Wednesday 24th of April 2024 08:04:05 PM GMT

LANGUAGE - TAMIL
-
எங்கே தொடங்கியது இன மோதல் - 07 (வரலாற்றுத் தொடர்)

எங்கே தொடங்கியது இன மோதல் - 07 (வரலாற்றுத் தொடர்)


“மலைநாட்டுச் சிங்களவர்கள் தமது ஆட்சியின் சவக்குழியைத் தாமே தோண்டிக் கொண்டனர்” இது பிரபல அரசியல்வாதியும், சமசமாஜக் கட்சித் தலைவர்களில் ஒருவரும், வரலாற்று அரசியல் துறைகளில் ஒப்பற்ற வல்லுனருமான கலாநிதி கொல்வின் ஆர்.டி.சில்வா 1815ம் ஆண்டு கண்டிய நிலப் பிரபுக்கள் ஆங்கிலேயருடன் இணைந்து சதி செய்து கீர்த்தி ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனின் ஆட்சியை வீழ்த்தி, கண்டி ஒப்பந்தத்தின் மூலம் ஆங்கிலேயரிடம் மத்திய மலை நாட்டின் ஆட்சியை ஒப்படைத்ததைப்பற்றி வெளியிட்ட ஒரு கருத்தாகும்.

ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனின் ஆட்சியைக் கைப்பற்றிய ஆங்கிலேயர் ஆட்சியை வெள்ளையருக்குக் கப்பம் கட்டும் ஒரு நாடாகத் தங்களிடம் கையளிப்பார்கள் என்ற கனவு போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் என அந்நியத் தேசத்தவரால் 300 ஆண்டுகளாக அடிபணிய வைக்கமுடியாத ஒரு இராச்சியத்தை அடிமை நாடாக மாற்றியது. பல முறை பெரும் படையெடுப்புகளையும் மேற்கொண்டபோதும் வெற்றி கொள்ள முடியாத கண்டியை சிங்கள ரதல பிரபுக்களின் துரோகம் நாற்பதே நாட்களில் வீழ்த்தியது.

ஆங்கிலேயருடன் இணைந்து படை நடத்திக் கண்டியைத் தோற்கடிக்க ஆங்கிலேயருக்குச் சேவை செய்த மகா அதிகாரம் எஹலப்பொல தன்னை வெள்ளையர் கண்டியின் யுவராஜனாக நியமிப்பார்களென்றே நம்பினான். மன்னன் கீர்த்தி ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் கைது செய்யப்பட்ட ஆறாம் நாளில் அவனின் ஆடைகள், ஆபரணங்களை அணிந்து கிரீடத்தைச் சூடித் தன்னை அழகு படுத்துமளவுக்கு அவன் அப்பதவி பற்றிய கனவுகளை தனக்குள் வளர்த்திருந்தான். அவன் யுவராஜன் பதவியை விட வேறு எதையும் ஏற்கப்போவதில்லையென ஆங்கிலத் தளபதி டொய்லியிடம் கூறியிருந்தான்.

ஆனால் 03.03.1815ல் கண்டி ஒப்பந்தம் பிரகடனப்படுத்தப்பட்ட போது பிரிட்டிஷ் அரசர் முதலாம் ஜோர்ஜ் மன்னரே முழு இலங்கைக்குமான அரசர் என அறிவிக்கப்பட்டதுடன் எஹலப்பொலவின் எதிர்பார்ப்புக்குத் தலையடி விழுந்தது. டொய்லியின் பிரதம அமைச்சர் பதவி வழங்கப்பட்டபோது எஹலப்பொல அதை ஏற்க மறுத்துவிட்டான். கண்டிக்குள் ஆங்கிலப் படைகள் நுழைந்தபோது எவ்வித எதிர்ப்பும் காட்டாது ஆங்கிலப் படைகளுடன் இணைந்து கொண்டு ஒரு தோட்டா கூடச் சுடப்படாமல் கண்டி நகரைக் கைப்பற்ற உதவிய மொலிகொடவிற்கு அப்பதவி வழங்கப்பட்டது.

நாயக்க வம்சத்தின் ஆட்சியை முற்றாகவே துடைத்தழித்து ஆங்கிலேயருக்கு கப்பம் கட்டியாவது கண்டியின் அரச பீடத்தைக் கைப்பற்றிவிட வேண்டுமென்ற முனைப்புடன் துரோகத்தில் இறங்கியபோதும் அதிகாரம் ஆங்கிலேயரிடம் தாரைவார்க்கப்பட்டதே வினைபலனாக அமைந்த போது ரதல பிரபுக்கள் ஆங்கிலேயர் மீதான வெறுப்பின் உச்சத்துக்கே சென்றுவிட்டனர். ஏற்கனவே டொய்லி வாக்களித்தபடி கரையோர வர்த்தகத்திலும் கண்டிய பிரதானிகள் மேலோங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளவில்லை. கடல் அனுபவமும், வர்த்தகத்தில் பாரம்பரிய திறமையுள்ளவர்களுமான முஸ்லீம்களுடன் கண்டியப் பிரபுக்களால் போட்டி போடமுடியவில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக ஊவா வெல்லச பிரதேசத்தின் ராஜப்பிரதிநிதியாக ஹாஜி மரைக்கார் என்பவர் ஆளுனரால் நியமிக்கப்பட்டார்.

இத்தகைய ஏமாற்றுகளாலும் அவமதிப்புகளாலும் கடும் வெறுப்படைந்த நிலப்பிரபுக்களும், பௌத்த பிக்குமாரும் இணைந்து ஒரு பெரும் புரட்சி மேற்கொண்டு மலை நாட்டை மீண்டும் தம்வசப்படுத்த திட்டம் தீட்டினர்.

இக்கிளர்ச்சியில் எப்போதுமே ஆங்கிலேயருடன் இணைந்து கொண்டு செயற்படாத மடுதல்ல, இஹகம ரத்ன தேரர் தலைமையிலான பௌத்த பிக்குகள் முதன்மையானவர்களாகச் செயற்பட்டனர். மேலும் ஒல்லாந்தரால் கொண்டு வரப்பட்டுப் பின் கூலிப்படையாகச் செயற்பட்டு வந்த மலே படையினரின் முகாந்தரம், சாலிய முதலிகள் ஆகியோரை இணைத்துக் கொண்டனர். தயாரிப்புகள் மிக வேகமாக இடம்பெற்று நிறைவுறும் சந்தர்ப்பத்தில் எக்னல்லகொட திசாவ என்ற ரதல பிரபுவால் காட்டிக்கொடுக்கப்பட்டு அனைவரும் கைது செய்யப்பட்டனர். எக்கலிகொடவின் ஆதரவைப் பெறும் நோக்குடன் இஹகம ரத்ன தேரர் புரட்சி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், அதற்கு மடுகல்ல, எஹலப்பொல, பிலிமத்தலாவ ஆகியோர் ஆதரவு தருவதாகவும் தெரிவித்தார். தேரர் ஆதரவு எதிர்பார்க்க அவனோ துரோகம் செய்தான். எனவே சிறு சிறு கலகங்கள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், புரட்சி முழுமையாக ஆரம்பிப்பதற்கு முன்பே தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். மடுகல்ல கைது செய்ப்பட்டு 2 வருடக் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார். மலே முகாந்திரம் நாடுகடத்தப்பட்டார். இஹாகமவும் அவருடன் சேர்ந்த 10 பிக்குகளும் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் கோட்டைச் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

1816ல் ஆரம்பிக்கப்பட்ட புரட்சி முயற்சி தோற்கடிக்கப்பட்டாலும் கூட அது ஓய்ந்துவிடவில்லை.

வில்பாவ என்ற முன்னாள் பிக்கு, தான் நாயக்க வம்சத்தை சேர்ந்த துரைசாமியின் வாரிசு தானெனத் தெரிவித்து தன்னைக் கதிர்காமக் கந்தனே அரசனனாக நியமித்ததாகவும் கூறி ஆங்கிலேயருக்கு எதிரான கிளர்ச்சி நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கினான். ஆங்கிலேயரால் அனுப்பப்பட்ட ஹாஜி என்பவர் கிளர்ச்சியாளர்களால் கைது செய்யப்பட்டதுடன் வில்சன் என்பவர் படையுடன் வந்த போது கொல்லப்பட்டார்.

கண்டி அரசனை வீழ்த்த ஆங்கிலேயருடன் இணைந்து செயற்பட்ட ஹெப்பட்டிப்பொல தலைமையில் கிளர்ச்சியை அடக்க ஒரு படையை ஆங்கிலேயர் அனுப்புகின்றனர்.

ஏழு கோறளைகளில் ஒன்றான வாரியப்பொல திசாவவான கெப்பட்டிப்பொல வெல்லச வந்ததும் அங்கு காணப்பட்ட நிலைமைகள் அவனைப் புரட்சியாளர்களுடன் இணைய வைக்கிறது. அது மட்டுமின்றி இவன் ஆங்கிலேயரால் ஏமாற்றப்பட்ட எஹலப்பொலவின் மைத்துனரும் ஆவான். எனவே ஊவா பிரதேசத்தில் கண்டியின் சகல பிரதேசங்களிலிருந்து வந்து கலந்து கொண்ட 3,000 பேர் முன்னிலையில் வில்பாவ அரசனாக வெகு விமரிசையாக முடிசூட்டப்பட்டான்.

வெல்லசவில் ஆரம்பித்த புரட்சி வலப்பன்னே, ஊவா, தும்பற, ஹேவாஹற்ற, மாத்தளை, துவரகலவிய சப்பிரகமுவ என ஏழு கோறளைகளுக்கு பரவியது. சப்ரகமுவ, உடநுவர, யட்டிநுவர, கண்டி ஆகிய பிரதேசங்கள் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் வந்தது. ஆனால் கொழும்பு கண்டி வீதியிலுள்ள மெல்லிகொடவின் அதிகாரத்திலுள்ள 3 கோறளைகள் ஆங்கிலப் படைகளின் போக்குவரத்துக்குப் பேருதவியாக இருந்தது.

வில்பாவவை அரசனாக ஏற்றுக்கொள்ள மறுத்த இளைய பிலிமத்தலாவவை மதுரையிலிருந்து நாயக்க வம்சத்தைச் சேர்ந்த ஒருவனைக் கொண்டு வந்து முடிசூட்டிய போதும் காலப்போக்கில் கெப்பிட்டிபொலவுடன் இணைகிறார்.

கெப்பிட்டிபொல புரட்சியின் தலைமையை ஏற்றுக்கொண்ட பின்பு கிளர்ச்சி பேரலையாக எழுந்து ஆங்கில அரசைத் திணறடித்த நிலையில் மே 1818ல் இந்தியாவிலிருந்து பல படையணிகள் நவீன ஆயுதங்களுடன் இறக்கப்பட்டன.

நவீன ஆயுதங்களுடன் வந்த பயிற்றப்பட்ட ஆயிரக்கணக்கான படையினருடன் வில்லம்புகளையும், காலாவதியான ஆயுதங்களையும் கொண்ட கிளர்ச்சியாளர்களால் நின்று பிடிக்கமுடியவில்லை. அவர்கள் பின்வாங்க ஆரம்பித்தனர்.

அது மட்டுமின்றி கிளர்ச்சி பலவினமடைய ஆரம்பித்ததும் சிங்கள அதிகாரிகள் பலர் புரட்சிவாதிகளைக் ஆங்கிலப்படைகளிடம் காட்டிக்கொடுப்பதில் தீவிரமாக இறங்கினர். ஆங்கிலெயர்களும் காட்டிக்கொடுப்பவர்களுக்கு சன்மானங்களையம், சலுகைகளையும் அள்ளி வழங்கினர்.

சில துரோகிகள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் 08.09.1818 அன்று நுவரகல பகுதிக்குள் இறங்கிய கப்டன் ரோவர் என்ற தளபதி மானவை என்ற இடத்தில் தங்கி புரட்சியாளர்களைத் தேடும் வேட்டையை ஆரம்பித்தான். அதே வேளையில் அனுராதபுரத்திலிருந்து 22 மைல் தொலைவிலுள்ள புளியங்குளம் என்ற இடத்திலிருந்து படையுடன் புறப்பட்ட வில்லியம் ஒலிவ் என்ற தளபதி நகர்வை மேற்கொள்கின்றான். போராளிகள் தமது இடத்திலிருந்து பின்வாங்குகின்றனர். எனினும் அப்பகுதியிலுள்ள ஒருவன் கொடுத்த தகவலின் அடிப்படையில் கெப்பட்டிப்பொல, பிலிமத்தலாவ, மடுகல்ல உட்பட்ட கிளர்ச்சியாளர்கள் வில்லியம் ஒலிவ்வின் படைகளால் காஹவல்ல கிராமத்தில் வைத்து சுற்றிவளைக்கப்படுகின்றனர்.

‘நான்தான் கெப்பிட்டிப்பொல’ என தன்னை அறிமுகப்படுத்திய எவ்வித எதிர்ப்புமின்றி வெளியில் வந்து சரணடைகிறான். கால்முறிவு காரணமாக படுக்கையிலிருந்த பிலிமத்தலாவவும் கைது செய்யப்படுகிறான். இவன் கீர்த்தி ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனை கொலை செய்ய முயற்சித்து மரண தண்டனைக்குட்படுத்தப்பட்ட பிலிமத்தலாவவின் மகன் என்பதுடன் கண்டி ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டவர்களில் முக்கியமானவர்களில் ஒருவன். மேலும் வாரியகம தேரரிடமிருந்து புனித தந்தம் கைப்பற்றப்பட்டதுடன் அவரும், அவருடன் சேர்ந்த பத்து பிக்குகளும் கைது செய்யப்படுகின்றனர். எனினும் மடுகல்ல ஆங்கிலேயரின் முற்றுகையை உடைத்துக் கொண்டு முப்பது வீரர்களுடன் தப்பி விடுகிறான். எனினும் மடுகல்ல ஒரு துரோகியின் காட்டிக்கொடுப்பின் பேரில் மலைக்குன்றுகளுக்கு அப்பாலுள்ள காட்டுக்குள் வைத்து கைது செய்யப்படுகிறான். அதேவேளையில் இவர்களுடன் நேரடியாக இணைந்து செயற்படாத எகலப்பொலவும் மேலும் இருபது சிங்களப்பிரதானிகளும் கிளர்ச்சியாளர்களுக்கு பங்களிப்பை வழங்கினார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.

கெப்பிட்டிப்பொல, மடுகல்ல ஆகியோர் இராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட மரண தண்டனை விதிக்கப்படுகின்றனர். அரச மாளிகைக்கு முன்பாக உள்ள கண்டி வாவிக்கு அருகில் அமைந்திருந்த சமவெளிப்பகுதியில் கெப்பிட்டிப்பொலவும், மடுகல்லவும் சிரச்சேதம் செய்யப்பட்டு கொல்லப்படுகின்றனர். இவர்களுடன் கைது செய்யப்பட்ட வேறு சிலர் தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர். எகலப்பொலவும் அவனுடன் கைது செய்யப்பட்ட இருபது பேரும் மொறிசியஸ் தீவுக்கு நாடு கடத்தப்படுகின்றனர். பிலிமெத்தலாவவுக்கு முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்ட போதிலும் பின்பு அது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டு அவனும் மொறிசியஸிற்கு நாடு கடத்தப்படுகிறான்.

1817 – 1818 கிளர்ச்சி அத்துடன் முடிவுக்கு கொண்டுவரப்படுகிறது. தண்டனைக்குட்படுத்தப்பட்ட இருநூறுக்கும் மேற்பட்டோர், தேசத்துரோகிகளாக பிரகடனப்படுத்தப்பட்டு அவர்களுடைய சொத்துக்கள் யாவும் பறிமுதல் செய்யப்படுகின்றன.

எகலப்பொல, கெப்பிட்டிப்பொல, பிலிமெத்தலாவ ஆகியோர் உட்பட சிங்களப் பிரபுக்கள் தமிழனின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக ஆங்கிலேயருடன் இணைந்து செயற்பட்டு இலங்கையின் இறைமையை அந்நியரிடம் விற்றுவிட்டு தங்களுக்கு ஆட்சியதிகாரத்தில் பங்கு கிடைக்காத நிலையில் கிளர்ச்சியில் இறங்கினர். அவர்கள் எந்த ஆங்கிலேயரை ஆட்சியில் ஏற்றினார்களோ அவர்களாலேயே இறுதியில் கொல்லப்பட்டனர்.

சிங்களப் பிரபுக்களின் இன விரோதக் கொள்கை காரணமாக நாட்டை அடிமைப்படுத்தியதுடன் தங்களைத் தாங்களே அழித்தும் கொண்டனர் என்பது சிங்கள இன விரோத சக்திகளின் வரலாறு ஆகும்.

அருவி இணையத்துக்காக நா.யோகேந்திரநாதன்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE