Friday 19th of April 2024 12:07:02 PM GMT

LANGUAGE - TAMIL
கம்மன்பில
தேர்தலை நடத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது!

தேர்தலை நடத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது!


"நாடாளுமன்ற சட்டத்தின் அடிப்படையில் தேர்தலை நடத்துவதற்கு பிறிதொரு தினத்தைத் தீர்மானிப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்குக் காணப்படுகின்றது. எனவே, உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்வது அவசியமற்றது என்பதே அரசின் தற்போதைய நிலைப்பாடாகும்."

- இவ்வாறு மஹிந்த அணியின் முக்கியஸ்தரும் புதிய ஹெல உறுமயவின் தலைவருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட தினமான மார்ச் 2ஆம் திகதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட்டு புதிய நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவேண்டும். எனினும், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையில் தேர்தலை உரிய காலத்தில் நடத்த முடியாது என்றும், அவ்வாறு தேர்தல் நடத்தப்படாவிட்டால் அரசமைப்பின் அடிப்படையில் சிக்கல் ஏற்படும் என்பதால் இது தொடர்பில் ஜனாதிபதி உயர்நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெற வேண்டும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது:-

"தேர்தலை நடத்துவதற்கான பிறிதொரு தினத்தைத் தீர்மானிப்பது மாத்திரமின்றி தேர்தல் நடத்தப்பட்டு மூன்றும் மாத காலப்பகுதிக்குள் அரச நிதி செலவீனங்கள் பற்றிய அதிகாரமும் ஜனாதிபதிக்குக் காணப்படுகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மார்ச் 2 ஆம் திகதி அறிவித்தமைக்கமைய மார்ச் 12 – 19ஆம் திகதி வரை வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அத்தோடு இம் மாதம் 25 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமை காரணமாக தேர்தல் ஆணைக்குழுவினால் தேர்தலை ஒத்திவைப்பதாக தீர்க்கமான முடிவொன்று எடுக்கப்பட்டது. அது காலத்துக்கேற்ற தீர்வாகும்.

அரசமைப்பின் 70 ஆவது உறுப்புரைக்கமைய நாடாளுமன்றத்தைக் கலைத்ததன் பின்னர் புதிய நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வுக்கான தினம் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மூன்று மாத காலத்துக்குள் இருக்க வேண்டும்.

தேர்தல்கள் ஆணைக்குழுவானது குறித்த தினத்தில் தேர்தலை நடத்த முடியாவிட்டால் அரசமைப்பு ரீதியில் சிக்கல் ஏற்படும் என்று தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற சட்டத்தின் 113 ஆவது உறுப்புரைக்கு அமைய , ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட தினத்தில் ஆணைக்குழுவால் பொதுத் தேர்தலை நடத்த முடியவில்லை என்றால் மீண்டும் தேர்தலை நடத்துவதற்கான தினத்தை ஜனாதிபதியால் தீர்மானிக்க முடியும். அதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்குக் காணப்படுகின்றது.

எனவே, தேர்தலை நடத்தும் தினம் தொடர்பில் சிக்கல் இல்லை. தற்போதுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டதன் பின்னர் இது தொடர்பில் அவதானம் செலுத்த முடியும். அரசின் நிலைப்பாடானது தற்போதைக்கு உயர்நீதிமன்றத்தின் ஆலோசனை அவசியமற்றது என்பதேயாகும்" - என்றார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), கோத்தாபய ராஜபக்ஷ, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE