Thursday 28th of March 2024 02:37:53 PM GMT

LANGUAGE - TAMIL
ஆசிரியர் தலையங்கத்தில் சாடல்
பாதிக்கப்பட்ட தமிழா்களுக்கு நீதி கிடையாது  என்பதே இலங்கை ஜனாதிபதியின் செய்தி!

பாதிக்கப்பட்ட தமிழா்களுக்கு நீதி கிடையாது என்பதே இலங்கை ஜனாதிபதியின் செய்தி!


இலங்கையில் சிறுபான்மை தமிழர்கள் போர்க்குற்றங்களுக்கு உள்நாட்டில் நீதியைப் பெற்றுக்கொள்ள முடியாது. அரிதாக அவா்களுக்கு நீதி கிடைத்தாலும் அதனைத் தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி இல்லாது செய்துவிடுவார் என்பதை இலங்கை ஜனாதிபதி நிரூபித்துள்ளார்.

எட்டு தமிழா்களை படுகொலை செய்த குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிக்கு பொது மன்னிப்பு வழங்கியதன் மூலம் அவா் இதனை நிரூபித்துள்ளார் என தி இந்து இன்றைய தனது ஆசிரியத் தலையங்கத்தில் தெரிவித்துள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

படுகொலைக்கு தண்டனை பெற்ற ஒரு சிப்பாயை விடுவிப்பது இலங்கையில் பொறுப்புக்கூறலுக்கான நம்பிக்கையை மீண்டும் தகா்த்துள்ளது.

எட்டு தமிழ் மக்களை கொலை செய்ததற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு இலங்கை சிப்பாய்க்கு வியாழக்கிழமை ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கிய செயற்பாடானது அரசிடம் நீதியை எதிர்பார்த்திருப்பவா்களிடையே நியாயமான சீற்றத்தைத் தூண்டியுள்ளது.

போர்க்கால அட்டூழியங்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதி செய்ய வேண்டிய ஜனாதிபதி, நீதிமன்றம் வழங்கிய தண்டனையை தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இல்லாது செய்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற பொதுமக்கள் மீதான கொடூரங்களுக்கு பொறுப்பான பல இராணுவத்தினருக்கு இதுவரை தண்டனை வழங்கப்படவில்லை.

ஆனால் அரிதாக மிருசுவில் படுகொலை வழங்கில் தொடா்புடைய ஒரு இராணுவ சார்ஜென்டுக்கு இலங்கை நீதிமன்றில் தண்டணை கிடைத்தது.

இந்த இராணுவ சார்ஜென்ட்டால் கொல்லப்பட்டவா்களில் மூன்று சிறுவர்களும் அடங்குவர்.

டிசம்பர் 2000 இல், உள்நாட்டில் இடம்பெயர்ந்த கிராமவாசிகளினை ஒரு குழுவினா் மிருசுவில் போரில் பேரழிவிற்குள்ளான வீடுகளைப் பார்க்க வந்திருந்தனா்.

இவா்கள் அனைவரும் பின்னா் சடலங்களாகவே மீட்கப்பட்டார்கள். கழுத்தறுக்குக் கொல்லப்பட்ட நிலையில் அவா்களின் சடலங்கள் குழி ஒன்றில் காணப்பட்டனா்.

இந்தக் கொலையில் ஐந்து இராணுவத்தினா் மீது குற்றம் சாட்டப்பட்டது. மூன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமா்வு முன் விசாரணை நடத்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

விசாரணை முடிவில் சுனில் ரத்நாயக்க என்பவா் மட்டுமே குற்றவாளி எனக் கண்டறியப்பட்டதால், 2015 ஆம் ஆண்டில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் 1976 முதல் மரணதண்டனை விதிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் அவரது மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை.

இரக்கத்தின் அடிப்படையில் மன்னிப்பளிப்பதற்கான அதிகாரத்தைப் பயன்படுத்துவது சரியானது. அது அரசியல் மற்றும் தேர்தல் பரப்புரைக்கான கருவி அல்ல. இதற்கு முக்கியத்துவம் தேவையில்லை.

எவ்வாறாயினும், ஜனாதிபதி கோட்டபய ராஜபக் ஷ தனது பரந்த ஆதரவாளர்களான சிங்களவர்களுக்கு இதன்மூலம் ஒரு செய்தியை அனுப்பியுள்ளார். ‘‘போர்வீரர்களை சிறையில் தள்ள தான் அனுமதிக்க மாட்டார் என்பதே அச்செய்தி.

அதாவது சிறுபான்மை தமிழர்கள் மீதான போர்க்குற்றங்களுக்கு அரிதாக நீதி கிடைத்தாலும் தனது அதிகாரத்தை் பயன்படுத்தி அதனைத் தடுப்பார் என்பதும் இதன்மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 25 ஆம் திகதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த முடிவுக்கு ஒரு தேர்தல் கோணமும் உள்ளது.

ஆனால் இப்போது உலகளாவிய தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு தோ்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மன்னிப்பு வழங்குவதற்கான செயல்முறை தேர்தல்களுக்கு முன்னதாகவே நடந்திருக்கலாம். ஆனால் தோ்தல் அறிவிக்கப்பட்ட பின்பே அது நடந்துள்ளது.

இதேவேளை, நீதிமன்றால் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரை விடுவிக்க அரசியலமைப்பு ஏற்பாடுகளின் கீழ் சில விதிமுறைகள் உள்ளன. எனினும் அந்த விதிமுறை கொலைக் குற்றவாளியான இராணுவ அதிகாரிக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பின்போது பேணப்பட்டதாக தகவல்கள் இல்லை.

தண்டனை பெற்றவருக்கு பொது மன்னிப்பு அளிக்க முன்னா் இந்த வழக்கில் விசாரணை நடத்திய நீதிபதியிடம் இருந்து ஒரு அறிக்கையை ஜனாதிபதி பெற வேண்டும்.

அத்துடன் அது தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனை பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

மேலும் ஒரு குற்றவாளிக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கு முன் நீதி அமைச்சரின் பரிந்துரையை பெற்றுக்கொள்ள வேண்டும்.

இலங்கையின் அரசியலமைப்பு இவற்றைக் கூறுகிறது. இருப்பினும், அத்தகைய ஆலோசனையோ அல்லது பரிந்துரைகளுக்கோ இந்த விடயத்தல் ஜனாதிபதி கட்டுப்பட்டதாக தகவல்கள் இல்லை.

தமிழ் தலைமைகள் மற்றும் தனிப்பட்ட அரசியல்வாதிகளிடம் உள்நாட்டில் எழுந்த கண்டனக் குரல்களைத் தவிர, ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் மற்றும் உரிமைகள் கண்காணிப்புக் குழுக்கள் சிப்பாயின் விடுதலையைப் பற்றி கேள்வி எழுப்பியுள்ளன.

இது பாதிக்கப்பட்டவர்களுக்கு அவமரியாதை என்று மனித உரிமை அமைப்புக்கள் கூறுகின்றன.

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதில் நாட்டின் கவனம் செலுத்துகின்ற நேரத்தில் வழங்கப்பட்ட மன்னிப்பு, உள்நாட்டு வழிமுறைகள் மூலம் இலங்கையில் பொறுப்புக்கூறல் சாத்தியம் என்ற நம்பிக்கைக்கு ஏற்பட்ட கடுமையான பின்னடைவாகும்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE