Saturday 20th of April 2024 09:23:20 AM GMT

LANGUAGE - TAMIL
-
வடமராட்சி கிழக்கில் கரைவலைத் தொழிலாளர்கள் 850 பேர் நிர்க்கதி! (காணொளி)

வடமராட்சி கிழக்கில் கரைவலைத் தொழிலாளர்கள் 850 பேர் நிர்க்கதி! (காணொளி)


யாழ்ப்பாணம் வடமராட்ச்சி கிழக்கு கட்டைக்காடு முதல் சுண்டிக்குளம் வரையான கடலில் நவீன முறையில் மீன்பிடிக்கும் கரைவலைத் தொழிலில் ஈடுபடுகின்ற 27 தொழில்களை உடனடியாக நிறுத்துமாறு நீரியல்வளத்துறை அமைச்சு பணித்ததால் அந்தத் தொழிலை நம்பியிருந்த சம்மாட்டி மாரும் மீனவர்களும் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, 2018 ஆம் ஆண்டு நீரியல்வளத்துறை அமைச்சராக இருந்த விஜயமுனி சொய்சா வழங்கிய அனுமதியை (பத்திரம் வைத்திருக்கிறார்கள்) அடுத்து கட்டைக்காடு, கேவில், பூனைத்தொடுவாய், வண்ணாங்கேணி, சுண்டிக்குளம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய கடற்கரையோரக் கிராமங்களில் உழவியந்திரங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நவீன கரைவலைத் தொழில் உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட்டன.

சராசரி ஒரு கோடி ரூபா பெறுமதியில் 27 சம்மாட்டிமார் தொழில் உபகரணங்களை கொள்வனவு செய்திருக்கின்றனர்.

தொடர்ந்தும் தொழில் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றபோது உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் குறித்த தொழில் நடவடிக்கைகளை கைவிடுமாறு நீரியல்வளத்துறை அமைச்சு கடந்த ஆறாம் திகதி பணித்திருக்கின்றது.

இதனால் ஒவ்வொரு சம்மாட்டிமாரின் தொழில் நடவடிக்கைகளிலும் சராசரி 30 தொழிலாளர்கள் என்ற அடிப்படையில் 800 இற்கும் அதிகமான பங்கெடுத்துவந்திருக்கின்றனர். முற்றுமுழுதாக குறித்த தொழிலாளர்களின் குடும்பத்தினர் குறித்த தொழில் வருமானத்தை நம்பியே வாழ்வாதாரத்தினை முன்னெடுத்துவந்திருக்கின்றனர்.

இந்நிலையில் திடீரென தொழில் நடவடிக்கைகள் கைவிடப்பட்டுள்ள சூழலில் ஒவ்வொரு தொழிலாளிக்கும் நாளாந்தம் ஆயிரம் ரூபாவும் உணவும் என்ற அடிப்படையில் ஒரு சம்மாட்டிக்கு நாளாந்தம் நாற்பதாயிரம் ரூபா செலவாவதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். கடந்த ஆறாம் திகதிக்கு பின்னர் ஒரு ரூபாய் கூட வருவாய் கிடைக்காத நிலையிலும் தொழிலாளர்களுக்கு ஊதியமும் உணவும் வழங்கப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை இவ்வாறான செலவினை ஈடு செய்யமுடியாத சில சம்மாட்டிமார் தொழில் முயற்சிகளை கைவிட்டுவிட்டு வீடுகளுக்கு திரும்பியிருப்பதாகவும் தெரியவருகிறது.

இதனிடையே நீரியல்வளத்துறைத் திணைக்களத்தினர் முன்வைக்கும் குற்றச்சாட்டின் அடிப்படையில்,

உழவியந்திரத்தினைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையினால், சிறிய வகை கடல் வாழ் உயிரினங்கள் வீணாக அழிவதாகவும், தோணிகளில் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற உள்ளூர் மீனவர்கள் பாதிக்கப்படுவதாவும் காரணம் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை இதற்கு பதில் தருகின்ற கரைவலைத் தொழிலாளர்கள், தாம் பயன்படுத்துகின்ற வலைகள் தங்கூசி வலைகள் இல்லை என்பதால் நில மட்டத்தில் அவை தாழ்ந்து ஏனைய கடல் உயிரினங்களை அழிக்கக்கூடிய அபாய நிலை இல்லை என்றும் தம்முடன் இது தொடர்பில் எந்த வித பேச்சுவார்த்தையும் நடத்தாமலேயே தம்மீது தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

இதனிடையே மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று உள்ளூர் மீனவர்களை சந்தித்துச் சென்றதாகவும் தம்மை சந்தித்து தமது நிலைப்பாடு தொடர்பில் கேட்டறியவில்லை என்றும் கவலை தெரிவிக்கின்றனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE