Wednesday 24th of April 2024 09:30:40 PM GMT

LANGUAGE - TAMIL
திடீரென முளைத்த நவீன கல்விக்கொள்கைகள்!
ஏழைகளைப் பந்தாடும் புதிய வகைக் கொரோனா!

ஏழைகளைப் பந்தாடும் புதிய வகைக் கொரோனா!


உலக வல்லரசுகள் உட்பட்ட அனேகமான நாடுகள் கொரோனா என்கிற கொரூர அச்சத்தில் இருந்து மீளமுடியாது அல்லாடிக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில் இலங்கை அரச இயந்திரம் கொரோனாவை கட்டுப்படுத்தக் கடுமையான ஆரோக்கியமான பல விடயங்களை முன்னகர்த்தி வெற்றிபெற்று வருகிறது.

கொரோனா அச்சுறுத்தல் நாட்டில் ஏற்படும் என்று உணரத் தலைப்பட்ட உடனேயே அரச இயந்திரம் முதலில் நடைமுறைப்படுத்திய விடயம் கல்விச்சாலைகளை மூடியதுதான். அந்த அறிவிப்பின் தொடராக மாணவர்கள் முற்றுமுழுதாக வீடுகளில் முடங்கியிருக்கிறார்கள். ஊரடங்குத் தளர்வுகள் எற்படுத்தப்படுகின்ற சூழலில் கூட மாணவர்களை வெளியிலே காண முடியாத அளவிற்கு பெற்றோர் அவர்களை வீடுகளில் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் வடக்கு - கிழக்கு உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் இணையவழிக் கற்பித்தல் முயற்சி முன்னெடுக்கப்படுகின்றது. தேசிய பாடசாலைகள், மாகாண ரீதியில் முதல் நிலையில் திகழும் பாடசாலைகள், நேரடியாக அரச ஆளுகைக்குள் இல்லாத பாடசாலைகள் என பல பாடசாலைகள் இவ்வாறான முயற்சிகளை மேற்கொள்கின்றன. இந்த முயற்சிகள் ஒவ்வொரு பாடசாலைக்கும் வேறுபட்ட தன்மையில் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த முயற்சிகள் தொடர்பிலான பல கேள்விகளும், பல விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில் அவை தொடர்பில் சில அவதானிப்புக்களை முன்வைக்க விளைகிறோம்.

இலங்கையின் கல்விக்கொள்கை

இலங்கையின் கல்விக்கொள்கை அனைவருக்கும் சமமான கல்வி என்ற வலுவான நிலைப்பாட்டைக்கொண்டதாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது. அந்தக் கொள்கையின் திடமான போக்கினால் தனியார் பாடசாலைகளால் கூட போட்டிபோட்டு பின்தள்ள முடியாத அளவிற்கு அரச பாடசாலைகள் நாட்டில் கோலோச்சுகின்றன. அனைவருக்கும் சமமான கல்வி என்பதன் மூலம் திறமையான ஏழை மாணவர்களும் தமது திறன்களை வெளிப்படுத்தி மிக உயர்வான பதவிகளை தக்கவைத்துக்கொள்ளக்கூடியதாக எமது நாட்டின் கல்விக்கொள்கை காணப்படுகிறது என்பதை நிராகரிக்க முடியாது.

இந்தச் சூழலில் தான், தற்போது இணையவழியாக கற்பிக்கப்படுகின்ற விடயங்கள் தொடர்பில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இணையவழியாக கற்பிக்கப்படுகின்ற முறைமையிலேயே மாறுதல்கள் காணப்படுகின்றன.

⦁ சில பாடசாலைகள் Zoom வழி கற்பித்தல் என்ற புதிய முறையில், காணொளியில் மாணவர்களை இணைத்து அவர்களுக்கு கற்பிக்கின்ற ஒரு முறைமையை கைக்கொள்கின்றன.. குறைந்தது 15,000.00 ரூபாவிற்கும் இற்கும் குறையாத பெறுமதியுடைய கைபேசி வேண்டும். அல்லது 60,000.00 ரூபாவிற்கும் குறையாத பெறுமதியுடைய கணிணி வேண்டும்.

⦁ இன்னொரு முறையாக Viber, WhatsAap போன்ற செயலிகள் ஊடாக மாணவர்களுக்கு கேள்விகள் அனுப்பப்பட்டு அவர்களை வீட்டார் கவனித்து, மாணவர்கள் அவற்றை தமது கொப்பிகளில் எழுதி பின்னர் பதில்களையும் எழுதவேண்டும். வார நாட்களில் காலையில் குறைந்தது நான்கு மணி நேரம் மாணவர்கள் அந்த செயலிகளோடு கைபேசிகளையோ கணிணிகளையோ வைத்திருத்தல் வேண்டும். ஒவ்வொரு பாடத்திற்கும் ஒவ்வொரு மணி நேரம் ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

⦁ சில பாடசாலைகளில் மாணவர்களுக்கு தேவையான கேள்விக் கொத்துக்களோ, அல்லது பாடங்களுக்கான விளக்கச் சுருக்கக் குறிப்புக்களோ அச்சேற்றப்பட்டு கையளிக்கப்படும்.

⦁ இன்னும் சில பாடசாலைகளில், வகுப்பு ஆசிரியர், சில பாடங்களை மட்டும் கை பேசி ஊடாக கேள்விக் கொத்தாக மாணவர்களுக்கு அனுப்பி அவர்களை அவற்றை எழுதிப் படிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு பலவாறாக கற்பித்தல் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆக ஒட்டுமொத்த இலங்கையில் ஒரே தன்மையில் கற்பித்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை என்பதுடன், மாவட்டங்களின் முன்னணி பாடசாலைகள் என்று சொல்லப்படுகின்ற பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகளுக்கு இவ்வாறான எந்த ஒரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என்பது மிக முக்கியமானது.

இதில் இன்னொரு விடயம் இந்த செயற்பாடுகளை முன்னெடுக்குமாறும் வாராந்த அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் சிலர் தமது வலயங்களில் இறுக்கமான கட்டளைகளை பிறப்பித்திருப்பதையும் அறியமுடிகிறது.

ஒட்டுமொத்தத்தில் இணையவழியில் மாணவர்களை கற்பிக்கும் செயற்பாடு பாடசாலைகளின் முடிவுகளையும் தாண்டி உயர் மட்டத்தில் (மாகாண, மாவட்ட) கட்டாயமானதாக பார்க்கப்படுவதாகவே தோற்றம்காட்டுகிறது.

எனவே கொரோனா நெருக்கடி நிலையில் இருந்து நாடு விடுபட்ட பின்னர், பாடசாலைகள் தொடங்குகின்றபோது மாணவர்கள் வீடுகளில் மேற்கொண்ட வீட்டுப்பாடங்களின் அனைத்து பக்கங்களையும், அனைவரது கொப்பிகளையும் ஆசிரியர்கள் மீள பார்ப்பார்களா? என்ற கேள்வியை சில ஆசிரியர்களிடம் முன்வைத்துப்பார்த்தோம். அவர்கள் எவருமே ஆம் என்பதாக பதில் தரவில்லை. ஒட்டு மொத்தத்தில் பாடசாலையில் ஆசிரியர்கள் நேரடியாகவே நின்று கற்பிக்கும் போது கூட சரியாக கவனிக்காத மாணவர்கள் வீட்டில் இருந்து அவற்றை சரியாக செய்துவிடுவார்கள் என்று கருதலாமா? அவ்வாறு அந்தக் காலப்பகுதியில் கற்பிக்கப்பட்ட விடயங்களைக் கடந்து தானே ஏனைய பாடங்களை ஆசிரியர்கள் கற்பிக்கப்போகிறார்கள்?

அதேவேளை, இணைய வழியாகவோ அல்லது வேறு வழிகளிலோ அனுப்பப்படுகின்ற கேள்விகளை தமது பிள்ளைகளுக்கு விளங்கப்படுத்துவதற்கான வல்லமை பெற்றவர்களாக அனைத்து பெற்றோரும் உள்ளார்களா?

குறிப்பிட்ட இணையவழியில் கற்பிக்கப்பட்டவை, அடுத்த ஆண்டுகளுக்கான அடிப்படையாகவோ, அல்லது முன் தொடர்ச்சியாகவோ இருந்தால் அந்த மாணவர்களின் நிலை என்ன?

அதேவேளை அனைத்து பாடசாலைகளிலும் இவ்வாறான கற்பித்தல் நடவடிக்கை முன்னெடுகப்படாத நிலையில் முன்னணி பாடசாலைகளாக சொல்லப்படுகின்ற பாடசாலைகளில் மட்டும் கற்பித்தல் முன்னெடுக்கப்படுகின்றபோது, நெருக்கடியின் பின்னர் எந்த வகையில் கற்றல் நடவடிக்கை தொடரும்?, முன்னணிப் பாடசாலைகள் குறிப்பிட்ட பாடங்களையும் (அவையும் ஒவ்வொன்று ஒவ்வொரு கட்டத்தில்) பின்தங்கிய நிலையில் காணப்படுகின்ற பாடசாலைகள் இன்னொரு வகையிலுமா கற்பித்தலை முன்னெடுக்கப்போகின்றன?

பரீட்சை என்று வரும் போது, வலய மட்ட, மாவட்ட மட்ட, மாகாண மட்ட என்ற அடிப்படையிலான பரீட்சைகள் எவ்வாறு சிக்கல்களை சமாளிக்கப்போகின்றன?

இங்கே தான் அனைவருக்கும் சமமான கல்வி என்ற நிலைப்பாட்டிற்கு என்ன ஆகிவிட்டது? என்ற கேள்வியை முன்வைக்கின்றோம்.

ஏழைகளை திண்டாட வைக்கும் நடவடிக்கை

கடந்த வாரம் கொரோனா நெருக்கடியில் இருந்து வடக்கு சற்று மூச்சு விட்டிருந்த நிலையில் ஊரடங்கு தளர்வு ஏற்படுத்தப்பட்டது. அவ்வாறான நிலையில் கடனுக்கு பொருட்கள் விற்பனை செய்யும் (லீசிங்) தனியார் நிறுவனங்களில் கூடுதலாக சந்தைப்படுத்தப்பட்ட பொருட்களாக மடிக்கணிணிகளும், கைபேசிகளும் விளங்கியதாக நம்பகரமாக தெரியவந்திருக்கின்றது. அவை ஏன் என்று ஆராய்ந்து பார்த்தால் தமது பிள்ளைகளின் கல்வித் தேவைக்காக என்று அந்த ஏழைப் பெற்றோர் பலர் தெரிவித்திருக்கின்றார்கள்.

உண்மையில் பணம் படைத்தவர்களாக இருந்திருந்தால் அவர்கள் நேரடியாக முழுத் தொகைப் பணத்தையும் செலுத்தியே அந்த பொருட்களை கொள்வனவு செய்திருப்பார்கள். ஆக முற்பணம் செலுத்தி பொருட்களைப் பெற்றால் மிகுதி தவணைப் பணத்தினைச் செலுத்துவதற்கு அவர்களால் வேலைக்குச் சென்று சம்பாதிக்கக் கூடிய சூழல் தற்போது நிலவுகிறதா?

அதனை விட காணொளிக் காட்சிகள் மூலம் தோன்றி கற்கும் மாணவர்களுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 200.00 ரூபா செலவாகிறது என்று வைத்துக்கொள்வோம். மாதாந்தம் குறைந்தது நான்காயிரம் ரூபா பணம் அதற்கு செலவாகிறது.

அதனைவிட புதிதாக தொலைபேசி பயன்படுத்துகின்ற மாணவர்களாக இருந்தால் அவர்கள் கைபேசியில் காணொளிக் காட்சிகளைப் பார்க்கின்றபோது அதற்கான DATA அளவுக்கதிகமாக செலவாகும் நிலையும் தானே காணப்படும், அந்த நுட்பத்தை அறிந்துவைத்திருக்காத ஏழைப் பெற்றோரின் நிலை தொடர்பில் அக்கறை கொள்ளப்போவது யார்?

சில வீடுகளில் நான்கு பிள்ளைகளும் கற்றுக்கொண்டிருப்பார்கள், சரி இரண்டு பிள்ளைகள் என்று வைத்துக்கொண்டால் ஒரே நேரத்தில் இரண்டு பிள்ளைகளுக்கும் அல்லது நான்கு பிள்ளைகளுக்கும் பயன்படுத்துவதற்கு நான்கு மடங்கு அல்லாடும் நிலை உணரப்படவில்லையா?

இதேவேளை சில மத நிறுவனங்களின் முழுமையான ஆளுகையின் கீழ் அரச கல்வி முறைமையில் செயற்படும் பாடசாலைகளில் சேர்க்கப்படுகின்ற ஏராளமான மாணவர்கள் மிகவும் வறுமைப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். குறிப்பாக போரால் பாதிக்கப்பட்ட குடும்ங்களைச் சேர்ந்தவர்கள் அல்லது பொருளாதார நலிவடைந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என அவர்கள் காணப்படுவார்கள். அந்தப் பாடசாலைகளின் விடுதியிலேயே தங்கி மாணவர்கள் கற்பதன் மூலம் வறுமை நெருக்கடியிலிருந்து அவர்கள் விடுபட்டு கற்க முடியும் என்பது பெற்றோரின் எதிர்பார்ப்பாகும். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வீடுகளுக்கு திரும்பியிருக்கின்ற அந்த ஏழை மாணவர்களை இலக்குவைத்திருக்கும் இணைய வழியிலான கற்பித்தல் நிலைப்பாட்டினால் அன்றாடம் அல்லாடும் அந்த ஏழைக் குடும்பங்களின் வலிகளை யாரும் உணரப்போவதில்லையா?

அவ்வாறான மாணவர்கள் பலர் தாம் அயல் வீட்டாரின் தொலைபேசி இலக்கங்களை வழங்கி அவற்றில் தமக்கான கேள்விகளை அனுப்புமாறு கோரியிருக்கின்றார்கள் என்பதை அறிய முடிந்தது. அவ்வாறு அந்த தொலைபேசிகளை அயல் வீட்டார் ஒவ்வொரு நாளும் 4 அல்லது 5 மணி நேரம் இந்த மாணவர்களுக்கு வழங்கிவிடுவார்களா? இடையில் அழைப்புக்கள் வரும் போது மாணவர்களின் நிலைப்பாடு என்ன?

அதனைவிடவும் மிகவும் வறுமைப்பட்ட பிள்ளைகள் இவ்வாறான எந்த வகைக்குள்ளும் வரமுடியாத நிலை காணப்பட்டால் பாடசாலைகள் தொடங்கும் போது அவர்கள் இன்னமும் உளவியல் ரீதியில் பின்தங்கும் அபாயச் சூழல் ஏற்படும். தமது வறுமையால் தம்மால் இணையவழியில் கற்க முடியவில்லை என்ற ஏக்கம் அவர்களை அல்லாட வைக்கும்.

இதனைவிடவும் உலக அளவில் கொரோனாவால் முடக்கப்பட்ட நிலையில் வாழும் குடும்பங்கள் உள ரீதியான முரண் நிலைகளை எதிர்கொள்கின்றபோது அது பாரிய பிணக்குகளாக உருவெடுக்கும் நிலை காணப்படுகிறது.

பொருளாதார நெருக்கடி நிலையை எதிர்கொள்ளும் குடும்பங்கள் மீது சுமத்தப்படுகின்ற திடீர் சுமைகள் குடும்பங்களுக்குள் தவறான முடிவுகளுக்குச் செல்லும் அபாயங்களைக் கூட ஏற்படுத்தலாம்.

அரவணைப்பில் வாழும் பிள்ளைகளின் நிலை

தாய், தந்தையர் அற்ற நிலையில் பிறருடைய உதவியில் கல்விகற்கும் மாணவர்களுக்கு இவ்வாறான நிலை ஏற்படும் போது அவர்கள் எதிர்கொள்ளும் உளவியல் ரீதியிலான அழுத்தம் மிகக் கொடுமையானதாக இருக்கும்.

தமது சக மாணவர்கள் கைபேசியிலோ, கணிணியிலோ கற்பதாக அறிகின்றபோது அவ்வாறான ஒரு ஏற்பாட்டினை தமக்கு செய்து தரும்படி, தாம் தங்கி வாழ்கின்ற உறவினர்களிடம் எவ்வாறு கேட்க முடியும் என்ற ஏக்கம் அவர்களை திண்டாட வைக்கும்.

அவர்களை கொரோனா காலத்தில் மட்டுமல்லாது அதன் பின்னரும் அந்தத் தாக்கத்திலிருந்து விடுபடமுடியாத அளவிற்கு அந்தச் சம்பவங்கள் கட்டிப்போட்டுவைத்திருக்கும் என்பதை நிராகரிக்க முடியாது.

கைப்பேசிப் பாவனைக்கு கட்டாயமாக தூண்டப்படும் பிள்ளைகளை அதிலிருந்து மீட்கப்படுவது சாத்தியமா?

வகுப்பில் இருக்கும் மாணவ, மாணவிகள் குழுக்களாக இணைக்கும் பொழுது அனைத்து தொலைபேசிகளுக்கும் அனைவரது இலக்கங்களும் பகிரப்படும் நிலை கூட பல பாடசாலைகளில் காணப்படுகிறது. அவ்வாறு பகிரப்படும் போது அது பதின்பருவ மாணவர்களை தவறான வழிகளில் இலக்கங்களை பயன்படுத்த வழி செய்வதாகவே அமையும். அனைவரும் என்று சொல்ல முடியாது. ஆனால் 50 மாணவர்கள் உள்ள இடத்தில் ஒரு சிலர் முறைகேடாக பயன்படுத்தலாம். அல்லது வீட்டில் இருப்பவர்களோ அல்லது வேறு நபர்களோ தொலைபேசி ஊடாக இலக்கங்களைப் பெற்றுக்கொண்டு முறைகேடான வழிகளில் நடப்பதற்கான அபாயச் சூழல் காணப்படுகிறது என்பதை நிராகரிக்க முடியாது. இந்த வகையில் கற்பித்தலில் ஈடுபடுகின்ற இளம் ஆசிரியைகள் கூட நெருக்கடியைக் சந்திக்கும் அபாயமும் காணப்படுகிறது.

அதேவேளை, இதுவரை காலமும் தொலைபேசிகளை நெருங்கவிடாது பிள்ளைகளை தவிர்த்து வந்திருந்த நாங்கள் நான்கு, ஐந்து மணி நேரம் தாண்டியும் அவர்களிடமேயே தொலைபேசிகளைக் கொடுத்துவிடுகின்ற நிலை ஏற்படுத்தப்படுகிறது. இது உடனடித் தாக்கமாக மாணவர்களின் கண் பார்வையில் தாக்கத்தை செலுத்தும் அபாயம் உள்ளது.

இதேவேளை, இதுவரை காலமும் தொலைபேசிகளை நெருங்கவிடாது பிள்ளைகளை தடுத்துவைத்திருந்துவிட்டு மணிக்கணக்காக அவர்களிடம் தொலைபேசிகளை வலுக்கட்டாயமாக திணித்துவிட்டு, மீ்ண்டும் உடனடியாக அதிலிருந்து அவர்களை விடுவித்துவிடுவது சாத்தியமா?

அதனையும் தாண்டி தொலைபேசியில் இணைய வழி அனைத்து வகையான காட்சிகளும் திரையும் தோன்றும் நிலை காணப்படுகின்றது. பதின்ம வயது மாணவ, மாணவிகளை அந்தக் காட்சிகள் மிக மோசமான பாதைக்கு இட்டுச் செல்லும் என்பதை நிராகரிக்க முடியாது.

நாங்கள் மேற்கத்தேய நாடுகளுக்கு போட்டிபோடும் அளவிற்கு கலாசார, பொருளாதார ரீதியில் இன்னமும் மாற்றம்பெறவில்லை என்பதை துறைசார்ந்த, இந்த விடயங்களை முன்னெடுக்க முன்னிற்கின்றவர்கள் உணரவேண்டும்.

மேலைத்தேய நாடுகளில் சிறுவயதிலேயே மாணவர்கள் சமூகப் பிறழ்வுகளை சந்திக்கின்றார்கள். அதற்கேற்ப அந்த நாடுகளின் கலாசாரம், பண்பாடு காணப்படுகின்றது.

நிறைவாக

எங்கள் பிள்ளைகளும் இணையவழியில் கற்கிறார்கள் என்று பெற்றோரோர்களோ, எங்கள் பிள்ளைகள் இணையவழியில் கற்கின்றார்கள் என்று ஆசிரியர்களோ பெருமைப்பட்டுக்கொள்வதில் ஒன்றுமில்லை. அவர்களுக்கு அருகில் இருக்கும் ஏழைப் பிள்ளைகள் கற்கும் பாடசாலை ஒன்றையோ, அயல் வீட்டில் இருக்கும் ஏழைப் பிள்ளை ஒன்றையோ தங்கள் பாடசாலையாகவோ, தங்கள் பிள்ளையாகவோ நினைத்துக்கொண்டால் அனைவருக்கும் சமமான கல்வி என்ற உன்னத கோட்பாட்டினை தொடர்ந்தும் கட்டிக்காக்கலாம்.

இதனைவிடவும் 30 ஆண்டுகளாக மிகப் பாரிய இடப்பெயர்வுகளையும் மாதக்கணக்காக, தவணைக்கணக்காக கல்விச்சாலைகளே இல்லாமல் கொட்டில்களிலும் தறப்பாள்களிலும் ஒதுங்கி வாழ்ந்து விட்டு இன்று வைத்தியநிபுணர்களாகவும் பொறியியலாளர்களாகவும் ஏனைய துறைகளின் சாதனையாளர்களாகவும் சாதனை படைத்து எம்முடனேயே வாழ்ந்துகொண்டிருக்கின்ற உன்னதர்களை காண்கின்றோம்.

ஒட்டுமொத்த உலகமும் கொரோனா என்கிற கொரூரத்தை எதிர்கொள்ளமுடியாமல் திக்குமுக்காடி வரும் நிலையில் இன்னும் சில மாதங்களில் முற்றுமுழுதாக கட்டுப்படுத்திவிட்டோம் என்கிற செய்தியை இலங்கை அரசாங்கம் சொல்லும் அளவிற்கு நிலைமை கட்டுக்குள் இருக்கிறது.

வெளியில் செல்லமுடியாது, வீடுகளிலேயே முடங்கிக்கிடக்கும் சின்னஞ்சிறார்களின் மன அழுத்தங்களை இன்னமும் வலுவாக்காமல் அவர்களை அவற்றில் இருந்து ஆற்றுப்படுத்தி மீட்டெடுக்க அனைவரும் முயலவேண்டும்

இன்றைய கொரோனா என்கிற அபாயகரமான சூழலில் தரம் 05. க.பொ.த.சாதாரண தரம், க.பொ.த உயர்தரப் பரீட்சைகளை இந்த ஆண்டு எதிர்கொள்ளப் போகின்றவர்கள் ஏதோ ஒரு வகையில் தமது ஆசிரியர்களுடன் தொடர்பில் இருக்கவேண்டியது என்பது தவிர்க்கப்பட முடியாதது என்பதற்கு மாற்றுக்கருத்தில்லை. அவர்களைத் தவிர்த்து ஏனையவர்களுக்கான கல்வித் திட்டம் தொடர்பில் பொதுவான நிலைப்பாடு ஒன்றினை அரச கல்வி அமைச்சின் உயர் மட்டம் தீர்மானிக்க வேண்டும்.

முதலில் பொதுவான கல்வித்திட்டம் ஒன்றை வகுக்கவேண்டும். அது நாட்டில் அனைத்து மாணவர்களுக்கும் சமமானதாக இருக்கவேண்டும். இணையத்தளம் ஒன்றை வடிவமைத்து அதில் பதிவேற்றி அனைத்து மாணவர்களும் பயன்படுத்தத் தக்கதாக அவற்றை தரவிறக்கி பயன்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்தால் வசதி இல்லாத மாணவர்கள் கூட பிறரது உதவி மூலம் அவற்றை தரவிறக்கியோ அல்லது அச்சேற்றியோ பயன்படுத்தலாம்.

குறிப்பு

மேற்சொல்லப்பட்ட விடயங்கள் சமூகத்தில் உணரப்பட்ட நிலைப்பாடுகளின் எதிர்வினையாகும். இது தனியே விமர்சனங்களை நோக்கியதல்ல. மாறாக நலிவடைந்து கிடக்கும் எமது சமூகத்தினதும் எதிர்கால சிற்பிகளினதும் வருங்காலம் தொடர்பிலான கரிசனையே ஆகும். இதற்கு எதிர்வினையாற்றும் வகையிலோ, அல்லது ஆதரித்தோ பகிரப்படும் ஆரோக்கியமான பகிர்வுகளை வெளியிடுவோம்.

அருவி ஆசிரியர் பீடம்


Category: கட்டுரைகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE