;

Sunday 9th of August 2020 04:33:02 PM GMT

LANGUAGE - TAMIL
பிரியதர்ஷினி சிவராஜா
பெண்கள், குழந்தைகளின் உளவியலில் தாக்கம் செலுத்தும் கொரோனா!

பெண்கள், குழந்தைகளின் உளவியலில் தாக்கம் செலுத்தும் கொரோனா!


வாழ்நாளில் முன்னெப்போதும் அனுபவித்து அறிந்திராத ஓர் வாழ்வியல் சூழலை நாம் கடந்துகொண்டிருக்கின்றோம். கோவிட் 19 நோய்த் தொற்று காரணமாக சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு வீடுகளுக்குள் முடங்கியிருப்பது அனைவரையும் ஒருவித மன அழுத்தத்திற்குள் தள்ளிக் கொண்டிருக்கின்றது. பொருளாதார ரீதியிலான இழப்பும், நிச்சயமற்ற எதிர்காலமும், எதனையும் திட்டமிட முடியாத நிலையும் அனைவரிலும் அச்ச உணர்வை ஏற்படுத்தி பதற்றத்துடனும், குழப்பத்துடனும் நாட்களைக் கடத்த வேண்டிய நிலைமையை ஏற்படுத்தியிருக்கின்றது.

பரபரப்பான வாழ்க்கை முறையை கொண்டிருந்தவர்கள் -அது ஆண்களாயினும் பெண்களாயினும்- சமூகத் தொடர்புகள் குறைந்து விரும்பியோ விரும்பாமலோ வீடு சார்ந்திருக்கும் உறவுகளுக்குள் ஊடாட வேண்டிய கட்டாய நிலைமையும், சுதந்திரமாக உலவ முடியாமல் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ள சூழ்நிலையும் ஒருவிதமான விரக்தி நிலையை ஏற்படுத்தியுள்ளது. அதிகரித்திருக்கும் வீட்டுவேலைச் சுமையும், வீட்டுவேலைகளில் உதவாத ‘அது பெண்களுக்கு மட்டுமான வேலை’ என்று தள்ளி நின்று வேடிக்கைப் பார்க்கும் ஆணாதிக்க மனோபாவ குடும்பச் சூழலும் பெண்களில் தாக்கம் செலுத்துகின்றது. மறுபுறம், தடைப்பட்டிருக்கும் பாடசாலைக் கல்வியினால் பாதித்திருக்கும் சிறுவர்கள், பெற்றோரினதும், தன்னைச் சுற்றியிருக்கும் ஏனைய குடும்ப உறவுகளினதும் நெருக்கடி கால மன அழுத்தங்களின் நேரடி மற்றும் மறைமுக விளைவுகளை எதிர்கொள்ளும் சிறுவர்கள் என்று பெரும்பாலான வீடுகள் மன ரீதியிலான போராட்டங்கள் நிகழும் களங்களாக மாறியிருக்கின்றன.

இந்நிலையில் இந்த சூழலை எல்லோரும் எப்படி கடக்கின்றார்கள் என்று பார்த்தால் வயதுவந்தவர்கள் பெரும்பாலும் தமக்கான வேலைகளை ஒதுக்கிக் கொண்டும், எப்படியாவது நேரத்தினைக் கடக்க வேண்டும் என்று விடயங்களை திட்டமிட்டுக் கொண்டும் செயற்படுகின்றனர். ஆனால் இவர்களில் தங்கியிருக்கின்ற எப்பொழுதும் அன்பையும், அரவணைப்பையும், பகிர்தலையும் எதிர்பார்க்கின்ற சிறுவர்களின் மனநிலை எவ்வாறானதாக இருக்கின்றது? அவர்கள் எதிர்நோக்கும் உளவியல் தாக்கங்கள் எவை? என்பது பற்றி நாம் ஆழமாக சிந்திக்க வேண்டியுள்ளது. ஏனெனில் பெரியோர்களைக் காட்டிலும் சிறுவர்களின் இயல்பு வாழ்க்கையை முற்றுமுழுதாகப் பாதித்துள்ளது இந்த சடுதியான சூழல் மாற்றம்.

எது உண்மை? எது பிழை? என்ற தகவல் குழப்பம்!

கடந்த 2, 3 மாதங்களாகவே சகல ஊடகங்களும் கோவி;ட் 19 நோய்த் தொற்றினை முதன்மைப்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஆரம்பத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு தகவல்களை ‘தற்போது கிடைத்த செய்தியாக (பிரேக்கிங் நியூஸ்)’ மிகவும் பரபரப்புடன் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒளிபரப்பி வந்தன. அதுமட்டுமன்றி எந்த தொலைக்காட்சி ஊடகத்தைப் பார்த்தாலும் கோவிட் 19 பற்றிய கலந்துரையாடல்களும், அறிவுறுத்தல்களும், உலகளாவிய நேரடி ரிப்போட்களும் என்று ஒவ்வொரு அலைவரிசையும் போட்டிப் போட்டுக் கொண்டு நிகழ்;ச்சிகளை அசுர வேகத்தில் ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தன. (தற்போது இந்த நடைமுறை சற்று தணிந்துள்ளமை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.) பிரேக்கிங் நியூஸ் என்ற தலைப்பில் செய்தி திடீரென ஒளிபரப்பாகும் போதே நமக்குள் ஒருவித அச்சநிலை உள்மனதில் தோன்றி மறைகின்றது. மனதில் இலகுவில் பதியும் மிகவும் சக்திவாய்ந்த புலக்காட்சி ஊடகமான இலத்திரனியல் ஊடகங்களில் இவ்வாறான செயற்பாடுகள் மன அழுத்தத்தினை வயதுவந்தவர்கள் மத்தியில் ஏற்படுத்துகின்ற நிலையில் இவற்றைப் பார்த்து உள்வாங்கிக் கொள்ளும் சிறுவர்களின் நிலை எப்படி இருக்கும்?

மாறி மாறி கிடைக்கும் நோய் பற்றிய தகவல்களும், நோயாளிகளின் படங்களும், இறந்தவர்கள் பற்றிய தகவல்களும் வயதுவந்தவர்களைக் குழப்பி தாக்கம் செலுத்துவது போன்றே சிறுவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தும் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இருக்க முடியாது.

சிறுவர்களில் இந்நிலை எவ்வாறான தாக்கத்தினை ஏற்படுத்தும் என்று சிறுவர் நல செயற்பாட்டாளர் ரீ.ரீ.மயூரன் அவர்களிடம் கேட்டபோது அவர் சில முக்கியமான கருத்துக்களை எம்முடன் பகிர்ந்துகொண்டார். அவர் கூறுகையில்:

‘குடும்ப உறுப்பினர்கள் அடிக்கடி கோவிட் 19 சம்பந்தப்பட்ட செய்திகளைப் பார்த்து அது பற்றி கலந்துரையாடும் போது ஒவ்வொருவர் மத்தியிலிருந்து வரும் கருத்துக்கள் பிள்ளைகளில் குழப்பமான மனநிலையை ஏற்படுத்துகின்றது. அதாவது நோய் பற்றி உண்மையான தகவல் எது? பிழையான தகவல் எது என்று அறிய முடியாமல் குழம்பும் மனநிலை நிறைய பிள்ளைகளை உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் பாதிக்கின்றது. ஒருவிதமான பதற்றம், எந்நேரமும் தாய் அல்லது அன்புக்குரிய ஒருவருடன் நெருங்கிக் கொண்டு ஒட்டிக்கொண்டே அவர்களுடன் இருத்தல், எதிலும் நாட்டம் இன்மை, பயந்த சுபாவம், ஆவேசமான செயற்பாடுகள் போன்ற நடத்தைகளின் மூலம் இவற்றை பிள்ளைகளில் உணர முடியும். இதனால் வீட்டில் உள்ளவர்கள் தாம் பேசும் விடயங்கள் பற்றியும் பார்க்கும் விடயங்கள் பற்றியும் சரியான கவனத்தை எடுத்து பிள்ளைகளுக்கு சரியான தகவல்களைக் கொடுத்து அவர்களின் பயத்தைப் போக்குவது அவசியம்’ என்றார். அத்துடன் இந்த கோவிட் 19 நிலைமையில் மட்டுமன்றி பொதுவாகவே ஆரோக்கியமற்ற தகவல் சூழல் ஓர் முக்கியமான சமூகப் பிரச்சினையாக மாறி வருகின்றது என்றும் அவர் சுட்டிக் காட்டத் தவறவில்லை.

கோவிட் 19 நோய்த்தொற்று போன்ற ஓர் இக்கட்டான சூழலில் சிறுவர்களின் மனநிலை மேம்பாட்டிற்கு எவ்வாறான வழிமுறைகளை பின்பற்றலாம் என்று அவரிடம் வினவியப் பொழுது அவர் கூறுகையில்:

‘பிள்ளைகள் என்போர் அற்புதமானவர்கள். அவர்கள் உலகம் வேறானது. ஆனால் நாம் அவர்களை அவர்களாக இருக்கவிடுவதில்லை. அவர்கள் தங்களுக்கான தேவைகளை உணர்;ந்து அதற்கான திட்டமிடல்களை சரியாகச் செய்யக் கூடியவர்கள். நாம் நன்கு அவர்களை அவதானித்துப் பார்த்தோம் என்றால் அவர்கள் எந்நேரமும் ஏதோ ஒரு வேலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்களாக இருப்பர். ஆடுதல், பாடுதல், வரைதல், நடித்துக் காட்டுதல், ஓடி விளையாடுதல், விளையாட்டுப் பொருட்களைப் பல்வேறு விளையாட்டுக்களில் ஈடுபடுதல் என்று அவர்களின் உலகம் தனித்துவமானது. பொதுமைப்படுத்தல்கள் அற்றது. பெரியவர்கள் அதில் குறுக்கீடு செய்யும் போது பிரச்சினைகள் வருகின்றன. சத்தம் போடாதே என்று அதட்டுவதும், எந்நேரமும் அவர்களைக் கண்டித்துக் கொண்டே இருப்பதும் கூட அவர்களின் இயல்புகளைப் பாதிக்கும். இன்று நிலவுகின்ற நோய்த் தொற்று சூழலில் மன அழுத்தத்தடன் கவலை தோய்ந்த எண்ணங்களுடன் இருக்கும் வயதுவந்த நபர்கள் பிள்ளைகளின் இயல்பான செயற்பாடுகளுக்கு தடை விதிக்கும் போது அது பிள்ளைகளை உணர்வு ரீதியாக வெகுவாகப் பாதிக்கும். எனவே பெரியவர்கள் அவர்களைக் குழப்பாமல் இருப்பதே சிறந்த நடைமுறை’ என்றார்.

இதே கருத்தினை முன்வைக்கும் இலங்கை மன்றக் கல்லூரியின் உளவியல் துறை விரிவுரையாளரும், மனவடு உளவியல் பாதிப்புகள் (trauma) தொடர்பில் பல ஆய்வுகளை மேற்கொண்டவருமான புபுது சேனாரத்னவும் ‘பிள்ளைகளின் புத்தி மட்டத்திற்கு ஏற்ப நோய்த் தொற்று பற்றிய விளக்கங்களை அளிப்பது சிறந்த பயனைத் தரும்’ என்று குறிப்பிட்டார். பிள்ளைகளின் மனநிலை குறித்தும், நடத்தைகள் குறித்தும் விளங்கிக் கொண்டு அதற்கேற்ப பெற்றோர்கள் பிள்ளைகள் மீது அக்கறைக் கொள்வதும், அவர்களுடன் மனம் விட்டு பேசுவதும், அவர்களுக்கு பாதுகாப்பு உணர்வினை அளிப்பதும், அரவணைப்பதும் சிறந்த செயற்பாடுகளாக அமையும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

ஆரோக்கியமற்ற குடும்பச் சூழலும் பிள்ளைகள் மனநிலையும்!

கோவிட் 19 நோய்த் தொற்று காரணமாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு நாடு முடக்கப்பட்ட முதல் மூன்று வார காலப்பகுதியில் சிறுவர்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்பான முறைப்பாடுகள் 10 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக இலங்கையில் அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக இந்த முறைப்பாடுகள் அனைத்தும் வீட்டுவன்முறைகளைச் சார்ந்ததாக இருக்கின்றமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும். எனினும் சமூக ஆய்வாளர்களின் கருத்துப்படி இந்த புள்ளிவிபரம் இன்னும் சற்று அதிகமாக இருக்கலாம் என்ற விடயமும் கருத்திற்கொள்ளத்தக்கதாகும்.

இந்த இறுக்கமான சூழலின் அழுத்தங்களின் விளைவாக வீடுகளில் ஆண்கள் வன்முறை வடிவங்களை கையிலெடுக்கும் போது பாதிக்கப்படுவது பெண்களும், சிறுவர்களுமே என்ற விடயத்தினையும் நாம் மறந்துவிட முடியாது. இதனால் தான் அம்மாவுக்கு விழும் அடியில் ஓரிரண்டு பிள்ளைகளுக்கும் விழுகின்றது. அம்மாவுக்கு உதைக்கும் போது அந்த உதையுடன் பிள்ளையும் சேர்ந்து விழுந்து காயமடைகின்றது. இந்த வகையில் வீட்டுவன்முறைகள் பிள்ளைகளைப் பெருமளவில் பாதிக்கும் விடயமாக உள்ளது. ஊரடங்கு காலப்பகுதியில் அதிகரித்துள்ள வீட்டுவன்முறைகள் காரணமாக காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் போது அதனால் தாயைப் பிரிந்து பாதிக்கப்படும் பிள்ளைகளும் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அவர்கள் இவ்வாறான சந்தர்ப்பங்களில் யாருடன் இருக்கப் போகின்றார்கள்? அவர்களைப் பராமரிப்பது யார்? அவர்கள் நம்பிக்கைக்குரியவர்களா? என்ற கேள்விகளும் எழுகின்றன.

இதுபோன்ற சம்பவங்கள் பலவற்றை பற்றி இக்காலப்பகுதியில் அறிய முடிந்ததாக புபுது சேனாரத்ன குறிப்பிட்டாhர். அவரின் கருத்துப்படி கவுன்சிலிங் எனப்படும் உளவள ஆலோசகர்களை ஊரடங்கு காலப்பகுதியில் அதிகளவானோர் தொலைபேசியினூடாக தொடர்பு கொண்டு மனநலன் சார்ந்த ஆலோசனைகள் பலவற்றை பெற்றுள்ளனர். இதில் தற்கொலை எண்ணங்களும், வீட்டுவன்முறைகளும் முக்கியம் பெற்றிருந்த முறைப்பாடுகளாக இருக்கின்றன. உலகளாவிய ரீதியிலும் இதுவும் ஓர் பொதுவான விடயமாக உள்ளது. குடும்பங்களில் நிகழும் இவ்வாறான துரதிருஷ்டவசமான சம்பவங்கள் இறுதியில் அக்குடும்பத்தினைச் சேர்ந்த பிள்ளைகள் மீதே தாக்கம் ஏற்படுத்துகின்றது. இது அவர்களின் எதிர்கால வாழ்வில் தீராத மனவடு சார்ந்த பிரச்சினையாகவும் மாறக் கூடும் என்று புபுது சேனாரத்ன எச்சரிக்கை விடுத்தார். இதன் தாக்கங்களை நாங்கள் இன்னும் 10, 15 ஆண்டுகளில் அறியக் கூடியதாக இருக்கும் என்பது அவரின் அபிப்பிராயமாகும்.

வீடுகளில் தனது உறவினர்களினால் பாதுகாப்பற்ற சூழலை எதிர்கொள்கின்ற பிள்ளைகளையும் நாம் இங்கு மறந்துவிட முடியாது. ஏனெனில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் கொடுமைகள் அதிகம் நிகழ்வது நெருங்கிய உறவுகளினால் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இன்றைய சூழலில் இவ்வாறான கொடுமைகளிலிருந்து ஓடித் தப்பவும் வழியின்றி கொடுமை இழைப்பவர்களுடனேயே நாட்களைக் கழிக்க வேண்டிய அவல நிலையில் இருக்கும் பிள்ளைகள் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. ஆசிரியர்கள், அரசாங்க அதிகாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போன்ற கட்டமைப்புகள் நேரடியாக தலையிட்டு பாதிக்கப்படும் சிறுவர்களுக்கு உதவ முடியாத சூழல் காணப்படுகின்றது.

மற்றொரு விடயத்தினையும் இங்கு குறிப்பிட வேண்டும். இலங்கை முழுவதும் உள்ள 14 ஆயிரம் சிறுவர் இல்லங்களில் உள்ள சிறுவர்களின் நிலைமை பற்றி பார்த்தால், அவர்களுக்கு சமூகத்துடன் ஊடாடும் ஒரே வழிமுறையான பாடசாலை செல்லல் என்ற விடயம் தற்போது தடைப்பட்டுள்ள நிலையில் அவர்கள் சமூகத்துடன் எவ்விதமான தொடர்பும் அற்று இருக்கின்றனர். வெளி உலகத் தொடர்பு இன்றி அப்பிள்ளைகள் சிறுவர் நிலையங்களில் முடக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களும் ஏதோ ஒரு வகையில் மனநிலைப் பாதிப்பினை எதிர்நோக்கியவர்களாகவே இருக்கக் கூடும். அவர்களின் தேவைப்பாடுகள், குறைகள் பற்றிய எந்தவிதமான தகவல்களும் வெளி உலகுக்கு தெரிய தற்போது வாய்ப்பும் இல்லை.

சமூகத்தில் மிகவும் பலவீனமானவர்களாகவும், குரல் அற்றவர்களாகவும் இருக்கும் சிறுவர்களின் உரிமைகளையும், மனநலத்தினையும் இந்த நெருக்கடி மிக்க காலப்பகுதியில் பேணுவது சற்று கடினமான விடயமாயினும் ‘அழுத்தங்கள் யாவும் வந்து சேரும் முடிவிடம் பிள்ளைகள்’ என்பதை நாம் உணர்ந்து அந்த அழுத்தங்கள் அவர்களை அடைய முடியாதவாறு அவர்களை அவர்களாகவே வாழ விடுவதே தற்போதைய இக்கட்டான சூழலில் அவர்களுக்கு நாம் செய்யும் மகத்தான உதவியாக இருக்கும் எனலாம்!

கோவிட் 19 நோய்த் தொற்றினால் ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தை சமாளிக்க பிள்ளைகளுக்கு உதவுதல்:

உலக சுகாதார ஸ்தாபனத்தின் குறிப்புகள்

சிறுவர்கள் மன அழுத்தத்தினை பல்வேறு முறைகளில் வெளிப்படுத்துவர். அதாவது ஒட்டிக்கொண்டே இருப்பது, ஆர்வக்கோளாறு, பின்வாங்குதல், ஆத்திரம், ஆவேசம், உணர்ச்சிவசப்படுதல், படுக்கையை நனைத்தல்.

பிள்ளைகளின் உணர்ச்சி வெளிப்பாடுகளுக்கு ஆதரவாக பதிலளிக்கவும். அவர்களின் தேவைகளை செவிமடுங்கள். தேவைக்கு அதிகமாக அன்பையும், அவதானத்தையும் வெளிப்படுத்துங்கள்.

நெருக்கடி நேரங்களில் பெரியோரின் அன்பும் அக்கறையும் பிள்ளைகளுக்கு தேவை. அவர்களுடன் அதிக நேரத்தினை செலவிடுங்கள்.

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் விளையாடவும், ஓய்வாக இருக்கவும் அவர்களுக்கு இடமளியுங்கள்.

குடும்பத்தினரையும், பெற்றோரையும் பிள்ளைகளிடமிருந்து பிரிக்காதீர்கள். வைத்தியசாலை அனுமதி போன்ற பிரிவுகள் ஏற்பட்டால் எப்பொழுதும் தொடர்பில் இருங்கள்.

இந்த சூழலுக்கு புதியவர்களாக இருக்கும் சிறுவர்களுக்கு வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்ற வாய்ப்பளியுங்கள். புதிய ஆக்கங்களுக்கு வழிவிடுங்கள். பாடசலை வேலைகள், கற்றல் செயற்பாடுகள் அத்துடன் பாதுகாப்பான விளையாட்டுக்களும் ஓய்வும் அவசியம்.

உண்மையான தகவல்களை அவர்களுக்கு கூறுங்கள். என்ன நடந்தது, என்ன நடைபெறுகின்றது என்பன குறித்து தெளிவான தகவல்கள் அவர்களுக்கு கூறப்படுவது அவசியம். தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறும் நடைமுறைகளையும் கற்றுக் கொடுங்கள். எதிர்கால வாழ்க்கைக்கான அதன் அவசியத்தினையும் தெளிவுறுத்துங்கள்.

நோய்த்தொற்றினால் என்ன நடக்கும் என்பதையும் கூறுங்கள். குடும்ப உறுப்பினர் அல்லது பிள்ளைக்கு பாதிப்பு ஏற்பட்டால் வைத்தியசாலைக்கு செல்ல நேரிடும். தனிமைப்பட நேரிடும். வைத்தியசாலையில் சில காலம் தங்கியிருக்க நேரிடும். அதன்போது மருத்துவர்கள் உதவி கிடைக்கும் போன்ற தகவல்களை அச்சமூட்டாத வழிமுறைகளில் தெரியப்படுத்துங்கள்.

பிரியதர்ஷினி சிவராஜா 2020.05.15


Category: கட்டுரைகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கைபிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE