Tuesday 23rd of April 2024 11:23:15 PM GMT

LANGUAGE - TAMIL
எங்கே தொடங்கியது இன மோதல்
“அதிகார ஆசையில் பறிபோன சுதந்திரம்” - வரலாற்றுத் தொடர் 05

“அதிகார ஆசையில் பறிபோன சுதந்திரம்” - வரலாற்றுத் தொடர் 05


விமலதர்மசூரிய வம்சத்தைச் சேர்ந்த ஸ்ரீ விக்கிரம பாராக்கிரம நரேந்திர சிங்கன் பட்டத்து வாரிசு இல்லாத நிலையில் மரணமடைந்து போக ஆட்சியதிகாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக விளங்கிய சிங்கள ரதல நிலப் பிரபுக்கள் மதுரையை ஆட்சியை செய்த நாயக்க வம்ச அரசனின் மனைவியின் சகோதரனான விஜய ராஜசிங்கனை அழைத்து வந்து மன்னனாக்கினர்.

எனினும் அவர்கள் எதிர்பார்த்தது போன்று அரசர்களை தங்கள் விருப்பப்படி ஆட்டிப்படைக்க முடியவில்லை. ஏனெனில் நாயக்க வம்சத்தினர் நீண்ட கால ஆட்சி அனுபவமும் தலைசிறந்த போர் ஆற்றல் கொண்டவர்களாகவும் விளங்கியமையால் சிங்களப் பிரபுக்களின் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை. எனவே அரசனின் நடவடிக்கைகள் தொடர்பாக அவர்கள் அதிருப்தி அடைந்திருந்த போதிலும் விஜயராஜசிங்கன் காலத்தில் குழப்பங்களையோ, ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகளையோ மேற்கொள்ள முடியவில்லை. ஆனால் அவனையடுத்து ஆட்சிக்கு வந்த கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் சிங்கள மொழி வளர்ச்சிக்கும், பௌத்த மத மேம்பாட்டுக்கும் அளப்பரிய சேவைகளை செய்து வந்தான். அது வரை பாளி மொழியிலேயே இலக்கியங்கள் உருவாக்கப்பட்ட நிலைமையை மாற்றி சிங்கள மொழியிலான சந்தேசய இலக்கிய நூல்கள் உருவாகுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டான். இவை அரசனுக்கும் நாட்டுக்கும் நல்லாசி வழங்கி கதிர்காமத்திலிருக்கும் விஸ்ணு தேவனுக்கு தூது விடும் இலக்கியங்களாகும். இவை சிங்கள மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. தந்தையிலிருந்து மகனுக்கும் மகனிலிருந்து பேரனுக்கும் என வாய்மொழி மூலமாக வழங்கி வந்த சிங்கள மருத்துவ முறைகளை ஏடுகளில் பதிப்பித்ததன் மூலம் அவற்றிற்கு உரிய ஒரு அழியாத அந்தஸ்தை உறுதிப்படுத்தினான். அதேவேளை மல்வத்த பீடத்தை மேம்படுத்தி அதை உயர் அதிகாரம் கொண்ட மத நிறுவனமாக்கி பௌத்த மத வளர்ச்சிக்கு அரிய தொண்டுகளை மேற்கொண்டான். மேலும் பற்பல இடங்களிலும் பல விகாரைகளை அமைத்து அவற்றின் பராமரிப்புக்கு என நிலங்களையும் வழங்கினான். அதனால் மக்கள் மத்தியில் அவனுக்கு ஏற்பட்ட அளப்பரிய செல்வாக்கு காரணமாக ரதல பிரபுக்கள் பொறாமை கொண்டு அவனை ஆட்சிபீடத்திலிருந்து அகற்ற திட்டமிட்டு தாய்லாந்திலிருந்து இளவரசனை வரவழைத்து அவனுக்கு முடிசூட்ட முயன்றனர். அத தோற்கடிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நிலப்பிரபுக்கள் தண்டிக்கப்பட்டனர். அவனைக் கொல்ல எடுத்த முயற்சியும் நிறைவேறவில்லை. அவனின் பின் ஆட்சிக்கு வந்த இராஜாதி ராஜசிங்கனும் குறுகிய காலத்தில் உயிரிழந்தான். அவனது இறப்புக்கு மகா அதிகாரம் பிலிமெத்தலாவையே காரணமென கூறப்படுகிறது. அதையடுத்து கீர்த்தி ஸ்ரீ விக்கிரம ராஜசிங்க மன்னன் பிலிமத்தலாவையால் அரசனாக்கப்பட்டான். 1739ல் நாயக்க வம்ச அரசனான விஜயராஜ சிங்கன் ஆட்சிபீடமேறிய காலத்திலிருந்து 1815ல் கீhத்தி ஸ்ரீ விக்கிரம ராஜசிங்க மன்னன் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட காலம் வரையில் ரதல பிரபுக்கள் அரசர்களை ஆட்டிப்படைக்க முயல்வதும், அது முடியாத பட்சத்தில் அரசர்களை அகற்ற அல்லது அழிக்க முயல்வதும் வரலாறாக அருந்து வந்துள்ளது. இதுவே இலங்கையின் கடைசி மன்னனான கீர்த்தி ஸ்ரீ விக்கிரமராஜசிங்கன் காலத்திலும் இடம்பெற்றது.

அந்நாட்களில் இலங்கையில் பிரித்தானிய ஆட்சியில் அரசப்பிரதிநிதியாக நோர்த் பதவி வகித்து வந்தான். அவனுக்கு அடுத்து அதிகாரம் கொண்டவனாகவும் பிரதான படைத்தளபதிகளில் ஒருவனாகவும் பதவி வகித்து வந்த டொய்லி, கண்டியில் மேற்கொள்ளப்பட்டு வந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிகளையும், அவற்றின் தோலிவிகளையும் தொடர்ந்து அவதானித்து வந்ததன் மூலம் சிங்கள பிரபுக்களின் பதவி வேட்கையை நன்கு கணக்கிட்டுக் கொண்டான்.

போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் என அந்நிய நாட்டவர்கள் இலங்கையின் கரையோரப்பகுதிகளைக் கைப்பற்றி தங்கள் அதிகாரத்தின் கீழ் கொண்டுவந்த போதும் மத்திய மலைநாட்டை கைப்பற்ற முடியவில்லை. இந்த நிலையில் கண்டியின் நாயக்க வம்ச அரசர்களுக்கும், கண்டிய பிரபுக்களுக்குமிடையே இருந்த முரண்பாடுகளை சரியாகப் பயன்படுத்த டெய்லி திட்டமிட்டான். இன்னொரு புறம் நீண்ட காலமாக இடம்பெற்றுவந்த ஏற்றுமதி வர்த்தகத்துடன் மத்திய மலைநாட்டு பிரதானிகள் வியாபார தொடர்புகளைக் கொண்டிருந்தனுர் அவற்றின் மூலம் அவர்கள் கொள்ளை இலாபம் ஈட்டிவந்தனர். ஆனால் கரையோரங்களில் அமைந்திருந்த துறைமுகங்களில் ஒன்று கூட கண்டியின் வசமிருக்கவில்லை. அவற்றைக் கைப்பற்ற அரசர்கள் எடுத்த முயற்சிகளும் வெற்றி பெற முடியவில்லை.

ஆனால் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆகியோரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கரையோரப்பிரதேசங்களும் துறைமுகங்களும் ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டன. எனவே வர்த்தக முயற்சிகளில் ஈடுபட்ட சிங்கள பிரபுக்களுக்கு ஆங்கிலேயரின் தயவு தேவைப்பட்டது.

மேலும் ஐரோப்பியர் ஆட்சிபுரியும் பிரதேசங்களில் வாழும் பிரபுக்களின் குடும்பங்கள் பண பலமும் செல்வாக்கும் கொண்டவர்களாகவும் ஆங்கிலேயர் போன்று ஆடம்பரமாக வாழ்பவர்களாகவும் காணப்பட்டனர். அவ்வாறான மேலைத்தேச பாணியிலான உயர்மட்ட வாழ்வை தாங்களும் அனுபவிக்கவேண்டுமென சிங்களப் பிரதானிகள் விரும்பினர். இவை அனைத்தையும் தனக்குச் சாதகமான முறையில் பயன்படுத்திய டெய்லி தனது உளவாளிகள் மூலமும் கையாட்கள் மூலமும் சிங்களப் பிரபுக்கள் மத்தியிலும் பௌத்த குருமாரிடமும், பேராசைகளை வளர்ப்பதில் வெற்றிபெற்றான். அவன் தனது திட்டங்களை நிறைவேற்ற பிலிமெத்தலாவையே பொருத்தமானவனாக இனங்கண்டுகொண்டான்.

பிலிமெத்தலாவையினதும் சில ரதல பிரபுக்களினதும் பதவி ஆசையை சரியாக கணக்கிட்ட தளபதி டெய்லி தன உளவுப்பிரிவினர் மூலம் பிலிமெத்தலாவையினதும் வேறு சில பிரபுக்களினதும் ஆதரவைப் பெறுவதில் வெற்றி பெற்றான். அவர்களின் உதவியுடன் 1812ல் ஒரு பெரும் படையெடுப்பை மேற்கொண்டான். ஆனால் இப்படையெடுப்பு கண்டியப் படைகளால் தோற்கடிக்கப்பட்டதுடன் பிலிமெத்தலாவையும் சம்பந்தப்பட்ட ஏனைய பிரபுக்களும் கைது செய்யப்பட்டனர். எனினும் மன்னன் பிலிமெத்தலாவையை மன்னித்துவிட்டான். அரசனின் மன்னிப்பின் மூலம் உயிர்தப்பிய பிலிமெத்தலாவ மீண்டும் ஹான்ஜா என்ற முகாந்திரம் மூலம் மன்னனைக் கொல்லச் சதி செய்தான். சதி அம்பலப்படவே பிலிமெத்தலாவ கைது செய்யப்பட்டான்.

அவனுக்கும் அவனுடன் சேர்ந்த 20 சிங்களப்பிரதானிகளுக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதையடுத்து எகலப்பொலவுக்கு மகா அதிகாரம் பதவி வழங்கப்பட்டது.

எனினும் கூட எகலப்பொல, கெப்பிட்டிப்பொல போன்ற ரதல பிரபுக்கள் ஆங்கிலேயருடன் இணைந்து கண்டி அரசைக் கைப்பற்றும் முயற்சிகளில் இறங்கினர்.

01.10.1814 அன்று ஆளுனர் பிறவுண்லியால் கண்டி அரசின் மீது போர்ப்பிரகடனம் மேற்கொள்ளப்படுகிறது. 7 படைணயிகள் கண்டியை நோக்கி 7 முனைகளில் முன்னேறுகின்றன. 10.02.1815 அன்று கண்டியின் ஒரு பகுதிக்குள் புகுந்துகொண்ட வில்லியம் என்ற ஆங்கிலப் படைத்தளபதியின் தலைமையிலான படையினரால் கண்டியின் புனித தாது கைப்பற்றபடுகிறது. 12.02.1815 அன்று பெய்லி தலைமையிலான படையணியும், துரோகி எகலப்பொல தலைமையிலான படையணியும் ஒன்றிணைந்து கண்டி நகருக்குள் இறங்குகின்றது. கண்டி நகரின் பாதுகாப்புக்கு பொறுப்பாக இருந்த தளபதி மொல்லிகொட ஆங்கிலப்படைகளுக்கு எவ்வித எதிர்ப்பையும் காட்டாது அவர்களுடன் இணைந்து கொள்கிறான். ஒரு தோட்டா கூட செலவின்றி கண்டியின் மையப்பகுதி ஆங்கிலேயரிடம் வீழ்ச்சியடைகிறது.

கீர்த்தி ஸ்ரீ விக்கிரமராஜசிங்கன் தனது குடும்பத்தினருடன் நகரை விட்டுத் தப்பியோடி ஆம்பறையிலுள்ள ஒரு கிராம அதிகாரியின் வீட்டில் தங்கி இருக்கிறான். புpன்பு அவன் எகலப்பொலவின் படையினரால் நயவஞ்சகமான முறையில் குடும்பத்தினருடன் கைது செய்யப்பட்டு பெண்கள் தகாத முறையில் அவமானப்படுத்தப்பட்டு ஆளுனர் பெய்லியிடம் அவர்கள் ஒப்படைக்கப்படுகின்றனர். இலங்கையின் கடைசி மன்னனான கீர்த்தி ஸ்ரீ விக்கிரமராஜசிங்கன் கைது செய்யப்பட்டு இந்தியாவிலுள்ள வேலூர் சிறையிலடைக்கப்பட்டு அங்கேயே மரணமடைகிறான்.

அதன் காரணமாக இலங்கையின் சுதந்திரம் பறிக்கப்பட்டு சிங்கள ரதல பிரபுக்களின் ஒத்துழைப்புடன் பிரித்தானியாவின் அடிமை நாடுகளில் ஒன்றாக மாற்றப்படுகிறது.

சிங்கள தமிழ் முஸ்லீம் மக்கள் மத்தியில் பெரும் ஆதரவையும் அன்பையும் பெற்ற நாயக்க வம்சத்தைச் சேர்ந்த ஓரு தமிழ் மன்னனின் ஆட்சியை வீழ்த்தி ஆங்கிலேயருக்கு கப்பம் கட்டும் ஓரு நாடாக கண்டியை தாங்கள் வெள்ளையரின் பிரதிநிதியாக ஆட்சிசெய்யலாம் என்ற சிங்களப் பிரதானிகளின் கனவு நிறைவேறாதது மட்டுமின்றி கண்டி ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையை அடிமை நாடாக்கும் சாசனம் ஒப்பமிடப்பட்டுது.

மகாவம்சம் மூட்டிய தமிழர் விரோத சிந்தனை சிங்கள மேல்மட்ட பிரபுத்துவ சக்திகளால் வளர்த்தெடுக்கப்பட்டு, மெருகுபடுத்தப்பட்டு இலங்கையை அடிமை நாடாக மனமுவந்து ஏற்றுக்கொள்ளுமளவுக்கு ஓர் மனநிலையை நியாயப்படுத்ததுமளவுக்கு நிலைநிறுத்தப்பட்டது. அக்காலத்திலிருந்து இப்போது வரை அரச அதிகாரத்தை கைப்பற்றும் மூலதனமாக தமிழ் மக்களுக்கு எதிராக இனக்குரோதம் கையெடுக்கப்படுவதே இலங்கையின் வரலாறாக மாறிவிட்டதை எவராலும் புரிந்து கொள்ளமுடியும்.

நா.யோகேந்திரநாதன்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE