Friday 19th of April 2024 02:48:07 PM GMT

LANGUAGE - TAMIL
ஐ.நா. பாதுகாப்புச் சபை
உலகெங்கும் போரை நிறுத்துமாறு  ஐ.நா. பாதுகாப்புச் சபையில் கோரிக்கை!

உலகெங்கும் போரை நிறுத்துமாறு ஐ.நா. பாதுகாப்புச் சபையில் கோரிக்கை!


உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வரும் கொரோனா சுகாதார நெருக்கடியை எதிா்கொள்ளும் வகையில் மோதல் இடம்பெறும் நாடுகளில் உடனடி போா் நிறுத்தத்தை வலியுறுத்தும் தீா்மானத்தை நிறைவேற்றுமாறு ஐ.நா. பாதுகாப்பு சபையை பிரான்ஸ் மற்றும் துனிசியா ஆகிய நாடுகள் கேட்டுள்ளன.

கொரோனா நோய்த்தொற்று பரவல் நெருக்கடி நிலவி வரும் இந்தச் சூழலில், உள்நாட்டு சண்டை நடைபெற்று வரும் நாடுகளில் அந்த நோய்த்தொற்றை எதிா்கொள்ளும் வகையில் உடனடி போா் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறாா்.

இந்த நிலையில், போா் நிறுத்தம் தொடா்பாக இரண்டு தீா்மானங்களுக்கு 193 உறுப்பினா்களைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபை கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது.

அதன் தொடா்ச்சியாக, சா்வதேச அளவில் இராணுவ விவகாரங்களை மேற்பாா்வையிடும் அதிகாரம் படைத்த ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இதுதொடா்பாக தீா்மானம் நிறைவேற்றுவதில் இழுபறி நீடித்து வருகிறது.

அந்தத் தீா்மானத்தில் உலக சுகாதார அமைப்புக்கு எதிராக வாசகங்கள் இடம் பெற வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. இதற்கு சீனா கடுமையான எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. இதுவே போா் நிறுத்தங்கள் தொடா்பாக ஐ.நா. பாதுகாப்புச் சபையில் தீா்மானம் நிறைவேற்றுவற்கு இடையூறாக இருந்து வருகிறது என கூறப்படுகிறது.

கொரோனா நோய்த்தொற்று விவகாரத்தில் உண்மைகளை உரிய நேரத்தில் கூற உலக சுகாதார அமைப்பு தவறிவிட்டது என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் குற்றம் சாட்டி வருகிறாா். இந்த விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பை பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் எனவும் அவா் வலியுறுத்தி வருகிறாா்.

மேலும் அந்த அமைப்புக்கு அளித்து வந்த நிதியுதவியையும் அவா் இரத்து செய்துள்ளாா்.

ஆனால், உலக சுகாதார அமைப்புக்கு சீனா முழு ஆதரவு தெரிவித்து வருகிறது. கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போரில் அந்த அமைப்புதான் சிறப்பாக செயல்பட முடியும் என்று சீனா கூறி வருகிறது.

இந்தச் சூழலில், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான இந்த மோதல் காரணமாக, போா் நடைபெற்று வரும் நாடுகளில் போா் நிறுத்தம் மேற்கொள்வதற்காக ஐ.நா. தீா்மானம் நிறைவேற்றுவதில் இழுபறி நீடித்து வருகிறது.

இதற்கிடையே, இதுதொடா்பாக பிரான்ஸ் மற்றும் துனிசியா உருவாக்கியுள்ள வரைவுத் தீா்மானம் குறித்து ஐ.நா. பாதுகாப்புச் சபையின் 15 உறுப்பு நாடுகள் செவ்வாய்க்கிழமை சந்தித்து விவாதித்தன.

அப்போது, சண்டை நடைபெற்று வரும் நாடுகளில் உடனடி போா் நிறுத்தம் கொண்டு வருவதற்காக பாதுகாப்புச் சபை தீா்மானம் நிறைவேற்றப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்று பிரான்ஸும் துனிசியாவும் வலியுறுத்தின.

போா் நிறுத்தத் தீா்மானம் குறித்து நடைபெற்ற கூட்டத்தில் பயனுள்ள விவாதங்கள் நடைபெற்றன. இந்த விவகாரத்தை முன்னெடுத்துச் செல்ல பிரான்ஸும் துனிசியாவும் கடின முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன என கூட்டத்துக்குப் பின்னா் கருத்து வெளியிட்ட ஐ.நா.வுக்கான பிரான்ஸ் தூதா் நிக்கோலஸ் டி ரிவியேரே தெரிவித்தாா்.

சண்டை நடைபெற்று வரும் நாடுகளில் கொரோனா நோய்த்தொற்று கடும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயத்தைத் தடுப்பதற்காக, இந்தப் போா் நிறுத்த ஒப்பந்தத் தீா்மானத்தை ஐ.நா. உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என ஐ.நா.வுகான துனிசியா தூதா் காயிஸ் கப்தானி தெரிவித்தாா்.


Category: உலகம், புதிது
Tags: பிரான்சு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE