Saturday 20th of April 2024 08:31:04 AM GMT

LANGUAGE - TAMIL
தமிழ் மக்களின் நியாயமான எதிர்பார்ப்புக்களை அடையப் பாடுபடுவதே எமது நோக்கம்!

தமிழ் மக்களின் நியாயமான எதிர்பார்ப்புக்களை அடையப் பாடுபடுவதே எமது நோக்கம்!


பல கட்சிகளும் தமது கட்சி நலன்களிலும் சுயநல எண்ணங்களிலும் மூழ்கி இருக்கும் போது மக்கள் நலம் பார்க்க ஒரு கட்சி தேவையாக இருந்தது. நாம் அந்த இடைவெளியை நிரப்பி உள்ளோம். தமிழ்த் தேசியப் பரப்பில் செயற்படும் அனைவரையும் அரவணைத்து ஒட்டுமொத்தத் தமிழ் மக்களின் நியாயமான எதிர்பார்ப்புக்களை அடையப் பாடுபடுவதே எமது நோக்கம் என்று தெரிவித்தார் தமிழ் மக்கள் கூட்டணி செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன். மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி – தொண்டமானாறு, கெருடாவில் மாயவர் கோவிலடி குடியிருப்பு அருகில் தமிழ் மக்கள் கூட்டணியின் மக்கள் சந்திப்பு இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெற்றது.

இதில் சிறப்புரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

எமது மக்கள் வழமையாக இரண்டு முக்கிய கேள்விகளை முன் வைக்கின்றார்கள்.

ஒன்று ஏன் இன்னொரு கட்சி?

இரண்டு உங்கள் கொள்கைகள் எவ்வாறு மற்றவர்களுடன் வேறுபடுகின்றது?

இவை தான் அந்தக் கேள்விகள்.

நான் ஏன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறினேன் என்பதை முதலில் உங்களுக்குக் கூறி வைக்கின்றேன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 2013ம் ஆண்டு மாகாணசபை தேர்தலின் போது வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனம் எனக்குத் தரப்பட்டது. எமது அரசியல் அபிலாசைகள் என்ன என்பதை அதில் இருந்து புரிந்து கொண்டேன். ஆனால் காலம் செல்லச் செல்ல எமது ஆவணப்படுத்தப்பட்ட குறிக்கோள்களுக்கும் எமது நடைமுறைகளுக்கும் இடையில் பாரிய இடைவெளியை நான் காணநேர்ந்தது.

குறிப்பாக 2015 ஜனவரி 8ந் திகதி தேர்ந்தெடுக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்துடனான எமது உறவுகள் மிகவும் நெருக்கமுற்றதாகவும் சரணாகதி நோக்கிச் செல்வதையும் நான் உணர்ந்தேன். உதாரணத்திற்கு 2015 பெப்ரவரி 4ந் திகதிய சுதந்திர தின கொண்டாட்டத்தில் என்னைக் கலந்து கொள்ளுமாறு சம்பந்தன் கேட்டுக் கொண்டார். 1958ம் ஆண்டு றோயல் கல்லூரியின் மாணவ படையினரின் அணிவகுப்பில் நான் கலந்து கொண்ட பின்னர் ஒரு வருடமாவது நான் சுதந்திர தின விழாக்களில் கலந்து கொள்ளவில்லை என்றும் நீதியரசராக இருந்த போது கூட விசேடமாக அழைக்கப்பட்டும் நான் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறினேன். நான் செல்லவில்லை. சம்பந்தன் சென்றார்.

அதற்கடுத்து அதே வருடம் பெப்ரவரி 10ந் திகதியன்று இனப்படுகொலை பற்றிய தீர்மானத்தை வடமாகாணசபை ஏகோபித்து ஏற்றுக் கொண்டதை அடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் என் மீது வைர்யம் கொண்டார்கள். பின்னர் வடமாகாணசபையில் என்னை வெளியேற்ற பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அவை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் நான் இன்று உங்கள் முன் இருந்திருக்கமாட்டேன். உங்களைப் போன்ற இளைஞர்கள் பலர் தெருவேறி ஆர்ப்பாட்டங்களில் இறங்கியதாலேயே எனக்கெதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் கைவிடப்பட்டது. அப்போது இளைஞர்களுக்கு இந்த முதியவர் ஒரு உறுதிமொழி அளித்தார். “உங்களுடன் இருப்பேன்” என்று அன்று கூறியிருந்தேன்.

ஆகவே தான் உங்களுடன் இருக்க இந்தக் கட்சியைத் தொடங்கினேன்.

நான் ஒரு மாற்றுத்தலைமையை உருவாக்க வேண்டும் என்று கட்சியைத் தொடங்கவில்லை. இது கால சூழலின் ஒரு கொடை என்றே கூற வேண்டும். அதாவது பல கட்சிகளும் தமது கட்சி நலன்களிலும் சுயநல எண்ணங்களிலும் மூழ்கி இருக்கும் போது மக்கள் நலம் பார்க்க ஒரு கட்சி தேவையாக இருந்தது.

நாம் அந்த இடைவெளியை நிரப்பி உள்ளோம். தமிழ்த் தேசியப் பரப்பில் செயற்படும் அனைவரையும் அரவணைத்து ஒட்டுமொத்தத் தமிழ் மக்களின் நியாயமான எதிர்பார்ப்புக்களை அடையப் பாடுபடுவதே எமது நோக்கம்.

தமிழர்களின் இன்றிருக்கும் முக்கிய கட்சி அன்றைய அரசாங்கக் கட்சிக்குப் பின்னால் சலுகைகளுக்காக சரணாகதி அடைந்ததால் இன்று அக் கட்சியால் தமிழ் மக்களின் பல தேவைகளையும் அடையாளங் காட்டி அவற்றிற்காகப் போராட முடியாத நிலையில் அது தத்தளிக்கின்றது.

போரிட்டவர்கள் பயங்கரவாதிகள் என்று ஒரு நபர் கூறியுள்ளார். அதைக் கேட்ட போராளிகளின் குடும்பத்தவர்கள் அனைவரும் அந் நபருக்குப் பாடம் படிப்பிக்கத் துடிதுடித்துக் கொண்டிருக்கின்றார்கள். அரச பயங்கரவாதமே எமது சாதுவான இளைஞர் யுவதிகளை ஆயுதமேந்த வைத்தது என்பதை அவர் மறந்துவிட்டார் போல் தெரிகிறது. உரிமைக்காகப் போராடுவதைப் பயங்கரவாதம் என்று குறித்த நபர் கூறப்போய் உலகெங்கணும் உருவாகும் உரிமைப் போராட்டங்களை அந் நபர் கொச்சைப்படுத்திவிட்டார்.

எமது அரசியல், சமூக, பொருளாதார உரிமைகளுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பை போல அரசாங்கங்களிடம் சரணாகதி அடைந்து மண்டி இடாமலும் தனி ஒருவரின் மூளையில் தங்கியிராமலும் நிறுவனமயப்படுத்திய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நாம் முயற்சிக்கின்றோம்.

இந்த அடிப்படையிலேயே இணைந்த வடக்கு கிழக்கில் சுய நிர்ணய உரிமைகள் அடிப்படையிலான தீர்வை அடைவதற்கான எமது அணுகுமுறை வேறுபடுகிறது. எமது அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான இந்த அணுகுமுறையில் அடிப்படையாக நாம் ஏனைய அரசியல் கட்சிகளில் இருந்து வேறுபடுகின்றோம்.

அதாவது, வெறும் வார்த்தை ஜாலங்களால் தமிழ் தேசியம் மலரும் என்று நாம் நினைக்கவில்லை. மற்றவர்கள் மீது சதா குற்றம் சொல்லி வருவதால் தமிழ்த் தேசியம் மலரும் என்று நாம் நினைக்கவில்லை. அல்லது அரசிடம் மண்டி இடுவதால் தீர்வு வரும் என்றும் நாம் நம்பவில்லை. அத்துடன் தனி ஒருவரின் புத்தியும் உழைப்பும் மட்டும் பலாபலன்களைக் கொண்டுவரும் என்றும் நாம் நம்பவில்லை.

இந்த அடிப்படையில் தான் நாம் எம்மை ஒரு மாற்று அணியாகக் காண்கின்றோம். எமது தாரக மந்திரம் வித்தியாசமானது. அரசியலில் தன்னாட்சி, சமூக ரீதியாக தற்சார்பு, பொருளாதாரத்தில் தன்னிறைவு காண்பதே எமது குறிக்கோள்.

நீங்கள் எமது தனித்துவத்தை தெளிவாகப் புரிந்து கொண்டு எம்மை அடையாளம் கண்டுகொள்வீர்கள் என்று நம்புகின்றேன். எமது தேர்தல் விஞ்ஞாபனத்தை நாம் தாயரித்து வருகின்றோம். விரைவில் வெளியிடுவோம்.

நான் முதலமைச்சராக இருந்த போது எமது மக்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு முதலமைச்சர் நிதியத்தை உருவாக்குவதற்கு கூட்டமைப்பும் அரசாங்கமும் ஒத்துழைக்கவில்லை. முட்டுக்கட்டைகளைப் போட்ட வண்ணமே இருந்தார்கள்.

நான் தற்போது ஒரு நம்பிக்கை பொறுப்பை உருவாக்கி உள்ளேன். இதனூடாக பல செயற்திட்டங்களை முன்னெடுக்க உள்ளேன். அதே போல கூடிய விரைவில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள தமிழ் புத்திஜீவிகள் அறிஞர்களை உள்ளடக்கிய ஒரு சிந்தனை மையத்தை உருவாக்குவேன்.

நாம் மக்கள் நலம் சார்ந்த நடவடிக்கைகளிலேயே இறங்கியுள்ளோம். அதன் அடிப்படையில்த்தான் இன்று மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றை எமது இளைஞர்கள் ஒழுங்கமைத்துள்ளார்கள். - என்றார்.

IMAGE_ALT


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE