Friday 29th of March 2024 09:48:29 AM GMT

LANGUAGE - TAMIL
-
அவுஸ்திரேலியாவில் அகதிகள் குறித்து  சட்டத் திருத்தத்துக்குக் கடும் எதிா்ப்பு!

அவுஸ்திரேலியாவில் அகதிகள் குறித்து சட்டத் திருத்தத்துக்குக் கடும் எதிா்ப்பு!


அவுஸ்திரேலிய குடிவரவு தடுப்பு முகாம்களில் கைத்தொலைபேசிகள், இணையத் தொடர்பாடல் கருவிகள் உள்ளிட்ட பொருட்களையும் தடைசெய்வது மற்றும் அவற்றை தேடுதல் நடத்தி சுவீகரிப்பதற்கு அவுஸ்திரேலிய எல்லைப் படைகளுக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத்திருத்தத்துக்கு கடும் எதிா்ப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இத்தகைய சட்டத்திருத்தம் தடுப்பு முகாம்களிலுள்ள அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களை கடுமையாக பாதிக்கும் என அகதிகள் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தடுப்புமுகாமிலிருந்த பிரியா-நடேஸ் குடும்பத்திடம் கைத்தொலைபேசி இருந்திருக்காவிட்டால் அவர்கள் இப்போது நாடுகடத்தப்பட்டு இலங்கைக்கு அனுப்பப்பட்டிருப்பார்கள் என அகதிகள் செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேபோன்று குர்திஷ் பின்னணி கொண்ட அகதியான பெஹ்ரூஸ் பூச்சானி விருதுவென்ற நூலை எழுதியிருக்க முடியாது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தடுப்பு முகாமிலுள்ள அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களிடம் கைத்தொலைபேசிகள் இல்லாது போனால் முகாம்களுக்குள் நடைபெறும் வன்முறைகள், அத்துமீறல்கள் போன்றவை வெளியேவராது போய்விடும் என்பதுடன் மரணங்கள்கூட சம்பவிக்கலாம்.

இந்த நிலைமைகளைக் கருத்தில் கொண்டு அங்குள்ளவர்கள் தொடர்ந்தும் கைத்தொலைபேசிகளை பயன்படுத்துவது அவசியமாவதாக அகதிகள் செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் சட்டத்திருத்தத்தின் மூலம் தடுப்பு முகாம்களிலுள்ள அனைவரது கைத்தொலைபேசிகளும் கைப்பற்றப்படாது எனத் தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய பதில் குடிவரவு அமைச்சர் ஆலன் டட்ஜ் , கைத்தொலைபேசிகளை தவறாகப் பயன்படுத்துபவர்களிடமிருந்து அவற்றைப் பறிமுதல் செய்யும் வகையிலேயே புதிய சட்டம் அமையும் எனக் குறிப்பிட்டார்.

குடிவரவு தடுப்பு முகாம்களில் அகதிகள் மாத்திரமன்றி, பாலியல் வல்லுறவு - போதைப்பொருள் பாவனை - சிறுவர் பாலியல் துன்புறுத்தல் என பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் பலர் விசா இரத்துச்செய்யப்பட்டு, நாட்டைவிட்டு வெளியேற்றப்படும் வரையில் மேற்படி தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

குறித்த நபர்கள் தடுப்புமுகாம்களுக்குள் தங்களது நடவடிக்கைகளை தொடர்வதை தடுக்கும் முகமாக இந்தப்புதிய சட்டத்திருத்தம் கொண்டுவரப்படவுள்ளதாக பதில் குடிவரவு அமைச்சர் ஆலன் டட்ஜ் தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள சட்டங்களின்படி, தடுப்புமுகாம்களில் தேடுதல் நடத்தவும் தடைசெய்யப்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவற்றை சுவீகரிப்பதற்கும் பொலிஸாருக்கு மாத்திரமே அதிகாரமுள்ளது.

அவுஸ்திரேலியா முழுவதுமுள்ள 10 குடிவரவு தடுப்புமுகாம்களில் 1370 பேர் வரை தற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: ஆஸ்திரேலியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE