Monday 25th of January 2021 11:29:47 AM GMT

LANGUAGE - TAMIL
(சிறப்புக் கட்டுரை)
டிச்சிட்டல் இந்தியா... மெச்சிடல் தகுமோ? - புலம்பெயர்ந்தோர் படுகொலைகள்!

டிச்சிட்டல் இந்தியா... மெச்சிடல் தகுமோ? - புலம்பெயர்ந்தோர் படுகொலைகள்!


முன்தயாரிப்பற்ற முதலாவது கொரோனா பொதுமுடக்க அறிவிப்பால், இந்தியாவில் ஏற்கெனவே தாகத்துக்குத் தண்ணீரும் பசிக்கு உணவும் கிடைக்காமலும் விபத்தாலும் அலைகுடித் தொழிலாளர்களும் அவர்களின் குடும்பத்தினருமாக 27 பேர் அநியாயமாகக் கொல்லப்பட்டனர். அந்தக் கோர நிகழ்வை அடுத்தும் இங்குள்ள அரசுகளின் திட்டமிட்ட புறக்கணிப்பு அலட்சியத்தால், அதே கொடுமைகள் தொடர்ந்தன; அங்கொன்றும் இங்கொன்றுமாக!

அதன் தொடர்ச்சியாக, கடந்த 8ஆம் தேதியன்று மகாராசுட்டிர மாநிலம் ஔரங்காபாத் அருகில், 16 புலம்பெயர்த் தொழிலாளர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் சரக்குத் தொடர்வண்டி மோதியதில் உடல்கள் சிதற சாகடிக்கப்பட்டனர். இதை படுகொலை என்றல்லாமல் வேறு என்னவென்று சொல்ல?

மத்தியபிரதேச மாநிலத்தின் பல மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், ஆயிரம் கி.மீ. தொலைவில் மகாராசுட்டிர மாநிலம் சல்னாவில் உள்ள இரும்பு உருக்கு ஆலைகளில் வேலைசெய்வதற்காக கடந்த சனவரியில் குழுவாகச் சென்றிருந்தனர். பொதுமுடக்கத்தால் வேலையும் இல்லாமல் கைச்செலவுக்குக் காசும் இல்லாமல் போனதால், அவரவர் ஊருக்குப் போவதென முடிவுசெய்தனர். இரண்டாவது பொதுமுடக்கம் முடிவடையவிருந்த சமயத்தில், ஏப்ரல் 29 அன்று இந்திய ஒன்றிய அரசு புலம்பெயர்ந்துவாழும் அலைகுடித் தொழிலாளர்களுக்கு இளைப்பாறலாக ஓர் அறிவிப்பை வெளியிட்டது. முடக்கத்தின் காரணமாக வெளி மாநிலங்களில் ஐந்து வாரங்களாக சிக்கிக்கொண்ட மாணவர்கள், பக்தர்கள், புலம்பெயர் பணியாளர்கள், சுற்றுலாப் பயணிகள் ஆகியோர் அவரவர் சொந்த மாநிலத்துக்கு சாலை வழியாக பயணம்செய்ய அந்த அறிவிப்பு, அனுமதி அளித்தது.

அறிவித்த 24 மணி நேரத்துக்குள் 6 இலட்சம் பேர் சொந்த ஊருக்குத் திரும்ப, தனியான தொலைபேசி எண்ணில் பதிவுசெய்தனர். இந்தியாவிலேயே அதிகமான அலைகுடித் தொழிலாளர்களைக் கொண்டவை, பீகாரும் உத்தரப்பிரதேசமும்தான். இவ்விரண்டு மாநிலங்களில் இருந்து மட்டும் 42 இலட்சம் பேர் மற்ற மாநிலங்களுக்குப் புலம்பெயர்ந்துள்ளனர். பீகார் மட்டும் 27 இலட்சம் புலம்பெயர்ந்தோரை சொந்த மண்ணுக்கு வரவேற்கவேண்டிய நிலையில், தொடர்வண்டி மூலம் அவர்களைக் கொண்டுவர மத்திய அரசு உதவவேண்டும் என்று அம்மாநிலத்தின் துணை முதலமைச்சர் சுசில்குமார் மோடி கேட்டுக்கொண்டார். ஆனால், தொடர்வண்டியில் தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிப்பது சிரமம் அதனால் தொற்று கூடுதலாகிவிடும் என அனுமதி மறுத்துவிட்டது, ஒன்றிய அரசு.

ஒன்றியத்தை ஆள்கின்ற பாரதிய சனதா கட்சியே ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் ஆதித்யநாத், 10 முதல் 15 இலட்சம் புலம்பெயர்த் தொழிலாளர்கள் அம்மாநிலத்துக்குத் திரும்பிவரக்கூடும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார். ஆனால், அத்துணை பேரும் கொரோனா தொற்றாதவர் என உறுதிப்படுத்தப்படவேண்டும் புலம்பெயர்ந்து சென்றடைந்த மாநிலத்தில் கட்டாயமாக 14 நாள்கள் தனிமைப்படுத்தலில் இருந்திருக்கவேண்டும் என்றும் ஆதித்யநாத் திட்டவட்டமாகக் கூறிவிடார். அருகிலுள்ள டெல்லி, அரியானாவில் இருந்து பேருந்து மூலம் மக்களைக் கூட்டிவருவதில் அம்மாநில அரசு முன்னரே இறங்கியிருந்தது. டெல்லி, மும்பையிலிருந்து மேற்கொண்டும் சொந்த மாநிலம் திரும்ப இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் முன்பதிவு செய்தனர். தமிழ்நாட்டில் மட்டும் உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த 1.5 இலட்சம் அலைகுடிப் பணியாளர்கள் இருக்கின்றனர் என்று தெரிவித்தார், அம்மாநிலத்தின் சிறப்பு அதிகாரியான காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் எல்வி ஆண்டனி தேவ் குமார். எந்த மாநிலத்தில் இருந்தாலும் உ.பி. அரசின் அனுமதி கிடைத்தவர்கள் மட்டும் ஊருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மற்றவர்கள்?

சொந்த மாநிலத்துக்குத் திரும்பும் வழியில் சோகத்தை உண்டாக்கும் மரணங்கள் தொடர்ந்தநிலையில், ” நீங்கள் இருக்கும் மாநில அரசு நிர்வாகத்துடன் தொடர்பில் இருங்கள். நாங்கள் உங்களை அழைக்கும்வரை காத்திருங்கள். ஊர் திரும்ப நடந்துவராதீர்கள்.” என்று ஏப்ரல் கடைசிநாளில் வேண்டுகோள் விடுத்தார், ஆதித்யநாத். ஆனால், அதே நாள் ஏப்ரல் 30 அன்று நள்ளிரவில், மிகவும் கமுக்கமாக, தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்திலிருந்து சார்க்கண்டு மாநிலத்தின் ஃகாடியாவுக்கு, தனி தொடர்வண்டி ஒன்றில் 1,225 பேர் அனுப்பிவைக்கப்பட்டனர். சிரமிக் இரயில் எனப் பெயர்வைக்கப்பட்ட இந்தத் தொடர்வண்டிச் சேவை மூலம், ஒன்றிய அரசின் உள்துறை வழங்கிய அனுமதியின்படி மேலும் 5 தடங்களில் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த பணியாளர்கள் அவரவர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

அதாவது, முந்தைய நாள்வரை, தொடர்வண்டியில் பயணிகளை அனுப்பிவைத்தால் கொரோனா தொற்றும் என மறுத்துவந்தவர்களே, ஒரே நாளில் 72 படுக்கைகளைக் கொண்ட ஒரு பெட்டியில் 54 பேரை ஏற்றிக்கொண்டு தொடர்வண்டியை இயக்கலாம் என முடிவை மாற்றினர். மேலும், பயணக் கட்டணத்தை தொடர்புடைய இரு மாநில அரசுகளின் தலையில் ஏற்றிய தொடர்வண்டித் துறையானது, இந்தப் பயணத்துக்காக ஒவ்வொரு பயணிக்கும் கூடுதலாக 50 ரூபாயையும் வசூலித்த தகவல் வெளியானதும், நாடளவில் கடுமையான விமர்சனம் எழுந்தது. அடுத்த வேளை உணவுக்குகூட வழியில்லாத அந்தப் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதா என்பதுடன், இந்தப் பயணத்துக்கு கட்டணம் வசூலிக்கவேண்டுமா என மோடி அரசுக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது.

அந்த சமயத்தில், மே 4 அன்று காங்கிரஸ் தலைவர் சோனியா, புலம்பெயர்ந்தோருக்கான பயணக் கட்டணத்தை காங்கிரசு கட்சியே செலுத்தும் என அறிவிக்க, ஒன்றிய அரசானது நெருக்கடிக்கு உள்ளானது. அதை அன்று காலை 9.14 மணிக்கு தன் டுவிட்டர் பக்கத்திலும் அவர் வெளியிட்டிருந்தார். பா.ச.க.வின் நாடாளுமன்ற உறுப்பினரான சர்ச்சைக்குரிய சுப்பிரமணியன் சுவாமி அவர் சார்ந்த கட்சியை தொடர்ச்சியாக விமர்சித்துவந்த நிலையில், திடீரென இதில் தலையைவிட்டார். தொடர்வண்டித் துறை 85 % கட்டணத்தையும் தொடர்புடைய மாநில அரசு 15% கட்டணத்தையும் செலுத்தும் என தொடர்வண்டித் துறை அமைச்சர் பியூசு கோயல் தன்னிடம் தெரிவித்ததாக சு.சாமியும் டுவிட்டரிலேயே பதிவிட்டார். சோனியாவின் குறித்த டுவிட்டர் தகவலுக்கு அடுத்த இரண்டாவது நிமிடத்தில் காலை 9.16 மணிக்கு சாமியின் பதிவு மேற்கொள்ளப்பட்டிருந்தது என்பது குறிப்பிட்டாக வேண்டும்.

மேலும், பல வாரங்களாக பல மாநில அரசுகளும் தொடர்ந்து கோரிக்கை விடுத்தபடி இருந்தும் அவற்றுக்கு முறைப்படியாக எந்த பதிலையும் கூற தொடர்வண்டித் துறை முன்வரவில்லை. திடீரென ஓர் அறிவிப்பு வந்தது. இப்படியான ஓர் அறிவிப்பை அதிகாரபூர்வமாக - அரசு நடைமுறைப்படி செய்வதுதானே முறையானதாகவும் பொறுப்பானதாகவும் இருக்கமுடியும். அதைவிடுத்து ஒன்றிய அரசின்- குறிப்பாக தொடர்வண்டித் துறையின் அதிகாரம் எதுவும் வழங்கப்படாத சு.சாமி மூலம் ஊகத் தகவலைக் கசியவிடுவதைப் போல நடந்துகொண்டது. இதற்கிடையே, பா.ச.க. ஆளும் உத்தராகண்ட் மாநிலத்தில் சிக்கிக்கொண்ட குசராத் மாநிலத்தைச் சேர்ந்த 1,800 பக்தர்களை பாதுகாப்பாக சொந்த ஊர் கொண்டுபோய்ச் சேர்த்தனர். இராசசுத்தான் மாநிலம் கோட்டாவில் போட்டித்தேர்வுக்காகப் படித்துக்கொண்டிருந்த உத்தரப்பிரதேசத்தின் 3,000 மாணவர்களும் சிறப்புப் பேருந்துகள் மூலம் சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். நாடு முழுவதும் பொதுமுடக்கத்தில் இப்படி விதிவிலக்கு ஏதுமில்லாதபோது, புலம்பெயர்ந்தோரின் ஊர்திரும்பலில் இந்திய ஒன்றிய அரசின் நிலையை இது தெளிவாக எடுத்துக்காட்டியது.

புலம்பெயர்ந்தோருக்கான பயணக் கட்டணத்தில் ஆட்டம்காட்டிய தொடர்வண்டித் துறையின் சார்பில், பிஎம்கேர் நிதிக்கு மட்டும் 151 கோடி ரூபாய் தரப்பட்டது. ஏற்கெனவே பிரதமர் நிவாரண நிதி என ஒன்றிருக்க, தனியார் அறக்கட்டளையைப் போன்ற ஏற்பாடான - பிரதமர் மோடியின் இந்தப் புதிய நிதி பற்றி அரசுத் தரப்பில் எந்த அமைப்பும் தணிக்கைசெய்யவோ கேள்விகேட்கவோ முடியாது என்கிறநிலையில், அதற்கு மட்டும் அவ்வளவு தொகையைத் தூக்கிக் கொடுக்கமுடிகிறது; மக்களுக்கான பயணத்தை ஏற்றுக்கொள்ள முடியாதா என காங்கிரசு கட்சியின் முன்னணி பிரமுகர் இராகுல்காந்தி கேள்வி எழுப்பியது, இந்த இடத்தில் பொருத்திப்பார்க்கப்பட வேண்டியதாகும்.

ஒன்றிய அரசுகளுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான சிக்கல் ஒரு பக்கம் என்றால், மாநில அரசுகளுக்கு இடையிலான மாறுபட்ட நிலைப்பாடுகளும் இன்னொரு புறம் பெரிதாக நின்றது. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, நாட்டின் மொத்த புலம்பெயர்ந்தோரில் உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியப்பிரதேசம், மேற்குவங்காளத்தைச் சேர்ந்தவர்கள் 50% பேர் என்கிறது புள்ளிவிவரம்.

நாடே கொரோனாவால் பீதியின் உச்சத்தில் இருக்க, மத்தியப்பிரதேச மாநிலத்திலோ அங்கிருந்த காங்கிரசு கூட்டணி ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு, ஆட்சிக்கு வந்த பாரதிய சனதா கட்சியானது, நலவாழ்வுத் துறைக்கு (மட்டுமல்ல, எந்தத் துறைக்கும்) அமைச்சரை நியமிக்காமல் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. வெளியிலிருந்து வந்த விமர்சனக் கணைகளைத் தாக்குப்பிடிக்க முடியாமல் ஒருவழியாக நலவாழ்வுத் துறைக்கு அமைச்சரை நியமித்தார், முதலமைச்சரான சிவராச்சு சிங் சௌகான். மேற்குவங்காளத்திலோ சொந்த ஊருக்குத் திரும்பும் புலம்பெயர்ந்தோருக்கான தொடர்வண்டிப் பயணத்துக்கு முதலமைச்சர் மமதா பானர்ச்சி ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடிக்கிறார் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் சா வெளிப்படையாகக் குற்றம்சாட்டினார். அதற்குப் பதிலளித்த மமதாவின் திரிணாமூல் காங்கிரசு கட்சியின் தலைவர்கள், “ புலம்பெயர்ந்த வங்காளிகள் இருக்கும் மாநிலங்களின் அரசுகளுடன் மேற்குவங்க அரசு தகவல்தொடர்புடன் இருந்துவருகிறது. இத்தனை வாரங்கள் நாடு கொள்ளைநோயால் அவதிப்பட்டிருக்கையில் உள்துறை அமைச்சர் எங்கு போயிருந்தார்? அவருடைய அரசாங்கத்தின் நிர்வாகச் சீர்கேட்டால் தொடர்வண்டியில் 16 புலம்பெயர்ந்தோர் பலியாகியுள்ளனர். ஆனால் அவரோ புலம்பெயர்ந்தோர் குறித்து மமதா அக்கறைகொள்ளவில்லை என பொய் சொல்கிறார். அவர் சொன்னதைத் திரும்பப்பெற வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்கவேண்டும்.” என்று கூறியுள்ளனர்.

இன்னுமொன்று, கேட்கவே மனதை உருக்கும் வேதனையான சங்கதி. புலம்பெயர்ந்தோரை தங்கள் மாநிலங்களிலேயே தங்கவைக்க பல மாநிலங்களின் அரசுகளும் அவர்கள் மீது அப்படியொரு ’பாசம்’ காட்டின; இல்லையில்லை வேசம் காட்டின. பஞ்சாப், கர்நாடகம், அரியானா, குசராத் மாநில அரசுகள், உத்தரப்பிரதேசத் தொழிலாளர்கள் ஊர்திரும்பினால் தங்கள் மாநிலங்களில் வேலைசெய்ய ஆள்கள் கிடைக்காமல், கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்படும் என குறைபட்டுக்கொண்டனர். அதிலும் கர்நாடக முதலமைச்சர் எட்டியூரப்பா செய்தது, உச்சம். முன்னதாக, வெளிமாநிலத் தொழிலாளர்களை அவரவர் ஊருக்கு அனுப்புவதென முடிவுசெய்திருந்த கர்நாடக முதலமைச்சர் கடந்த 5ஆம் தேதியன்று திடீரென அந்த முடிவைக் கைவிட்டார். காரணம், அன்றைய தினம் அவரைச் சந்தித்த அம்மாநில கட்டுமானத் தொழில்துறை அதிபர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளரை ஊருக்கு அனுப்பிவிட்டால் தங்கள் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் என்று அவரிடம் முறையிட்டதே! அதை அப்படியே ஏற்று அரசின் முடிவை மாற்றிய எட்டியூரப்பா, நாடு முழுவதும் எழுந்த கடும் எதிர்ப்பால், அதிலிருந்து பின்வாங்கி, மே 8 முதல் புலம்பெயர்த் தொழிலாளர்கள் ஊர்திரும்ப நடவடிக்கையைத் தொடரச்செய்தார்.

அரசுகளுக்கு இடையிலும் அரசியலுக்கு இடையிலும் தங்களின் விவகாரம் சிக்குப்பட்டுக் கிடக்கும்நிலையில், புலம்பெயர்த் தொழிலாளர்களோ அவரவர் வசிக்கும் மாநிலங்களில் தங்களை ஊருக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்குமாறு போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கினர். ஏப்ரல் கடைசிவாக்கில் குசராத் மாநிலம் சூரத் நகரில் நடைபெற்ற ஒரு போராட்டத்தில் வன்முறையாகி, 18 பேர் கைதுசெய்யப்படும்வரை நிலைமை சென்றது. தமிழகத்திலும் திருப்பூரிலும் சென்னையிலும் அவ்வப்போது புலம்பெயர்ந்தோர் போராட்டம் நடத்துவதும் அரசு அதிகாரிகள் சமாதானம்செய்வதுமாக தொடர்ந்து நடந்துவருகிறது.

இத்துடன், வடமாநிலத்துக்கு சிறப்புத் தொடர்வண்டி இயக்குவதாக புரளியாக வரும் தகவலை நம்பி, சென்னை, வேலூர், திருப்பூர் ஆகிய இடங்களில் நூற்றுக்கணக்கானோர் திரண்டுவந்து ஏமாந்துபோகும் சோகமும் நிகழ்கிறது.

கடந்த 10ஆம் தேதி ஞாயிறுகூட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெச்சிரிவால், புலம்பெயர்ந்தோருக்கு பராமரிப்பு உறுதிமொழி அளித்தார்; ஆனால், இவரேதான் முதல் பொதுமுடக்கத்தில் புலம்பெயர்ந்தோரை நடையாய் நடக்கவிட்டதற்கான ஒரு காரணமும் என அந்த மக்கள் நினைக்கக்கூடும். ஆனால், மற்ற எல்லா மாநிலங்களையும்விட ஒப்பீட்டளவில் கேரள அரசானது புலம்பெயர் தொழிலாளர்களை கௌரவமாக நடத்தியும் அவர்களின் பசியைப் போக்கியும் முன்னுதாரணம் படைத்துவருகிறது. அந்த மாநிலத்திலிருந்தும் எங்கோ இருக்கிற ஒதிசாவுக்கும் மேற்குவங்கத்துக்கும் சரக்கு வண்டிகளில் ஒளிந்து போகமுயன்று தமிழ்நாட்டில் தடுத்துநிறுத்தப்படும் நிகழ்வுகளும் நடக்கத்தான்செய்கின்றன.

ஒன்றிய மற்றும் மாநில அரசுகளும் மீண்டும் மீண்டும் இப்போதைய இடத்திலேயே தங்கியிருக்குமாறு கூறினாலும், ஏன் இவர்கள் இப்படி ஊர்திரும்ப இவ்வளவு தீவிரம்காட்டுகிறார்கள்?

முதன்மையான காரணம், கொரோனா தாக்கம். நாட்டின் அதிக தொற்றும் கொரோனா சாவுகளும் ஏற்பட்டுவரும் மாநிலங்களில் குசராத்தும் மகாராசுட்டிரமும் தமிழ்நாடும் டெல்லியும் முன்னிலையில் இருக்கின்றன. முதலிலும் முன்னதாகவும் கேரளம், இந்தப் பட்டியலில் இருந்தது. இயல்பாகவே இதையொட்டிய அச்சமும் பீதியும் அனைவருக்கும் உண்டாகத்தான் செய்யும். பெரும்பாலும் கல்வியறிவும் நோய் குறித்த விழிப்புணர்வும் அறியாத மக்கள்பிரிவினரிடம் இந்தத் தன்மையானது கூடுதலாக இருப்பதும் வியப்புக்குரியது அல்ல. குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக மாதம் 10 ஆயிரம் ரூபாய் ஊதியம் என்றாலும் நூற்றுக்கணக்கான, ஆயிரத்துக்கும் மேற்பட்ட கி.மீ.க்கு அப்பால் இருப்பவர்களுக்கு ஆபத்து எனும்போது, யார்தான் துடிக்காமல் இருப்பார்கள்? வந்தவர்களுக்கும்தான் தம் குடும்பத்தினரோடு இருக்கவேண்டும் என்கிற எண்ணம் இருக்காதா?

நோய்த்தொற்றும் தாய்மண் பற்றும் உந்தித்தள்ளவே அவர்கள் எதையும் எதிர்கொள்ளத் தயாராக, ஊரைநோக்கிய பயணச் சவாலுக்கு சடுதியில் மனநிலை அதற்கேற்ப தகவமைந்துகொள்கிறது. அதுவே கொடும் வெயிலையும் குழந்தைகளை வருத்தும் துயரத்தையும் தலையில் தூக்கிவைத்துக்கொண்டு, தடையாக எதிர்வரும் அரசு எந்திரத்தின் அத்துணை முயற்சிகளையும் தாண்டிச்செல்லச் செய்கிறது.

கடந்த 2ஆம் தேதி, சிமெண்ட் கலவை இயந்திரத்துக்குள் ஒளிந்து சென்றுகொண்டிருந்த 18 பேரை மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் அங்குள்ள காவல்துறையினர் கண்டுபிடித்து தடுத்தனர். அவர்கள்,.மகாராசுட்டிர மாநிலத்திலிருந்து தம் சொந்த மாநிலமான உத்தரப்பிரதேசத்துக்குச் செல்வதற்காகவே இப்படியான ஆபத்தான காரியத்தில் இறங்கியிருந்தனர். நல்வாய்ப்பாக அவர்களின் இந்த சாகசப் பயணத்தில் ஆபத்து ஏதும் நேராமல் காப்பாற்றப்பட்டனர்.

மே 8ஆம் தேதியன்று, மத்தியப்பிரதேசம், நரசிங்கபூர் மாவட்டத்தில் சரக்கூர்தி ஒன்று விபத்துக்கு உள்ளானது. அதில் 5 பேர் உயிர் இழந்தனர்; 11 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவருமே உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்திலிருந்து உ.பி.யின் ஆக்ராவுக்கு, மாம்பழம் ஏற்றிச்சென்ற அந்த வண்டியில், பெட்டிகளுக்கு இடையில் மறைந்து பயணம்செய்த 18 பேர் குழுவினர்தான், இவர்கள்.

இப்படியான எத்தனிப்புகளும் எப்பாடுபட்டேனும் சொந்த ஊருக்குச் செல்லும் தொடர்வண்டியில் இடம்பிடித்துவிட வேண்டும் எனும் முனைப்பும் புலம்பெயர்த் தொழிலாளர்களை விட்டு அகலவில்லை. இதை எழுதிக்கொண்டிருந்த மே 11 அன்றுகூட, பஞ்சாப் மாநிலம் சலந்தரில் ’சமூகத்துக்குள் இடைவெளி’ யைக் கடைப்பிடிக்காமல் நூற்றுக்கணக்கானவர்கள் அடித்துப்பிடித்து பயணச்சீட்டு முன்பதிவுக்காகத் திரண்டிருந்த காட்சியை ஊடகங்களில் பார்க்கமுடிந்தது.

ஊருக்குப் போவதற்குத்தான் ஒரு பதைபதைப்போடு முண்டியடிக்கிறார்கள் என ஒரு ஞாயம் சொல்லிக்கொண்டாலும், இப்படி தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் இருந்தால் அதுவே கொரோனா தொற்றுக்கு காரணமாகிவிடாதா எனக் கேள்வி எழாமல் இருக்கமுடியாது. உலக நாடுகள் அளவில், தெற்காசியக் கூட்டமைப்பு நாடுகளுக்கு வழிகாட்டும் அளவில், பல சிறிய நாடுகளுக்கு கொரோனா உதவியளிக்கும் அளவில் இருப்பதாக பெருமிதம் அடைந்துகொள்கிறது, வல்லரசான இந்தியப் பேரரசு. இந்தக் கொரோனா பேரிடரைப் பயன்படுத்தி ஆரோக்கிய சேது என்கிற மென்பொருளை ஒவ்வொரு குடிமகளு/னுக்கும் கட்டாயம் என ஆணையிடுகிறது, டிச்சிட்டல் இந்திய அரசு. ஏற்கெனவே, அரசிடம் கையளிக்கப்பட்ட ஆதார் அட்டை போன்றவற்றின் மூலமான தகவல்கள் அப்பட்டமாக திருடப்பட்டு, தனியார் பெருநிறுவனங்களின் கைவசம் போய்விட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சியான காங்கிரசின் கடும் எதிர்ப்புக்கு இடையிலும், அந்த செயலியை கைப்பேசிகளில் கட்டாயம் பதிவிறக்கச் சொல்கிறது, மோடியின் அரசாங்கம். கொரோனாவுக்காக நாட்டு மக்களைக் காக்க இப்படி நவீன தகவல்நுட்பத்தைப் பயன்படுத்துவதாகக் கூறும் டெல்லி பேரரசு, நேரெதிராக சொந்தக் குடிமக்களிடம் எந்த அளவுக்கு விழிப்புணர்வைக் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கிறது என்பதன் ரொம்பவும் எடுப்பான காட்டுதான், புலம்பெயர்ந்தோரின் ஆபத்தான ஊர்திரும்பும் பயணங்கள்.

இதுதான் டிச்சிட்டல் இந்தியா என மெச்சிக்கொண்டால், அதைவிட பச்சைப்பொய் வேறு என்ன இருக்கமுடியும்?

இர.இரா.தமிழ்க்கனல்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இந்தியாபிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE