ரொராண்டோ ஸ்கார்பாரோவில் உள்ள பராமரிப்பு இல்லத்தில் நீண்ட காலமாகப் பணியாற்றிந்த சுகாதாரப் பணியாளர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
சியன்னா அல்டாமண்ட் பரமரிப்பு துறையில் உதவிப் பணியாளராக 50 வயதான இப்பெண் பணிபுரிந்து வந்தவா் என சர்வதேச பராமரிப்பு மைய ஊழியர் தொழிற்சங்கத்தின் (SEIU) தலைவர் ஷர்லீன் ஸ்டீவார்ட் தெரிவித்தார்.
இது குறித்து நான் மிகவும் கோபமாக இருக்கிறேன். ஏனெனில் இந்தச் சம்பவம் தவிர்க்கப்பட்டிருக்கக்கூடியது என அவா் கூறியுள்ளார்.
இந்தத் தொழிலாளியால் பராமரிப்பு மையத்தில் வைரஸ் பாதிப்புக்கள் ஏற்பட்டிருக்கலாம். அங்கு பணியாற்றிய குறைந்தது 18 ஊழியர்களாவது பாதிக்கப்பட்டுள்ளனா். அவர்கள் இப்போது தனிமைப்படுத்தலில் இருப்பதாக நம்புவதாக அவா் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தங்களது பராமரிப்பு இல்லங்களில் 46 போ் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அவா்களில் 5 போ் உயிரிழந்துள்ளதாகவும் இல்லத்தின் செய்தித் தொடா்பாளர் இந்த வார ஆரம்பத்தில் தெரிவித்திருந்தார்.
ஸ்கார்பாரோவில் பராமரிப்பு இல்லத்தில் பணியாற்றிவந்த பெண்ணை இழந்து அப்பெண்ணின் நலன்விரும்பிகள் மற்றும் அவரால் பரமரிக்கப்பட்டவா்கள் துயரத்தில் உள்ளனா். சியன்னா அல்டாமண்ட் பரமரிப்பு துறையில் உள்ள ஒட்டுமொத்த குழு சார்பாக அவரது குடும்பத்தினருக்கும், அன்புக்குரியவா்களுக்கும் சக ஊழியர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என பரமரிப்பு மைம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த பராமரிப்பு இல்ல நிர்வாகத்திடமிருந்து முறையான தகவல் தொடர்பாடல்கள் இல்லை என்று அந்த நிலையத்தில் உள்ள தொழிலாளர்கள் தன்னிடம் கூறியதாக சர்வதேச பராமரிப்பு மைய ஊழியர் தொழிற்சங்கத்தின் (SEIU) தலைவர் ஷர்லீன் ஸ்டீவார்ட் தெரிவித்தார்.
இல்லத்தில் முறையான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்தப்படவில்லை. நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் செய்யப்பட்டிருக்கவில்லை. இந்த இல்ல தொழிலாளர்கள் N95 முக கவசங்களை பயன்படுத்துவதாக நிர்வாகம் அவர்களுக்குத் தவறான தகவல்களை வழங்கி அவா்களை தவறாக வழிநடத்தியுள்ளது எனவும் அவர் கூறினார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியபோதே அதனைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு பராமரிப்பு இல்லத நிர்வாகத்திடம் தொழிற்சங்கம் வாதிட்டது என்று ஸ்டீவர்ட் குறிப்பிட்டார்.
ஆபத்தான சூழலில் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்துகொள்வதற்கான உரிமை அனைவருக்கும் உள்ளது. என்று ஸ்டீவர்ட் சுட்டிக்காட்டினார்.
நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் அதிக இறப்புகளைத் தடுக்க வலுவான வழிமுறைகளை எடுக்குமாறு அவர் ஒன்ராறியோ மாகாண அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போதுள்ள வழிகாட்டல்கள் மக்களைக் கொல்கின்றன என்று ஸ்டீவர்ட் கூறினார்.
இதேவேளை, இந்தப் பெண்ணின் மரணம் வருத்தமளிக்கிறது என நீண்டகால பராமரிப்பு துறை அமைச்சர் டாக்டர் மெர்ரிலி புல்லர்டன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த கொடூரமான வைரஸால் எங்கள் துணிச்சலான பராமரிப்பு தொழிலாளர்களை இழந்துள்ளமை குறித்து நான் அதிர்ச்சியடைந்துளேன். ஒன்ராறியோ முழுவதிலும் உள்ள அனைத்து முன்னணி பராமரிப்பு தொழிலாளர்களுடன் எனது நல்லெண்ணங்களை பகிர்ந்துகொள்கிறேன் என புல்லர்டன் தெரிவித்துள்ளார்.
பராமரிப்பு இல்லங்களில் கொரோனா வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்த புதிய மேம்பட்ட திட்டத்தை புதன்கிழமை மாகாண அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின்படி பராமரிப்பு மையங்களில் உள்ளோர் மற்றும் அதன் ஊழியா்களிடம் சோதனைகளை துரிதமாக அதிகளவில் மேற்கொள்ளவும் தீா்மானிக்கப்பட்டுள்ளது.
நீண்டகால பராமரிப்பு ஊழியர்கள் வேறு பணிகளில் ஈடுபடுவதை தடைசெய்து அவசர உத்தரவையும் மாகாணம் வெளியிட்டடுள்ளது. இது ஏப்ரல் 22 முதல் நடைமுறைக்கு வரும்.
எனினும் ஒன்ராறியோவின் புதிய நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என புதிய ஜனநாயக கட்சியிளா் தெரிவித்துள்ளனா்.
அரசின் அவசரகால நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பில் பல குறைபாடுகள் இருப்பது குறித்து நாங்கள் கவலையடைகிறோம். பல்வேறு பராமரிப்பு இல்லங்களில் தற்காலிக அடிப்படையில் பணியாறும் பராமரிப்புப் பணியாளா்களுக்கான விதிமுறைகள் குறித்து இந்த அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை என்.டி.பி. தலைவர் ஆண்ட்ரியா ஹார்வத் புதன்கிழமை தெரிவித்தார்.
இந்நிலையில் 104 நீண்டகால பராமரிப்பு இல்லங்கள் கொரோனா தொற்று நெருக்கடியை எதிர்கொள்வதாக ஒன்ராறியோ மாகாணம் தெரிவித்துள்ளது. நேற்று வியாழக்கிழமை நிலவரப்படி 530 நீண்டகால பராமரிப்பு இல்லங்களின் ஊழியர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உறுதிப்படுத்தப்பட்டுள்ளனா்.
இந்த ஆபத்தான நிலையில் ஒன்ராறியோவில் உள்ள இரண்டு நீண்டகால பராமரிப்பு இல்லங்களை பொறுப்பேற்குமாறு பரமரிப்பு மைய ஊழியர் தொழிற்சங்கம் மாகாண அரசைக் கோரியுள்ளது.
ஒன்ராறியோ முதல்வா் டக் போர்டு மற்றும் சுகாதார அமைச்சா் கிறிஸ்டின் எலியட் ஆகியோருக்கு எழுதிய கடிதத்தில் எட்டோபிகோக்கிலுள்ள ஈட்டன்வில்லி பராமரிப்பு மையம் மற்றும் ஹேகர்ஸ்வில்லில் உள்ள அன்சன் பிளேஸ் பராமரிப்பு மையம் ஆகியன அங்குள்ளவா்களையும் பணியாற்றும் தொழிலாளா்களையும் பாதுக்கும் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் இந்த மையங்களுக்கு அறங்காவலர்களை நியமிப்பதுடன், அவற்றின் நிர்வாகத்தை அரசாங்கள் பொறுப்பெடுக்க வேண்டும். உங்களது அதிகாரங்களை பயன்படுத்தி இதனைச் செய்ய வேண்டும் எனவும் ஒன்ராறியோ முதல்வா் டக் போர்டு மற்றும் சுகாதார அமைச்சா் கிறிஸ்டின் எலியட் ஆகியோருக்கு எழுதிய கடிதத்தில் சர்வதேச பரமரிப்பு மைய ஊழியர் தொழிற்சங்கத்தின் (SEIU) தலைவர் ஷர்லீன் ஸ்டீவார்ட் கோரிக்கை விடுத்துள்ளார்.
கியூபெக் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சில பராமரிப்பு மைய நிர்வாகங்கள் தங்கள் கடமைகளை உரியவாறு பூர்த்தி செய்யாத நிலையில் அவற்றை அந்த மாகாணங்களில் அரசுகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதை அக்கடிதத்தில் அவா் சுட்டிக்காட்டியுள்ளார்.
எட்டோபிகோக்கிலுள்ள ஈட்டன்வில்லி பராமரிப்பு மையம் மற்றும் ஹேகர்ஸ்வில்லில் உள்ள அன்சன் பிளேஸ் பராமரிப்பு மையம் ஆகியவற்றின் நிர்வாகங்கள் அவற்றை சரியாக முகாமைத்துவம் செய்வதில் தோல்வியுற்றுள்ளன என நாங்கள் நம்புகிறோம் எனவும் அவா் குறிப்பிட்டுள்ளார்.
ஈட்டன்வில்லி பராமரிப்பு மையத்தில் 31 கொரோனா வைரஸ் தொடர்பான மரணங்களை பதிவாகியுள்ளதாக நேற்று வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது. அங்கு பராமரிப்பில் உள்ள 79 போ் வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனா். அங்கு மேலும் 80 பேர் தங்கள் சோதனை முடிவுகளுக்காக காத்திருக்கிறார்கள்.
அன்சன் பிளேஸ் மையத்தில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 19 போ் வைரஸ் தொற்றுக்குள்ளாகி இறந்துள்ளனா் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி - CP24
தமிழில் அருவி இணையத்துக்காக மதிமுகன்
Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: கொரோனா (COVID-19), கனடா, ஒன்ராறியோ