Friday 29th of March 2024 05:05:41 AM GMT

LANGUAGE - TAMIL
ரஜினியின் அரசியல் கிடக்கை
வெளியே வந்த பூனைக்குட்டி - ரஜினியின் அரசியல் கிடக்கை!

வெளியே வந்த பூனைக்குட்டி - ரஜினியின் அரசியல் கிடக்கை!


இரசினிகாந்த் என்கிற ஒரு பொருளை வைத்து மீண்டும் ஒரு முறை தமிழ்நாட்டு அரசியலில் சதுரங்க ஆட்டம் தொடங்கியிருக்கிறது. முன்னைப்போல் இல்லாமல் இந்த முறை அவரேகூட தன்னுடைய அரசியலை, தன் நண்பர்களை, எதிரிகளை வெளிப்படுத்தியும் இருக்கிறார். இந்த அளவில் இரசினியினுடைய அரசியல் அலசப்படவேண்டிய ஒரு சங்கதியாக வந்து நிற்கிறது.

கடந்த 12ஆம் தேதியன்று சென்னை, பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள ’லீலா பேலசு’ எனும் ஏழு நட்சத்திர விடுதியில், தன்னுடைய முதல் அரசியல் ஊடக சந்திப்பை அரங்கேற்றினார், இரசினிகாந்த். இந்த விடுதியில்தான் அவருடைய இரண்டாவது மகளின் திருமணமும் அண்மையில் நடத்தப்பட்டது. சன் தொலைக்காட்சி அலுவலகம் அமைந்திருக்கும் 12 மாடிக் கட்டட வளாகத்தின் அருகில், வெளிநாட்டு அல்லது உள்நாட்டு சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு ஏற்ப அமைக்கப்பட்டிருக்கும், விடுதி இது. ஆனால், விமான நிலையத்திலிருந்து நெடுந்தொலைவிலும் பல நெரிசல் மையங்களைக் கடந்தும் இந்த இடத்துக்கு வரவேண்டி இருப்பதால், எதிர்பார்த்தபடி சுற்றுலா பயணிகளின் வருகை இங்கு நிகழ்ந்தபாடில்லை. தமிழ்த் திரைப்பட உலகத்தின் புள்ளி ஒருவரே இதை வாங்கியிருப்பதாகவோ வாங்கப்போவதாகவோ தகவல் உள்ளது. கத்தரிக்காய், கடைத் தெருவுக்கு வராமலா போகும்.. இரசினியைப் பொறுத்தவரை இந்த விடுதி உவப்பானதாக, ராசியானது என்பார்களே அதைப் போல இருக்கிறது. இது ஒரு பக்கம்!

பெயருக்குதான் ஊடகச் சந்திப்பே தவிர, அது ஊடகத்துக்கான ஓர் அறிவிப்புக் கூட்டம் என்பதை நேரலையிலேயே அறிந்திருப்போம். ஏறத்தாழ அரை மணி நேரம் நிகழ்த்தப்பட்ட அந்த அறிவிப்புக் கூட்டத்தில், இரசினிகாந்த் பேசிய பேச்சுக்கு வாசகத்துக்கு வாசகம், வார்த்தைக்கு வார்த்தை என்கிறபடி பதில்கருத்து கூறக்கூடிய அளவுக்கு, அன்றைய காட்சி அமைந்திருந்தது. போகிற போக்கில், வன்மையான சங்கதியை ஒரு முணுமுணுப்பைப் போலவும் சாதாரண சங்கதியை பெரும் தோரணையோடும் அழுத்தமாகவும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சொற்களை எந்த உறுத்தலும் இல்லாமலும் சொல்லிவிட்டுச்சென்றார், இரசினிகாந்த்.

,முதலில், அவருடைய ’முத்தான’ மூன்று கொள்கைகளைப் பற்றி..!

ஒன்று, கட்சிப் பதவிகளை வைத்துக்கொண்டு உரியவர்கள், அவர்களின் உறவினர்கள், நண்பர்களென பெரும் தொகையினர் ஆட்சியில் அதைத் தவறாகப் பயன்படுத்தி, பலன் பெறுகிறார்கள்; ஊழல், முறைகேடுகளுக்கு காரணமாக இருக்கிறது. இந்தப் பதவிகளின் எண்ணிக்கையைக் குறைத்துவிட்டால் இந்த விவகாரம் ஒழிந்துவிடும். அதாவது, ஊழல் முறைகேடுகள் ஒழியும்.

இரண்டாவது, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள், ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள். அதை மாற்றி, அதைவிடக் குறைவான வயதினரை 65 விழுக்காடு அளவுக்கும் மீதமுள்ள இடங்களுக்கு வேற்று கட்சிகளில் இருக்கும் ’வாய்ப்பு’ கிடைக்காத ’நல்லவர்’(!)கள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், இந்திய ஆட்சிப்பணி, காவல்பணி அதிகாரிகள் போன்றவர்களுக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப் போகிறாராம்.

மூன்றாவது, ”கட்சித் தலைமை வேறு; ஆட்சித் தலைமை வேறு. இதன் மூலம் ஆட்சித் தலைமை சரியாகச் செயல்படாவிட்டால் கட்சித் தலைமை அதை சரிசெய்யும் அல்லது தூக்கியெறியும்.

- இம்மூன்றையுமே பெரும் அரசியல் மாற்றம் என்கிறார், இரசினி. இதுவே தான் விரும்பும் ’மாற்று அரசியல்; உண்மையான சனநாயகம், கனவு’ என்பது அவரின் அறிவிப்பு.

இவை மூன்றுமே இரசினிகாந்தின் புதிய கண்டுபிடிப்பைப் போல, தமிழ்நாட்டின் பெரும்பாலான ஊடகங்கள் தூக்கிப்பிடித்து அளவுக்கு அதிகமாக என்பதைவிட இன்னும் ஒரு படி மேலே ஆரவாரம் செய்கின்றன. யதார்த்தமோ, இவை எல்லாம் அரதப்பழசான அரசியல் நடப்பு என்பதை தெளிவாகச் சொல்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்ததே என கூட்டத்தின் தொடக்கத்தில் அவர் கூறினாலும், இறுதியாக இதை இந்தியா முழுமைக்கும் பொருத்தவேண்டும் என்றும் முடிக்கிறார். ஆகவே இந்தியா முழுமைக்குமான ஓர் கூற்றாகவே கருதமுடியும்.

எனில், கட்சித் தலைமை, ஆட்சித் தலைமை என்பது அகில இந்திய அளவில் ஏற்கெனவே ஒரு நூற்றாண்டாக நடைமுறையில் இருப்பதுதான். இந்திய பொதுவுடைமை கட்சிகளில், அவை ஆட்சிசெய்த கேரளம், மேற்குவங்காளம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் செயல்பாட்டில் இருந்துவருகின்ற சமகால யதார்த்தம். கேரளத்தில் இப்போது நடந்துவரும் இடதுசாரி தலைமையிலான அரசாங்கத்தை வெளியிலிருந்து கட்சிதான் கட்டுப்படுத்துகிறது. சரியோ தவறோ ஆட்சிக்கு இணையாக கட்சி உன்னிப்பாக கவனித்து உடன் பயணித்துவருகிறது. திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த நிருபன் சக்கரவர்த்தி தவறுசெய்தார் என அவர் சார்ந்த மார்க்சிய இந்திய பொதுவுடைமைக் கட்சி அவரை கட்சியிலிருந்து நீக்கவும் செய்தது. பல முறை முதலமைச்சராக இருந்தவர், ஒரே ஒரு இரும்புப் பெட்டியோடுதான் கட்சி அலுவலகத்தைவிட்டு வெளியேறினார். போலவே, இந்திய மக்களவையின் தலைவர் பதவிக்கு கட்சியை மீறிப் போட்டியிட்ட கட்சியின் உயர்மட்டப் பதவியான அரசியல் தலைமைக் குழுவில் இருந்த மேற்குவங்கத்தின் சோம்நாத் சாட்டர்ச்சியை அதிரடியாக நீக்கியது, கட்சித் தலைமை. இது வரலாறு.

ஆளும் கட்சி நிர்வாகிகள், பதவியைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்பது உண்மைதான்; பல பத்தாண்டுகளாக சாதாரண பொதுமக்களும் முன்வைக்கக்கூடிய குற்றச்சாட்டுதானே, இது! இதற்கு இரசினி வைக்கும் தீர்வு, பொருத்தமில்லாததாகவும் போகாத ஊருக்கு வழிசொல்லுவதாகவுமே இருக்கிறது. சிக்கல், அரசு நிர்வாகத்தில் ஊழல், முறைகேடு செய்வது என்பதை மையமாகக் கொண்டது; அதற்கு ஆட்சியாளர்கள், பெரும் பதவிகளில் உள்ள அதிகாரிகள், அவர்களைச் சார்ந்தவர்கள், பல்வேறு தொழில்களை நடத்துவோர், கட்சியின் கீழ்மட்டம்வரையிலான ஆளும் கட்சியினர் என பல்வேறு தரப்புகளும் காரணங்களாக இருக்கின்றன. இப்படி இருக்கையில், மையமான ஒன்றை மாற்றியமைப்பதுதானே தீர்வாக இருக்கமுடியும். ஊழை ஒழிப்பதென்பது வரவேற்கப்படவேண்டியதுதான் என்பதற்காக, ஒற்றைக் காரணத்துக்குள் அதைச் சுருக்கிக்கொண்டால், மீதமுள்ளவற்றை எல்லாம் அப்படியே விட்டுவிடலாமா? அல்லது அறியாமையில் பிறவற்றை அவர் கண்டுகொள்ளவில்லையா? எனில் அது எவ்வளவு அபத்தமானது? படித்தவர்கள், பெரும் பதவியில் இருப்பவர்களைப் பற்றி அரை மணி நேரப் பேச்சில் அடிக்கடி பெருமையாக அவர் குறிப்பிடுவதால், ஒருவேளை, அவர்களெல்லாம் தூயவான்கள் என முடிவுசெய்துகொண்டார் என்றால், ஒன்று அவர் தன்னை ஏமாற்றிக்கொள்ள வேண்டும் அல்லது மற்றவர்களை ஏமாற்றுவதாக இருக்கவேண்டும்.

இரசினி முன்வைக்கும் மூன்றாவது ’முத்து’, வயது பிரச்னை. உலகம் எங்கே போய்க்கொண்டு இருக்கிறது; இவர் எங்கே நின்றுகொண்டு தன் புதிய கண்டுபிடிப்புகளை பிரசங்கம் செய்துவருகிறார் பாருங்கள்.. இவர் சொல்கிற எல்லா கட்சிகளிலும் உரிய அளவு இளைஞர்களும் பதவிகளில் இருக்கிறார்கள்; ஒருவேளை குறைவு என்றாலும் அதுவா பிரச்னை? ஐம்பது வயதுக்கு கீழே உள்ளவர்களை அவர்கள் என்ன கொள்கை வழிப்பட்டவர்களாக இருந்தாலும் சட்டம் இயற்றும் மன்றங்களில் அமரவைத்துவிட்டால் போதுமா? இளைஞர்கள் என ஒற்றைத் திரட்சியாக, ஒரு தொகுதியினரை உட்காரவைத்தால் ஆட்சி சரியாகிவிடுமா? இந்தியாவின் தலைநகர் டெல்லியில் பா.ஜ.க.வின் இப்படியொரு இளைஞர்தான், அந்த பிரதேசத்தின் அமைச்சர் பதவிவகித்த கபில் மிசுரா என்பவர்தான், அமைதியாகப் போராடிவந்த இசுலாமியர்களுக்கு எதிராக வன்முறை வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்துவிட தூபமிட்டவர். இதேவேளை, இந்திய பொதுவுடைமைக் கட்சியின் தேசியக் குழு உறுப்பினரான கன்னையா குமார் என்பவரும் இளைஞர்தான். அவர் வன்முறைக்கு வித்திடுகிறார் என்றால், இவர் வன்முறையைக் கைவிடச் சொல்கிறார். இளைஞர் என இருவரையும் ஒரே தராசில் சமமாக நிறுத்தமுடியுமா?

விசிலடிச்சான் குஞ்சுகளாக தன்னுடைய திரைப்படங்களைப் பார்த்து, விடலைத்தனத்துடனேயே விட்டேற்றியாகத் திரியும் இளைஞர்களைக் குறிவைத்து, வாக்காளர்களில் மூன்றில் ஒரு பங்கினராக இருக்கும் இந்த வயதுப் பிரிவினரில் கணிசமானவர்களை ஈர்க்க, இரசினி இதை முன்வைக்கக்கூடும். அதுதான் தன்னுடைய இலக்கு என அவர் வெளிப்படையாகச் சொல்லிவிட்டால் கடந்துசெல்லலாம்; ஆனால் அதை நாட்டின் பிரச்னையாக அவர் முன்னிறுத்துவதில்தான் அவருக்கு உள்ளே இருக்கும் விருப்பமும் நோக்கமும் எட்டிப்பார்த்து சிரிக்கிறது, சாமர்த்தியம்போல!

இவை மூன்றுதான் இரசினி தெறித்த முத்துகளா என்றால், இல்லை.. இல்லை.. இல்லவே இல்லை; அந்த அரை மணி நேரப் பொழிவுமே அவருடைய உள்ளக் கிடக்கைதான்! ஒட்டுமொத்த உரையாடல்.. அல்ல.. உரையில் பல இடங்களில் 80, 90-களில் அவருடைய படங்களில் இரசினி நடிப்பதைப் போன்ற உணர்வு வந்துபோனதை குறிப்பிட்டே ஆகவேண்டும். பலவிதமான முகபாவனைகள்.. எவ்வளவு காலம் கழித்து இப்படியொரு காட்சி.. நடிகராக இரசினியைப் பார்க்கவாய்த்த அந்த தருணங்கள், சற்றே ஓர் இளைப்பாறல்தான்!

இத்தோடு, இன்னுமொரு நல்ல சங்கதி.. பலரும் சொல்வதைப்போலத்தான்.. தான் பேசுவது என்ன, சமூகத்தில் அதற்கான மதிப்புமரியாதை என்ன என்பதைப் பற்றியெல்லாம் சிறிதும் அலட்டிக்கொள்ளாமல், உள்ளத்தில் உள்ளதை உள்ளபடியே வெளிப்படுத்திய வெள்ளந்தித்தனம். ஆம், இத்தகைய கொள்கைகளைக் கொண்ட பெரும்பாலானவர்கள், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் கூட்டத்தினராகவே இருக்கிறார்கள் எனும்போது, இரசினியைத் தனித்து குறிப்பிடுவது தவறொன்றும் அன்று.

மற்றபடி, வானில் பறந்தபடி காற்றில் விதைகளைத் தூவிச்செல்லும் விமானத்தைப் போல ஆங்காங்கே தன் கொள்கைகளை அடையாளம் காட்டிவிட்டுச் செல்கிறார், இரசினிகாந்த். அதைத் தொகுத்தால் சாரம் பளிச்சிடுகிறது; என்ன ஒன்று, அதை வெண்மை என மட்டும் சொல்லிவிடமுடியாது.

* ஊழல் ஒன்றுதான் நாட்டின் முதன்மையான பிரச்னை; தேவை வெளிப்படையான ஆட்சி.

* திராவிடக் கட்சிகளை இதுபண்ண தன்னை அரசியலுக்கு அழைத்தார்கள்..

* அரசியல் தரகரும் நடிகருமான மறைந்த சோ இராமசாமி, கருப்பையா (மூப்பனார்), (சாத்சாத் காங்கிரசின்) ப.சிதம்பரம், இந்தியாவின் முன்னாள் தலைமையமைச்சர் மறைந்த நரசிம்ம (ராவ்) ஆகியோரே அழைப்பை விடுத்தவர்கள்.

* குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகைப் பதிகை என ஒரேயடியாகக் கொண்டுவரும்போது சிறுபான்மையினர் கோபமடைகிறார்கள். அதாவது, இந்தச் சட்டங்கள் அல்ல, கோபமடையும் மக்களின் தரப்பில்தான் குறை.

* வாக்களிக்கும் பெண்களில் 30 விழுக்காட்டினருக்கு அறிவே இல்லை; வீட்டிலுள்ள ஆண்கள் சொல்லித்தான் வாக்கை அளிக்கிறார்கள்.

அதாவது, திராவிடக் கட்சிகள் எனப்படும் தி.மு.க., அ.தி.மு.க.வை இங்கு முடிக்கவேண்டும்; டெல்லி முதலாளியான பா.ச.க.வுக்கும் இதுதான் உடனடிக் கொள்கை. உயிரோடு இருந்தவரையிலும் அரசியல் தரகர் சோ இராமசாமியும் குறிப்பிட்ட ஊடக வகையினங்களும் பக்கபலம், இப்போது சோவின் இடத்துக்கு கணக்காயர் குருமூர்த்தி, தினமலர் நாளேட்டின் மூலம் ஆளாகி, தந்தி தொலைக்காட்சி மூலம் புள்ளியாகிய இரங்கசராச்சு( பாண்டே) வகையறா; செத்துப்போன கருப்பையாவுக்கு பதிலாக அவருடைய மகன் (கருப்பையா கோவிந்த) வாசன்; இப்போதைக்கு ப. சிதம்பரம் மட்டும் இந்தப் பக்கம் வருவதற்கான வாய்ப்பு, சற்று குறைவு; டெல்லி, திகார் சிறையில் வாசம்செய்த வைத்த பா.ச.க.வுடன் அவ்வளவு விரைவில் ஒட்டிவிடவோ கைவசமிருக்கும் மகன் கார்த்தி சிதம்பரத்தின் மக்களவை உறுப்பினர் பதவியையும் விட்டுவிடமுடியாத நிலைமையும், ப.சிதம்பரத்துக்கு..!

இன்னொரு முதன்மையான பாத்திரம், நரசிம்மராவின் இடத்தில் இப்போது நரேந்திர மோடி; குசராத்தின் முதலமைச்சராக இருந்து இந்திய நாட்டின் தலைமை அமைச்சராகப் போட்டியிட்டபோது, எங்கோ தமிழ்நாட்டின் ஒரு மூலையில் இருந்த இரசினிகாந்தின் வீடு தேடிச்சென்று ஆதரவு கேட்டவர், மோடி என்பது எளிதில் மறக்கக்கூடியதா?! அந்தப் பாசப்பிணைப்பே, குடியுரிமைச் சட்டத் திருத்தத்தால் ஒரு மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர், அமைச்சர்களின் குடியுரிமையே கேள்விக்கு உள்ளான சமயத்திலும் அதனால் இந்தியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என சத்தியம் செய்யாத குறையாக இரசினியைச் சொல்லவைத்தது.

அரை மணி உரையில் ஆற்றியதுபோக, அவ்வப்போது கோடிட்டுக் காட்டிய நிலைப்பாடும், கருத்துகளும் அவரின் அரசியலை இன்னும் தெளிவுபடுத்தும். இரண்டு காட்டுகள் மட்டும் இங்கே.. ஒன்று, தூத்துக்குடி மாவட்டத்தின் தாமிர உருக்காலை பாதிப்பை எதிர்த்த மக்களின் போராட்டத்தின்போது, ஆயுதமற்ற அப்பாவி மக்கள் ஒரு பக்கம், போலீசு வண்டிகளின் மேலே அமர்ந்தபடி அவிழ்த்துவிடப்பட்ட வேட்டை விலங்குகளைப் போல, இலக்கைக் குறிவைத்துச் சூட்டுத்தாக்குதலில் மனித உயிர்களை காவுவாங்கிய சீருடை அணியாத கொலைப்படை ஒரு பக்கமாக இருந்தபோது, மக்களை தேசவிரோத சக்திகள் தூண்டிவிடுவதாகச் சொன்ன உத்தமர், இந்த இரசினி. மற்றது, பத்தாண்டுகளுக்கு முன்னர், காவிரி நதிநீர்ப் பங்கீட்டில் கர்நாடகத்தின் அடாவடியைக் கண்டித்து தமிழ்த் திரையுலகமே போர்க்குரல் எழுப்பியபோது, இங்கு நடக்கும் போராட்டத்தால் ‘கர்நாடகத்தில் உள்ள தமிழர்கள் மீது தாக்குதல் நடந்துவிடுமே’ என உரிமைக்காகப் போராடும் மக்களுக்கு எதிர்ப்பக்கமே நிலையெடுத்தது, காலம்போனாலும் மறந்துவிடமுடியாத அவரின் இன்னொரு கொள்கை நிலைப்பாடு.

உரிமைகள் மறுக்கப்படுவதால், அநீதி இழைக்கப்படுவதால், பாகுபாடு காட்டப்படுவதால், வாழ்வாதாரம் பறிக்கப்படுவதால் போராடும் மக்களுக்கு எதிர்நிலை, அதற்குக் காரணமாகவும் கண்டுகொள்ளாமலும் இருக்கும் அரசாங்கத்துக்கு கண்மூடித்தனமான ஆதரவு என அப்பட்டமான வலதுசாரித்தனமும், தமிழின உரிமைகள் மறுப்பு, சிறுபான்மை மதத்தவர் மீதான ஒடுக்குமுறைக்கு வக்காலத்து வாங்கி நியாயப்படுத்துவது என தேசிய இன உரிமை மறுப்பு- ஒரு மதவாதமும் என இரசினிகாந்தின் அரசியல் திரட்சியாக வெளிப்பட்டிருக்கிறது.

இவரைப் பொறுத்தவரை, இந்த மண்ணில் தொடரும் வாழ்வாதார அழிப்பு, வேலையின்மை, பண்பாட்டுச் சீரழிவுகள், இயற்கை வளக் கொள்ளை, அதிகாரத்தால் ஆட்டுவிக்கப்படும் சனநாயக சீர்குலைப்புகள், சாதிய, மதவாத மோதல்கள், அதனால் பலியெடுக்கப்படும் மனித உயிர்கள், அரசாங்கத்தில் இருக்கும் கட்சிகளே அதற்குத் துணையாக நின்று தூபம் போடுவது, கடும்பாடு பட்டு உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் சீரழிப்பு, அவற்றில் பணியாற்றும் பல இலட்சக்கணக்கானவர்களுக்கு வேலையிழப்பு, நாட்டையே அந்நிய பகாசுர நிறுவனங்களுக்கு தாரைவார்த்துக் கொடுக்கும் அவலம் - இன்னும் இவை போன்றவை எல்லாம், இரசினிக்கு ஒரு பிரச்னையும் இல்லை போலும்!

இந்திய நடுத்தட்டு, மேல்நடுத்தட்டு, ஆதிக்க சாதியினரின் வாழ்க்கைநலன்களை பாதிக்காமல், பட்டும்படாமல் செய்வதற்கு வசதியான, மிக ஊழல் ஒழிப்பு எனும் முனைமழுங்கிப் போன அரசியல் முழக்கத்தை, இரசினியும் கையில் எடுத்துக்கொண்டிருக்கிறார். இதெல்லாம் அரதப் பழசாகி ஆண்டுகள் ஆகிவிட்டன. ஊழல் ஒழிப்பை முன்வைத்து டெல்லியில் ஆட்சிக்கு வந்த அரவிந்து கெச்சிரிவாலின் மனிதநேயத்தை, கடந்த மாதம் உலகமே பார்த்து சிரித்ததே.. அதே வழிதான்!

முத்தாய்ப்பு... பாசிசக் கொடுங்கோன்மை என்பது எவ்வளவு மோசமான மானுடகுல விரோதமான ஒரு தன்மை என்பதை உலக வரலாறு தெரிந்த பள்ளிப் பிள்ளையும் புரிந்துகொள்ளக்கூடியது என்கிறபோதும், அரசியல் தரகர் சோ இராமசாமி தன்னை ’பாசிசவாதி’ எனக் கூறியதை, எந்த உறுத்தலுமின்று பெருமிதமாகக் குறிப்பிட்டு கடந்துசெல்லும் இந்த மனிதருக்குப் பின்னால், எவ்வளவு பேரபாயம் இருக்கும்! ஒரு கணம் நினைத்துப் பார்த்தால், உடம்பு மயிர்க்கூச்செறிகிறது.

- தமிழ்நாட்டிலிருந்து இர.இரா.தமிழ்க்கனல்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இந்தியா, தமிழ்நாடு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE