;

Saturday 15th of August 2020 05:34:20 AM GMT

LANGUAGE - TAMIL
எங்கே தொடங்கியது இன மோதல் - 06
தமிழர்களின் உரிமைகளைப் பறித்த “கண்டி ஒப்பந்தம்”  - (வரலாற்றுத் தொடர்)

தமிழர்களின் உரிமைகளைப் பறித்த “கண்டி ஒப்பந்தம்” - (வரலாற்றுத் தொடர்)


“கீர்த்தி ஸ்ரீ விக்கிரமராஜ சிங்கனின் தான்தோன்றித்தனமானதும், மூர்க்கத்தனமானதுமான செயற்பாடுகள் மற்றும் சட்டவிரோதமான எதேச்சதிகாரம் காரணமாக அரச பதவிக்கும் பட்டங்களுக்கும் உரித்தான சகல வாய்ப்புகளும் இல்லாதொழிக்கப்படுகின்றன.”

இது கண்டி ஒப்பந்தத்தின் முதலாவது பந்தியில் உள்ளடக்கப்பட்ட விடயங்களாகும்,

“மன்னன் இராஜசிங்கனும் அவனின் உறவினர்களும், அவனது தந்தை வழி தாய்வழி என இரு வழிகளிலும் உறவு பூண்டவர்களும், திருமணங்கள், மறுமணங்கள் மூலம் மன்னனின் உறவினர்களானவர்களும் கண்டி ராச்சியத்தைவிட்டு வெளியேற வேண்டும்.”

இது இரண்டாவது பந்தி மூலம் விடுவிக்கப்பட்ட ஆணையாகும்.

“தமிழினத்தவர்களுக்குக் கண்டி இராச்சியத்தில் இருந்து வரும் சகல உரிமைகளும் இல்லாதொழிப்பதற்கும் அழிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். பிரிட்டிஸ் அரசின் அனுமதியின்றி இப்பிராந்தியத்துக்குள் பிரவேசிப்பதற்கு இவர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதை மீறுபவர்கள் ‘மார்ஷல்லோ” எனப்படும் இராணுவச்சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவார்கள். பிரித்தானியப் படைகள் கண்டியில் உள்நுழைந்தபோது வெளியேற்றப்பட்ட சகல ஆண்களுக்கும் இது பொருந்தும்.”

இது ஒப்பந்தத்தின் மூன்றாவது பந்தி வலியறுத்தும் விடயமாகும்.

இங்கிலாந்தை தலைமையாகக் கொண்ட பிரித்தானிய அரசின் கிரீடத்துக்கு கண்டி இராச்சியத்தின் ஆட்சிப் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. அதன் நிர்வாகப் பொறுப்புகள் இலங்கைக்கான பிரித்தானிய ஆளுனரைச் சாரும் பிரிட்டிஸ் அரசால் நியமிக்கப்படும் மாவட்ட பிரதேச நிர்வாகிகள் தமது கடமைகளை அரச சேவையாக மேற்கொள்ளவேண்டும்.

இது அடுத்த பந்தியாகும்.

மேலும் அந்த ஒப்பந்தம் மூலம் இந்த நாட்டின் சம்பிரதாய அரசியலையும், பிற கலாச்சார விழுமியங்களையும் பாதுகாக்கும் கடமைகளும் பிரித்தானிய அரசுக்கே உரித்தாக்கப்பட்டது.

இலங்கைக்கான பிரித்தானிய ஆளுனர் பிறன்றிக்குக்கும், கண்டிய சிங்கள பிரதானிகளான ரதல் பிரபுக்களுக்குமிடையே 1815ம் ஆண்டு கண்டி ஒப்பந்தம் என்ற பேரில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டவையாகும். இதில் பிரித்தானியாவின் தரப்பில் ஆளுனர் பிரவுன்றிக்கும், இலங்கையின் பேரில் “ரதல” பிரபுக்களும் கையெழுத்திட்டு ஏற்றுக்கொண்டனர். ஆளுனர் பிரவுன்றிக்கின் சந்திப்பை அடுத்து மல்வத்த, அஸ்கிரிய பௌத்த பீடங்களின் பீடாதிபதிகளும் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டனர்.

இக்கண்டி ஒப்பந்தம் இருதரப்பினருக்கிடையே மேற்கொள்ளப்பட்ட ஒரு ஒப்பந்தம் எனக்கூறப்பட்டபோதிலும் அடிப்படையில் சிங்களத்தலைவர்கள் மனமுவந்து கையெழுத்திட்ட ஒரு அடிமை சாசனம் என்பதே உண்மையாகும்.

ஆங்கில ஆட்சியாளர்கள் மீண்டும் மீண்டும் பலமுறை படையெடுப்புகள் முதற்கொண்டு பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டபோதும் கீர்த்தி ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனை மன்னனாகக் கொண்டு சுதந்திர தேசமாக நிமிர்ந்து நின்ற கண்டி இராசதானியை அவர்களால் வெற்றிகொள்ள முடியவில்லை. எஹலப்பொல, மொலிகொட, பிலிமத்தலாவ, ஹெப்பட்டிப்பொல போன்ற “ரதல” வம்ச நிலப்பிரபுக்கள் ஆங்கிலேயருடன் இணைந்து மேற்கொண்ட சூழ்ச்சிகள் காரணமாக 235 ஆண்டுகள் கட்டிக்காக்கப்பட்ட கண்டி அரசின் சுயாதிபத்தியம் வெள்ளையரிடம் பறிகொடுக்கப்பட்டது. இதில் கடைசி 76 ஆண்டுகளையும் நாயக்க வம்சத்தைச் சேர்ந்த தமிழர்களே ஆட்சி செய்ததுடன் ஐரோப்பியர்களிடம் அடிபணிந்து போகாத சுதந்திரப் பிரதேசமாக கண்டியை பாதுகாத்தனர். ஆனால் எஹலப்பொல ஆங்கிலேயருடன் இணைந்து கண்டிப்படையெடுப்பின்போது ஆங்கிலேய படையினரின் ஒரு துணைப்படையாகச் செயற்பட்டான்.

எஹலப்பொலவும், சில கண்டிய ரதல பிரபுக்களும் கீhத்தி ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் தோற்கடிக்கப்பட்ட பின்பு தாங்கள் எஹலப்பொலவை மன்னனாகக் கொண்டு கண்டியை வெள்ளையருக்கு கப்பம் கொடுக்கும் ஒரு அரசாக தாங்கள் ஆட்சிபுரிய முடியுமென்று கனவு கண்டனர். ஆனால் 02.03.1818 ஆளுனர் பிறெலியினால் பிரகடனப்படத்தப்ட்ட கண்டி ஒப்பந்தத்தின் மூலம் அவர்களின் கனவு முறியடிக்கப்பட்டது. எஹலப்பொலவின் மன்னனாகும் ஆசையில் மண் விழுந்தது. எனினும் தான் ஆங்கிலேயரின் ராஜப் பிரதிநிதியாக அதிகாரம் செலுத்தலாம் என நம்பினான். அவ்வகையிலேயே 18.03.1815ல் எஹலப்பொல, பிலிமெத்தலாவ கலகொட திசாவ உட்பட பல கண்டிய பிரபுக்கள் கையெழுத்திட்டு கண்டி ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

1505 தொட்டு 1815 வரை 310 ஆண்டுகளில் கண்டி கோட்டை இராசதானியின் ஒரு பகுதியாக இருந்த காலத்திலும் சரி, 1590ன் பின்பு 225 ஆண்டுகள் தனி இராசிசயமாக இருந்தபோதிலும் சரி போத்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் என எந்த அந்நிய சக்திகளாலும் கண்டியைக் கைப்பற்றமுடியவில்லை. ஆனால் ஒரு தமிழனின் ஆட்சி வீழ வேண்டுமென்ற ஒரே காரணத்துக்காக கண்டிய சிங்களப் பிரதானிகள் ஆங்கிலேயருடன் இணைந்து கண்டி அரசை வீழ்த்தினர். அதனடிப்படையிலேயே சிங்கள ‘ரதல’ பிரபுக்களுக்கும், பிரித்தானிய அரசின் ஆளுனர் பிறவுன்ற்றெக்குக்குமிடையே கண்டி ஒப்பந்தம் கையெழுத்தானது.

இவ்வொப்பந்தத்தின் 1ம் பந்தி தொடக்கம் 5ம் பந்தி வரையிலான பந்திகள் கீர்த்தி ஸ்ரீ விக்கிரமசிங்கனதும், அவனின் உறவினர்களினதும் கண்டியில் குடியிருக்கும் உரிமை உட்படச் சகல உரிமைகளும் மட்டுமன்றி தமிழ் மக்களினதும் அத்தைகைய உரிமைகளும் பறிக்கப்படுவதை வலியுறுத்துகின்றன.

மேலும் ஐந்து பந்திகளின் மூலமும் தமிழ் மக்களின் உரிமைப் பறிப்பு உறுதி செய்யப்பட்ட பின்பே இந்த ஒப்பந்தம் பௌத்த மதம் பற்றியும் சிங்கள கலாசாரம் பற்றியும் குறிப்பிடுகிறது. அதுவும் பௌத்த மதத்தையும் சிங்கள கலாசாரத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு ஆங்கில அரசிடமே ஒப்படைக்கப்டுகிறது.

எனவே இந்தக் கண்டி ஒப்பந்தத்தின் மூலம் கண்டியின் சிங்கள தமிழ் மக்கள் ஆங்கில ஆட்சியின் கீழ் நேரடியாகவே கொண்டுவரப்பட்டனர். அத்துடன் முழு இலங்கையும் பிரித்தானியர் வசமானது.

கண்டியின் ‘மகுல்மடுவ’ என்ற அரச மண்டபத்திலேயே இவ்வொப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. பொதுமக்கள் ஆங்கிலேயரை ஏற்றுக்கொள்ளாத காரணத்தால் அவர்கள் பெரும் இராணுவ மரியாதையுடன் இடம்பெற்ற இந்த நிகழ்வை புறக்கணித்தனர்.

ஆங்கிலேயர் கண்டி நகரைக் கைப்பற்றியதும் 02.03.1815 அன்று சிங்கக் கொடியை இறக்கிவிட்டு பிரித்தானிய யூனியன் ஜாக் கொடியை ஏற்றினர். வாரியப்பொல சுமங்கலதேரர் தலைமையில் ஊர்வலமாகச் சென்ற பொதுமக்கள் யூனியன் ஜாக் கொடியை இழுத்து இறக்கிக் கிழித்தெறிந்தனர். சுமங்கல தேரர் உடனடியாகவே கைதுசெய்யப்பட்டார். இவர் மாட்சிமை தாங்கிய மன்னருக்கு எதிராகக் கலகம் விளைவித்தவர்களுக்கு ஆதரவளித்தமை, தலதா மாளிகையின் புனிதச் சின்னங்களை எடுத்துச்சென்றமை போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் சிறையிலடைக்கப்பட்டார். யாழ்ப்பாணச் சிறையிலடைக்கப்பட்ட இவர் பின்பு இவரது முதுமை காரணமாக விடுதலை செய்யப்பட்டார்.

இச்சம்பவம் ஆளுனர் பிறவுன்றிக்கை எச்சரிக்கையடைய வைத்தது. அதுமட்டுமின்றி பொத்த மதகுருமாரை சாந்தப்படுத்தி வைக்கவேண்டிய அவசியம் பற்றி பிலிமெத்தலாவ, பிறவுன்றிக்குக்கு அறிவுரை வழங்கியிருந்தார். ஏற்கனவே ஆங்கிலேயருடன் இரகசிய உறவை பேணிவந்த பிலிமெத்தலாவ ஆங்கிலப்படைத்தளபதியின் உளவாளி மூலமாக தளபதி டெய்லிக்கு கண்டியின் இராசதானியைக் கைப்பற்றி அதன் ஆட்சியுரிமை நிலைநிறுத்த வேண்டுமானால் அதற்கான வழி நான்கு தேவாலயங்களையும் வழிபட்டுத் தெய்வாசி பெறவேண்டுமெனவும் பசுவதை, மாட்டிறைச்சிப்பாவனை மூலம் தெய்வ நிந்தனைக் குற்றமிழைத்தமைக்காக நோய்வாய்ப்படுதலும், அடிமைப்படுத்தலும் ஏற்படுமெனவும் எச்சரித்திருந்தான். 1803ல் பெருமெடுப்பில் கண்டியைக் கைப்பற்ற வந்த ஆங்கிலப்படைகள் தோல்வியடைந்தமைக்கும,; கீர்த்தி ஸ்ரீ விக்கிரமராஜசிங்கனிடம் அடிபணிய வேண்டி வந்தமைக்கும் மேற்கூறப்பட்ட தெய்வகுற்றங்களே காரணமெனவும் தெரிவித்திருந்தார். எனவே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட அன்று மாலை ஒப்பந்தம் தொடர்பாக மதகுருமாரிடம் ஏற்பட்ட அதிருப்தியைக் களையும் முகமாக ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது மதகுருமார் அமரும் ஆசனங்களுக்கு வெள்ளைத்துணி விரிக்கப்பட்டதுடன் ஆளுனரின் வலது புறத்தில் மல்வத்தை பீடாதிபதியும் இடதுபுறத்தில் அஸ்கிரிய பீடாதிபதியும் அமர வைக்கப்பட்டனர்.

அதில் ஆளுனர் பிறவுன்றிக், விகாரைகளின் புனிதத்தையும், மேன்மையையும் பாதுகாப்பதாகவும் பௌத்த மதத்திற்கு உயரிய மரியாதை வழங்கப்படுமெனவும் உறுதியளித்தான். அது மட்டுமின்றி 1815 மாhச் 19ம் நாள் பிறவுண்றிக் தனது அலுவலகமாக பாவித்து வந்த தலதா மாளிகையின் பத்திரிப்பு மண்டபத்தை பௌத்த குருமாரிடம் கையளித்தான். மல்வத்தை பீடாதிபதி ஆளுனரைப் பாராட்டியதுடன் இனி பௌத்தம் இந்த மண்ணில் தழைக்கும் என பிரகடனம் செய்தார்.

இவ்வாறு போர் மூலமாகத் தோற்கடிக்கப்பட முடியாத ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனை சிங்கள பிரபுத்துவ பிரதானிகள் சதி மூலம் தோற்கடித்து, பிரித்தானிய ஆட்சியின் அடிமை நாடாக இலங்கையை மாற்றினார்.

இங்கு நாம் அவதானிக்ககூடிய முக்கிய விடயமென்னவெனில் எந்த பிலிமத்தலாவ தனது அதிகாரத்தை நிலைநாட்டும் நோக்கத்துடன் கீhத்தி ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனைச் சிம்மாசனம் ஏற்றினாரோ அவரே மன்னனின் ஆட்சியைக் கவிழ்க்கச் சதி செய்ததும், அது தோற்கடிக்கப்பட்ட பின்பு மன்னனைக் கொல்லச் சதி செய்தும், இறுதியில் மன்னனால் மரண தண்டனைக்குட்படுத்தப்பட்டார்.

கீர்த்தி ஸ்ரீ விக்கிரமராஜசிங்கனின் ஆட்சியைக் கவிழ்ந்து திபேத்திய இளவரசனுக்கு முடிசூட்ட எடுத்த முயற்சி தோற்கடிக்கப்பட்ட பின்பு அதில் சம்பந்தப்பட்ட ரதல பிரபுக்கள் மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர். 1782ல் அவனின் இறப்பையடுத்து அவனின் தம்பி ராஜாதிராஜசிங்கன் சிம்மாசனமேறினான். அவனது ஆட்சியில் மகா அதிகாரம் பிலிமெத்தலாவ தொடர்ந்தும் அரசனுக்கு அச்சுறுத்தலாகவே விளங்கினார். 1798ல் அரசன் இறந்தபோது அவனின் இறப்புக்கு பிலிமெத்தலாவையே காரணமென கருதப்பட்டது.

சிங்கள நில பிரபுக்கள் சிலரை ஆட்டிப்படைக்கும் நோக்குடன் அரசர்களாக்குவதும் அது சாத்தியமாகாத நிலையில் அவர்களுக்கு எதிராகச் சதி நடவடிக்கைகளில் ஈடுபடுவதும், அந்நிய நாட்டவரை நாயக்க மன்னர்களுக்கு பதிலாக ஆட்சியேற்ற முயல்வதும் மீண்டும் மீண்டும் இடம்பெற்றுவந்தன.

இறுதியில் 1815ல் கீர்த்தி ஸ்ரீ விக்கிரமராஜசிங்க மன்னனின் ஆட்சியை வீழ்த்தி ஆங்கிலேயரிடம் கண்டி இராச்சியத்தை ஒப்படைத்ததன் மூலம் இலங்கையின் சுதந்திரமே பறிக்கப்பட்டது.

கண்டி ஒப்பந்தம் என்பது சிங்கள நில பிரபுக்களுக்கும் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்குமிடையே மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கை என கூறப்பட்ட போதிலும் அடிப்படையில் அது ஆங்கிலேயருக்கு இலங்கையை அடிமை நாடாக விற்றமைக்கான ஒரு அடிமை சாசனமாகும் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

அருவி இணையத்துக்காக நா.யோகேந்திரநாதன்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கைபிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE