Monday 18th of March 2024 10:43:48 PM GMT

LANGUAGE - TAMIL
பகிடிவதையும் தற்கொலையும்!
பகிடிவதையும் தற்கொலையும்!

பகிடிவதையும் தற்கொலையும்!


புதுமுக மாணவர்கள் மீதான பகிடிவதை குறித்து வெளியாகியுள்ள பல்வேறு தகவல்கள் பல்கலைக்கழகக் கல்வி வட்டாரங்களில் மட்டுமல்லாமல் பொது மக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆனால் அந்த விடயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அத்துடன் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதியும் நிவாரணமும் கிடைக்கவும் இனிமேல் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ள பகிடிவதைகளைத் தடுக்கவும்; உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரியவில்லை.

இதனால் பல்கலைக்கழகத்திற்குள் புகும் மாணவர்கள் மத்தியில் பகிடி வதை குறித்த அச்சம் நீக்கப்படவில்லை. பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியைத் தொடர்வதற்கு

மாணவர்கள் மத்தியில் இயல்பாக இருக்க வேண்டிய நம்பிக்கையையும் ஆர்வத்தையும் இந்த நிலைமை மோசமாகப் பாதித்துள்ளதாகவே பெற்றோர்கள் பலரும் கூறுகின்றனர்.

பல்கலைக்கழகம் என்பது பாடசாலைகளைப் போன்றதல்ல. அது கல்வி அறிவு, ஆற்றல், நல்லொழுக்கம், தன்னம்பிக்கை, தீர்மானங்களை மேற்கொள்வதற்கான துணிவு, சமூகம் சார்ந்த செயற்பாடுகளிலான ஊக்கம் போன்ற பல்வேறு பண்புகளை அறிவுசார்ந்த நிலையில் இளைஞர்களின் மனங்களிலும் நடத்தையிலும் படியச் செய்வதற்கான பயிற்சிக் கூடம் என்றே கூற வேண்டும்.

அத்தகைய கல்வி நிறுவனங்களாகிய பல்கலைக்கழகங்களில் ஒழுக்க விதிகள் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். அதி முக்கியத்துவம் பெற்றிருக்க வேண்டும். குழந்தைகள் தமது கல்விச் செயற்பாடுகளை ஆரம்பிக்கின்ற முன்பள்ளிகள், ஆரம்பப்பாடசாலைகளிலும்கூட ஒழுக்கவிதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.

குறித்த சீருடைகளிலேயே பிள்ளைகள் வரவேண்டும். குறித்த நேரத்திற்குப் பாடசாலைகளுக்கு சமூகமளிக்க வேண்டும். குறித்த நேர ஒழுங்கிற்கமைகய செயற்பட வேண்டும் என்ற செயல் ஒழுங்கு மட்டுமல்லாமல் நடத்தை ஒழுங்குகளுக்கான விதிமுறைகளும் கடைப்பிடிக்கப்படுகின்றன. அவற்றை குழந்தைகள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர்களும் முறையாகப் பின்பற்றி ஒழுகுவதைக் காண முடிகின்றது.

இதேபோன்றுதான் பாடசாலைகளிலும் நிறுவன ரீதியான ஒழுங்கு விதிகளும் பண்பாட்டு நடைமுறைகளும் பின்பற்றப்படுகின்றன. கடைப்பிடிக்கப்படுகின்றன. அவற்றை மீறுவது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படுகின்றது. அதற்கேற்ற வகையில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என கல்விச் செயற்பாட்டின் பங்குதாரர்கள் அனைவரும் ஒத்துழைத்துச் செயற்படுகின்றார்கள்.

முழு சமூகத்தையுமே பாதிக்கும்

சாதாரணமாகவே வர்த்தக நிறுவனங்கள், அரச தனியார் நிறுவனங்கள், விருந்தினர் விடுதிகள் போன்ற மக்கள் தேவைகளுக்காகக் கூடுகின்ற இடங்கள் தத்தமது வசதிக்கும் சேவைகளை வழங்குகின்ற முறைமை வசதிக்குமாக ஒழுங்கு விதிகள் இருக்கின்றன. அதேபோன்று ஆலயங்களிலும் அந்தந்த ஆலயத்தின் தன்மைக்கும் மதரீதியான தன்மைக்கும் ஏற்ற வகையில் ஒழுங்கு விதிகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

இதேபோன்று நாடாளுமன்றம் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் ஒன்றுகூடிச் செயற்படுகின்ற சபைகள் மன்றங்களிலும் நிலையான ஒழுங்கு விதிகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. அந்தந்த சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் அவற்றைக் கண்டிப்பாகக் கடைப்பிடித்து ஒழுக வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறே அவர்களும் ஒழுகுகின்றார்கள்.

இந்தத் தள நிலையிலான ஒழுங்கு விதிகளையும், ஒழுக்கம் சார்ந்த நடைமுறைகளையும் பின்பற்றத் தவறுபவர்கள் கேள்விக்கு உள்ளாக்கப்படுவார்கள். தண்டிக்கப்படுவதும் உண்டு. நிலைமை இவ்வாறிருக்க எதிர்காலத்துக்கான கல்வியறிவுடைய சந்ததியினரை உருவாக்குகின்ற உயர்கல்வி பீடங்களாகிய பல்கலைக்கழகங்களின் ஒழுங்கு விதிகளை மாணவர்கள் பின்பற்ற வேண்டிய அவசியம், தேவை குறித்து விளக்கிக் கூற வேண்டிய அவசியமில்லை.

பல்கலைக்கழகத்திலும் வெளியிலும் பல்கலைக்கழக மாணவர்கள் தாங்கள் உயர்கல்வி கற்கும் மாணவர்கள் என்ற சமூக அந்தஸ்தை பொது வெளியிலான மரியாதையை, கௌரவத்தைப் பேணி நடந்து கொள்ள வேண்டியது அவசியம். இதனை சமூகம் சார்ந்த ஒழுக்க நெறிமுறையாகக்கூட குறிப்பிடலாம். பொது நிலையில் பொது வெளியில் பல்கலைக்கழக மாணவர்களுக்கென நிலவுகின்ற கௌரவத்தையும் மக்கள் மனங்களில் உள்ள மரியாதைக்குரிய உருவகத்தையும் பாதிக்கத்தக்க வகையில் மாணவர்கள் நடந்து கொள்ளக்கூடாது. அத்தகைய நடவடிக்கைகள் தனிப்பட்ட நடவடிக்கைகளாக இருந்தாலும்கூட, பொது நிலையில் அது பல்கலைக்கழகத்தின் அனைத்து மாணவர்களையும் பாதிக்கவே செய்யும்.

தனி மாணவன் மட்டுமல்ல. ஒன்றிரண்டோ அல்லது ஒருசில மாணவர்களோ நெறிமுறை பிறழ்ந்து நடந்து கொள்வார்களேயானால், அது பல்கலைக்கழக மாணவர்கள் என்ற மாணவர் சமூகத்திற்கே பெரும் இழுக்காகவும் கேடாகவுமே அமையும். அவ்வாறே கருதப்படும் என்பதையும் கவனத்திற் கொள்ள வேண்டியது அவசியம்.

எனவே, பகிடி வதையில் ஈடுபடுகின்ற மாணவர்கள் அதனால் ஏற்படுகின்ற விளைவுகள், விபரீதங்கள் குறித்தச் சிந்திக்க வேண்டும். அதனடிப்படையில் அவர்கள் செயற்படவும் வேண்டும். அவ்வாறு செயற்பட வேண்டியது அவர்களுடைய கடமையும் பொறுப்புமாகும்.

ஏன் பகிடிவதை?

பாடசாலைக் கல்விக்கு அடுத்ததாக உயர் கல்விக்காகப் பல்கலைக்கழகத்திற்குள் பிரவேசிக்கின்ற மாணவர்கள் ஒரு புதிய சூழலுக்குள் காலடி எடுத்து வைக்கின்றார்கள். ஏனெனில் பாடசாலை சூழலைவிட பல்கலைக்கழக கல்விச் சூழல் வித்தியாசமானது. பரந்து விரிந்தது. பொறுப்புக்களும் கடமைகளும் கூடியது. சமூகத்துடனும் தொடர்புடையதாகத் திகழ்கின்றது.

எனவே, குறுகிய ஒரு நிலையில் இருந்து பரந்து விரிந்த ஒரு சூழலுக்குள் செல்கின்ற மாணவர்கள் அந்தச் சூழலுக்கு இசைவாக்கம் அடைய வேண்டியது அவசியமாகின்றது. அத்துடன், அங்குள்ள மேல்நிலை மாணவர்கள் அல்லது சிரேஸ்ட மாணவர்களுடன் நட்பு கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. எனவே, புதுமுக மாணவர்களுக்குப் பல்கலைக்கழக சூழலைப் பற்றிய தெளிவை ஏற்படுத்துவதற்கும், அங்கு செயற்படுவதற்குரிய உளப்பாங்கைப் பெற்றுக்கொள்வதற்குமாகவே பகிடி வதை ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

புதுமுக மாணவர்கள் மத்தியில் இயல்பாகவே காணப்படுகின்ற கூச்ச சுபாவம், எந்தவொரு வேலையையும் அல்லது பொறுப்பையும் தயக்கமின்றி துணிவோடு ஏற்றுச் செயற்படுவதற்குத் தடையாக அமைந்திருக்கும். அத்துடன் அறிமுகமில்லாத மாணவர்களுடன் இணைந்து கூட்டுப் பொறுப்புடன் செயலாற்ற வேண்டிய கடமைகளில் ஈடுபடுவதற்கும் உளவியல் ரீதியாக அவர்கள் தயாராக இருக்கமாட்டார்கள்.

எனவேதான் புதுமுக மாணவர்களை சிரேஸ்ட மாணவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்து அவர்களை அந்தச் சூழலுக்கு இசைவாக்கம் பெறுவதற்காகவும், அந்த நிலைமைக்கு அவர்களைத் தயார் செய்வதற்குமாகவே பகிடிவதைச் செயற்பாடு நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

சாதாரண கருத்தரங்குகள், செயலமர்வுகள், பயிலரங்குகள் என்பவற்றில் பங்கேற்பவர்களை அந்த அரங்கத்தின் சூழலுக்கும் இயல்புக்கும் உரியவர்களாக உளவியல் ரீதியாக முதலில் தயார்ப்படுத்துவதற்கான செயற்பாடு ஒன்று முன்னெடுக்கப்படும். இதனை Brain storm என அழைப்பார்கள். பல்வேறு சிந்தனைகளுடனும், பல்வேறு சூழல்களிலும் இருந்து வருபவர்களை பயிலரங்கின் விடயப்பரப்புக்குள் உள்வாங்குவதற்கும் இயல்பான நிலைமையில் அங்கு செயற்படுவதற்கும் அவர்களைத் தயார்ப்படுத்தவதற்கு இந்தப் பயிற்சி பெரிதும் துணை புரிகின்றது.

கிட்டத்தட்ட இதனை ஒத்த வகையிலேயே பல்கலைக்கழகத்தின் புதுமுக மாணவர்களைப் பல்கலைக்கழகக் கல்விச்சூழலுக்குத் தயார்ப்படுத்துவதற்கான பகிடி வதைச் செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது என்று கூறலாம். ஆனாலும் இது சற்று எல்லை மீறியதாக பேச்சுக்களின் ஊடாகவும், உடைகள் அணியும் விதம் பற்றியதாகவும். உடற் பயிற்சிகள் சார்ந்து உடல் ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் உளவியல் ரீதியான மாற்றங்களை அல்லது பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படுகின்றது.

சிஐடி விசாரணகைள்........?

புதுமுக மாணவர்களின் மனங்களிலும் செயல்களிலும் பண்பு ரீதியாக சில மாற்றங்களைக் கொண்டு வருவது என்ற எல்லையை; கடந்து அவர்களுடைய தனிமனித கௌரவம், பால்நிலையிலான சுயுமரியாதை என்பவற்றில் பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் இந்தப் பகிடி வதைகள் அமைந்துவிடுகின்றன.

சில வேளைகளில் சிரேஸ்ட மாணவர்களின் வக்கிர மன நிலைக்குத் தீனிபோடும் வகையிலான செயற்பாடுகளுக்கும் இந்தப் பகிடி வதை வழிதிறந்தவிடுகின்றது. அந்த வகையிலேயே, யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்திலும், யாழ்; பல்கலைக்கழகத்திலும் இடம்பெற்ற இடம்பெற்ற பகிடி வதை சம்பவங்கள் அமைந்திருந்ததாகத் தெரிகின்றது. அதன் காரணமாகவே, தற்கொலை செய்து கொள்ளும் நிலைமைக்கு ஆளாகப்பட்டார்கள் என்ற அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் பரபரப்பாக வெளியாகி இருந்தன.

இந்தச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் நேரடியாகத் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து வெளிப்படையாக பொலிசாரிடமோ அல்லது அரச அதிகாரிகளிடமோ முறையிடவில்லை. அவர்களுடைய பெற்றோரும் அதற்கு முன்வரவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் எதிர்கால வாழ்க்கை நிலையைக் கருத்திற்கொண்டதே இதற்குக் காரணம்.

ஆனாலும் யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாக நிர்வாகம் பொலிசாரிடம் செய்த முறைப்பாடு ஒன்றையடுத்து, வட்ஸ்அப் வலையமைப்பின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட பலாத்காரமான பாலியல் அச்சுறுத்தல் சேட்டைகள் குறித்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர். ஆயினும் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து நேரடியாகத் தமக்கு முறைப்பாடு கிடைக்காத காரணத்தினால் தம்மால் அந்த விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுக்க முடியாதுள்ளதாக கிளிநொச்சி பொலிசார் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்து அந்த விசாரணை பொறுப்பை புலனாய்வு பொலிஸ் பிரிவிடம் ஒப்படைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அதேவேளை பொலிசாருக்குக் கிடைத்துள்ள வட்ஸ்அப் வலையமைப்பின் ஊடாகக் குழு நிலையில் தொடர்பு கொண்டிருந்தவர்களின் தொலைபேசி இலக்கங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பொலிஸ் விசாரணை ஒருபுறமிருக்க யாழ் பல்கலைக்கழகமும் இந்த சம்பவம் தொடர்பில் உள்ளக விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளது. பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்றிருந்த இந்தச் சம்பவம் குறித்து வடமாகாண ஆளுனர், யாழ் மாவட்ட மனித உரிமைகள் அலுவலகத்தினர் ஆகியோரும் கவனம் செலுத்தி விசாரணைகளுக்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.

தற்கொலைகளும் உயிரிழப்புக்களும்

அத்துடன் வன்னிப்பிரதேசத்தின் கல்விச் செயற்பாட்டில் அதிக ஆர்வத்துடனும், ஈடுபாட்டுடனும் செயற்பட்டு வருகின்ற யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலதரப்பினரும் இந்தப் பகிடிவதை சம்பவத்தைக் கண்டித்துள்ளனர். அரசியல் தரப்பில் இருந்தும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. முழுமையான விசாரணைகளுக்கான கோரிக்கைகளும் விடுக்கப்பட்டிருக்கின்றன.

இந்தப் பகிடிவதையில் மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து யாழ் பிரதேச பெண்கள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடத்தி விசாரணைகள் நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

பகிடிவதையினால் இலங்கைப் பல்கலைக்கழக மாணவர்கள் பலர் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் பலர் உயர்கல்வியைக் கைவிட்டுள்ளனர். கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன செய்தியாளர்களுடனான ஒரு சந்திப்பில் மாணவர்கள் மத்தியில் பகிடிவதைத் தொடர்வதை அனுமதிக்க முடியாது என்றும் இந்த வருடத்துடன் இதற்கு ஒரு முடிவு காணப்படும் என கூறியுள்ளார். கடந்த வருடத்தில் மாத்திரம் பகிடிவதை காரணமாக சுமார் 2000 மாணவர்கள் பல்கலைக்கழகக் கல்வியைக் கைவிட்டுள்ளார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2017 மற்றும் 2018 ஆகிய இரண்டு ஆண்டுகளில் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகி பதிவு செய்திருந்த மாணவர்களில் 2989 பேர் பகிடிவதை காரணமாக பல்கலைக்கழகக் கல்வியை இடைநிறுத்திக் கொண்டார்கள் என்று பல்கலைக்கழக மானியங்களின் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரச தரப்பின் இந்தத் தகவல்கள் பல்கலைக்கழகங்களில் இடம்பெறுகின்ற பகிடிவதை நாட்டின் மாணவ சமூகத்தினருக்குப் பல்கலைக்கழகக் கல்வியில் ஏற்டுத்தியுள்ள பாதிப்பை வெளிப்படுத்தி உள்ளது.

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் பல்கலைக்கழகங்களுக்குத் தகுதி பெற்று சித்தியடைந்துள்ள மாணவர்களில் பெரும் எண்ணிக்கையானவர்கள் பகிடிவதையினால் தமது உயர்கல்விக்கான வாய்ப்பைக் கைவிடச் செய்துள்ள அவல நிலை ஒருபுறமிருக்க, தனிப்பட்ட ரீதியிலும் மாணவர்களை இந்தப் பகிடிவதை மிகமோசமாகப் பாதித்துள்ளது.

பல்கலைக்கழகக் கல்வி தொடர்பான புள்ளிவிபரத் தகவல்களின்படி, பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 6 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பேராதனை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரூபா ரத்தினசீலி, ருகுணு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவி ஆகிய இரண்டு மாணவிகள் பாலியல் துன்புறுத்தல் சித்திரவதை காரணமாகத் தற்கொலை செய்து கொண்டனர்.

ஏனைய நான்கு மாணவர்கள் பகிடிவதையினால் உயிரிழந்தனர். அவர்களில் ஒருவராகிய சிறி ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவத் துறை மூன்றாம் ஆண்டு மாணவன் கே.ரீ.விஜேதங்க 2002 ஆம் ஆண்டு பகிடிவதைக்கு எதிரான கலந்துரையாடல் ஒன்றை நடத்திக் கொண்டிருந்தபோது, படுகொலை செய்யப்பட்டார்.

தண்டனைச் சட்டங்கள்

பல்கலைக்கழகக் கல்வியை இழந்தது மட்டுமல்லாமல் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் இவ்வாறு தமது உயிர்களையே இழப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்ட பகிடி வதைக்கு எதிராக கடுமையான சட்;டங்களும் இயற்றப்பட்டிருக்கின்றன. அந்தச் சட்டத்தின் மூலம் பேராதனை பல்கலைக்கழகப் பொறியியல் துறையைச் சேர்ந்த 21 வயதுடைய செல்வவிநாயகம் வரப்பிரகாஷ் என்ற மாணவன் கடுமையான பகிடிவதை காரணமாக சிறுநீரகப் பாதிப்புக்கு உள்ளாகி உயிரிழந்ததையடுத்து, பகிடிவதைக்கு எதிரான சட்டத்திற்கமைய ஒரு மாணவனுக்கு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டதுடன், மற்றுமொரு மாணவனுக்குத் தண்டப் பணம் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டது.

பகிடிவதையைத் தடுப்பதற்காக கல்வி நிறுவனங்களின் பகிடிவதை மற்றும் வேறு வடிவங்களிலான வன்முறைகளைத் தடுப்பதற்கான 1998 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்கச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்காக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் காயத்தை ஏற்படுத்துகின்ற செயற்பாடுகளும், பயப்பீதியை அல்லது மனவருத்தத்தை ஏற்படுத்துகின்ற நடத்தைகளுமே பகிடிவதை என்று இந்தச் சட்டம் வரையறை செய்திருக்கின்றது. இந்த வகையில் பகிடிவதை என்பது மிகத் தெளிவான தண்டனைக்குரிய குற்றமாக அந்தச் சட்டம் வலியுறுத்தி உள்ளது.

இந்தச் சட்டத்தின் கீழ் குற்றவாளியாகக் காணப்படுகின்ற ஒருவர் 2 வருட கடூங்காவல் சிறைத்தண்டனைக்கு உள்ளாவார். அத்துடன் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்கவும் வேண்டும்.

பகிடிவதையின் மூலம் பாலியல் துன்புறுத்தலையும் மோசமான துயரத்தையும் ஏற்படுத்துகின்ற குற்றவாளிக்கு 10 வருட கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று இந்தச் சட்டம் கூறுகின்றது. அத்துடன் பாதிக்கப்பட்டவருக்குக் குற்றவாளி இழப்பீடும் வழங்க வேண்டும்.

ஒருவரைக் காயப்படுத்தும் நோக்கத்துடனோ அல்லது அவருடைய சுயகௌரவத்திற்கு அல்லது உடைமைக்கு சேதம் ஏற்படுத்தும் நோக்கத்துடனோ செய்யப்படுகின்ற பகிடிவதை குற்றச் செயலுக்கு 5 வருடங்கள் வரையிலான கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பது இந்தச் சட்டத்தின் முடிவு.

யாரேனும் ஒருவரைப் பலாத்காரமாகத் தடுத்து வைத்திருந்தால், அவ்வாறு செயற்பட்ட குற்றத்திற்காக 7 வருடங்கள் வரையிலான கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று பகிடிவதைக்கு எதிரான சட்டம் கூறுகின்றது.

எதிர்பார்ப்பு

இவ்வாறு கடுமையான தண்டனைகளை விதித்துள்ள சட்டங்கள் நடைமுறையில் இருக்கின்ற போதிலும், சிரேஸ்ட மாணவர்கள் பகிடிவதையில் எந்தவிதமான தயக்கமுமின்றி சாதாரணமாக ஈடுபடுகின்றார்கள். அதுமட்டுமல்லாமல் சட்டவிரோதமான பகிடிவதைச் செயற்பாட்டை பல்கலைக்கழக சிரேஸ்ட மாணவர்கள் நியாயப்படுத்துகின்றார்கள். இதற்கு சில பழைய மாணவ்களும் ஆதரவான போக்கைக் கொண்டிருக்கின்றார்கள் என்பது கவலைக்குரிய விடயமாகும்.

இருந்த போதிலும் உயர்கல்வித் துறைசார்ந்தவர்கள் பகிடிவதையை இல்லாமல் செய்வதற்கு இதய சுத்தியுடன் முயற்சிப்பதாகத் தெரியவில்லை. அவ்வாறு செயற்பட்டிருந்தால் பகிடிவதை நாட்டில் இல்லாதொழிந்திருக்கும் என்று பாதிக்கப்பட்;ட மாணவர்களும் அவர்களுடைய பெற்றோரும் கூறுகின்றார்கள்.

பகிடிவதையில் ஈடுபடுகின்ற மாணவர்களின் கல்வியும், எதிர்காலமும் பாதிக்கப்பட்டுவிடும் என்ற காரணத்திற்காக பகிடிவதைக்கு எதிரான சட்டங்களுக்கு அமைவாகப் பல்கலைக்கழகங்கள் கடுமையாக நடந்து கொள்வதில்லை என்ற கருத்து சமூகவியலாளர்கள் மத்தியில் நிலவுகின்றது. மனிதாபிமான ரீதியிலான அணுகுமுறை என்ற வகையில் மென்போக்கில் நிறுவன உள்ளக ரீதியில் தண்டனைகளை வழங்கி பகிடிவதைகளையும், அதற்குக் காரணமானவர்களையும் கடந்து செல்கின்ற ஒரு போக்கைக் காண முடிகின்றது என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

அதேநேரம் பகிடிவதை சம்பவங்கள் தொடர்பிலான சட்ட ரீதியான விசாரணை நடவடிக்கைகளின் மூலம் உண்மையான தகவல்கள் பகிரங்கப்படுத்தப்படுமானால், அது கல்வி நிறுவனம் என்ற ரீதியில் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்தின் கௌரவத்திற்கும், சமூக மரியாதைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்திற்காகவும் இத்தகைய மென்போக்கைப் பல்கலைக்கழக நிர்வாகங்கங்கள் கடைப்பிடிப்பதாகக் கூறப்படுகின்றது.

எது எப்படி இருப்பினும் தற்கொலை செய்து கொள்கின்ற அளவுக்கு பகிடிவதைகளைச் செய்பவர்களை பல்கலைக்கழக நிர்வாகங்கள் தயவுதாட்சண்யமின்றி தண்டிப்பதற்கு முன்வர வேண்டும். ஏனெனில் ஒருவரைத் தற்கொலை செய்து கொள்கின்ற நிலைமைக்கு ஆளாக்குவதென்பது படுமோசமான குற்றச் செயலாகும். அத்துடன் அதனை கொலை முயற்சி என்று கூறினாலும் அது மிகையாகாது.

எனவே, இது விடயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் முழுமையான விசாரணைகளை நடத்தி சம்பந்தப்பட்டவர்களைக் கண்டறிந்து உரிய தண்டனைகளை வழங்க வேண்டும். அதன் மூலம் மட்டுமே பகிடிவதை காரணமாக ஏற்படுகின்ற தற்கொலை முயற்சிகளையும் தற்கொலைகளையும் தடுக்க முடியும். பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகின்ற மாணவர்கள் அனைவரும் உயர்கல்வியைப் பெற்று வாழ்க்கையில் முன்னேறவும் முடியும்.

பி.மாணிக்கவாசகம்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE