

அந்தக் கர்ப்பத்தில் உதித்தவனே துட்டகாமினி என அழைக்கப்படும் காமினி அபயன் ஆவான். காமினி வயிற்றில் இருந்தபோது விகாரமாதேவி தன் மசக்கை ஆசையாக மூன்று கோரிக்கைகளை முன்வைத்தார். அதிலொன்று எல்லாளனின் படைத்தளபதியின் கழுத்தை வெட்டி அந்த இரத்தம் படிந்த வாளை கழுவி தான் அருந்த வேண்டும் என்பதாகும். அதற்கமைய வேலு சுமணன் என்ற போர் மல்லன் எல்லாள மன்னனின் குதிரை பராமரிப்பவனுடன் சினேகிதம் கொண்டு வஞ்சகமான முறையில் மறைந்திருந்து தமிழ் தளபதியை தலையை வெட்டி அந்த வாளை கொண்டுசென்று விகாரமாதேவியிடம் ஒப்படைத்தான். அவளதை கழுவிக்குடித்து தன் ஆசையை நிறைவேற்றிக் கொண்டாள்.

இந்த சம்பவம் உண்மையோ அல்லது புனைவோ எனக் கூறமுடியாவிட்டாலும் காமினி வயிற்றிலிருந்தபோதே தமிழனின் இரத்தச்சுவை அவனுக்கு ஊட்டப்பட்து என்ற செய்தியையே மகாவம்சம் வெளிப்படுத்துகிறது.

காமினி சிறுவனாக இருந்த போது இடம்பெற்றதாக குறிப்பிடப்படும் இன்னொரு சம்பவம் மகாவம்சத்தின் இனக்குரோத முனைப்பை வெளிப்டுத்துகிறது. காமினிக்கும் அவனது தம்பிக்கும் முறையே பன்னிரண்டு பத்து வயதாக இருந்தபோது அவர்களின் தந்தையான காக்கவண்ண தீசன் 500 பிக்குகளுக்கு தானமாக அன்னம் வழங்கிவிட்டு அவர்களின் பாத்திரங்களில் எஞ்சியிருந்த சோற்றை மூன்று கவளங்களாக திரட்டி முதலாவது கவளத்தை பிக்குகளை எப்போதுமே அலட்சியம் செய்யமாட்டோம் என சத்தியம் செய்து உண்ணும்படி கூறினான். அவர்களும் அப்படியே செய்ய இரண்டாவது கவளத்தை கொடுத்து சகோதரர்களுக்குள் சண்டையிடமாட்டோம் என சத்தியம் செய்யும்படி கூறினான்.

அவர்களும் அப்படியே செய்ய அதன் பின்பு மூன்றாவது கவளத்தை கொடுத்து ஒருபோதும் தமிழர்களுடன் சண்டையிடமாட்டோம் என சத்தியம் செய்து உண்ணும்படி கூறினான். இரண்டாவது மகனான தீசன் தந்தையின் கையிலிருந்த சோற்றையும் கரண்டியையும் தட்டிவிட அன்னம் நிலத்தில் சிந்தியது. காமினி சோற்றையும் கிண்ணத்தையும் எடுத்து வீசிவிட்டுப்போய் கால்களையும் கைகளையும் மடக்கிக் கொண்டு கட்டிலில் படுத்துவிட்டான். தாய் விகாரமாதேவி கால்களையும் கைகளையும் நீட்டிக்கொண்டு படுக்கும்படி கூற கங்கைக்கு அப்பால் தமிழரும், தென்திசையில் கடலும் என இருபக்கங்களும் நெருக்கும்போது எப்படிக்கால்களை நீட்டிப்படுப்பது என கேள்வி எழுப்பினான். அதாவது சிறுவயதிலேயே தமிழர்களுக்கு எதிரான வெறியில் காமினி உருவாகி வளர்ந்தான் என்பதை இச்சம்பவம் மூலம் மகாவம்சம் வெளிப்படுத்துகிறது.

மகாநாமர் எல்லாளனின் நீதி தவறாத ஆட்சியை தவிர்க்கமுடியாமல் சில இடங்களில் ஏற்றுக்கொண்ட போதிலும் சில தமிழ் குடிகளும் தமிழ் படையினரும் அனுராதபுரத்திலுள்ள பௌத்த சைத்தியங்களுக்கும் சமய சின்னங்களுக்கும் சேதம் விளைவித்தார்கள் எனவும் அத்தகைய கொடுமைகளை தாங்கமுடியாத நந்தமித்திரன் என்ற ஒரு போர் மல்லன் அனுராதபுரத்தை விட்டு ஓடி உருகுணையைச் சென்றடைந்தான் எனவும் கூறப்படுகிறது. ஆனால் இது எல்லாளனின் செங்கோல் ஆட்சியை மாசுபடுத்த திட்டமிட்டு புனையப்பட்ட ஒரு கற்பனை என்றே கருதவேண்டியுள்ளது.

எல்லாளனின் அரண்மனையில் அவனது படுக்கை அறையில் ஒரு மணியைக் கட்டி அதன் கயிற்றின் மறுமுனையை அரண்மனை வாசலில் தொங்கவிட்டான் எனவும் நீதி வேண்டுவோர் அதை எந்நேரமும் இழுத்தடித்து முறைப்பாடு செய்து நியாயத்தை பெற்றுக்கொள்ளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்பதையும் மகாநாமரே கூறுகிறார். ஒருமுறை இளவரசனின் தேர்ச்சில்லில் கன்று ஒன்று அகப்பட்டு இறந்து விட்டதென்றும் தாய்ப்பசு மணியை அடித்து முறைப்பாடு செய்ததையடுத்து எல்லாளன் தனது மகனையும் தேர்ச்சில்லால் நெரித்து கொன்று தண்டனை வழங்கினான் எனவும் அதேபோன்று எல்லாளனின் தேரின் சக்கரம் ஒரு தாது கோபுரத்தில் பட்டதால் அதில் சேதம் ஏற்பட்டுவிட்டதாகவும் அதற்கு தண்டனையாக தன்னை தேர்ச்சில்லில் போட்டு கொல்லும்படி கட்டளையிட்டான் எனவும் எனினும் அமைச்சர்கள் வலியுறுத்தியதை அடுத்து அத் தண்டனையை விலக்கிவிட்டு சேதமடைந்த பதினைந்த செங்கற்களுக்குப் பதிலாக பதினையாயிரம் செங்கற்கள் கொண்டு தாது கோபுரத்தை புனரமைத்தான் எனவும் எல்லாளனின் நீதி தவறாத ஆட்சியைப்பற்றி மகாவம்சமே குறிப்படுகிறது. ஒரு பௌத்த விகாரையின் தாதுகோபுரத்தில் சிறுசேதம் ஏற்படுத்தியமைக்காக தனக்கே மரணதண்டனை தீர்ப்பளித்த எல்லாளன் தமிழர்களும் தனது படைவீரர்களும் பௌத்த வணக்க ஸ்தலங்களுக்கு சேதம் விளைவித்தமையை அனுமதித்தான் என்பது எப்படி உண்மையாக இருக்கமுடியும்? எனவே அது எல்லாளனை மாசுபடுத்த இட்டுக்கட்டப்பட்ட ஒரு கதையென்றே நம்பவேண்டியுள்ளது.

எல்லாள - காமினி யுத்தம் என்பது இரு அரசர்களுக்கு இடையிலேயே பிரதேசங்களைக் கைப்பற்றவும் விடுவிக்கவும் நடத்தப்பட்ட ஒரு யுத்தமே ஒழிய அது தமிழர்களுக்கு எதிரான சிங்களவர்களின் யுத்தமல்ல என பல வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கு ஆதாரமாக எல்லாளனின் படையில் சிங்களத் தளபதிகள் இருந்தமையும் காமினியின் படைகளில் சிங்களத் தளபதிகள் இருந்தமையையும் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும் எல்லாளன் ஆட்சியில் பௌத்த விகாரைகளும், சைத்தியங்களும் சிறப்புடன் பரிபாலி;க்கப்பட்டு வந்தது என்பதை மகாவம்சம் ஏற்றுக்கொள்கிறது. கி.மு 2ம் நூற்றாண்டில் இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு கி.பி 5ம் நூற்றாண்டில் வரையப்பட்ட காவியமான மகாவம்சத்தில் 7 நூற்றாண்டுகளின் பின்னான காலப்பகுதியில் நிலவிய தமிழர்களுக்கு எதிராக நிலவிய குரோத உணர்வு ஆதிக்கம் வகிப்பதை உணரமுடிகிறது.

சேனன் குத்திகன் என எல்லாளனுக்கு முற்பட்ட காலத்தில் அனுராதபுரத்தை கைப்பற்றி ஆண்ட இருவரையும் இந்தியாவில் இருந்து வந்த குதிரை வணிகர்கள் எனவும் எல்லாளனை சோழ இளவரசன் எனவும் மகாவம்சம் சித்தரிக்கரிக்கிறது. கி.மு 1ம், 2ம் நூற்றாண்டுகளில் பிற நாடுகளுக்கு படையெடுக்கும் அளவுக்கு சோழர்கள் பலம் பெற்றிருக்கவில்லை கப்பல் கட்டி பிறநாடுகளுக்கான வணிகத்தை மேற்கொண்டு செல்வம் திரட்டுவதிலும் சங்கம் அமைத்து தமிழ் வளர்ப்பதிலும் தமிழரசுகள் அக்காலப்பகுதியில் பிரதானமாகக் கொண்டிருந்தன.

அக்காலப்பகுதியில் இலங்கையை நோக்கி சோழ படையெடுப்பு எதுவும் நடந்ததாக வரலாற்றுக்குறிப்பு எதுவுமில்லை. ஆனால் எல்லாளன், சேனன் ஆகியோர் அக்காலத்தில் இலங்கையின் வடக்கே சிறந்து விளங்கிய உத்திரதேசத்தின் (கந்தரோடை, வல்லிபுரம்) மன்னர்கள் எனவும் குத்திகன் பூநகரி நல்லூரை தலைநகராக் கொண்டு ஆட்சிசெய்த மன்னன் எனவும் அவர்கள் இந்த தரத்தினரதும் வணிகமேலாண்மை காரணமாக வலிமையான குதிரைப்படையை வைத்திருந்தார் எனவும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இது எல்லாளன், சேனன், குத்திகன் பிற நாட்டைச்சேர்ந்த ஆக்கிரமிப்பாளர்கள் என சித்தரிப்பதன் மூலம் மகாவம்சம் தமிழர்கள் படையெடுத்து வந்து இலங்கையில் குடியேறினார்கள் என நிறுவ முயல்கிறது. அதையே இன்றைய இனவாத அரசியல்வாதிகளும் பௌத்த பிக்குகளும் தமிழரை வந்தேறுகுடிகள் என கூறிவருகின்றனர்.

எவ்வாறு இராமாயணம் ஆரியர்களால் திராவிடர்களின் பிரதேசங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதை நியாயப்படுத்த இராமனை இறைவனின் அவதாரம் எனச்சித்தரித்து பாட்டுடைத்தலைவனாக்கி கூனியின் சபதம் சீதை கடத்தப்பட்டமை போன்ற புனைவுகளை இராமரின் வனவாசம், போருக்கான காரணம் என்பவற்றுக்கான மூலங்களாக காட்டி இராமயணம் காவியமாக உருவாக்கப்பட்டதோ அவ்வாறே மகாவம்சமும் நீதி தவறாத ஆட்சியை மேற்கொண்ட எல்லாளனை கொன்று ஆடசியைக் கைப்பற்றிய காமினியை நியாயப்படுத்த உருவாக்கப்பட்ட ஒரு காவியமாகும். அதில் விகாரமாதேவியின் சபதம், துட்டகாமினி புத்ததேரரின் மறு அவதாரம், காமினி சகோதரர்கள் சிறுவயதிலேயே தமிழர் எதிர்ப்புணர்வை கொண்டிருந்தமை போன்ற புனைவுகள் மூலம் காமினியின் படையெடுப்பையும் வெற்றியையும் எல்லாளனைக் கொன்றமையும் ஒரு புனித காரியமாகவும், காமினி ஒரு அவதாரபுருசராகவும் மகாவம்சம் திட்மிட்டமுறையில் சித்தரிக்கும் ஒரு காவியமாக உருவாக்கப்பட்டது. இதில் சிங்களவர்கள் தமிழர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து தம்மை விடுவிக்க மேற்கொள்ளப்பட்ட ஒரு புனிதபோர் எனக்காட்டி தமிழர்களுக்கு எதிரான குரோத உணர்வு இந்தக்காவியம் எங்கும் இழையோடுவதை அவதானிக்கமுடியும்.

எனவே 5ம் நூற்றாண்டில் படைக்கப்பட்ட மகாவம்சத்தின் புனைவுகள் இன்று மேலும் செழுமைப்படுத்தப்பட்டு தமிழர்களுக்கு எதிரான இன ஒடுக்குமுறையின் ஆயுதங்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மாறிமாறி அதிகாரத்துக்கு வரும் ஆட்சியாளர்களால் தமிழ், முஸ்லீம் மக்களுக்கு மேல் மேற்கொள்ளப்படும் அநீதிகளின் பின்னால் சிங்கள மக்களை அணிதிரட்டுவதற்கு இனவாதிகளால் மகாவம்சம் முன்வைக்கப்படுகிறது என்பதை நியாயபூர்வமான எவரும் மறுத்துவிடமுடியாது.

நா.யோகேந்திரநாதன்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கைபிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE