;

Thursday 13th of August 2020 02:35:11 PM GMT

LANGUAGE - TAMIL
-
“நடைமுறைகளை மாற்றியமைத்த கொரோனா” - பி.மாணிக்கவாசகம்

“நடைமுறைகளை மாற்றியமைத்த கொரோனா” - பி.மாணிக்கவாசகம்


உலகமே கொரோனா வைரஸினால் அல்லோலகல்லோலப் பட்டிருக்கின்றது. நாளாந்த வாழ்க்கையில் இருந்து அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு, விஞ்ஞானம், கல்வி, தொழில்நுட்பம் என்று மனித வாழ்க்கையின் அனைத்துத் துறைகளையும் அது புரட்டிப் போட்டிருக்கின்றது. அதனுடைய ஆதிக்கம் ஓர் உலகக் கலவரமாகவே தொடர்கின்றது.

இந்தக் கலவரத்தில் பல வகையான கூச்சல்களும் கூக்குரல்களும் அபயக்குரல்களும் எழுந்துள்ளன. இந்த குழுப்ப நிலைமைக்குள்ளேயும் உலகத்திற்கு புதிய ஒழுங்கு முறைகள் பலவற்றை இந்த நச்சுக் கிருமி அறிமுகப்படுத்தி உள்ளது. உலக நாடுகளும் மக்களும் அவற்றைப் பின்பற்றி ஒழுக நிர்ப்பந்தித்திருக்கின்றது.

சாதாரண வாழ்வியல் முறைமைகள் மற்றும் சமூக நெறிமுறைகளில் பழைய நடைமுறைகளைத் தூக்கி எறியத் தூண்டியிருக்கின்றது. அதனூடாகத் தலைகீழான மாற்றங்களை அது ஏற்படுத்தி இருப்பதைக் காண முடிகின்றது.

இஸ்லாமியப் பெண்கள் பர்தா அணிவதை சிங்கள பௌத்தர்கள் எதிர்த்தார்கள். பௌத்த பிக்குகள் அதற்கெதிராகப் போர்க்கொடி உயர்த்தி கண்டனப் பேரணிகளை நடத்தினார்கள். வன்முறைகளிலும் ஈடுபட்டார்கள். இதனால், அது நாட்டில் ஒரு முக்கிய பிரச்சினையாக, பெரிய அளவிலான பிரச்சினையாக உருவெடுத்திருந்தது.

ஆனால் கொவிட் 19 என்ற தனியொரு வைரஸின் படையெடுப்பையடுத்து, ஆண், பெண் என்ற பாலின வித்தியாசமின்றி அனைவரும் முகக் கவசம் இல்லாமல் வெளியில் நடமாட முடியாத நிலைமைக்கு ஆளாகியிருக்கின்றார்கள். ஆளாக்கப்பட்டிருக்கின்றார்கள். இங்கு மத அடையாளங்களும் இல்லை. எற்றத்தாழ்வுகளும் இல்லை. பர்தா கலாசாரத்தை எதிர்த்தவர்களே இன்று முகக் கவசம் என்ற முகமூடியை அணிந்து நடமாட வேண்டிய நிலைமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றார்கள். இது கொரோனா ஏற்படுத்திய தலைகீழ் மாற்றம். வித்தியாசமான புதிய நடைமுறை.

கொரோனா வைரஸின் தாக்கம் இல்லாதொழிக்கப்பட்டாலும்கூட சுய சுகாதாரப் பாதுகாப்புக்காக இந்த முகக் கவசங்களையும் கையுறைகளையும் தொடர்ந்து பயன்படுத்த வேண்டிய கட்டாய நிலைமை இருக்கும் என்றே பலரும் எதிர்வு கூறியிருக்கின்றார்கள். ஏனெனில் கொரோனா வைரஸை ஒழித்துக்கட்டுவது என்பது இலகுவான காரியமல்ல என்றே மருத்துவ விஞ்ஞானிகளும் உயிரியல் ஆய்வு நிபுணர்களும் தெரிவித்திருக்கின்றார்கள். இந்த வைரஸின் ஆதிக்கம் மறைவதற்கு குறைந்தது இரண்டு வருட காலம் எடுக்கலாம் என்றும் அவர்கள் எச்சரிக்கை செய்திருக்கின்றார்கள்.

அத்தியாவசியத் தேவைகளின்றி எவரும் வெளியில் நடமாடக் கூடாது என்று அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. கொரோனாவை எதிர்ப்பதற்காக – அதன் பிடியில் சிக்கிவிடாமல் பாதுகாப்பாக இருப்பதற்காக அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியில் வர வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி இருக்கின்றார்கள்.

தேசிய முடக்கம் காரணமாக வீடுகளில் பாதுகாப்பாக இருப்பது சரி, முக்கியமான பணிகளை எவ்வாறு முன்னெடுப்பது? சேவைகள் வழங்கும் பணிகளில் ஈடுபடுபவர்கள், கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடும் மாணவர்கள் என்ன செய்வது? எப்படிச் செயற்படுவது? இந்தக் கேள்விகள் முக்கியமானவை. இவற்றுக்கு ஏற்கனவே அரசாங்கமும் தனியார்துறையினரும் பதிலளித்திருக்கின்றார்கள். என்ன செய்யலாம் என்பதற்குரிய வழிகாட்டல்களையும் அவர்கள் அறிவித்திருக்கின்றார்கள். இந்த தேசிய முடக்க நிலை காலப்பகுதியில் செயற்படுத்தியும் இருக்கின்றார்கள்.

புதிய அறிகுறிகள்

தேசிய முடக்கமும், ஊரடங்கு உத்தரவும் அறிவிக்கப்பட்ட உடன் அரச ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்ற வேண்டும் என்று அரசாங்கம் பணித்திருந்ததையும், அதன்படி அரச பணியாளர்கள் செயற்பட்டதையும் மறந்துவிட முடியாது. அதேபோன்று தனியார் துறையினரும் தமது பணியாளர்களையும் அதிகாரிகளையும் வீடுகளில் இருந்து பணியாற்றச் செய்து தமது நிறுவனங்களை இயக்கி வருகின்றார்கள்.

விசேடமாக தேசிய முடக்கத்தினால் பத்திரிகைகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின. ஆனாலும் வீட்டிலிருந்து பணியாற்றும் உத்தியைப் பயன்படுத்தி தமது பணியாளர்களைக் கொண்டு பத்திரிகை நிறுவனங்கள் தமது ஊடக சேவையை மேற்கொண்டு வருகின்றன. பத்திரிகைகள் இணைய வழியாகப் பிரசுரம் செய்யப்படுகின்றன. ஊரடங்கு நீக்கப்படும் நாட்களில் பத்திரிகைகள் அசசடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகின்ற நடைமுறையும் பின்பற்றப்பட்டு வருகின்றது. செய்தியாளர்களும் ஊரடங்கு வேளைகளில் நடமாடுவதற்குரிய அனுமதியைப் பெற்று வெளியில் சென்று செய்திகளைத் திரட்டி தமது பணியை உயிராபத்துகளுக்கு மத்தியில் செய்து வருகின்றார்கள்.

எதிர்பாராத இந்த முடக்க நிலை காரணமாக அரச திணைக்களங்கள், அரச நிறுவனங்களைத் தவிர்ந்த ஏனைய தனியார் நிறுவனங்கள் தமது ஊழியர்களின் சம்பளக் கொடுப்பனவுகளை 50 வீதம் வரையில் குறைத்திருக்கின்றன. சில நிறுவனங்கள் 30, 40 வீத சம்பளக் குறைப்பைச் செய்திருக்கின்றன. பல நிறுவனங்கள் தமது பணியாளர்களின் எண்ணிக்கையை சடுதியாகக் குறைத்திருக்கின்றன. இதனால் பலருடைய தொழில்கள் பறிபோயிருக்கின்றன. அவர்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்க நேரிட்டுள்ளது.

காலம் காலமாக அலுவலகத்திற்குச் சென்று கடமையில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தவர்கள் வீட்டில் இருந்தவாறே செயற்படுகின்ற புதிய முறைக்கு மாற்றப்பட்டிருக்கின்றார்கள். தமது பணிகளில் புதிய நடைமுறைகளைக் கைக்கொள்ள வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.

வீடுகளில் இருந்து பணியாற்றுகின்ற உத்தியின் மூலம் பல நிறுவனங்களும் தமது உற்பத்தி இலக்கை கணிசமான அளவில் இழந்திருக்கின்றன. இருந்த போதிலும் நிறுவனங்களின் செயற்பாடுகள் முழுமையாக ஸ்தம்பிதமடையாமல் தொழிற்படுகின்ற நிலைமையை அவற்றால் பேண முடிந்திருக்கின்றது. எனினும் அவர்களால் உற்பத்தி தமது அடைவுமட்டத்தை எட்ட முடியாமல் போயிருக்கலாம். கொரோனா வைரஸ் போன்ற இடர் சூழ்ந்த காலத்தில் அதனை எதிர்பார்க்கவும் முடியாது அல்லவா?

ஆனாலும் அலுவலகப் பணிகளுக்கான பிரயாணச்செலவு, அலுவலகங்களின் குளிரூட்டல் உள்ளிட்ட வசதிகள், பராமரிப்பு, பெரும் நிதிச் செலவை ஏற்படுத்துகின்ற மின்சாரக் கட்டணம் என்பவற்றின் தேவைகள், பணியாளர்கள் வீடுகளில் இருந்து பணியாற்றுகின்ற நடைமுறையினால் பெரிதும் குறைவடைகின்றன. இதன் மூலம் அந்த நிறுவனங்கள் தமது செலவினங்களில் கணிசமான அளவு நிதியை மிச்சம் பிடிக்க முடிந்திருக்கின்றது.

தொழிற்சாலைகள், விவசாயம், மீன்பிடி போன்ற வகைகளிலான உற்பத்தி சார்ந்த தொழில்துறைகள் என்பவற்றில் இந்த உத்தியைப் பயன்படுத்த முடியாது. ஆனால் ஏனைய துறைகளில் இந்த நடைமுறையை கொரோனா நோய்த்தொற்று அபாயம் நீங்கி இயல்பு நிலைமை ஏற்படுகின்ற சூழலிலும் பெரிய அளவில் கைக்கொள்ளப்படலாம். அதற்குரிய அறிகுறிகள் இப்போதே தென்படத் தொடங்கி இருக்கின்றன.

கொரோனாவின் தாக்கத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட துறைகளில் கல்வித்துறையும் ஒன்று. பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு மாணவர்கள் கூட்டம் கூட்டமாகச் செல்வதும் வகுப்பறைகளிலும் விரிவுரை மண்டபங்கள், செயன்முறைப் பயிற்சிக் கூடங்களிலும் மாணவர்கள் குழுக்களாக இருந்து செயற்பட வேண்டி இருக்கின்றது. இத்தகைய முறைசார்ந்த கல்விச் செயற்பாடுகளின்போது, கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு அடிப்படையான விலகியிருந்தல், தனித்திருத்தல், இடைவெளி பேணுதல் என்பவற்றைக் கைக் கொள்ள முடியாது.

கல்விச் செயற்பாடுகள்

இந்த நிலையில் தேசிய முடக்க நிலையினால் வீடுகளில் அடங்கியிருக்கின்ற மாணவர்கள் தங்களுடைய கல்வி முயற்சிகளைத் தொடர்வதற்கு வசதியாக இப்போது இணையவழிக் கல்விப் போதனை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இந்த வழிமுறையைப் பயன்படுத்தி ஆசிரியர்கள் தங்களுடைய மாணவர்களுக்குக் கல்விபோதிக்கின்றார்கள். ஸும் அப், முகநூல் தொலைக்காட்சி, கூகுள் தொலைக்காட்சி, வட்;ஸ்அப், வைபர் போன்றவற்றின் ஊடாக இந்த இணைய வழிக் கல்விச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. தேசிய தொலைக்காட்சிகளிலும் கல்விப் போதனை இடம்பெறுகின்றது. இதற்கான ஒழுங்குகளைக் கல்வி அமைச்சு செய்திருக்கின்றது.

குறிப்பாக இந்த வருடம் பரீட்சைக்குத் தோற்றவுள்ள தரம் ஐந்து புலமைப்பரிசில் வகுப்பு, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம், கல்விப் பொதுத் தராதர உயர்தரம் ஆகிய வகுப்பு மாணவர்களுக்கான கல்விப் போதனையே இடம்பெறுகின்றன.

தேசிய தொலைக்காட்சி தவிர்ந்த ஏனைய இணைய வழிக் கல்விச் செயற்பாடுகளின் மூலம் பெரும்பாலும் தனியார் கல்வி நிலைய ஆசிரியர்கள் தங்களுடைய மாணவர்களை ஒன்றிணைத்து அவர்களைப் பரீட்சைகளுக்குத் தயார்ப்படுத்துகின்றார்கள்.

இந்தக் கல்வி முறையின் ஊடாக மாணவர்கள் வீடுகளில் தங்களுடைய பொன்னான நேரத்தை வீணாக்காமல் கற்பதில் பயன்படுத்துவதற்கு வழியேற்பட்டிருக்கின்றது. அந்த வகையில் மாணவர் சமூகத்தின் ஒரு பகுதியினருடைய மனித சக்தி வீணடிக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டிருக்கின்றது என்றே கூற வேண்டும். அத்துடன் ஒழுங்கமைக்கப்பட்டதும், இறுக்கமான நிகழ்ச்சி நிரலைக் கொண்டதுமான ஒரு கல்விச் செயற்பாட்டு வழியில் இயங்கி வந்த மாணவர்கள் திடீரென கொரேனாh வைரஸினால் வீடுகளில் முடக்கப்பட்டிருக்கின்றார்கள். அந்த நிலையில் அவர்கள் வீண் பொழுது போக்குவது மட்டுமல்லாமல் தவறான வழிமுறைகளில் செல்ல நேரிடலாம். இத்தகைய பாதிப்பு ஏற்படாத வண்ணம் இணைய வழி கல்வி முறை மாணவர்களைப் பாதுகாத்துள்ளது என்றே கூற வேண்டும்.

இந்த இணைய வழிக் கல்வி பரீட்சையை எதிர்கொண்டிருக்கின்றவர்கள் தவிர்ந்த ஏனைய மாணவர்களுக்கும் இடம்பெறுவதாகத் தெரியவில்லை.

இணையத்தை அடிப்படையாகக் கொண்ட திறன் வகுப்பறை அல்லது சூட்டிகை வகுப்பறை (Smart Class Room) என்றழைக்கப்படுகின்ற டிஜிட்டல் கல்வி முறை ஒன்று கல்வி அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டு, நவீன வசதிகளைக் கொண்ட வகுப்பறைகளில் ஏற்கனவே பல பாடசாலைகளில் செயற்படுத்தப்பட்டிருக்கின்றன.

ஆனாலும் இந்த திறன் வகுப்பறை கல்வியூட்டலுக்கும் கொரோனாவின் இடர் சூழ்ந்த காலப்பகுதியிலான இணையவழி கல்வி முறைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. ஆயினும் கொரோனா வைரஸ் மரபு வழிக் கல்வி முறைக்குப் பதிலீடாக இணைய வழிக் கல்விமுறையைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தை கொரோனா ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த வைரஸ் நோய்த்தாக்கம் முற்றாக ஒழிக்கப்படும் வரையில் இந்த இணைய வழிக் கல்வி முறையானது தொடர்ச்சியாகக் கடைப்பிடிக்கப்படும் என்றே தெரிகின்றது.

ஏனெனில் கொரோனா வைரஸ் பரவல் முற்றாக ஒழிக்கப்படும் வரையில் மாணவர்கள் நெருக்கமாகக் கூடியிருந்து வகுப்பறைகளில் கல்வி கற்கின்ற சூழல் உருவாகும் என்று கூற முடியாது. சில வேளைகளில் இணைய வழிக் கல்விமுறையானது நிலைமைகள் சீரடைந்த பின்னரும்கூட மேம்படுத்தப்பட்ட வகையில் கடைப்பிடிக்கின்ற நிலைமையும் உருவாகக் கூடும். அத்தகைய நிலைமை ஏற்படமாட்டாது என்று கூறுவதற்கில்லை.

வாழ்க்கை முறையில் மாற்றம்

கல்வியில் மட்டுமல்லாமல் இணைய வழியிலான செயற்பாடுகளையே மக்கள் அதிகமாகக் கடைப்பிடிப்பார்கள் என்று தெரிகின்றது. ஏனெனில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று மனித மனங்களி;ல் ஏற்படுத்தியுள்ள அச்சம் சாதாரணமானதல்ல.

மக்கள் மனங்களை தீவிரமாக ஆக்கிரமித்துள்ள அந்த அச்சம் விரைவில் நீங்கிவிடும் என்று கூற முடியாது. ஏனெனில் தொடுகை, தும்மல் இருமல் என்ற உமிழ்நீர்த் துளிகள் என்பவற்றின் ஊடாகத் தொற்றிப் பரவுகின்ற அதன் நோய்த்தோற்று நிலை மிக மிக நுணுக்கமானது. ஆபத்தானதும்கூட.

இதனால் கூடிய அளவில் அனைவரும் மற்றவர்களுடன் நேரடித் தொடர்பு கொள்வதையும் உடல் ரீதியான தொடுகை நிலைமைகளையும் தவிர்த்துக் கொள்ளவே விரும்புவார்கள். ஏனெனில் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் காட்சியளிப்பவர்களும் கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளாகியவராகவும், அந்த வைரஸைப் பரப்புபவராகவும் இருக்கலாம் என்ற சந்தேகமும் ஐயப்பாடும் மக்கள் மனங்களில் இருந்து இலகுவில் மறைந்துவிடாது. ஆகவே பாதுகாப்பாக இருப்பதற்காக அத்தகைய தொடர்புகளை முழுமைமயாகத் துண்டித்துத் தனித்திருக்கவும் தனிமைப்பட்டிருக்கவுமே விரும்புவார்கள். இது ஒரு வகையில் ஆழமான உளவியல் பண்பாகவும் மாற்றமடைந்திருக்கும் என்றே கூற வேண்டும். இத்தகைய சூழலில் கொரோனாவுக்கு முன்னரைப் போன்று குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்களுடன் விருந்தகங்களில் அடிக்கடி சென்று விருந்துண்பது, விடுமுறை நாட்களில் உல்லாசமாகப் பொழுதைக் கழிப்பதற்காக கடற்கரைகள் உள்ளிட்ட உல்லாசப் பயணத் தலங்களுக்குச் செல்வது போன்ற செயற்பாடுகள் குறைவடைவதற்கான வாய்ப்பே காணப்படுகின்றது.

இதையும்விட குறிப்பாக பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக (ர்ளழிpiபெ) அடிக்கடி கடைவீதிகளுக்கும் நகரங்களில் பிரபல்யமான விற்பனை நிறுவனங்களுக்குச் செல்வது போன்ற நடவடிக்கைகளும் குறைவடையக் கூடும். மாற்று வழியாக இணைய வழி வர்த்தக நடவடிக்கைகளின் ஊடாகத் தமக்குரிய பொருட்களைக் கொள்வனவு செய்யும் நடைமுறையை மக்கள் அதிகமாகக் கடைப்பிடிக்க முற்படுவார்கள். இலங்கையைப் பொறுத்தமட்டில் இத்தகைய நடவடிக்கைகள் ஏற்கனவே கணிசமான அளவில் நடுத்தர மற்றும் மேல் நடுத்தர, கீழ் நடுத்தர மட்ட குடும்பங்களில் கடைப்பிடிக்கப் பட்டிருக்கின்றன. கொரோனா அச்சத்தின் பின்னர் இந்த நடவடிக்கைகளில் மக்கள் அதிக நாட்டம் கொள்வதற்கான அறிகுறிகளே காணப்படுகின்றன.

குறிப்பாக தலைநகர் கொழும்பிலும், அதன் புறநகர்ப்புறங்கள் மட்டுமல்லாமல் ஏனைய மாகாண மட்டத்திலான நகரப்பகுதிகளிலும் மக்கள் தங்களுடைய உணவு மற்றும் நாளாந்த அத்தியாவசியத் தேவைக்குரிய பொருட்களையும் தொலைபேசி வழியாக ஓடர் செய்து கொள்வனவு செய்கின்ற நடைமுறைக்குப் பழகியிருக்கின்றார்கள். முடக்க நிலையும், ஊரடங்கு உத்தரவும் இந்த நடைமுறைக்கு அவர்களை நிர்பந்தித்திருக்கின்றது.

சமூக உளவியல் மாற்றம்

முன்னர் சந்தைகளுக்குச் சென்று பொருட்களைத் தொட்டு நல்லதா கெட்டதா, புதியதா பழையதா என்று பரிசோதித்துக் கொள்வனவு செய்வதே வழக்கம். நல்ல பொருட்களாக, நல்ல காய்கறிகளாக,பழுதடையாத நல்ல மீன், இறைச்சியாக இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்து கொள்வது மட்டுமல்லாமல் அவற்றின் விலை குறித்து பேரம் பேசுவதும் இடம்பெறும். பொருட்களின் தரம் பிடித்திருக்க வேண்டும். விலையும் திருப்திகரமாக இருக்க வேண்டும் அதன் பின்னரே பொருட்களை வாங்குவார்கள். ஆனால் கொரோனா வைரஸின் நெருக்கடி உருவாகியதையடுத்து, தொலைபேசி வழியாக விடுக்கின்ற கோரிக்கைக்கு ஏற்ப வியாபாரிகள் வீடுகளுக்கே பொருட்களைக் கொண்டு வந்து தந்துவிட்டுச் செல்கின்றார்கள். இதனால் பொருட்களின் தரம், விலை என்பவற்றில் கவனம் செலுத்துகின்ற நிலைமையில் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. அதேவேளை ஒரு சிலரைத்தவிர அநேகமான வியாபாரிகள் தரமான பொருட்களைக் கொண்டு வருவதுடன், நியாயமான விலைக்கு விற்பனை செய்கின்ற தன்மையையும் கடைப்பிடிப்பதாகப் பாவனையாளர்கள் பலரும் கூறுகின்றார்கள். இது மட்டுமல்லாமல் மக்களுடைய சமூகத் தொடர்புகள், சமூக உறவுகள், சமூகத்துடன் நேரடியாக ஒன்றுகூடி ஓரிடத்தில் இருந்து செயற்படுதல், விழாக்களைக் கொண்டாடுதல், பொழுது போக்குக்காக ஒன்று கூடுதல், நன்மை தீமையிலான காரியங்களில் பங்கு கொள்ளுதல் போன்ற உடல்வழித் தொடர்புகள் ஏற்படத்தக்கச் செயற்பாடுகளில் மக்களுடைய நாட்டம் குறைவடைவதற்கான வாய்ப்பு காணப்படுவதாக உளவியலாளர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக வயதானவர்கள், தொற்றா நோய்களுக்கு ஆளாகி இருப்பவர்கள் போன்றவர்கள் சமூகத்துடனான தமது நேரடித் தொடர்புகளைக் குறைத்துக் கொள்ளவே விரும்புவார்கள். அது மட்டுமல்லாமல் அவர்கள் வெளித் தொடர்புகளைக் கொண்டிருப்பதை ஏனைய குடும்ப உறவினர்கள் அனுமதிப்பதிலும் தயக்கம் காட்டவே செய்வார்கள்.

பொதுவாகவே; மக்களுடைய வாழ்க்கை நடைமுறைகள், பழக்க வழக்கங்கள், சமூகநெறி சார்ந்த செயற்பாடுகள் என்பவற்றில் கொரோனா வைரஸ் நீண்டகால மாற்றத்திற்கான அடித்தளத்தை இட்டிருக்கின்றது. இது சமூகவியல் ரீதியானது மட்டுமல்ல உளவியல் ரீதியானது என்றும் உளவியலாளர்கள் குறிப்பிடுகின்றார்கள். மொத்தத்தில் கொரோனாவின் பாதிப்பு என்பது மனித வாழ்வில் மிகப் பெரிய மாற்றத்திற்கே வழி சமைத்திருக்கின்றது.

பி.மாணிக்கவாசகம்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: கொரோனா (COVID-19)பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE