Wednesday 24th of April 2024 05:52:13 AM GMT

LANGUAGE - TAMIL
-
முள்ளிவாய்க்காலில் முடிந்த பயணம்  02

முள்ளிவாய்க்காலில் முடிந்த பயணம் 02


வானம் மழை பொழிய குளங்கள் நிரம்பி வழிந்தோட கிணறுகள் நீர் நிறைந்து செந்தழிக்க நெல்லும், வாழையும், தென்னையும், மாவும், பலாவுமாக எங்கும் பசுமை விரிந்து வளம் பொழிந்ததுதான் கிளிநொச்சி மண் அந்த வளங்களில் ஊறிச் சுரந்து அழகான வீடுகள் எழுந்தன் அலங்காரக் கட்டிடங்கள் பிறந்தன. வானோங்கும் ஆலயங்கள் விளைந்தன.

வானம் பொழிந்த மழையில் பிறந்த அத்தனை வளங்களையும் வானில் புகுந்த விமானங்களும், எங்கிருந்தோ வான் வழியாக வந்து விழும் எறிகணைகளும் துவம்சம் செய்துகொண்டிருந்தன.

அந்த வளங்களை மழை நீருடன் கலந்து உற்பத்தி செய்த மனிதர்களின் உயிர்களும், உறுப்புகளும் பறிக்கப்பட்டுக்கொண்டிருந்தன.

தமிழ் மக்களின் விடுதலைப் பிரதேசத்தின் நிர்வாக மையம் ஒரு மிகப்பெரும் மனித குல வேட்டையில் துவம்சம் செய்யப்பட்டுக் கொண்டிருந்தது.

அந்த நிலையில் உயிரைக் காப்பற்றுவதனால், உடல் உறுப்புகளை இழப்பதைத் தவிர்க்க வேண்டுமானால் வெளியேறியே ஆகவேண்டும்!

வானோங்கிய காடுகளை வெட்டிக் களனியாக்கி வியர்வை சிந்தி உழைப்பை அள்ளிக் கொடுத்து மண்ணைப் பொன் விளையும் பூமியாக்கியவர்கள் நாம்.

அந்தப் பொன் விளையும் பூமியை விட்டுக் கண்ணீர் பெருக இடம்பெயர்ந்தோம்! நாம் நட்டு வளர்ந்த மாவையும், பலாவையும், வாழையையும் மண்ணுக்குத் துணையாய் விட்டுவிட்டு நாம் மட்டும் வெளியேறினோம்.

எங்கு போகிறோம். எங்கு மட்டும் போவோம் என்பது பற்றி எந்த இலக்குமின்றி புறப்பட்டோம்.

எனினும் -

போகுமிடங்களில் தங்குவது எங்கே? உண்பது எங்கே? இயற்கைத் தேவைகளை நிறைவேற்றுவது எப்படி? எங்களிடம் எழுந்த கேள்விகளுக்கு எவராலும் விடை கண்டுபிடிக்க முடியவில்லை.!

என்றாலும் இவைகள் முழுமையாக இல்லாவிட்டாலும் பகுதியாவது நிறைவு செய்தாக வேண்டும்.

ஒவ்வொரு குடும்பமும் தங்களால் முடிந்தளவு தங்கள் உடைமைகள் சிலவற்றை தங்களுடன் கொண்டு புறப்பட்டனர்.

தலைச்சுமையாக, சைக்கிள்களில், லாண்ட் மாஸ்டரில், உழவு இயந்திரத்தில் லொறியில் என ஒவ்வொரு குடும்பமும் தங்கள் வசதிக்கேற்ப தங்களுடன் தங்கள் தேவைக்கான உடைமைகளைக் கொண்டு இடம்பெயர்ந்தனர்.

ஒரு சைக்கிளில் கொண்டு போகக் கூடிய சுமையை ஒரு மனிதன் சுமந்தான். ஒரு லான்ட் மாஸ்ரரில் கொண்டு செல்லக்கூடிய சுமையை சைக்கிள் சுமந்தது. ஒரு உழவு இயந்திரப் பெட்டியின் சுமையை, லான்ட் மாஸ்டர் சுமந்தது. ஒரு லொறியில் ஏற்றக்கூடிய சுமையை உழவு இயந்திரம் சுமந்தது.

இப்படித்தான் -

மனிதரிலிருந்து லொறி வரை தங்கள் சக்தியை விடப் பன்மடங்கு சக்தியை வெளிப்படுத்திப் பொருட்களைச் சுமந்தனர்.

பரந்தன் - முல்லைத் தீவு வீதி பரந்தனிலிருந்து தர்மபுரம் விஸ்வமடு வரை மனிதர்களாலும் வாகனங்களாலும் நிரம்பி வழிகின்றன. ஆமைவேக நகர்வு தான்! எனினும் அந்த ஆமைவேக நகர்வு கூட சில சமயம் திடீரென நின்றுவிடும். பொருட்களை இறக்கிவிட்டு அடுத்த தரம் இன்னொருவரின் பொருட்களை ஏற்றுவதற்கு திரும்பி வரும் வாகனங்களும் போய் கொண்டிருக்கும் வாகனங்களும் அந்தக் குண்டும் குழியுமான அகலம் குறைந்த பாதையில் அசைய முடியாத படி இறுகிவிட்டால் நகர்வு தொடர முடியாமல் போய்விடும். சிக்கலைக் கழற்றுவதானால் பல மைல் நீளத்திற்கு நிற்கும் வாகனங்கள் சிறிது தூரமாவது பின்னால் நகர வேண்டும். ஒரு வாகனம் காற்றுப்போய் விட்டாலோ நடு வீதியில் பழுதடைந்து விட்டாலோ மீண்டும் வாகனங்கள் நெரிசலில் இறுகிவிடும். ஏதாவது மறு ஏற்பாடு செய்து மீண்டும் நகர்வை ஆரம்பிக்க நேரம் மணிகளால் கடந்து விடும்.

பரந்தனிலிருந்து விஸ்வமடு வரை போவதும் வருவதுமாக வீதியிலும் சில இடங்களில் வீதிக்கருகில் உள்ள வயல் வெளிகளிலும் வாகனங்கள் வருவதும் போவதுமாக அலைமோதிக்கொண்டிருக்கும். மனிதர்கள், வாகனங்கள் என இடைவெளியற்ற நகர்வு.

தள்ளாடித் தள்ளாடி களைத்து விழுந்து நடக்கமுடியாமல் நடக்கும் முதியோர், கையில் ஒரு குழந்தையும் வயிற்றில் இன்னொரு குழந்தையுமாக மூச்சிரைக்க நடக்கும் கற்பிணிப் பெண்கள், வயது முதிர்ந்த தந்தையை அல்லது தாயை சைக்கிள் கரியலில் வைத்து பகீரதப் பிரயத்தனம் செய்து உருட்டும் பிள்ளைகள், தாகத்திலும் பசியிலும் கதறும் குழந்தைகளை சமாதானப்படுத்த முடியாமல் தவிக்கும் தாய்மார் என பரந்தன் முல்லைத்தீவு வீதியில் அவலத்தின் உச்சகட்டம் அரங்கேறுகிறது.

அங்கு குடும்பங்கள் மட்டுமா இடம்பெயர்ந்தன?

பாடசாலைகள் இடம்பெயர்ந்தன் அரச காரியாலயங்கள் இடம்பெயர்ந்தன் மருத்துவமனைகள் இடம்பெயர்ந்தன் பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் இடம்பெயர்ந்தன் வர்த்தக நிலையங்கள் இடம்பெயர்ந்தன.

ஒரு நாள் அல்ல இரு நாட்கள் அல்ல ஏறக்குறைய இரு வாரங்கள் இடப்பெயர்வு தொடர்கிறது.

அரச காரியாலயங்கள், மருத்துவமனைகள், வர்த்தக நிலையங்கள் என சகல மனிதத் தேவை மையங்களும் தருமபுரத்தில் நிலை கொள்ள அது இன்னொரு கிளிநொச்சி ஆகிறது.

சன நெரிசலில் தருமபுரம் சிக்கித் திணறுகிறது.

கிளிநொச்சியிலிருந்து மேற்கு நோக்கி முன்னேற முயலும் அரச படையினரின் முயற்சிகள் மீண்டும் மீண்டும் போராளிகளால் முறியடிக்கப்படுகின்றன. எனினும் எறிகணை வீச்சுகள், விமானத் தாக்குதல்கள் சகிதம் படையினர் பல முனைகளால் முன்னேற முயல்கின்றனர். எனினும் போராளிகளின் வலிமையான தடுப்பு போர் அவர்களை குறிப்பிட்ட எல்லைகளுக்கு அப்பால் நகர விடவில்லை.

முழங்காவில், வன்னி விளாங்குளம், துணுக்காய், கிளிநொச்சி, மாவீரர் துயிலும் இல்லங்கள் அரச படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில் மாவீரர் தின நிகழ்வுகள் தருமபுரத்தில் தற்காலிக துயிலுமில்லம் அமைக்கப்பட்டு அங்கு உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்படுகிறது.

எறிகணைகள் பாய்ந்து மனித உடல்களைச் சிதைக்க விமானங்கள் குண்டு பொழிந்து மனித வேட்டையாட படையினர் தருமபுரம் நோக்கி முரசுமோட்டை ஊடாகவும் இராமநாதபுரம் ஊடாகவும் முன்னேறுகின்றனர். மீண்டும் இடம்பெயர வேண்டிய அவலம் எழுகின்றுது.

புளியம்பொக்கனையில் உணவுக்களஞ்சியம் போராளிகளால் திறந்து விடப்படுகிறது. மக்கள் அரிசி, மா, சீனி எனத் தேவையான பொருட்களை மூடை மூடையாக சுமந்து செல்கின்றனர்.

மீண்டும் இடப்பெயர்வின் அதே அவலங்கள்; அதே நெருக்கடிகள் ; அதே உயிரிழப்புகள் ; அதே குருதி சிந்தல்கள்.

எனினும் நாம் மீண்டும் மீண்டும் இடம்பெயர்ந்தோம் ; நாம் மீண்டும் எங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்புவோம் என்ற நம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை.

விஸ்வமடு, புன்னைநீராவி, மயில்வாகனபுரம், ரெட்பானா, உடையார்கட்டு, இருட்டுமடு, சுதந்திரபுரம், தேவிபுரம், வள்ளிபுனம் என அப்பகுதி ஊர்களெல்லாம் இடம்பெயர்ந்த மக்களால் நிரம்பி வழிந்தன.

மருத்துவமனை, வர்த்தக நிலையங்கள் என்பன உடையார்கட்டில் அமைக்கப்பட, உடையார்கட்டு இடப்பெயர்வின் மையமாகிறது.

தருமபுரம் வரை முன்னேறிவந்த இராணுவத்தினரை தடுத்து நிறுத்தி நெத்தலியாற்றுக்கு அப்பால் முன்னேறவிடாது போராளிகள் போராடிய வேளையில் கல்மடுக்குளம் உடைப்பெடுக்கிறது. அப்பெரு வெள்ளத்தில் சிக்கி ஆயிரக்கணக்கான படையினர் உயிரிழக்கின்றனர். அத்துடன் படையினரின் முன்னேற்ற முயற்சிகள் சில மாதங்கள் தாமதமாகின்றது.

எனினும் உடையர்கட்டு, இருட்டுமடு, சுதந்திரபுரம், விஸ்வமடு ஆகிய இடங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட எறிகணைவீச்சில் ஏராளமான மக்கள் உயிரிழக்கின்றனர். புன்னை நீராவியிலிருந்து உடையார் கட்டு நோக்கி செல்லும் வீதியை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட எறிகணை வீச்சில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களின் உடல்கள் சிதறிக்கிடந்தன. உடையார்கட்டு மருத்துவமனை மீது படையினரால் மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதலினால் நோயாளர்கள், மருத்துவத்தாதிகள், சுகாதாரப் பணியாளர்கள் எனப் பலர் உயிரிழக்கின்றனர். சுதந்திரபுரம் மனித உயிர் குடிக்கும் பெரும் காளவாய் ஆகிறது.

இடம்பெயரும் பாதையெங்கும் எறிகணைகள் விழவே மக்கள் தேவிபுரம் நோக்கி காடுகளுக்குள்ளால் ஆற்றைக்கடந்து நகர்கின்றனர். தேவிபுரத்தில் உயிர் காக்க தென்னந்தோட்டங்களில் ஒதுங்கிய மக்களையும் எறிகணைகள் தேடித் தேடிப் பலியெடுக்கின்றனர்.

மீண்டும் உயிர் காக்க இரணைப்பாலை நோக்கி ஓடினோம்.

போராளிகள் பரந்தன், முல்லைத்தீவு வீதியில் வள்ளிபுரத்துக்கு அப்பாலும் ஒட்டிசுட்டான் வீதியில் மன்னாகண்டலுக்கு அப்பாலும் புதுக்குடியிருப்பு தண்ணீறூற்றுப்பாதையிலும் அரச படைகளை முன்னேற விடாமல் தடுத்து நிறுத்தி கடுஞ்சமர் புறிகின்றனர்.

எனினும் படையினர் முன்னேற்ற முயற்சிகள் தொடங்கும் போதும் முறியடிக்கப்படும் போதும் மக்களை நோக்கி எறிகணைகளை வீசி பழிவாங்கும் வகையில் மனிதப் படுகொலைகளை மேற்கொண்டனர். எனவே இரணைப்பாலையிலும் இரத்த ஆறு பாய்கிறது.

மாத்தளன் முதல் வட்டுவாகல் வரையான கிராமங்கள் முள்ளிவாய்க்கால் பிரதேசம் ஆகும்.

வேறுவழியற்ற நிலையில் -

எமது இடப்பெயர்வு நந்திக்கடல் கடந்து அந்த ஒடுங்கிய சிறிய பாலத்தின் மூலம் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தை நோக்கி நகர்கிறது. பல நாட்கள் தொடர்ந்த இடப்பெயர்வினால் மாத்தளன், பொக்கணை, வளைஞர்மடம், முள்ளிவாய்க்கால், இரட்டைப்பனையடி என அப்பிரதேசத்தின் கிராமங்கள் அனைத்தும் மக்களால் நிரம்பி வழிகின்றன. காணும் இடமெங்கும் கூடாரங்களே கண்ணில் படுகின்றன.

எங்களின் தொடர் இடப்பெயர்வு மட்டுமின்றி மீண்டுமெங்கள் மண் சுதந்திர பூமியான நிலையில் எங்கள் வீடுகளுக்கு திரும்புவோம் என்ற நம்பிக்கையில் முடிவுக்கு வரும் நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றது என்பதை அறியாமலே புது மாத்தளன் பாலத்தைக் கடந்து முள்ளிவாய்க்கால் பிரதேசத்துக்குள் இறங்கினோம்.

அருவி இணையத்துக்காக நா.யோகேந்திரநாதன்

தொடரும்


Category: முகப்பு, சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை, வட மாகாணம், முள்ளிவாய்க்கால்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE