;

Sunday 9th of August 2020 05:03:06 PM GMT

LANGUAGE - TAMIL
ம.கானகன்
நினைவேந்தல் அரசியல்! - ம.கானகன்!

நினைவேந்தல் அரசியல்! - ம.கானகன்!


வீரம் செறிந்த விடுதலைப் போராட்டத்தை எமது காலத்தில் நேரடியாக தரிசித்த தலைமுறையினரிடம் ஏஞ்சியிருப்பது நினைவேந்தல் மட்டுமே என்பது, எம் ஒவ்வொருவரின் இயலாமையையும் எமக்கே இடித்துரைத்து நிற்கிறது என்றால் மிகையில்லை.

நினைவேந்தல் என்பது தலைமுறைகள் கடந்து நினைவுகளை கடத்துவதனூடாக அடுத்து வரும் தலைமுறைகளுக்கு அந்த நினைவுகளின் பின்னணியில் நிகழ்ந்தேறிய வரலாற்றை புகட்டி தொடரும் வழிமுறையாகும்.

இந்த நினைவேந்தல் மரபினை செம்மையாக கடைப்பிடித்தே ஒரு இனம் தனக்கான தேசத்தை உருவாக்கியதுடன் உலகில் இன்று வல்லமை பொருந்திய சக்தியாக தலைநிமிர்ந்து நிற்கிறது. ஆம், இஸ்ரேல் தேசத்தின் உருவாக்கதின் அடி அத்திபாரமே, ஒவ்வொரு யூத குடும்பத்திலும் செம்மையாக கடைப்பிடிக்கப்பட்ட நினைவேந்தல் ஊடாக கடத்தப்பட்ட விடுதலை வேட்கையாகும்.

ஆனால், நினைவேந்தலை பண்டைய காலம் தொட்டு தனது வாழ்வியலாகவே கொண்டு வாழ்ந்துவரும் தமிழனம் அதற்கு வெகுதொலைவில் பயணிப்பது வேதனையானது மட்டுமல்லாது பெருத்த ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் மயப்படுத்தப்பட்டிருக்க வேண்டிய நினைவேந்தலானது அரசியல் மயப்படுத்தப்பட்டு வருகின்றமையே இவ் அவலத்திற்கு மூல காரணமாகும். தமிழர்கள் என்ற ஒற்றைக் காரணத்திற்காகவே சர்வதேச போர் மரபுகளையெல்லாம் மீறி வகைதொகையின்றி கொன்று குவிக்கப்பட்ட எமது உறவுகளுக்கான நீதியைப் பெற்றுத் தருவதில் அதிதீவிர முனைப்பு காட்ட வேண்டிய தமிழ் அரசியல் தரப்புகள் அதனை வசதியாக மறந்தோ, ஒப்புக்கு சில முயற்சிகளில் தலை காட்டிவிட்டு நினைவேந்துவதிலும், அறிக்கை விடுவதிலும் மும்முரமாக முனைப்பு காட்டி நிற்பது விந்தை.

பேர் முடிந்து 10 ஆண்டுகளில் நடைபெற்ற போரில் எத்தனையாயிரம் பேர் கொல்லப்பட்டார்கள் என்பதையோ, எத்தனையாயிரம் பேர் கை கால்களை இழந்தார்கள் என்பது பற்றியோ, எத்தனையாயிரம் பேர் கணவரை இழந்து பெண்தலைமைத்துவ குடும்பங்களாக வாழ்கிறார்கள், எத்தனையாயிரம் பேர் தாய்-தந்தையரை இழந்து அநாதரவாக வாழ்ந்து வருகின்றார்கள் என இன்னோரன்ன எந்த தகவலுக்கும் உருப்படியாக சொல்லக்கூடியதான எந்த புள்ளிவிபரங்களும் தமிழர் தரப்பின் கைகளில் இல்லை.

இந்தளவில்தான் வருடா வருடம் செனீவாவுக்கு நீதி... கேட்டு பெரும் பயணம் போய் வருகினம் கொஞ்சப்பேர். கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானமேறி வைகுண்ணடம் போனானாம் என்பதாக இருக்கிறது இந்த பெரும் பயணம். வடக்கு-கிழக்கில் பெரும்பாலான இடங்களில் தமிழர்களே, அரச அலுவலகங்களில் அடிமட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரை பதவியை அலங்கரித்து வருவது. அது ஒருபக்கமிருக்க, கிழக்கில் இரண்டு ஆட்சிக் காலமும் வடக்கில் ஒரு ஆட்சிக் காலமும் மாகாண சபை ஆட்சி கூட தமிழர்களின் கைகளில் இருந்தது.

என்னத்தை செய்தார்கள்...? எதனை சாதித்தார்கள்....? போருக்கு முன்னரும் பின்னரும் பாராளுமன்ற அங்கத்தவர்களாக வலம் வருபவர்களாகட்டும், அதனை முதலீடாக்கி உள்ளுர் மற்றும் தேசிய அரசியலில் காரியம் சாதிப்பவர்களாகட்டும் துளியளவு முனைப்பையாவது மேற்சொன்ன தரவுகளை சேகரிக்க எடுத்ததுண்டா?

ஆட்களே இல்லாத பாராளுமன்ற அமர்வுகளில் வீர தீர பேச்சுக்களை நிகழ்த்தி அப்பதிவுகளை தம்சார் இணையங்களில் உலாவவிட்டு தமிழ்த் தேசியத்தின் காவலர்களாக முன்னிலைப்படுத்துவதிலும், கிடைக்கப்பெற்ற வசதி, வாய்ப்புகள் கைநழுவிப் போய்விடக் கூடாதென்பதற்காக காட்டும் முனைப்புகளிலும் துளியளவைத்தன்னும் மேற்சொன்ன தரவுகளைச் சேகரிக்க காட்டியதுண்டா?

இவை எதையுமே செய்யாமல் வெறும் கையால் முழம் போடும் வித்தையை அரங்கேற்றி வருவது சொந்த இனத்திற்கே செய்யும் மாபெரும் துரோகமாகும்.

இப்படிப்பட்ட கனவான்களிடம் நினைவேந்தல் நிகழ்வுகள் சிறைப்பட்டுக் கொண்டதனாலே அதன் மகத்துவம் மெல்ல மெல்ல குன்றி வருகிறது. இக்கையறு நிலையில்தான், கடந்த ஆண்டு இவ்வாறான அரசியல் தரப்புகள், புலம்பெயர் தளத்தில் இருக்கும் சில பிழைப்புவாத குழுவினரால் கையாளப்படும் தரப்பினர் என பல்வேறு இடைஞ்சல்களுக்கு மத்தியில் வடக்கு-கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு ஒன்று நிறுவப்பட்டிருந்தது.

போரின் பின்னரான காலத்தில் முள்ளிவாய்க்காலில் முன்னெடுக்கப்பட்ட ஒவ்வொரு நினைவேந்தல்களிலும் ஏதோ ஒரு அநாகரிக செயல் கூடியிருந்தவர்களை மட்டுமல்ல மண்ணிலும், விண்ணிலும், காற்றிலும், கடலிலுமாக கரைந்துவிட்ட எம் உறவுகளையும் மிகுந்த மனவேதனைக்குள்ளாக்கியே வந்துள்ளது.

இவ்விடர் களைந்து எவ்வித பிசகும் இன்றி நேர்த்தியாக அதே நேரத்தில் அமைதியாக நடந்து முடிந்தது கடந்த முள்ளிவாய்;கால் நினைவேந்தல். பாராளுமன்ற வீரர்களும், மாகாண சபை சூரர்களும், ஏனைய பலவான்களும், புலம்பெயர் தேசத்தில் இருக்கும் சிலரால் கையாளப்படும் அசகாய சூரர்களும் வந்தார்கள், தம்பாட்டில் ஓரமாக நின்று வணக்கம் செலுத்தினார்கள், சென்றார்கள். இதுவே கடந்த மே-18 இல், கடந்த காலங்களில், தள்ளுமுள்ளும், இழுவறிப்பாடும், வசைபாடல்களும் அரங்கேறிய அதே முள்ளிவாய்க்கால் மண்ணில் நடந்தேறியது.

உலகெங்கும் இருந்து அகம் நிறைந்த பாராட்டுகள் வந்து குவிந்தன. எப்படி இது சாத்தியமாச்சு என பலரும் வியந்தனர். உண்மையில் நினைவேந்தலுக்குரிய தார்ப்பரியத்துடன் அதனை முன்னெடுத்து காலவோட்டத்தில் அதனை தமிழ் மக்களின் வாழ்வியலாக மாற்றும் உயரிய எண்ணம் இந்த வடக்கு-கிழக்கு நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பை உருவாக்க முனைந்தவர்களிடம் இருந்ததை, இருப்பதை நன்கறிவோம்.

தமிழ்த் தேசியம் என்பது வெற்றுக் கோசமாகவே தமிழர்களிடையே இருப்பதற்கு காரணம் அதனை எம் வாழ்வு முறையாக வரித்துக் கொள்ளாமையே. ஆம், தமிழ்த் தேசியத்தை ஒவ்வொரு தமிழனும் தனது வாழ்வு முறையாக மாற்றும் போதுதான் உண்மையான, உன்னதமான தமிழ்த் தேசிய அரசியல் பிறப்பெடுக்கும். அதுவரை அரசியல் ஒரு சாக்கடைதான் என மல்லாந்து படுத்திருந்து காறி உமிழ்ந்து கொண்டிருக்க வேண்டியதுதான்.

இந்த வரலாற்று திருப்பத்தை நோக்கியதான முதலாவது அடியாக உருவாக்கம் பெற்ற பொதுக் கட்டமைப்பை பிழைப்புவாத தமிழ் அரசியல் தரப்புகளும், புலம்பெயர் தரப்புகளும் ஒன்று சேர்ந்து இம்முறையும் வீழ்த்த பந்தமெடுத்தும், அறிக்கையிட்டும், அரிசி குடுத்தும் தலையால நடந்து கொண்டிருக்கிறதை பார்த்தால் இதற்குத்தான் இத்தனை விலை கொடுத்தோமா என்று புலம்பவேண்டியுள்ளது.

இது ஒருபுறமிருக்க, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு சார்பில், மே-18 தொடர்பான அறிவிப்பு விடுக்கப்பட்ட பின்னரும் அதனை கருத்தில் எடுக்காது, தாயகத்தில் உள்ள தமிழ்த் தேசியப் பரப்பில் செயற்பட்டு வரும் அரசியல் கட்சிகளின் தலைமைகளும், சிவில் தரப்புகளும், புலம்பெயர் தரப்புகளும் தம்பாட்டுக்கு ஆளுக்கொரு நேரத்தை அறிவித்து அறிக்கைகளை விடுத்திருந்தமை சுயலாப அரசியலின் உச்சமாகும்.

இப்பத்தி எழுதப்படும் வரை மேற்குறித்த பொதுக் கட்டமைப்பினருடன் மேற்குறித்த தரப்புகள் எவையும் தொடர்பு கொண்டிருக்கவில்லை என்ற தகவல் உண்மையில் அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது.

எவ்வித குழறுபடிகளும் இன்றி நேரத்தியாக கடந்த ஆண்டு மே-18 நினைவேந்தலை முன்னெடுத்திருந்த பொதுக்கட்டமைப்புடன் இணைந்து ஒரே குரலாய், ஒரே முடிவாய், ஒன்றுபட்ட எழுச்சியாக இந்நினைவேந்தலை முன்னெடுக்க முடியாதவர்கள் எங்ஙனம் தமிழினப்படுகொலைக்கு நீதியைப் பெற்றுத்தரப் போகின்றார்கள்?

உலகளாவிய பேரனர்த்தமாக உருவெடுத்திருக்கும் கொரோனா அச்சுறுத்தல் நிலைக்கு மத்தியிலும் அது தொடர்பாக விடுக்கப்பட்டிருக்கும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மே-18 நினைவேந்தலை முன்னெடுப்பதே சாலப்பொருத்த முடையதாகும். அதைவிடுத்து நாங்களே ஆரவாரம்செய்து தடுப்பதற்கான சூழமைவை ஏற்படுத்திவிட்டு இனவாத பிரச்சாரத்தை முன்னெடுப்பது அருவருப்பானது.

எந்த மக்களின் வாக்குப்பலத்தில், எந்த போராட்ட பின்னணியில் 22 தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் உருவாக்கப்பட்டார்களோ, அவர்கள் சாட்சியாகவே அந்த மக்களும், அந்த போராட்டமும் முள்ளிவாய்க்காலில் நிலைகுத்தி நிர்மூலமாகிப் போனதென்ற கசப்பான பேருண்மையை நம்மில் எத்தனை பேர் ஏற்றுக்கொள்ளப் போகின்றோம்?

இந்த சூட்சுமத்தை புரிந்து கொள்ளாதவரை, ஏற்றுக் கொள்ளாதவரை, தமிழர்களை கடவுள் நினைத்தாலும் காப்பாற்ற முடியாது, இந்த பிழைப்புவாத அரசியல் வாதிகளிடமிருந்தும், தரப்புகளிடமிருந்தும்.

ஆனால் ஒன்றுமட்டும் உறுதியாகச் சொல்ல முடியும், ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் உதிப்பதையோ மறைவதையோ தடுக்க முடியாது என்பது போல, முள்ளிவாய்க்காலில் மூச்சடக்கப்பட்ட எம் உறவுகளின் தியாகம் ஒருபோதும் வீண் போகாது என்பது திண்ணம்.

அருவி இணையத்துகாக - ம.கானகன். (18.05.2020)


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை, வட மாகாணம், முள்ளிவாய்க்கால்பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE