Thursday 18th of April 2024 08:13:19 PM GMT

LANGUAGE - TAMIL
போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு ராஜபக்ச அணியே பொறுப்பு!

போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு ராஜபக்ச அணியே பொறுப்பு!


"இறுதிப் போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு ராஜபக்ச தரப்பினரே முழுப் பொறுப்பு. அதிலிருந்து அவர்கள் தப்பிக்கவே முடியாது."

- இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

"மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும் ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களை ஐ.நாவிடம் ஒப்படைத்துள்ளோம்" எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதன் அடிப்படையிலேயே இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாணை நடைபெற வேண்டும் என வலியுத்தி வருகின்றோம்" எனவும் அவர் குறிப்பிடடார்.

யாழ். பொது நுலகத்தில் நடைபெற்ற உழைக்கும் மகளிர் அமைப்பின் சர்வதேச மகளிர் தின நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் கூறியதாவது:-

"மனித குலம் வாழ்கின்றது என்றால் அது பெண்கள்தான் காரணம். அத்தகைய நாளில் - நிகழ்வில் கலந்துகொள்வது மகிழ்சியானது. இந்த நாட்டிலும் சரி உலக நாடுகளிலும் சரி பெண்கள் சமத்துவம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறான நிலைமை பல நாடுகளில் இல்லாமல் உள்ளது. அதனை நாங்கள் அவதானித்துள்ளோம்.

பல நாடுகளில் பெண்கள் போராடியுள்ளார்கள். எமது நாட்டில் மக்களின் விடுதலைக்காக ஆயுதம் எடுத்துப் பெண்கள் போராடினார்கள். இனத்தின் விடுதலைக்காக ஜனநாயக ரீதியிலும் ஆயுத ரீதியிலும் எமது பெண்கள் போராடினார்கள்.

அந்தப் போராட்டத்தில் பலர் எம்மை விட்டுப் பிரிந்து விட்டார்கள். பலர் இன்னும் துன்பங்களை அனுபவிக்கின்றார்கள். இவர்களின் விடுதலைக்காக இன்னமும் போராடிக் கொண்டிருக்கின்றோம்.

ஜ.நா. மனித உரிமைகள் ஆணையாளராக இருந்த நவநீதம்பிள்ளை அம்மையார் இலங்கை வந்திருந்தபோது இறுதிப்போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களை நாங்கள் வழங்கியுள்ளோம்.

குறிப்பாக பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள், வன்செயல்கள் தொடர்பில் ஒரு சில சாட்சியங்களை நேரில் வழங்கியும் உள்ளோம். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரை நேரில் சந்தித்து இதனை வழங்குவதற்கு ராஜபக்ச தரப்பினரால் அனுமதி மறுக்கப்பட்டது. எனினும், சிலருடைய உதவியினால் சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் அவரைச் சந்தித்து சாட்சியங்களை நேரில் வழங்கி ஆவணங்களையும் ஒப்படைத்தோம். இந்த விடயங்கள் பலருக்குத் தெரியாது. பலரும் பலதைக் கூறுகின்றார்கள். காலம் பதில் கூறும்.

பெண்களுக்கு சமத்துவம் வழங்கப்பட வேண்டும் என்று மேடைகளில் கூறிக் கொண்டிருக்காது அதற்கான செயல்களுக்கு செயல் வடிவம் கொடுக்கவேண்டும். சர்வதேச பெண்கள் தினத்தில் அவர்கள் தேவைகள் கிடைக்க வேண்டும். அதற்காக அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்" - என்றார்.

இந்த நிகழ்வில் உழைக்கும் மகளிர் அமைப்பினர், கொழும்பு இந்து மகளிர் மன்றத்தினர், இலங்கை தமிழ் மாதர் சங்கத்தினர், யாழ். மாவட்ட பெண்கள் அமைப்பினர் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE