Tuesday 16th of April 2024 02:12:35 PM GMT

LANGUAGE - TAMIL
-
மீண்டும் உருவாகும் பலப்பரீட்சை - பி.மாணிக்கவாசகம்

மீண்டும் உருவாகும் பலப்பரீட்சை - பி.மாணிக்கவாசகம்


தேர்தல் ஒன்றை நடத்துகின்ற ஒரே நோக்கத்துடன் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஜனாதிபதி கோத்தாபாயவிடம் அறிக்கையொன்றின் மூலம் நேரடியாக இந்தக் கோரிக்கையை முன்வைத்திருந்தன. ஆனால் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தைக் கூட்ட முடியாது. அவ்வாறு கூட்டப் போவதில்லை என்ற ஜனாதிபதியின் நிலைப்பாட்டை திரும்பவும் வலியுறுத்தி அரசாங்கம் நிராகரித்துள்ளது. இதனால் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட சட்டவாக்க அதிகாரத்துக்கும், ஜனாதிபதியாகிய நிறைவேற்று அதிகாரத்துக்கும் இடையில் பலப்பரீட்சைக்கான களம் ஒன்று திறக்கப்பட்டிருப்பதைக் காண முடிகின்றது. மார்ச் மாதம் 2 ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கலைத்து, ஏப்ரல் 25 ஆம் திகதி தேர்தலை நடத்துவதென்றும், ஜுன் மாதம் 2 ஆம் திகதிக்கு முன்னர் மே மாதம் 14 ஆம் திகதி புதிய நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச வர்த்தமானியில் அறிவித்தல் வெளியிட்டிருந்தார். ஆனால் அப்போது ஆட்கொல்;லி கிருமியாகிய கொரோனா வைரஸ் நாட்டில் பரவத் தொடங்கியிருந்தது. நோய்த்தொற்றிப் பரவுவதைத் தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தேசிய அளவில் அனைத்துச் செயற்பாடுகளும் முடக்கப்பட்டன. நாட்டில் ஓர் அவசர நிலைமை உருவாகியது.

இதனையடுத்து, தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட சூட்டோடு சூடாக ஏற்கனவே அறிவித்தவாறு ஏப்ரல் 25 ஆம் திகதி வாக்குப் பதிவை நடத்த முடியாது என தெரிவித்த தேர்தல் ஆணையகம் வர்த்தமானி அறிவித்தலின் மூலம் கால வரையறையின்றி தேர்தலை ஒத்தி வைத்தது.

மறுபுறத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கத் தொடங்கியதையடுத்து, தேர்தல் பற்றிய செயற்பாடுகளைவிட நோய்த்தொற்றில் இருந்து நாட்டு மக்களைப் பாதுகாக்க வேண்டிய செயற்பாட்டில் தீவிர கவனம் செலுத்த வேண்டிய கட்டாய நிலைமை அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருந்தது.

ஆனாலும் கொரோனாவின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் கிடைக்கின்ற இடை.வெளியைப் பயன்படுத்தி பொதுத் தேர்தலை எப்படியாவது நடத்திவிட வேண்டும் என்பதில் அரச தரப்பினர் கருத்தூன்றியிருந்தனர்.

அழைப்பும் நிராகரிப்பும்

ஆனால் அரச தரப்பினருடைய துரதிஸ்டமோ என்னவோ கொரோனா வைரஸ் பரவல் அரசாங்கத்தின் கட்டுப் பிடிக்குள் சிக்காமல் நழுவியோடி போக்குக்; காட்டத் தொடங்கியிருந்தது. தேர்தலை நடத்திவிட வேண்டும் என்பதற்காக தேர்தலை ஒத்திவைத்த தேர்தல் ஆணைக்குழுவே புதிய திகதியைத் தாமதமின்ற அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி ஜனாதிபதி தனது செயலாளர் மூலமாக தேர்தல் ஆணையகத்திற்கு அழுத்தம் கொடுத்தார். அதனையடுத்து ஜுன் 20 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல ஆணையகம் அறிவித்தது. ஆனால் அந்தத் திகதிக்கு முன்னதாக தேர்தல் சட்டத்திற்கு அமைவாகக் குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் வேட்பாளர்களுக்குரிய தேர்தல் சின்னங்களை வழங்குதல், தேர்தல் பிரசாரத்திற்கு அவசியமான சட்ட ரீதியான கால அவகாசத்தை வழங்குதல் உள்ளிட்ட பணிகளை முன்னெடுக்கவிடாமல் கொரோனா வைரஸ் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கின்றது. இதனால் நோய்ப் பரவல் கட்டுப்பாட்டில் வருவதற்குப் பதிலாக நாளாந்தம் நோய்த்தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பவர்களைத் தனிமைப்படுத்தி கண்காணிக்கின்ற பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினரைப் பற்றிப் பிடித்து விமானப்படை மற்றும் இராணுவம் உள்ளிட்ட படையணிகளையும் கொரோனா தீண்டியுள்ளது. இதனால் 660க்கும் மேற்பட்டவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு கொரோன வைரஸ் பரவல் நிலைமை மோசமடைவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதனால்தான் ஜுன் 20 ஆம் திகதி தேர்தல் நடத்துவதாக இருந்தால் மே மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் அல்லது அந்தத் திகதியளவில் கொரோனாவின் பிடியில் இருந்து நாடு விடுவிக்கப்பட வேண்டும். விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட வேண்டும். நாட்டில் வழமை நிலை ஏற்படுத்தப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையகத்தின் தலைவர் மகிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். இல்லையேல் ஜுன் 20 ஆம் திகதி தேர்தலை நடத்த முடியாமல் போகும் என்பது அந்த அறிவித்தலின் உட்பொருள். இத்தகைய ஒரு நிலையில்தான், கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தைக் கூட்டி, எதிர்க்கட்சியினரும், அரசாங்கத் தரப்பினரும் அரசியல் பேதங்களைக் கைவிட்டு ஒன்றிணைந்து கொரோனா வைரஸை முழுமையாகக் கட்டு;ப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம் என்று அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் ஜனாதிபதிக்கு எழுத்து மூலமாக விடுத்திருந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருக்கின்றது.

ஆனால் நாட்டின் நிலைமைகள் குறித்து எதிர்கட்சியினர் உள்ளிட்ட அனைத்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விளக்கமளித்து, கலந்துரையாடுவதற்கான சந்திப்புக்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் முதன் நிலையில் இந்த அழைப்பு எதிர்க்கட்சியினரால் நிராகரிக்கப்பட்டுள்ளது. சிலவேளைகளில் அந்த அழைப்பை ஏற்று யாரேனும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்தச் சந்திப்பில் கலந்து கொள்வதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. அரசியலமைப்பு என்ன கூறுகின்றது......?

ஆனால் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு எழுத்து மூலம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் நீதிமன்றத்தை நாடுவது பற்றியும் எதிரணியினர் சிந்தித்திருக்கின்றனர். இதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும்கூட தகவல்கள் வெளியாகியிருந்தன.

நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு அரசியலமைப்பில் இடமிருக்கின்றது என்பது எதிரணியினருடைய வாதம். ஆனால் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை ஜனாதிபதி மீண்டும் கூட்ட முடியாது. அதற்கு சட்டத்தில் இடமில்லை என்பது அரச தரப்பினருடைய எதிர் வாதம். முடியும் என்று ஒரு பகுதி கூறுகின்றது. மறுபகுதி முடியாது என்று கூறுகின்றது. ஆனால் உண்மை நிலைமை என்ன என்பது நாட்டு மக்களுக்கு தெளிவாகத் தெரியவில்லை.

இரண்டு தரப்பினருமே தமக்கு சாதகமான நிலைமைகளை எடுத்துக் கூறி தங்களுடைய நிலைப்பாட்டை நியாயப்படுத்துகின்றனர். அரசியலமைப்புச் சட்ட விதிகளில் தங்களுடைய கூற்றுக்கான ஆதாரங்களையும் இரு தரப்பினருமே வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு அரசியலமைப்பின் 70 (7) ஆம் பிரிவு ஜனாதிபதிக்கு அதிகாரமளித்திருக்கின்றது என்று எதிரணியைச் சேர்ந்தவர்கள் எடுத்துக் காட்டுகின்றார்கள். அதேபோன்று அத்தகைய அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்படவில்லை என்று அரச தரப்பினர் அரசியலமைப்பை ஆதாரம் காட்டி கூறுகின்றார்கள். இதனால் அரசியலமைப்பின் அந்தப் பிரிவு சர்ச்சைக்குரியதாகவும், இரு தரப்பினருக்கும் இடையிலான விவாதப் பொருளாகவும் மாறியிருக்கின்றது. அந்த அரசியலமைப்புப் பிரிவு பின்வருமாறு கூறுகின்றது:

'பாராளுமன்றம் கலைக்கபட்டதன் பின்னர் எந்த நேரத்திலேனும், பாராளுமன்றம் குறிப்பிட்ட தினத்திற்கு முன்னராகக் கூட வேண்டும் என்பதை அவசியமாக்குகின்ற அத்தகைய இயல்பினதான நெருக்கடி நிலையொன்று எழுந்துள்ளதென ஜனாதிபதி திருப்திப்பட்டால், அவர், கலைக்கப்பட்டிருந்த பாராளுமன்றத்தைப் பிரகடனத்தின் மூலம், அத்தகைய பிரகடனத் தேதியில் இருந்து மூன்று நாட்களுக்கு முற்படாத ஒரு தேதியில் கூடுமாறு அழைக்கலாம் என்பதோடு, அத்தகைய பாராளுமன்றம் அந்த நெருக்கடி நிலை முடிவுற்றவுடனும், அல்லது பொதுத் தேர்தல் முடிவுற்றவுடனும், இவற்றுள் எது முன்னர் நிகழ்கின்றதோ அது முடிவடைந்தவுடனும், கலைக்கப்பட்டுவிடும்' - இது அரசியலமைப்பில் காணப்படுகின்ற வாசகம்.

கலைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு முதலில் ஒரு தேவைப்பாடு நாட்டில் எழுந்திருக்க வேண்டும். அந்தத் தேவைப்பாடு ஒரு நெருக்கடி நிலையாகவும் இருத்தல் வேண்டும். எனவே, அந்தத் தேவைப்பாடு - ஒரு நெருக்கடி நிலைமை நாட்டில் உருவாகி இருக்கின்றது என்று நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி திருப்திப்பட வேண்டும். அத்தகைய ஒரு நிலையில், அந்தத் தேவையைக் கருத்திற்கொண்டு கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கூட்ட முடியும் என்று இப்போது விவாதத்திற்கு ஆதாரமாக எடுத்துக் காட்டப்படுகின்ற 70 (7) ஆம் இலக்க அரசியலமைப்புப் பிரிவு கூறுகின்றது.

எனவேதான், இந்த அரசியமைப்பு விதிக்கமைய நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கூட்டலாம். கூட்ட வேண்டும் என்று எதிரணியினர் வலியுறுத்துகின்றார்கள். வாதிடுகின்றார்கள். அதனை அரச தரப்பினர் அடியோடு மறுக்கின்றார்கள். எதிர்க்கின்றார்கள்.

நெற்றியடிக் கூற்றும் நிலைமைகளும்

ஆனால் இந்த சட்ட விதியில் முக்கியமான ஒரு விடயம் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அந்த விடயத்தை நாடாளுமன்றத்தைக் கூட்ட முடியாது என்ற தமது நிலைப்பாட்டிற்கு மறைமுக ஆதாரமாக அரச தரப்பினர் கொண்டிருக்கின்றார்கள். ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவும் அதனை மறைமுக ஆதாரமாகக் கொண்டுதான், 'நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு அரிசயலமைப்பின்படி எனக்கு அதிகாரமில்லை. நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்குரிய தேவையும் எனக்கில்லை' என்று நெற்றியடியாகக் கூறியிருக்கின்றார். கூறிக்கொண்டிருக்கின்றார்.

'நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்பதற்கான தேவை ஒன்று எழுந்திருக்க வேண்டும். அது நாட்டில் நெருக்கடி நிலையை - ஓர் அவசர நிலையை உருவாக்கி இருக்க வேண்டும். அத்தகையதொரு நிலை ஏற்பட்டிருக்கின்றது என்று ஜனாதிபதி திருப்திப்படவும் வேண்டும்' என்பதுதான் அந்த முக்கிய விடயம்.

கொரோனா வைரஸ் பரவியுள்ள நாடுகளில் மிக மோசமான விளைவுகள் ஏற்பட்டிருக்கின்றன. புயல் வேகத்தில் அது தொற்றிக்கொள்ளும். சங்கிலித் தொடராகக் கண்ணுக்குத் தெரியாமலும் புலன்களின் மூலம் உணர முடியாமலும் அது பரவிச் செல்லும். வேகமாகத் தொற்றிப் பரவுவது மட்டும் ஆபத்தானதல்ல. போதிய முன்னறிவிப்பின்றியும், முற்கூட்டிய தெளிவான குணங்குறிகளின்றியும் தாக்கி சுவாசக் குழாய்களிலும் நுரையீரலிலும் பாதிப்பை ஏற்படுத்தி, எண்ணற்றவர்களின் உயிர்களை கொரோனா வைரஸ் குடித்துவிடுகின்றது என்பதுதான் அதன் பேராபத்தான நிலைப்பாடு.

இந்த நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட நாடுகள் கெரோனாhவின் பிடியில் இருந்து மீள வழி தெரியாமல் தடுமாறிக்கொண்டிருக்கின்றன. இறந்தவர்கள் எத்தனை பேர், எத்தனை பேருக்குத் தொற்றியிருக்கின்றது என்று கணக்கெண்ணி எண்ணி அந்த நாடுகளைச் சேர்ந்த மக்களும் சுகாதாரத்துறையினரும், அரச தரப்பினரும் அச்சமடைந்திருக்கின்றார்கள்.

இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்த வல்ல கொரோனா வைரஸ்தான் இலங்கையிலும் பரவி இருக்கின்றது. மக்கள் மத்தியில் தீவிரமாகத் தொற்றிப் பரவி உயிர்ச் சேதங்களை ஏற்படுத்துவதற்கு முற்பட்டிருக்கின்றது. ஏனைய நாடுகளைப் போலவே அவற்றைப் பின்பற்றி, அந்த நோய்த் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கு உரிய முன்னெச்சரிக்கை மற்றும் கடுமையான பாதுகாப்புச் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்திருக்கின்றது.

இடைவெளி பேண வேண்டும். தும்மும்போதும், இருமும்போதும் எச்சரிக்கை முறைகளைக் கைக்கொள்ள வேண்டும். அடிக்கடி கைகழுவ வேண்டும். வெளியில் நடமாடுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் எண்ணற்ற விதிமுறைகளை அறிவித்து, அவற்றைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசாங்கம் மக்களிடம் வற்புறுத்தி இருக்கின்றது. இந்தச் செயற்பாடுகளைக் கடைப்பிடிப்பதற்கு வசதியாகவே தேசிய அளவில் அனைத்துச் செயற்பாடுகளையும் அரசாங்கம் முடக்கி இருக்கின்றது. ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்தி இருக்கின்றது. முழு நாடுமே முடக்கப்பட்டுள்ள நிலையில், அதியுச்ச பாதுகாப்புக்கு உட்பட்டிருக்கின்ற பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகிய உயர் மட்டத் தலைவர்களையும் கொரோனா தொற்றிவிடக் கூடாது என்பதற்கான முன்னெச்சரிக்கையாக அவர்களைச் சுற்றியுள்ள மெய்ப் பாதுகாவலர்களாகிய பாதுகாப்புத் தரப்பினரும், அலுவலக உத்தியோகத்தர்கள், பணியாளர்களும் என நூற்றுக்கணக்கானவர்கள் அடிக்கடி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

சிவில் சமூகத்தின் அழுத்தமில்லை அரசியல் வல்லுனர்கள் வழிகாட்டியுள்ளனர்

கொரோனாவினால் நாட்டில் ஒரு நெருக்கடி நிலை – அவசர நிலை ஏற்பட்டிருக்கின்றது என்பதைத்தானே, இவ்வளவு நடவடிக்கைகளும் குறிக்கின்றன? இந்த நிலைமைகளுக்கு மத்தியில் நாட்டில் நெருக்கடி நிலைமை ஏற்படவில்லை என்று கூற முடியுமா? இந்தக் கேள்விகள் நியாயமானவை. அதற்குரிய பதில்களும் நியாயமாகவே இருக்க வேண்டும். ஆனால் நாட்டில் அரச தரப்பின் நிலைப்பாடு அவ்வாறானதாகத் தெரியவில்லை.

ஏனெனில்; நாட்டில் ஒரு நெருக்கடி நிலைமை – அவசர நிலை இன்னும் உருவாகவில்லை என்பதே அரச தரப்பினரது நிலைப்பாடு. ஜனாதிபதியின் அழுங்குப் பிடி. நாட்டில் ஓர் அவசர நிலைமை – நெருக்கடி நிலை இல்லாவிட்டால் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை ஏன் கூட்ட வேண்டும்? அவர்கள் வெளியிடுகின்ற அறிக்கைகள், கருத்துக்கள் மற்றும் செயற்பாடுகளில் மறைநிலையில் உரத்துக் கேட்கின்ற கேள்வியாக இது உள்ளது.

எனவே, நெருக்கடி நிலைமையொன்று ஏற்பட்டிருக்கின்றது. அதனால் தேர்தலையும் நடத்த முடியாமல் இருக்கின்றது என்ற நிலைப்பாட்டின் அடிப்படையில் தேர்தலுக்காகக் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை இப்போது கூட்ட வேண்டிய அவசியமில்லைத்தானே?

இதைத்தான் அரச தரப்பினர் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தைக் கூட்ட முடியாது. அவ்வாறு கூட்டுவதற்கு சட்டத்தில் இடமில்லை. ஆகவே நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டிய அவசியமில்லை என்று அடித்துக் கூறுகின்றார்கள். வாதிடுகின்றார்கள்.

அரச தரப்பினருக்கும் எதிரணியினருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இந்த நேர்முரணான ஒரு நிலைமையில் இந்த விவகாரம் குறித்து தென்னிலங்கையின் சிவில் சமூக அமைப்புக்களிடமிருந்தோ அல்லது புத்திஜீவிகள் மற்றும் ஜனநாயகத்தின் மீது பற்று கொண்டுள்ள அரசியல் செயற்பாட்டாளர்களிடமிருந்தோ எத்தகைய உணர்வுகளும் வெளிப்படுத்தப்படவில்லை.

ஆனாலும் பேராசிரியர் ஜயதேவ உயங்கொட போன்ற ஓரிருவரிடமிருந்தே கொரோனா மற்றும் அதனையொட்டி எழுந்துள்ள அரசியலமைப்பு ரீதியான நெருக்கடிகள் குறித்து கருத்துக்கள் வெளிவந்துள்ளன. ஒரு சில அரசியல் வல்லுனர்களும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குரிய வழிவகைகள் குறித்து கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். ஆனாலும் இந்த நிலைமைகள் தொடர்பில் 2015 ஆம் ஆண்டு தேர்தல்களுக்கு முன்னர் இருந்ததுபோன்று தென்னிலங்கையின் சிவில் சமூக அமைப்புக்கள் பொது அமைப்புக்கள் ஜனநாயகச் செயற்பாட்டானர்களின் அமைப்புக்களிடம் ஏற்பட்டிருந்த எழுச்சி உணர்வைக் காண முடியவில்லை.

கொரோனாவுக்கு எதிராக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ள நிலையில், அந்த வைரஸின் தாக்கம் நாட்டில் ஒரு நெருக்கடி நிலைமை உருவாகியிருக்கின்றது என்பதைப் புலப்படுத்தவில்லையா என்ற கேள்வியை பேராசிரியர் ஜயதேவ உயங்கொட எழுப்பியுள்ளார். அது மட்டுமல்லாமல் அரசியலமைப்பின் 70 (7), 155 (4) (1) ஆகிய சட்டவிதிகள் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கும் நாட்டில் ஒரு நெருக்கடி நிலைமை உருவாகி இருக்கின்றது என்று பிரகடனப்படுத்துவதற்கும் ஜனாதிபதிக்கு அதிகாரமளித்திருக்கின்றது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பலப்பரீட்சை பலம் பெறுமா, தீருமா?

அதேவேளை கொடிய கொரோனா வைரஸ் தாக்கத்தை எதிர்கொள்வதில் அரசியலை முதன்மைப்படுத்திய செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகின்றன என சுட்டிக்காட்டியுள்ள தமிழ் சிவில் சமூக அமையம், அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் கடைப்பிடிக்கப்பட்டிருக்க வேண்டிய வெளிப்படைத்தன்மை உள்ளிட்ட விடயங்கள் குறித்து வினாக்களைத் தொடுத்திருக்கின்றது.

இத்தகைய ஒரு நிலையில்தான் தேர்தலையும் அரசியலையும் முன்னிலைப்படுத்திச் செயற்படுகின்ற அரசாங்கத்துக்கும் எதிரணியினருக்கும் இடையில் பாராளுமன்றத்தையும் தேர்தலையும் மையப்படுத்திய நிலையில் அரசியலமைப்பு நெருக்கடிகள் குறித்த இழுபறி நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

அரசியலமைப்புச் சட்டத்திற்கமைய கொரோனா வைரஸினால் எழுந்துள்ள நெருக்கடி நிலைமைகளின் அடிப்படையில் நாடாளுமன்றத்தைக் கூட்ட முடியும் - கொரோனாவக்கு முடிவு கண்டபின்னர் விரும்பியவாறு தேர்தலை உரிய முறையில் நடத்த முடியும் என்று அரசியல் வல்லுநர்கள் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கியிருக்கின்றார்கள்.

நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்காக விடுத்த வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்வது ஜனாதிபதியின் பதவி நிலைக்கு அரசியல் ரீதியாகக் கௌரவக் குறைச்சலாகக் கருதினால், இப்போதைய நிலைமையில் நெருக்கடி நிலைமை – அவசர நிலைமை உருவாகியிருக்கின்றது என்ற பிரகடனத்தைச் செய்தாலே போதும். கலைக்கப்பட்ட நாடாளுமன்றம் தானாகவே தற்காலிகமாக உயிர் பெற்றுவிடும். கொரோனாவின் நெருக்கடி நிலைமை தணிகின்ற போது கூட்டப்பட்ட நாடாளுமன்றம் தானாகவே வலுவற்றுப் போய்விடும் என்பதும் அரசாங்கத்திற்கு எடுத்துரைக்கப்பட்டிருக்கின்றது.

நெருக்கடி நிலைமைகள் தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டு, அரசியல் நெருக்கடி நிலைமைகளுக்கு எவ்வாறு தீர்வு காணலாம் என்பதும் அரசாங்கத்திற்குச் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் அரசு என்ன செய்யப் போகின்றது?

நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் நிறைவேற்று அதிகாரத்துக்கும் நாடாளுமன்றத்தை மையப்படுத்திய சட்டவாக்கத் துறைக்கும் இடையில் எழுந்துள்ள மோதலை – பலப்பரீட்சையை இலகு வழியில் தானாகவே தீர்க்கப் போகின்றதா அல்லது எதிரணியினரை நீதிமன்றத்தை நாடச் செய்து நீதிமன்றக் களத்தில் வைத்து தீர்வு காணப் போகின்றதா என்பது தெரியவில்லை.

அருவி இணையத்துக்காக பி.மாணிக்கவாசகம்


Category: கட்டுரைகள், புதிது
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, மகிந்த ராசபக்ச, மைத்திரிபால சிறிசேன, இரா சம்பந்தன், ரணில் விக்கிரமசிங்க, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE