Friday 19th of April 2024 12:51:11 AM GMT

LANGUAGE - TAMIL
-
கிழக்கில் தொல்பொருட்களை பாதுகாக்க விசேட செயலணி - ஜனாதிபதி வாக்குறுதி!

கிழக்கில் தொல்பொருட்களை பாதுகாக்க விசேட செயலணி - ஜனாதிபதி வாக்குறுதி!


கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை முறையாக மதிப்பீடுசெய்து பாதுகாப்பதற்கு பாதுகாப்பு செயலாளரின் தலைமையில் ஜனாதிபதி செயலணியொன்றை அமைப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் அழிவடைவது குறித்து பல்வேறு தரப்பினர் விடயங்களை முன்வைத்து வருகின்றனர். இவை அனைத்தையும் கருத்திற்கொண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை மையப்படுத்தி அவற்றை பாதுகாக்கும் விரிந்த நிகழ்ச்சித்திட்டமொன்றை தொல்பொருள் திணைக்களத்தின் உதவியுடன் நடைமுறைப்படுத்துவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஓவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமை ஒன்றுகூடும் பௌத்த ஆலோசனை சபை இரண்டாவது தடவையாக நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஒன்றுகூடியது. இங்கு மகாசங்கத்தினரிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

பௌத்த சமயத்திற்கும் திரிபீடகத்திற்கும் முரணாக சில பிக்குகளின் செயற்பாடுகள் உள்ள காரணத்தினால் பௌத்த சாசன உரையாடலொன்றின் தேவை குறித்து மகா சங்கத்தினர் விரிவாக ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தினர்.

அது பற்றி மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் முன்மொழிவுகளை சமர்ப்பித்தால் தனது பதவிக் காலத்தில் அதற்கு தேவையான தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

உலகின் அனைத்து நாடுகளும் கொவிட் 19 நோய்த்தொற்றினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின் அனைத்து மக்களையும் பாதுகாத்து ஜனாதிபதி அவர்கள் மேற்கொண்டு வரும் பணியை மகா சங்கத்தினர் பாராட்டினர் என ஜனாதிபதி செயலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏப்ரல் 30ஆம் திகதிக்கு பின்னர் சமூகத்தில் எந்தவொரு கொவிட் நோய்த் தொற்றுடையவரும் கண்டறியப்படாமை சுகாதார மற்றும் பாதுகாப்பு துறைக்கு கிடைத்த பெரும் வெற்றியாகும் என ஜனாதிபதி மகாசங்கத்தினரிடம் தெரிவித்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வருவோர் நோய்த்தடுப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் குவைட் மற்றும் டுபாய் நாடுகளில் இருந்து வருகை தந்த சிலர் கோவிட் நோய்த்தொற்றுக்கு ஆளாகியிருந்தனர். நாட்டுக்கு வருகை தருவோர் தொடர்பில் சுகாதார ஆலோசனைகளுக்கு ஏற்ப பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பிரிவெனா மற்றும் பாடசாலை கல்வித் துறையின் தற்போதைய நிலை குறித்து பௌத்த ஆலோசனை சபை விரிவாக கலந்துரையாடியது. இலக்கியம் மற்றும் வரலாறு ஆகிய பாடங்களை கல்வித்திட்டத்திலிருந்து நீக்குவதற்கு சில காலகட்டங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மகாசங்கத்தினர் சுட்டிக்காட்டினர்.

தனது கொள்கை பிரகடனத்தில் முதன்மையான இடத்தையும் முன்னுரிமையையும் கல்விக்கு வழங்கியிருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி , தேசிய கல்விக் கொள்கையொன்றை நடைமுறைப்படுத்தும் ஆரம்ப பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

நாடெங்கிலும் பரவியுள்ள போதைப் பொருள் பிரச்சினையை ஒழிப்பதற்கு விரிவான நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை மகாசங்கத்தினர் வலியுறுத்தினர். இந்த விடயத்தில் அரசாங்கத்திற்கும் மகாசங்கத்தினருக்கும் பாரிய பொறுப்பு உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

கடந்த குறுகிய காலப்பகுதியில் நாட்டினுள் கொண்டுவரப்பட்ட பெருந்தொகை போதைப்பொருட்களை கைப்பற்ற முடிந்திருப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். இந்த நிலைமையை முழுமையாக கட்டுப்படுத்தி போதைப் பொருள் பிரச்சினையை முற்றாக ஒழிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

தேசிய பாதுகாப்பு பற்றிய தனது பொறுப்பை முழுமையாக நிறைவேற்றுவதாகவும், அதற்காக திறமையும் இயலுமையும் கொண்ட அதிகாரிகளை நியமித்துள்ளதாகவும், ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். புலனாய்வுத் துறையை பலப்படுத்தி முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து தீவிரவாத, பயங்கரவாத குழுக்கள் குறித்தும் விசாரணை செய்வதற்கு பாதுகாப்பு தரப்புக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

படைவீரர்கள் நினைவு தின விழாவில் ஜனாதிபதி ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்க அகராதியில் வார்த்தைகள் இல்லை எனக் குறிப்பிட்ட மகாசங்கத்தினர், அதனையிட்டு ஜனாதிபதியை ஆசிர்வதித்தனர் எனவும் ஜனாதிதி செயலகம் தெரிவித்துள்ளது.

குழம்பிப் போயிருக்கும் சமூகத்தை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கு மகாசங்கத்தினருக்கு பாரிய பொறுப்பு உள்ளது என தேரர்கள் சுட்டிக்காட்டினர். தேரர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையே பிரச்சினையை ஏற்படுத்தும் விதமான ஊடக நடத்தையை மகா சங்கத்தினர் விமர்சித்தனர் எனவும ஜஜனாதிபதி செயலகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உலகின் அனைத்து நாடுகளும் கொவிட் நோய்த்தொற்றை ஒழிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கையை பாராட்டும் போது எதிர்க்கட்சி நேர்மையற்ற முறையில் அனைத்து நடவடிக்கைகளையும் எதர்ப்பது வெறுக்கத்தக்கதாகும் என்றும் தேரர்கள் சுட்டிக்காட்டினர்.

கொவிட் நோய்த்தொற்றினால் குழம்பிப் போயிருக்கும் சமூகத்தை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கு மகாசங்கத்தினருக்கு பாரிய பொறுப்பு உள்ளதுடன், அதற்காக பிக்குமார்களை கொண்ட குழுவொன்றை விரைவில் நியமித்து உரிய நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

மல்வத்தை பீடத்தின் அநுநாயக தேரர் சங்கைக்குரிய நியங்கொட விஜிதசிறி தேரர், அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக தேரர் சங்கைக்குரிய வெண்டருவே உபாலி தேரர், கலாநிதி சங்கைக்குரிய பஹமுனே சுமங்கள தேரர், கலாநிதி சங்கைக்குரிய மெதகம தம்மானந்த தேரர், ருவன்வெலி மகா சேய விகாராதிபதி சங்கைக்குரிய பல்லேகம ஹேமரத்ன தேரர், அமரபுர மகா நிகாயவின் சங்கைக்குரிய திருக்குணாமலயே ஆனந்த தேரர், தென் இலங்கை பிரதான சங்கநாயக்கர் சங்கைக்குரிய மெடரம்ப ஹேமரத்ன தேரர் உள்ளிட்டவ்கள் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனா் எனவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்து.


Category: செய்திகள், புதிது
Tags: கிழக்கு மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE