Thursday 18th of April 2024 08:11:12 PM GMT

LANGUAGE - TAMIL
உண்மையைக் கண்டறியவும் பொறுப்பு கூறவும்  சர்வதேச விசாரணையே தேவை!

உண்மையைக் கண்டறியவும் பொறுப்பு கூறவும் சர்வதேச விசாரணையே தேவை!


சர்வதேச நீதியின் மூலமே பொறுப்புக்கூறலோ,உண்மையைக்கண்டறிதலோ இந்த மண்ணில் ஏற்படுத்தமுடியும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கடந்த ஆண்டு வெளியான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் நடைபெற்றது.

அமரர் அலையப்போடி ஞாபகார்த்தமாக வருடாந்தம் அறிவாலயம் அறக்கட்டளை நம்பிக்கை நிதியத்தினால் இந்த கௌரவிப்பு நிகழ்வு நடாத்தப்பட்டுவருகின்றது.

இதன் கீழ் கடந்த ஆண்டு மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

அறிவாலயம் அறக்கட்டளை நம்பிக்கை நிதியத்தின் தலைவர் ஸ்ரீராம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன்,சீ.யோகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் ஆன்மீக அதிதிகளாக ஸ்ரீமத் சுவாமி நீல மாதவானந்தா ஜி மகராஜ் கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக மண்முனை மேற்கு பிரதேசசபையின் தவிசாளர் சி.புஸ்பலிங்கம்,தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் மாகாண பணிப்பாளர் ஏ.ரவீந்திரன்,சட்டத்தரணியும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான திருமதி மங்களேஸ்வரி சங்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது சுமார் 90மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன் அதிதிகளும் கௌரவிக்கப்பட்டனர்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,

தற்போதைய ஆட்சிக்காலத்தில் அடக்குமுறைகள் அதிகரித்துவருகின்றன. கடந்த 2015 தொடக்கம் 2019ஆம் ஆண்டுவரையில் நாங்கள் சோதனைகளுக்குட்படுவது மிகவும் குறைவாக இருந்தது. இன்று வடகிழக்கில் பல இடங்களில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பல தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

முன்பு சிவில் பகுதிகளுக்கு இராணுவத்தினை நியமிக்கும் நிலைமைகள் இருக்கவில்லை.தற்போது உயர் நிலைகளில் உள்ள சிவில் பகுதிகளிலுக்கெல்லாம் இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றார்கள். கோத்தபாயவின் ஆட்சியில் இவை வந்துவிட்டது. இன்னும் பல செயற்பாடுகள் வரலாம். இது தொடர்பில் நாங்கள் அவதானமாக இருக்கவேண்டியது மிகவும் அவசியமாகவுள்ளது.

ஜெனிவாவில் சர்வதேச நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை,இந்த நாட்டின் அரசாங்கம் ஏற்றுக்கொண்ட தீர்மானத்தினை தற்போதை அரங்கம் ஏற்றுக்கொள்ளமாட்டோம் நிராகரிக்கின்றோம் என கூறியுள்ளனர். அவர்கள் உள்ளக பொறிமுறையிலான விசாரணைக்கு தயார் என்றும் கூறியுள்ளனர்.அதனை நாங்கள் எந்தவகையில் நம்பமுடியும்.

மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் தனக்கு பிரதம உயர்நீதிமன்ற நீதியரசர் ஆதரவு வழங்கவில்லையென்பதற்காக அவரினை பதவி நீக்கிய செயற்பாட்டினை நாங்கள் கண்டோம்.அவ்வாறான செயற்பாடு தற்போதும் நடைபெறாது என்று எவ்வாறு எதிர்பார்க்கமுடியும்.நீதி எந்தவகையில் நிலைநாட்டமுடியும் என்ற கேள்வியும் உள்ளது.

உள்ளக பொறிமுறைமூலம் எங்களுக்கு தீர்வு கிடைக்காது.அவ்வாறு நீதித்துறை சரியான முறையில் கஸ்டப்பட்டு செயற்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கினாலும் பொது மன்னிப்பு என்ற ரீதியில் இராணுவ அதிகாரிகள்,குற்றவாளிகள் விடுதலையாகின்றனர்.

கோத்தபாய ஆட்சிக்கு வந்ததும் நீதிமன்றத்தினால் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட இராணுவ அதிகாரிகளும் கோத்தபாயவினால் யாருக்கும் தெரியாது இரகசியமான முறையில் விடுதலைசெய்கின்றார்.இவ்வாறு இருக்கும் நியாயத்தினை;பெற்றுக்கொடுக்கப்படுகின்றது.

சர்வதேச நீதி விசாரணைகள் மூலமே பொறுப்புக்கூறலோ,நீதி நிலைநாட்டலோ,உண்மையினைக்கண்டறிதலோ இந்த மண்ணில் ஏற்படுத்தமுடியும்.தமிழ் மக்களை பௌத்த தீவிரவாதம் மூலம் அடக்கும் முயற்சியாகவே பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது.-என்றார்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE