Tuesday 19th of March 2024 12:43:23 AM GMT

LANGUAGE - TAMIL
பொருளாதாரப் போரில் ஆறுமுகநாவலர்!
பொருளாதாரப் போரில் ஆறுமுகநாவலர்!

பொருளாதாரப் போரில் ஆறுமுகநாவலர்!


ஒருதேசிய இனம் எனப்படும்போது அதற்கென ஒரு தனித்துவமானமொழி, தனித்ததுவமானகலாச்சாரம், ஒருபொதுபொருளாதாரம், ஒரு பாரம்பரியவாழிடம் என்பன அவசியம் எனக்கருதப்படுகிறது. அவ்வகையில் இலங்கைத்தமிழ் மக்கள் ஒருதேசிய இனத்திற்கான தகைமையை முழுமையாக கொண்டிருந்தார்கள். எனினும் ஐரோப்பியரின் வருகையின் பின்பு தேசிய இனத்திற்கான தகைமைகள் மெல்லமெல்ல பலவீனப்படுத்தப்படும் நிலை உருவாகியது. இதில் மதமாற்றம் முக்கியமானபாத்திரத்தைவகித்தது. ஆங்கிலக்கல்வி கற்றவர்களான கிறீஸ்தவர்களுக்கு சகலவிடயங்களிலும் ஐரோப்பிய அரசுகளால் முன்னுரிமை வழங்கப்பட்டமையும் கிறீஸ்தவமதநிறுவனங்களின் வலிமையான பிரசாரங்களும் எமதுமொழி எமதுகலாச்சாரம் என்பனவற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

மதமாற்றம் மூலம் எமது தேசிய தனித்துவத்திற்கு ஏற்படுத்தப்பட்ட பாதிப்புகளுக்கு எதிராக நாவலர் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் மத ஆக்கிரமிப்பின் வேகத்தை கட்டுப்படுத்தின.

எனினும் வட்டுக்கோட்டையாழ்ப்பாணக் கல்லூரி,உடுவில் பெண்கள் கல்லூரி என்பன மதமாற்ற விடயத்தில் ஒரு தீவிரமான போக்கைகைக்கொண்டு ஓரளவு வெற்றியும் பெற்றன. ஒருகட்டத்தில் அங்கு கல்வி பயின்றவர்களில் 50 வீதத்திற்கு மேற்பட்டோர் கிறீஸ்தவ சமயத்திற்கு மதம் மாறியோராகவும் ஆசிரியர்கள் முழுமையிலும் கிறீஸ்தவர்களாகவும் அமைந்திருந்தனர். அதேவேளையில் உதயதாரகை என்ற மிசனரிமாரால் நடாத்துப்பட்டு வந்த பத்திரிகையும் தீவிர மதப்பிரசாரத்தில் ஈடுபட்டது. குறிப்பாக இந்துசமயசடங்குகள் திருநீறு அணிதல், விரதங்கள், திருவிழாக்கள் என்பன மூடநம்பிக்கைகளாக பிரசாரம் செய்யப்பட்டன. கோவில் திருவிழாக்களில் இடம்பெறும் மேளக் கச்சேரி, சதுர்கச்சேரி, வாணவேடிக்கை போன்ற கலைநிகழ்வுகள் பக்தி உணர்வை மழுங்கடித்து களியாட்ட சிந்தனையை ஊட்டுகின்றன என சமயநடைமுறைகள் கீழ்த்தரமாக விமர்சிக்கப்பட்டன.

இந்தநிலையில் மதமாற்றத்தில் ஒருவேகம் ஏற்படஆரம்பித்தது. எனினும் நாவலர் இவற்றிற்கு எதிராக புயல்வேக பிரசாரத்தை மேற்கொண்டார். திருநீறு அணிதல், விரதங்கள், சடங்குகள் போன்றவற்றிற்கு அறிவியல் பூர்வமான விளக்கங்களை அளித்தார். திருவிழாக்களில் இடம்பெறும் கலைநிகழ்வுகள் எவ்வாறு எமது வாழ்வு முறையில் கலை ஆலயங்களை மையாமாக வைத்து வளர்ச்சிபெற்றுவருகிறது என்பதை தெளிவுபடுத்தினார். அதன் காரணமாக மிசனரிமாரின் பிரசாரங்கள் தகர்க்கப்பட்டு மதமாற்றத்தின் வேகம் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டது.

இந்தநிலையில் நாவலருக்கு எதிராக கருத்துப்போரை தொடுக்க கத்தோலிக்க திருச்சபையால் நடத்தப்பட்டு வந்த கத்தோலிக்க காவலர் என்ற பத்திரிகையின் சார்பில் இந்தியாவின் பிரபலமான மதப்பிரசங்கியான அருளப்ப முதலியார் அழைக்கப்பட்டார். அவர் சைவசமயிகளை தன்னுடன் பகீரங்க விவாதத்திற்கு வருமாறு சவால் விட்டார். நாவலர் சவாலை ஏற்றுக்கொண்டு அருளப்ப முதலியாரின் வாதங்களை முறியடித்தார். ஏற்கனவே நாவலர் பைபிளைமொழி பெயர்ப்பதில் பிரதான பாத்திரம் வகித்தவர் என்ற காரணத்தால் கிறீஸ்தவ மதம் பற்றி பூரண அறிவு பெற்றிருந்தார். அதன் காரணமாக அருளப்ப முதலியாரின் வாதங்களை சுலபமாக முறியடிக்க முடிந்தது. மேலும் மாணவர் அமைப்பு ஒன்றினால் மேற்கொள்ளப்பட்டுவந்த மதுபழக்கம், மிருக பலி, சாதி ஒடுக்குமுறை என்பனவற்றிற்கு எதிரான பிரசாரத்திற்கும் நாவலர் தனது பரிபூரண ஆதரவை வழங்கினார்.

ஆங்கிலக்கல்வி மூலமும், மதமாற்றம் மூலமும் எமது மொழிக்கும், எமது கலாச்சாரத்திற்கும் ஏற்பட்ட பாதிப்புகளை உடைத்தெறிந்து முன்செல்வதில் நாவலர் வெற்றிமேல் வெற்றிபெற்றார். ஆங்கிலகல்வி பயிற்றுவிக்கும் இந்துப்பாடசாலைகளை உருவாக்கி வளர்த்தெடுத்ததின் மூலம் ஆங்கிலக்கல்வி எமது மொழியை பாதிக்காதவண்ணம் பாதுகாத்தார். இன்னொரு புறம் ஏட்டுவடிவிலிருந்த தமிழ் இலக்கண இலக்கிய நூல்களை அச்சேற்றி அவற்றை எல்லோரும் படித்து மொழியறிவை விருத்திசெய்யக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தினார். மேலும் செய்யுள் வடிவிலிருந்த நூல்களை உரைநடையில் எழுதிவெளியிட்டதுடன் தானாக பல நூல்களையும் எழுதிவெளியிட்டார்.

நாவலர் ஒரு தேசிய இனத்திற்கு உரியதனித்துவ அம்சங்களான மொழியையும் எமது கலாச்சாரத்துடன் நெருக்கமாக பிணைக்கப்பட்ட சைவமதத்தையும் பாதுகாப்பதில் வகித்த பங்கு காத்திரமானது. அதேவேளையில் நாவலர்காலத்தில் தமிழ் மக்களின் பாரம்பரிய வாழிடமென்பது பிரச்சனைக்குரிய விடயமாக இருக்கவில்லை. ஆங்கிலேயர் ஆட்சி நிலவியபோதும் வடக்கு கிழக்கு தமிழருக்கே உரிய பாரம்பரிய பிரதேசம் என்பதில் எவ்வித சிக்கலும் இருக்கவில்லை.

இந்த தேசிய இனத்திற்குரிய தனித்துவமான குணாம்சங்கள் மூன்றும் பாதுகாக்கப்பட்ட போதிலும் கூட தனித்துவமான தன்னிறைவுப் பொருளாதாரம் நலிவடைந்துபோயிருந்தது. அதை மேம்படுத்த வேண்டிய அவசியத்தை தமிழ் மக்கள் மத்தியிலுள்ள பெரியோர்கள் உணர்ந்துகொண்டனர். நாவலரும் அப்பெரும் பணியில் தான் பங்குகொள்ளாவிடின் தேசியத்தை நிலைநிறுத்துவதற்கு தான் ஆற்றியபணிகள் முழுமையடையா என்பதை புரிந்துகொண்டிருந்தார்.

ஐரோப்பியரின் வருகைக்கு முன்புவடக்கு கிழக்கு கிராமிய தன்னிறைவு பொருளாதாரத்தை கொண்ட பிரதேசமாகவே விளங்கியது. நிலம் என்பது பொதுச்சொத்தாக விளங்கிய நிலைமையில் விவசாயிகள் அரசிற்கு விளைச்சலின் ஒரு சிறுபகுதியை வரியாக செலுத்தும் நிலமையே இருந்தது. பிரதான உற்பத்திபொருட்களாக நெல்லு, உழுந்து, பயறு, குரக்கன், சாமை, மிளகாய், வெங்காயம், பாக்கு என்பன விளங்கின. ஓவ்வொரு கிராமமும் தங்கள் தேவையை தாங்களே பூர்த்திசெய்தன. சில பிரதேசங்களில் உற்பத்தி செய்யப்படாத பொருட்களை பரிமாற்றம் செய்வதற்கு நாளங்காடி எனப்படும் பகற்சந்தைகளும் அல்லங்காடி என அழைக்கப்படும் பின்மாலைப்பொழுது சந்தைகளும் அமைந்திருந்தன.

ஐரோப்பியரின் வருகையின் பின்பு பிரதான விவசாய உற்பத்திப்பொருளாக அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட புகையிலை எழுச்சிபெற்றது. இந்தியாவில் திருவாங்கூர், கொச்சி ஆகிய பிரதேசங்களுக்கு புகையிலை ஏற்றுமதி செய்யப்பட்டதால் பெருமளவு வருவாயை பெறக்கூடிய நிலையில் பெருமளவு விவசாயிகள் பாரம்பரிய உணவுப்பொருட்கள் உற்பத்தியை கைவிட்டு புகையிலை உற்பத்தியில் இறங்கினார். இன்னொரு புறம் ஐரோப்பியரால் அறிமுகப்படுத்தப்பட்ட கோதுமை மா காரணமாக ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட குரக்கன், சாமை, உழுந்து, பயறு, பனம்பொருள் உற்பத்திகள் என்பனவற்றின் உற்பத்தி பெருமளவு வீழ்ச்சியடைந்தது. அதாவது எமது மண் தன்னிறைவுப் பொருளாதாரத்திலிருந்து தங்குநிலப் பொருளாதாரத்தை நோக்கி மாற்றமடைய ஆரம்பித்தது. எனவே எம் பெரியோர்கள் மத்தியில் விவசாயத்தை மேம்படுத்தி தன்னிறைவு பொருளாதாரத்தை உருவாக்க வேண்டுமென்ற எண்ணம் உருவாகியது.

அதே நேரத்தில் பிரித்தானிய அரசு சிதைவடைந்து போயிருந்த குளங்களைத் திருத்தி விவசாய உற்பத்தியை ஊக்குவிப்பதில் அக்கரைகாட்டியது. இதில் 1862 தொடக்கம் 1879 வரை சட்ட நிரூபணசபையின் உத்தியோகப்பற்றற்ற உறுப்பினராக விளங்கிய முத்துக் குமாரசாமி அவர்கள் முன்னின்று செயற்பட்டார். அவ்வகையில் முல்லைத்தீவு கணுக்கேணி, மன்னார் கட்டுக்கரை, கனகராயன் குளம், பாவற்குளம், பதவியாக்குளம் உட்பட வவுனியாவில் சிலகுளங்கள் விவசாயத்திற்கு ஏற்ற வகையில் புனரமைக்கப்பட்டன. கிளிநொச்சியில் இரணைமடுக்குளப் புனரமைப்பும் ஆரம்பிக்கப்பட்டது.

அவற்றை அடிப்படையாக வைத்து ஆங்கில அரசு விவசாய உற்பத்திக்கென நிலங்களை ஒரு ஏக்கர் பத்துரூபாய் என்ற அடிப்படையில் விற்பனைசெய்தது.

இவ்வாறு விற்பனை செய்யப்பட்ட நிலங்களை கொள்முதல் செய்வதற்கு சாதாரண தமிழ் மக்கள் போதிய வசதியற்றவர்களாக இருந்தார்கள். இந்தநிலையில் 1877 டிசம்பர் 15ம் நாள் யாழ்ப்பாண மட்டக்களப்பு வர்த்தக கம்பனி என்றொரு நிறுவனம் தமிழ் பெரியார்களால் உருவாக்கப்பட்டது. இதன் பங்குகளை பொதுமக்கள் மத்தில் விற்கும் பொருட்டு ஆறுமுகநாவலரால் வண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலையில் ஒரு கூட்டம் ஒழுங்கு பண்ணப்பட்டது. இதில் 400 இற்கும் மேற்பட்டோர்கலந்துகொண்டனர்.நாவலர்தமிழ் மக்கள் தன்னிறைவுப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது தொடர்பாக ஆற்றிய சொற்பொழிவு அந்தக் கூட்டத்திலேயே ஏராளமான பங்குகள் விலைப்படக்கூடிய நிலைமையயை உருவாக்கியது. நாவலரும் 200 பங்குகளை தானே வாங்கி பங்கு விற்பனைக்கு மேலும் ஊக்கம் வழங்கினார்.

இதன் காரணமாக கிளிநொச்சியில் முல்லைத்தீவில் மன்னார் வவுனியா போன்ற பகுதிகளை நோக்கி நெற்செய்கை பண்ணப்படும் நோக்குடன் பெருமளவு குடா நாட்டுமக்கள் இடம் பெயர்ந்தனர். இவ்வாறே தெங்குப் பயிர்ச்செய்கைக்காக பளை, புத்தளம், சிலாபம் ஆகிய பகுதிகளை நோக்கி வடபகுதி மக்கள் நகர்ந்தனர். இது தமிழ் மக்களை தன்னிறைவுப் பொருளாதாரத்தை நோக்கி மேலும் வேகமாக முன் தள்ளியது. அதேவேளையில் 1880 இல் யாழ்ப்பாண வர்த்தக சங்கமும் உருவாக்கப்பட்டது. இதனொரு துணைச் சங்கமாக அச்சுவேலி வர்த்தக கூட்டுறவுச்சங்கமும் உருவாக்கப்பட்டது. மேலும் புகையிலை உற்பத்தி விற்பனைக் கூட்டுறவுச்சங்கம் வாழைக்குலைச்சங்கம் போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டு தமிழ்மக்களின் பொருளாதாரம் வேகமாக அபிவிருத்தியடைய ஆரம்பித்தது.

இவ்வாறு பொருளாதார உற்பத்தியில் நாவலர் ஏனைய பெரியோர்களுடன் சேர்ந்து தீவிர அக்கறைகாட்டி வந்த காலப்பகுதியில் 1878 – 1879 ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தில் கொலரா என்ற ஆட்கொல்லிநோய் பரவ ஆரம்பித்தது. நாவலர் சமூகசேவைப் பணிகளிலும் சளைத்தவரல்ல என்றவகையில் தனது தொண்டர்களுடன் களத்தில் இறங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு தொண்டாற்றினார். ஆப்போதய அரசாங்க அதிபராக இருந்தது வைய்னம் என்பவர், நோயை கட்டுபடுத்துவதிலும் மாற்றுவதிலும் போதிய அக்கறை செலுத்தாமை காரணமாக அவரைப்பற்றி முறைப்பாடு செய்தார். சட்ட நிரூபணசபையின் உறுப்பினரான முத்துக்குமாரசாமி அதுதொடர்பாக சபையில் கண்டனத்தை எழுப்பியதுடன் கொலராவுக்கு எதிராக உடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவு இட்டார். 1987 இல் மகாதேசாதிபதி யாழ்ப்பாணம் விஜயம் செய்தபோது நாவலர் வைய்னத்தை மாற்றும்படி மனுக்கொடுத்ததுடன் அதற்காக வாதாடினார்.

1874 இல் இந்தியாசென்று இராமலிங்க வள்ளலாருடன் நீண்ட விவாதங்களை நடத்தியதுடன் திரும்பி வந்து அரசியலிலும் சமூகப்பணிகளிலும் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்தார். 1976 – 1977 காலப்பகுதில் பஞ்சம் ஏற்பட்டு ஏழைமக்கள் பாதிக்கப்பட்டபோது நாவலர் தண்ணீர் தொட்டிகளை உருவாக்கி ஏழைமக்களை பசியாற்றியதுடன் விவசாயிகளுக்கு அரசாங்கம் இலவசமாக விதைநெல்லு வழங்கவேண்டுமென்று போராட்டம் நடத்தினார். முத்துக்குமாரசாமியின் இறப்பின் பின் சட்ட நிரூபணசபைக்கு உத்தியோகப்பற்றற்ற உறுப்பினருக்கான தேர்தல் இடம்பெற்றபோது சேர்.பொன்னம்பலம் இராமநாதனுக்காக தீவிரமான பிரசாரத்திலீடுபட்டார். அவருடன் போட்டியிட்ட நீதிபதியும் பிரபல சமூகத்தொண்டரும் கிறீஸ்தவரும் ஆகிய பிறிற்ரோ அவர்களே வெல்லுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருந்தன. அப்போது பிரதிநிதியை தெரிவுசெய்யும் அதிகாரம் முன்வைக்கப்படும் விவாதங்களின் அடிப்படையில் ஆட்சித்தலைவரே கொண்டிருந்தகாரணத்தால் பிறிற்ரோவே வெற்றிபெறுவாரென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நாவலரின் தீவிரபிரசாரம் காரணமாக இராமநாதனே தெரிவு செய்யப்பட்டார். அவர் 1879 – 1892 வரைக்கும் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே நாவலர்மொழி, கலாச்சாரம், பொருளாதாரம் என தமிழ் மக்களின் தேசிய தனித்துவ அடையாளங்களை பாதுகாப்பதில் ஒரு தீவிர போராளியாகவும் தமிழ் மக்களின் சமூகவாழ்வில் அரசியல் தொட்டு ஒவ்வொரு அம்சங்களிலும் அக்கறைகாட்டி செயற்பட்ட வகையிலும் அவர் தமிழ்தேசிய எழுச்சியில் முன்னோடி என்பதில் இரண்டாவது கருத்திற்கு இடமில்லை. ஆனால் இன்றைய நாட்களில் ஆறுமுக நாவலரின் தேசிய எழுச்சி சாதனைகள் பெரிதாக வெளிக்கொண்டுவரப்படாமல் அவரை ஒரு சமயப்பிரசாரகர் என்றளவில் மட்டுப்படுத்தி பார்க்கப்படுவது கவலைக்குரிய அம்சமாகும்.

அருவி இணையத்துக்காக நா.யோகேந்திரநாதன்


Category: கட்டுரைகள், வரலாறு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE