Friday 29th of March 2024 05:16:40 AM GMT

LANGUAGE - TAMIL
இளைஞர்கள் அதிரடி!
பொன்னாலைக் காட்டில் கசிப்பு குகை முற்றுகை! உபகரணங்களும் சிக்கின!

பொன்னாலைக் காட்டில் கசிப்பு குகை முற்றுகை! உபகரணங்களும் சிக்கின!


ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நேரத்தில், பொன்னாலை காட்டில் கசிப்பு குகை ஒன்று நேற்று (03) வெள்ளிக்கிழமை காலை முற்றுகையிடப்பட்டது. பிரதேச இளைஞர்களும் வட்டுக்கோட்டை பொலிஸாரும் இணைந்து இந்த முற்றுகை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதன்போது, கசிப்பு காய்ச்சிய நபர்கள் தப்பியோடிய நிலையில் அவர்களால் காய்ச்சப்பட்ட கசிப்பு, எஞ்சிய கோடா மற்றும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன. பொன்னாலைக்கு வெளியே இருந்து வந்தவர்களே இங்கு கசிப்பு உற்பத்தில் ஈடுபட்டனர். முற்றுகையின்போது அவர்கள் தப்பிச்சென்ற போதிலும் பொலிஸார் அவர்களை அடையாளப்படுத்தியுள்ளனர்.

மேற்படி பிரதேசத்தில் இயற்கையாக உள்ள தாழ்வான இடத்தில் நீர் தேங்கி நின்றமையை சாதகமாக பயன்படுத்திய கசிப்பு உற்பத்தியாளர்கள் அங்கு பல தடவைகள் கசிப்பு காய்ச்சும் செயற்பாட்டை மேற்கொண்டிருந்தமை தெரியவந்துள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நேற்று (3) காலை குறித்த இடத்தில் கசிப்பு காய்ச்சப்படுகின்றது என அறிந்துகொண்ட பிரதேச மக்களும் இளைஞர்களும் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

காலை 9.00 மணியளவில் பொலிஸாரும் இளைஞர்களும் இணைந்து குறித்த இடத்தை முற்றுகையிட்டனர். இதன்போது அங்கு கசிப்பு காய்ச்சிக்கொண்டிருந்த நபர்கள் தங்களை சுதாகரித்துக்கொண்டு சிறு பற்றைகள் வழியாக தப்பியோடினர். பல மணிநேரம் தேடுதல் மேற்கொண்ட போதிலும் அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

அங்கு இடம்பெற்ற தேடுதல்களின்போது பரல்களில் கோடாவை நிறைத்து பற்றைக்குள் மறைத்து வைத்துவிட்டு பல தடவைகள் அங்கு கசிப்பு காய்ச்சியமை தடயங்கள் ஊடாக கண்டுபிடிக்கப்பட்டது. மூன்று பரல்களின் கசிப்பு காய்ச்சப்பட்டுக்கொண்டிருந்தது. மேலதிகமாக வெற்று பரல்களும் அங்கிருந்து மீட்கப்பட்டன.

வட்டுக்கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரி சம்பவ இடத்திற்கு வருகைதந்து பார்வையிட்டார். உரிய விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்களை கைது செய்யுமாறு அவர் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

அங்கு காய்ச்சப்பட்ட கசிப்பு, எஞ்சிய கோடா, கசிப்பு காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்பட்ட உகரணங்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டன.

இதேவேளை, சுழிபுரம் குடாக்கனை பிரதேசத்தில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக கசிப்பு விற்பனை இடம்பெற்று வருகின்ற போதிலும் பொலிஸாரால் இதுவரை அதை முற்றாக கட்டுப்படுத்த முடியவில்லை.

குற்றவாளிகள் அவ்வப்போது கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்படுவதும் குற்றப்பணம் செலுத்திய பின்னர் அவர்கள் வெளியே வந்து மீண்டும் கசிப்பு உற்பத்தி, விற்பனையை ஆரம்பிப்பதும் தொடர்ந்தவண்ணம் உள்ளது.

குறித்த இடத்தில் உள்ள சில குடும்பங்கள் கசிப்பு விற்பனையில் ஈடுபடுவதால் தமது பிரதேசம் பல வழிகளில் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் இதை கட்டுப்படுத்துமாறும் அப்பிரதேச மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேற்படி பிரதேசத்தை சேர்ந்தவர்களே பொன்னாலைக் காட்டில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருக்கலாம் என பொலிஸாரால் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE