Tuesday 19th of March 2024 12:21:22 AM GMT

LANGUAGE - TAMIL
நா.யோகேந்திரநாதன்
முள்ளிவாய்க்காலில் முடிந்த பயணம் - 03

முள்ளிவாய்க்காலில் முடிந்த பயணம் - 03


இரண்டாம் உலகப்போரின் இறுதி நாட்களில் -

அமெரிக்க விமானமொன்று ஐப்பானின் பிரபல தொழில் நகரமான ஹிரோஷிமா மீது அணுகுண்டை வீசுகிறது. கண்ணைப் பறிக்கும் மின்னலுடன் விழுந்து வெடித்த ‘சின்னப்பையன்’ என்ற அணுகுண்டு ஒரு குடையாக வானை நோக்கி விரிய அந்தக் காலைப்பொழுது இருள் மயமாகிறது. அந்தச் சில விநாடிகளில் ஒரு இலட்சம் மனித உயிர்கள் பறிக்கப்படுகின்றன. உயிர் தப்பி ஓடியோரும், கதிரியக்கப் பாதிப்பில் காலப்போக்கில் பல்வேறு நோய்களால் இறக்கின்றனர். மருத்துவமனைகள், பாடசாலைகள் உட்பட எழுபதாயிரம் கட்டிடங்கள் இருந்த இடம் தெரியாமல் சாம்பல் மேடுகளாகின்றன.

நான்காம் நாளில் நாகசாகி என்ற மக்கள் செறிந்து வாழும் ஒரு தொழில் நகரத்தின் மீது வீசப்பட்ட இன்னொரு அணுகுண்டும் அதே போன்ற பேரழிவுகளை ஏற்படுத்துகிறது.

இவ்விரு குண்டு வீச்சுகளும் முழு உலகையும் ஆக்கிரமிக்கும் நோக்குடனான ஐப்பானின் போர் வெறியை அடக்கி அதைச் சரணடைய வைக்க அமெரிக்கா மேற்கொண்ட நீதியான தவிர்க்கமுடியாத நடவடிக்கையென மேற்குலக அரசியல்வாதிகளால் நியாயப்படுத்தப்பட்டன.

வியட்நாம் விடுதலைப் போர் இடம்பெற்ற காலத்தில் ‘மைலாய்’ என்ற வியட்நாம் கிராமத்துக்குள் புகுந்த அமெரிக்கப் படையினர் ஆண்கள், பெண்கள், இளைஞர், முதியோர், யுவதிகள், குழந்தைகள் எனக் கண்ணில்பட்டவர்களையெல்லாம் சுட்டுத்தள்ளுகின்றனர். பல நூறு பிணங்கள் மைலாய் மண்ணில் குவிகின்றன.

இது தென்வியட்நாமிய ஜனநாயக அரசை பயங்கரவாதிகளிடமிருந்து காப்பாற்ற அமெரிக்கா மேற்கொண்ட நியாயமான நடவடிக்கையென அமெரிக்கத்தரப்பால் கூறப்பட்டது.

ருவாண்டா ஐனாதிபதி பயணித்த உளங்கு வானூர்தி தாக்கப்பட்டு அவர் உயிரிழந்ததை அடுத்து அவரின் இனத்தைச் சேர்ந்த ஹூட்டு இனத்தினர் அரச படைகளுடன் சேர்ந்து துட்சி இன மக்கள் மீது பெரும் இன அழிப்பை மேற்கொண்டனர். ஆறு மாதங்களில் பத்து இலட்சம் துட்சி இன மக்கள் கொன்று குவிக்கப்படுகின்றனர். ஏற்கனவே இரு இனங்களுக்குமிடையே இருந்த முறுகல் நிலையை கட்டுப்படுத்த அங்கு நிலைகொண்டிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படையின் அமெரிக்கப் பிரிவினர் அங்கிருந்து வெளியேறி பத்து இலட்சம் துட்சி இன மக்கள் கொல்லப்பட களமமைத்துக் கொடுத்தனர். அதுவும் பயங்கரவாதிகளை அழிப்பதற்கு மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டது.

சேவியர் பேரினவாதிகள் பொஸ்மிய இனத்தின் மீது நடத்திய இன அழிப்பு நடவடிக்கைகளில் பல்லாயிரக்கணக்கான பொஸ்மிய மக்கள் கொல்லப்பட்டனர்.

இப்படி இப்படியாக அமெரிக்கா நேரடியாகவும் மறைமுகமாகவும் மேற்கொண்ட அல்லது பின்னணியில் நின்று உதவி வழங்கிய மனிதப் பேரழிவுகளை வரலாறு அழிக்க முடியாதபடி எழுதி வைத்திருக்கிறது. உலகத்துக்கு சமதானத்தையும் அமைதியையும் பற்றிப் போதித்து உரக்கக் குரலெழுப்பும் அமெரிக்கா பயங்காரவாதத்துக்கு எதிரான போரென்றும் அடிப்படைவாதத்துக்கு எதிரான போரென்றும் கூறி ஒடுக்குமுறைகளுக்கு அடிபணியாதவர்களையும் சுதந்திரத்துக்காக நிமிர்ந்து நிற்பவர்களையும் இலட்சோப லட்சமாக மனித இனத்தை அழித்து வருகிறது.

அமெரிக்காவுக்கு எவ்விதத்திலும் குறைந்துவிடாத வகையில் இலங்கையின் ஆடசிபீடங்களில் அமர்பவர்கள் மனிதப் படுகொலைகளை தொடர்ந்து அரங்கேற்றி வருகின்றனர்.

1958ல் இனக்கலவரம் என்ற பேரில் தொடங்கப்பட்ட இனவழிப்பு காலங்காலமாக இனக்கலவரங்களாகவும், பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதென்ற பேரிலும் நிரந்த சமாதானத்தை ஏற்படுத்த எனக் கூறப்பட்டும் தொடரப்பட்ட முள்ளிவாய்க்காலில் மனிதப்படுகொலைகளின் உச்சகட்டம் அரங்கேற்றப்பட்டது.

ஒரு ஹிரோசிமா போல, ஒரு மைலாய் போல, ஒரு ருவாண்டா போல, ஒரு பொஸ்மியா போல ஒடுக்குமுறையாளர்கள் தங்கள் அடக்குமுறைகளை உறுதியாக நிலைநிறுத்த நடத்தப்பட்ட ஒரு அகோர கொலைவெறியாட்டம் தான் முள்ளிவாய்க்காலில் நிறைவேற்றப்பட்டது.

ஒரு புறம் கடலும், மறு புறம் வயல்களும் சூழ்ந்து கிடக்க அமைதி தவழும் உழைக்கும் மக்களின் கிராமம்தான் முள்ளிவாய்க்கால் உயிர்குடிக்கும் ரவைகளும், உடலைச் சிதறடித்து உயிரைப் பறிக்கும் குண்டுகளும் எம்மை விரட்ட நாம் அமைதி தவழ்ந்த முள்ளிவாய்க்கால் நோக்கி அடைக்கலம் தேடி ஓடினோம்.

விட்டார்களா நில ஆக்கிரமிப்பாளர்கள்! அந்த அழகிய கிராமத்தை குருதியால் அபிசேகம் செய்தனர். சதைத்துண்டங்களை விதைத்து சந்தோசம் கொண்டாடினர். பால் மா வாங்க வரிசையில் நின்றவர்களை பஸ்மீகரம் செய்தனர். கஞ்சிக்கு கையேந்தி நின்றவர்களை கை வேறு, கால் வேறாக சிதறடித்தனர்.

அமெரிக்காவே! உனக்கொரு ஹிரோசிமா என்றால் எங்களுக்கொரு முள்ளிவாய்க்கால் அதுவும் உன்னுதவியுடனேயே என எக்காளமிட்டனர் ஆட்சியாளர்கள்.

எனினும் இனவழிப்புக்கு அவர்களிட்ட பெயர் மனிதாபிமான நடவடிக்கை.

அவர்கள் நடத்தியது போரல்லவாம்! பயங்கரவாதிகளிடம் அகப்பட்ட மக்களைக் காப்பாற்றும் மனிதாபிமான நடவடிக்கையாம்!

அவர்களின் அந்த மனிதாபிமான நடவடிக்கையில் தான் பல்லாயிரக் கணக்கான மக்களைக் கொன்று குவிக்க பிண மலைகளை உருவாக்கினர்.

இந்த மனிதாபிமான நடவடிக்கையின் மகத்துவத்தை இவர்களாலும், இவர்களுக்கு உதவி வழங்கிய அமெரிக்க இந்திய ஒடுக்குமுறை ஆட்சியாளர்களாலும் மட்டுமே விளங்கிக்கொள்ள முடிந்தது.

ருவாண்டாவிலிருந்து ஐநா அமைதிப்படையின் அமெரிக்க அணியினர் வெளியேறியதைப் போன்றே கிளிநொச்சியிலிருந்து ஐநா நிறுவனம் வெளியேறி இன அழிப்புக்கு பச்சைக் கொடி காட்டியதை முள்ளிவாய்க்காலில் சாவுக்கும் வாழ்வுக்குமிடையே தத்தளித்த போது நாம் புரிந்து கொண்டோம்.

அந்த நாட்கள் -

சாவு சாதாரண விடயமாகவும், சாவிலிருந்து தப்புதல் தற்செயலானவையாகவும் மாறிவிட்ட நாட்கள்.

முன்னேறி வந்த அரச படையினை தடுத்து நிறுத்தும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட அளம்பில் தரையிறக்கம் சுதந்திரபுரம் இராணுவத்தளம் மீதான தாக்குதல் என்பன எதிர்பார்த்த வெற்றியை அடையமுடியவில்லை. ஆனந்தபுரத்தை பாதுகாக்க போராளிகள் நடத்திய பெரும் வீரம் செறிந்த போராட்டத்தில் தளபதிகள் உட்பட பல போராளிகள் உயிர்களை அர்ப்பணித்தனர். எனினும் அங்கிருந்து பின்வாங்கவேண்டிய கட்டாயம் எழுந்தது.

ஏப்ரல் 18ல் அரச படைகள் நந்திக்கடல் தாண்டி புது மாத்தளனுக்குள் இறங்குகின்றன.

4 கிலோமீற்றர் நீளமும், ஒன்றரைக் கிலோமீற்றர் அகலமும் கொண்ட ஒரு சிறு பிரதேசத்துக்குள் முன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அரச படைகளால் சுற்றி வளைக்கப்பட்டு தொலைதூர துப்பாக்கிகளாலும் எறிகணைகளாலும், விமானக்குண்டுகளாலும் வகை தொகையின்றி கொன்று குவிக்கப்படுகின்றனர். உயிர்களையும், உடலுறுப்புகளையும் தொடர்ந்து இழந்தவாறே மாத்தளன், பொக்கணை, வளைஞர்மடம் என நகர்ந்து நகர்ந்து முள்ளிவாய்க்காலுக்குள் தஞ்சமடைகிறோம். இறந்த உறவுகளுக்கு இறுதிக் கிரியை செய்யவோ மூன்று பிடி மண் போட்டு புதைக்கவோ இறந்து கொண்டிருந்தவரை மடியில் படுத்தி ஒரு முடறு தண்ணீர் குடிக்கவோ வழியற்ற நிலையில் மனித அவலத்தின் உச்சத்தை அனுபவித்தோம். உண்ண உணவில்லை; தாகம் தீர்க்கப் போதிய நீர் இல்லை; கண்ணயர்ந்து தூங்க வழியில்லை; இப்படியான நிலைமைகளை அனுபவித்தவாறே துடிதுடித்தோம்.

துப்பாக்கி வேட்டுகளை தீர்த்தனர், எறிகனைகளை வீசியவாறு அரச படையினர் இயம தூதர்களாகவும் முன்னேறி வர நாங்கள் இறந்தவர்களையும், இறந்துகொண்டிருப்பவர்களையும் ஏறிமிதித்துக்கொண்டவாறு இரத்தத்தாலும், சதையாலும் சேறாக்கிய மண்ணைக் கடந்து ஓடிக்கொண்டிருந்தோம்.

வரலாற்றில் படித்த ஹிரோசிமாவை பத்திரிகைச் செய்திகளில் படித்த மைலாயை, ருவாண்டாவை, பொஸ்மியாவை நேரில் அனுபவித்தவாறே மரணங்கள் மத்தியில் ஓடிக்கொண்டிருந்தோம். நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாக ஐநா அறிக்கை தெரிவித்தது. ஆனால் கொல்லப்பட்டவர்களின் பல மடங்காக இருக்குமென கருதப்படுகிறது.

இறுதியில் -

வட்டுவாகலில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கி விரட்டப்படுகிறோம்.

வெற்றியின் எல்லை வரை விரிந்து பரந்து வளர்ந்த விடுதலைப் போராட்டத்தில் ஒரு சகாப்தத்தை முள்ளிவாய்க்காலில் பறிகொடுத்து விட்டு வெறும் கைகளுடனும் துயர் சுமந்த மனதுடனும் வட்டுவாகல் நோக்கி நடந்தோம்.

எனினும் - அடுத்த சகாப்தத்தின் வருகைக்காக எங்கள் இதயம் காத்துக்கிடக்கிறதென்பது மட்டும் வெளியே தெரியாத ஆனால் மாற்ற முடியாத உண்மையாகும்.

அருவி இணையத்துக்காக நா.யோகேந்திரநாதன்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை, வட மாகாணம், முள்ளிவாய்க்கால்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE