Wednesday 24th of April 2024 12:39:57 AM GMT

LANGUAGE - TAMIL
-
மனித உரிமைகள் ஆர்வலர்களின் பார்வையில் “போருக்கு பின்னரான பத்தாண்டுகள்”

மனித உரிமைகள் ஆர்வலர்களின் பார்வையில் “போருக்கு பின்னரான பத்தாண்டுகள்”


போருக்கு பின்னர் ஒரு தசாப்தத்தினைக் கடந்து செல்லும் இன்றைய சூழலில் இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் குறித்து சர்வதேச மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் பலவாறான கருத்துக்களும் விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன.

விமர்சனங்கள், அபிப்பிராய பேதங்கள் எவ்வாறு இருந்தாலும், மனித உரிமைகள் என்ற விடயத்தில் இலங்கையில் ஒட்டுமொத்தமாக எட்டப்பட வேண்டிய இலக்குகள் பல உள்ளன. அதேவேளை பெற்றுக் கொள்ளப்பட வேண்டிய தீர்வுகள் இன்னும் எஞ்சி இருக்கின்றன. மக்களின் நீதிக்கான ஏக்கங்கள் மாறாமல் இன்னும் உள்ளது. இதில் எவருக்கும் மாற்றுக் கருத்துக்கள் இருக்க முடியாது.

இந்நிலையில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை மற்றும் அதில் காணப்பட வேண்டிய முன்னேற்றங்கள் குறித்து மனித உரிமைகளுக்காக முன்னின்று செயற்படும் மனித உரிமை ஆர்வலர்கள் சிலரின் கருத்துக்களை எமது ‘அருவி’ இணைய செய்தித் தளத்திற்காக பதிவு செய்துள்ளோம். அவர்களின் கருத்துக்கள் இங்கே இவ்வாறு பதிவாகின்றன.

மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பிளவுறாமல் ஜெனீவா வரை ஒற்றுமையாக செயற்பட்டிருந்தால் பிரச்சினை ஏற்பட்டிருக்காது!

- நளினி ரட்ணராஜா, மனித உரிமைகள் செயற்பாட்டாளர்

போருக்கு பின்னரான இந்த பத்து வருடக் காலத்தில் இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை தொடர்பான எனது நிலைப்பாடு என்னவென்று கேட்டால், அதற்கு முதலில் நாம் மனித உரிமை நிலவரங்களை மூன்று காலக் கட்டங்களாகப் பிரித்துப் பார்க்க வேண்டும். ஒன்று, 2015க்கு முதல் இருந்த மனித உரிமை நிலை. மற்றையது 2015க்கு பின்னரான நிலைமை. அதாவது 2015லிருந்து 2019 ஜனாதிபதித் தேர்தல் வரைக்குமான காலப்பகுதியாக இதனைக் குறிப்பிடலாம். மூன்றாவது 2019ற்கு பின்னரான காலப் பகுதியாகும். அதேபோன்று இந்த மூன்று காலப்பகுதியில் மனித உரிமைகள் ஆர்வலர்கள்; எடுத்துக் கொண்ட நிலைப்பாடுகளையும் மூன்று வகையாகப் பிரித்துப் பார்க்க வேண்டும்.

2009 லிருந்து அல்லது 2015க்கு முதல் மனித உரிமை ஆர்வலர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து அடக்குமுறை மிகுந்த அன்றைய மகிந்த அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற திடசங்கற்பத்துடன், ஜனநாயகம், வாழ்வதற்கான உரிமை, கருத்துச் சுதந்திரம் போன்றவற்றையும் மீளப் பெறுவதற்கு கருத்து வேறுபாடின்றி ஒருமித்து மும்முரமாக வேலை செய்தார்கள். குறிப்பாக காணாமற்போனோர், மற்றும் கடத்தப்பட்டோர் விவகாரம், சிறைக் கைதிகளின் பிரச்சினை, காணி விடுவிப்பு பிரச்சினை என்று பல பிரச்சினைகள் தொடர்பில் மனித உரிமை ஆர்வலர்கள் என்ற ரீதியில் நாம் ஒருமித்து செயற்பட்டிருந்தோம்.

ஆனால், 2015ம் ஆண்டில் நல்லாட்சி அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் அவ்வாறு ஒருமித்து வேலை செய்தவர்கள் மத்தியில் ஏற்பட்ட பிளவு காரணமாக மனித உரிமை விவகாரங்களில் தளம்பல் நிலை ஏற்பட்டது என்றே கூற வேண்டும். நல்லாட்சி அரசாங்கத்துடன் விமர்சனப் பார்வையூடாக செயற்பாடுகளை செய்யலாம் என்று ஒரு குழுவும், நல்லாட்சி அரசாங்கத்துடன் இணைந்து அறவே வேலை செய்ய முடியாது என்றும், எந்தவிதமான பேச்சுவார்த்தைகளுக்கும் வர மாட்டோம் என்ற நிலைப்பாட்டுடன் இருந்த மற்றொரு குழுவும் ஏற்படுத்திக் கொண்ட முரண்பாடுகள் காரணமாக நல்லாட்சி அரசாங்கத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் பெறக் கூடியதாக இருந்த சில விடயங்களைக் கூட பெற முடியாத துரதிருஷ்டவசமான நிலையே ஏற்பட்டது. மனித உரிமை செயற்பாட்டாளர்களாக தங்களை உருவகித்துக் கொள்ளும் புலம்பெயர் மனித உரிமை செயற்பாட்டாளர்களும், சில புலம்பெயர் அமைப்புகளும் இந்த பிளவுக்கு காரணமாக இருந்தனர்.

“இன ஒழிப்பு என்ற வசனம் இல்லை. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் வேண்டும்” உட்பட பல விடயங்களை காரணமாக முன்வைத்து மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மத்தியில் உருவான முரண் நிலையினால் ஜெனீவா தீர்;மானங்கள் தொடர்பில் நல்லாட்சி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கு கிடைத்த வாய்ப்பும் பறி போனது. குறிப்பாக ஐ.நா தீர்மானத்தினை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்கான சாதகமான சூழலை இவ்வாறு பிரிந்து சென்ற மனித உரிமை செயற்பாட்டாளர்களே நல்லாட்சி அரசாங்கத்திற்கு அமைத்துக் கொடுத்தனர் என்பதே என் கருத்து.

மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஜெனீவா வரை ஒற்றுமையாக இருந்து செயற்பட்டிருந்தால் நல்லாட்சி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து ஜெனீவா தீர்மானத்தில் சொல்லப்பட்டதில் மூன்றில் ஒரு பங்கினையாவது பெற்றிருக்கலாம். ஆனால் இப்பொழுது அதற்கெல்லாம் வாய்ப்பு அறவே இல்லாமல் போய்விட்டது என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

2019 ஜனாதிபதித் தேர்தலுக்கு பின் மறுபடியும் மனித உரிமைகள் நிலைமை மிக மோசமாக மாறிவிட்டது. ஜனாதிபதி சர்வதேச தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க மாட்டேன் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். இப்போது கொரோனாவின் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளைக் கூட கேள்வி கேட்கவோ விமரிசிக்கவோ முடியாத ஒரு நிலையே காணப்படுகின்றது. அவ்வாறு விமரிசித்;தவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். பொதுவாகப் பார்த்தால் பெரியளவில் யாரும் கருத்துச் சொல்வதோ அரசாங்கத்தை விமரிசிப்பதோ, அல்லது ஜனாதிபதியை விமரிசித்து கருத்துச் சொல்வதோ மிக மிகக் குறைவாகக் காணப்படுகின்றது.

எனவே இலங்கையில் இன்று நிலவும் மோசமான மனித உரிமை மீறல்களுக்கு ஒரு சில மனித உரிமை செயற்பாட்டாளர் என்று தங்களைக் கூறிக் கொள்ளும் புலம் பெயர் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சிலரினதும், சில அரசியற் கட்சிகளில் இருக்கும் அரசியல்வாதிகளினதும் தூரநோக்கு அற்ற செயற்பாடுகளே காரணமாக அமைந்திருந்தது என்பதே என் கருத்தாகும். குறிப்பாக, ஜெனீவா வரை வந்து “இந்த தீர்மானம் சரியில்லை வேண்டாம். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தான் தீர்வு” என்று கூறிக் கொண்டு இன்று வரை குரங்குப் பிடியில் நிற்கும் ஒரு சில அரசியல்வாதிகளும் இதற்கு நிச்சயம் பொறுப்பு கூற வேண்டும்.

ஒட்டுமொத்த நிலையை நாம் அவதானிக்கும் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதில் இவர்களுக்கு எந்தவிதமான அக்கறையும் இல்லை என்று தான் நான் மிகவும் வேதனையுடன் கூறிக் கொள்ள விரும்புகின்றேன். அதே நேரம் மனித உரிமையை நிலைநாட்டுவது அரசின் தலையாய கடமையாகும் என்பதனை அரசும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

“போருக்கு பின்னர் பாதுகாப்பு படையினருக்கு அளிக்கப்பட்ட கௌரவமும், சமூக அந்தஸ்தும் பல மனித உரிமை மீறல்களுக்கு காரணமாக அமைந்தது!”

சட்டத்தரணி சேனக்க பெரேரா, தலைவர், சிறைக் கைதிகள் உரிமைகளுக்கான அமைப்பு.

இலங்கையில் உள்நாட்டு முடிவடைந்து பத்தாண்டுகள் கடந்து 11வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளோம். இருப்பினும் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் திருப்தியடையக் கூடிய நிலைமையே இல்லை என்றே கூற வேண்டியுள்ளது. இலங்கையில் மனித உரிமைகள் விடயத்தில் பல விடயங்களை மேம்படுத்த வேண்டிய நிலையே காணப்படுகின்றது.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நீதியான தீர்வினைப் பெற்றுக்கொடுக்க தவறியதனால் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்த வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டனர். அதனால் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தமும் அது முடிக்கப்பட்ட விதம் காரணமாக உயிரிழப்புகளும், காணாமற்போனவர்களின் பிரச்சினைகளும் ஏற்பட்டன. இதனால் பல மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்தன. ஆயிரக்கணக்கில் காணாமற்போனவர்களின் பிரச்சினை தொடர்பில் இதுவரை நீதி கிடைக்கவில்லை. வலிந்து காணாமலாக்கப்படுதல் என்பது இலங்கை சமூகத்தினால் குற்றமாக கருதப்படாத நிலையே உள்ளது. காணாமற்போனவர்களின் பிரச்சினை மிகவும் தீர்க்கமானது. ஒருவர் இறந்துவிட்டார் என்றால் அதில் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இருக்காது. ஆனால் காணாமற்போனவர்கள் பிரச்சினை என்பது அவ்வாறனதல்ல. அவர்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருக்கும். இது ஒரு பாரதூரமான நிலைமையாகும்.

காணாமற்போனோர் அலுவலகம் (ழுஆP) ஸ்தாபிக்கப்பட்டது வரவேற்கத்தக்க விடயமாயினும் அரச அனுசரணையுடன் அது இயங்குவதற்கான வசதிகள் வழங்கப்பட வேண்டும். இந்த வகையில் ஜெனீவாவில் உறுதியளித்த பொறிமுறைகள் இன்னும் திருப்திகரமான மட்டத்தில் இயங்கவே இல்லை.

மேலும் தமிழ் போராளிகள் அரசியற்கைதிகளாக பல ஆண்டுகள் தங்கள் வாழ்நாளை சிறையில் கழித்துக் கொண்டிருக்கின்றனர். சிலருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படாத நிலையே காணப்படுகின்றது. அவர்களின் விடுதலையை வலியுறுத்தி நாங்களும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். 71ல் நடைபெற்ற கிளர்ச்சியில் ஈடுபட்ட ஜே.வி.பி உறுப்பினர்களை அரசாங்கம் மன்னிப்பு அளித்து விடுதலை செய்திருந்தது. இந்நிலையில் ஏன் இவர்களுக்கு அவ்வாறான பொது மன்னிப்பினை வழங்க முடியாது? இவ்விடயத்தில் பயங்கரவாத தடைச் சட்டம் பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும். இந்த சட்டத்தின் கீழ் 60க்கு மேற்பட்ட சிறைக்கைதிகள் உள்ளனர். செய்த குற்றத்தினை விட செய்யாத குற்றத்திற்காக இந்த சட்டத்தின் கீழ் தண்டனைப் பெற்றவர்களே அதிகம். அந்தளவுக்கு மக்களைக் கொடுமைப்படுத்தும் சட்டமாக இது உள்ளது. இந்த சட்டத்தினை நீக்கப் போவதாகவும், திருத்தப் போவதாகவும் கூறினாலும் அரசு அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதனைக் காண முடியவில்லை.

என்னைப் பொறுத்தவரையில் யுத்தம் முடிவுற்ற பின்னர் இலங்கைப் பாதுகாப்பு படையினர் தேசம் காத்த வீரர்களாக கௌவரப்படுத்தப்பட்ட நிலையை காண முடிந்தது. இதனால் அவர்களுக்கு பல சலுகைகளும் கிடைத்தன. சமூகத்தில் இராணுவ சீருடைக்கு பெரும் மதிப்பும் வரவேற்பும் காணப்பட்டது. இந்த நிலைமை ஒரு மோசமான நிலைமை என்றே நான் கருதுகின்றேன். மனித உரிமை மீறல்களி;ல் சம்பந்தப்பட்ட சிலரும் இந்த வரப்பிரசாதம் காரணமாக சட்ட நடவடிக்கைகள் இன்றி விடுவிக்கப்பட்டன நிலையே காணப்படுகின்றது. உதாரணமாக வெலிக்கடை சிறைச்சாலை சம்பவத்திற்கு காரணமானவர்கள் பலருக்கு பதவி உயர்வு போன்ற சலுகைகள் அளிக்கப்பட்டமையைக் கூற முடியும். 11 மாணவர்கள் கடத்தப்பட்டு காணாமற்போன விவகாரம், ரத்துபஸ்வல சம்பவம் போன்றவற்றில் படையினரின் தொடர்பு உள்ள போதிலும் அதில் சம்பந்தப்பட்டவர்கள் அரசாங்கத்தில் பல்வேறு உயர் பதவிகளை வகித்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் இங்கு ICCPR சட்டத்தினைப் பற்றியும் நான் கூற விரும்புகின்றேன். இது பரந்துபட்ட நோக்கு கொண்டது. ஆனால் அரசு தன் தேவைக்கான இந்த சட்டத்தினை தவறாகப் பயன்படுத்துகின்றது. அதனால் இந்த சட்டத்திலும் திருப்தியற்ற நிலைமையே காணப்படுகின்றது. அரசாங்கத்தினை விமர்சிப்பவர்களை அடக்குமுறைக்குட்படுத்தவே இந்த சட்டம் பயன்படுத்தப்படுகின்றது.

யுத்தத்திற்கு பின்னர் குரூரமான சித்திரவதைகள் தொடர்பான சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பொலிஸ் நிலையங்களில் விசாரணைகளின் பெயரில் தடுப்பு கைதிகள் பல்வேறு மனித உரிமை மீறல்களுக்குள்ளாகி;ன்றனர். தப்பியோடினர் என்ற காரணம் காட்டி கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றன. இவ்வாறான சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் வெளி வராத காரணத்தினால் இவ்வாறான சம்பவங்கள் குறித்து அறிந்துகொள்ள முடியாத நிலையே காணப்படுகின்றது.

எனவே இலங்கையின் மனித உரிமைகள் மேம்பாட்டிற்கு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது என்பதே எங்களைப் போன்ற மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கருத்தாகும். மனித உரிமைகள் ஆணைக்குழு சிறந்த பொறிமுறையுடன் செயலாற்ற வசதிகளை அரசு செய்துகொடுக்க வேண்டும். ஆணைக்குழு விசாரணைக்கான பரிந்துரைகளை மட்டும் வழங்குவது போதாது. அவர்களின் தற்போதைய செயற்பாடுகள் பரந்துப்பட்டளவில் விஸ்தரிக்கப்படல் வேண்டும். அத்துடன் சாட்சியாளர்களையும் பாதிக்கப்பட்டவர்களையும் பாதுகாக்கும் சட்டம் சிறந்த விடயமாக உள்ள போதிலும், அதனை சரியான முறையில் நடைமுறைப்படுத்த பொறிமுறை இல்லை. இதனால் நிவாரணம் கிடைக்க பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

“இறந்துபோன உடலை வைத்து ஒரு சமூகத்தினைப் பழிவாங்குகின்ற கொடூரமான மனித உரிமை மீறல் நடந்தேறியுள்ளது!”

பிஸ்லியா பூட்டோ, மனித உரிமைகள் செயற்பாட்டாளர், புத்தளம் பிரதேச சபை உறுப்பினர்

2009க்கு முற்பட்ட காலங்களில் ஆயுதமேந்திய யுத்தம் வெளிப்படையாக நடைப்பெற்றது அது எல்லோருக்கும் தெரிந்த விடயம். 2009ல் யுத்தம் முடிக்கப்பட்டதன் பின்னரான அரசாங்கத்தின் கோட்பாடுகளின் கீழ் பார்த்தால் வெளிப்படையான யுத்தங்கள் முடிவுற்றாலும், மனித உரிமைகள் மீறல் இன்னும் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன. என்னைப் பொறுத்தவரையில் அடுத்த சந்ததிகளுக்கும் இவை கடத்தப்படுகின்றன. மக்கள் சுயமாக சிந்திக்கக் கூடாது. மக்களை எப்பொழுதும் பிரச்சினைகளுக்குள்ளேயே வைத்துக் கொண்டிருக்க வேண்டும். அப்பொழுது தான் தங்கள் அரசியற் செயற்பாடுகளை மேற்கொள்ளலாம். அதற்கான நிதிகளைப் பெறலாம் என ஒரு சில தரப்புகள் திட்டமிட்டு சிந்தித்து செயற்படுகின்றன. இப்பொழுது ஜனநாயகம் அழிக்கப்பட்டு மனித உரிமைகள் அத்துமீறப்பட்டுள்ள ஒரு சூழலை தான் நான் காண்கின்றேன்.

ஒவ்வொரு காலகட்டத்தினையும் எடுத்துக் கொண்டால் மனித உரிமைகள் மீறப்பட்ட சம்பவங்களாக 2009ல் முள்ளிவாய்க்கால் பிரச்சினை, அதற்கு பின்னர் பொதுபலசேனாவினால் உருவாக்கப்பட்ட சின்ன சின்ன கலவரங்கள், அதன் பின் கடந்த ஆண்டு நடைப்பெற்ற ஏப்ரல் தாக்குதல், அதற்குப் பின்னர் பார்த்தால் கொரோனா வைரஸ் பிரச்சினை என்று சொல்லிக் கொண்டே போகலாம். தற்போது மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு அரசாங்கம் இல்லாமல் ஜனாதிபதி நாட்டை நிர்வகித்துக் கொண்டு இருக்கின்றார். மக்களால் நியமிக்கப்பட்ட அரசாங்கம் இல்லாத அரசினுள் எமது மக்கள் மாட்டிக் கொண்டு முழிக்கின்ற நிலைமை தான் இப்பொழுது காணப்படுகின்றது.

இலங்கையின் அடிப்படை உரிமைகளைப் பற்றிப் பார்த்தோமானால் ஒவ்வொருவருக்கும் தமது மதத்தினைப் பின்பற்ற உரிமை இருக்கின்றது. அவர்கள் விரும்பிய இடங்களில் வாழலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால், மதத்தினை மதிப்பவர்களும் அந்த உரிமைகளை அங்கீகரிப்பவர்களும் ஒருபோதும் ஒரு மதத்தின் அபிலாஷைகளுக்கு எதிராக நடந்து கொள்ள மாட்டார்கள். நோயினால் இறந்த முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்திருக்க மாட்டார்கள். அந்தவகையில் மிகவும் கீழ்த்தரமான செயற்பாடாக தான் இதனை நான் பார்க்கின்றேன்.

தற்போதைய கொரோனா விவகாரத்தில் “பிழையான ரிப்போட் காரணமாக தவறுதலாக உடலை எரித்து விட்டோம்” என்கின்றார்கள். இது ஒரு சாதாரண விடயம் அல்ல. இந்த கொரோனாவின் காரணமாக இறந்த முஸ்லிம்களின் உடல்களை எரித்து மிகப் பெரிய பாவத்தினை இவர்கள் செய்துவிட்டார்கள். இதனால் முஸ்லிம் மக்களுக்கு கொரோனா இருந்தாலும் வெளியில் சொல்ல அஞ்சும் மோசமான நிலைமையைத் தான் இந்த அரசாங்கம் உருவாக்கியிருக்கின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் கடந்த ஏப்ரல் 21ம் திகதி தாக்குதல் நீர்க்கொழும்பில் இடம்பெற்றது. அதேபோன்று இலங்கையில் எரிக்கப்பட்ட முதலாவது முஸ்லிம் நபரின் உடல் நீர்க்கொழும்பினை சேர்ந்த திரு ஜமால்தீன் அவர்களுடையது. அவரின் உடலும் நீர்க்கொழும்பிலேயே எரிக்கப்பட்டது. நடந்த முடிந்த ஏப்ரல் தாக்குதலுக்கு பழிவாங்கும் நோக்குடன் தான் குண்டுத் தாக்குதல் நடைப்பெற்ற அதே பிரதேசத்தில் ஒரு முஸ்லிமின் உடல் தகனம்; செய்யப்பட்டுள்ளது. இது ஒரு மிகவும் கீழ்த்தரமான பழிவாங்கல் செயற்பாடு. உயிரில்லாத உடலில் செய்யக் கூடிய இந்த செயலும் ஒரு மனித உரிமை மீறல் தான். இவ்வாறான வக்கிரமான மனித உரிமை மீறல்கள் தான் இலங்கையில் நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றது. உயிருடன் இருப்பவரை பழிவாங்குதல் என்பதனை மீறி இறந்துபோன ஒரு உடலை வைத்து ஒரு சமூகத்தினைப் பழிவாங்குகின்ற மிகவும் கொடூரமான மனித உரிமை மீறலை செய்கின்ற ஒரு அரசுக்குள் தான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

இங்கு இன்னொரு விடயம் பற்றியும் நான் கூற விரும்புகின்றேன். இலங்கையில் இருக்கின்ற கண்டிய சட்டம், தேசவழமை, முஸ்லிம் தனியார் சட்டம், பொது சட்டம் ஆகிய சட்டங்களைப் பார்த்தால் முஸ்லிம் தனியார் சட்டத்தில் காணப்படும் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிரான உரிமைகள் மீறப்படும் சில விடயங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று சொல்லி கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேலாகை வெவ்வெறு இடங்களில் வெவ்வேறு தளங்களில் முஸ்லிம் பெண்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். வெளிப்படையாகவே 9 வருடங்களுக்கு மேலாக இலங்கையில் உள்ள முஸ்லிம் சமூகத்தினைச் சேர்ந்த பெண்கள் எவ்வளவோ விடயங்களை ஆதாரமாக முன்வைத்து இந்த பிரச்சினையைப் பற்றி பேசினாலும் கூட கடந்து சென்ற 2 அரசாங்கங்களும் கூட அந்த சட்டத்தில் மாற்றம் செய்ய தவறி விட்டன. இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

“ட்ரம்பை எதிர்த்து கேள்வி எழுப்ப முடியும். ஆனால் எமது ஜனாதிபதிக்கு எதிராக முடியவே முடியாது”

ஸ்ரீநாத் பெரேரா, ஐக்கிய சோசலிசக் கட்சியின் தேசிய அமைப்பாளர்.

என்னைப் பொறுத்தவரையில் யுத்தச் சூழல் என்பதே மனித உரிமை மீறல் தான். யுத்தம் என்பது மரணம். மனித உரிமை என்பது வாழ்வு. மனித உரிமைக்கு நேர் எதிரானது யுத்தம். அவ்வாறெனில் மனித உரிமைகள் மீறல் என்பது யுத்த காலத்தில் நிச்சயம் நிகழக் கூடிய விடயமாகும். அதனால் நாட்டில் யுத்தம் முடிந்து பத்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் நாட்டில் மனித உரிமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் யுத்தம் முடிவுற்ற மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் 2009 முதல் 2015 காலப்பகுதியில் பகிரங்கமாக யுத்தம் ஒன்று நடைபெறாவிட்டாலும் மனித உரிமைகள் தொடர்பில் படுமோசமான காலப்பகுதியாக அமைந்திருந்தது. எதிர்க்கருத்துக்களை சகிக்காமை, அதற்காக நடந்த படுகொலைகள், உதாரணமாக ரொஷான் சானக்க, ரத்துபஸ்வெல சம்பவம் மற்றும் ஆட்கடத்தல்கள், அடக்குமுறை, ஊடகவியலாளர்கள் படுகொலை, ஊடக சுதந்திரம் இன்மை என்று இவ்வாறு பல விடயங்களை கூறிக் கொண்டே போகலாம். மனித உரிமைகளில் அடிப்படையானது கருத்துச் சுதந்திரம். அது அக்காலத்தில் படுமோசமாக மீறப்பட்டிருந்தது.

அத்துடன் அரசாங்கத்தின் செயற்பாடுகளுடனும், கருத்துக்களுடனும் உடன்படாதவர்களை தேசத் துரோகி என்று முத்திரைக் குத்தி அவர்களின் வாழும் உரிமையைப் பறித்த சம்பவங்களும் பல அரங்கேறின. 2010 வரை தமிழ் மக்கள் பிரதான எதிரியாக்கப்பட்டனர். 2010க்கு பின் முஸ்லிம் மக்கள் எதிரியாக்கப்பட்டனர். இந்த வகையில் 2010 முதல் 2015 வரையான காலப்பகுதி இலங்கை சிறுபான்மை மக்களுக்கு எதிரான மிகவும் மோசமான மனித உரிமைகள் மீறல்கள் நடந்த காலப்பகுதியாகும்.

2015ன் பின் புதிய நல்லாட்சி அரசாங்கத்தின் வருகையினால் மக்களுக்கு ஓரளவுக்கு நிம்மதி பெருமூச்சு விட வாய்ப்பு கிட்டியது. அவர்கள் மனித உரிமைகள் சார்ந்து எடுத்த முக்கிய விடயங்களுள் தகவல் உரிமை சட்டம் மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்கள் என்பனவற்றைக் குறிப்பிடலாம். ஆனாலும் இக்காலப்பகுதியில் மனித உரிமைகள் முன்னேற்றம் என்பது நூற்றுக்கு நூறு திருப்திகரமான மட்டத்தில் இல்லாத போதிலும் ஓரளவுக்கு அடக்குமுறைகளில் நெகிழ்வு தன்மையை காணக் கூடியதாக இருந்தது. ஆனாலும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட பல உயர் அதிகாரிகள் முக்கிய பதவியைப் பெற்றனர். இவையெல்லாம் நீதித்துறைக்கு சவால் விடும் செயற்பாடுகளாக அமைந்திருந்தன.

தற்போதைய நிலைமையை எடுத்துக் கொண்டால் மனித உரிமைகள் நிலவரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்றே கூற முடியும். வாழும் உரிமை மறுக்கப்பட்டு, கருத்துச் சுதந்திரம் இல்லாத நிலையே தற்போது காணப்படுகின்றது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு எதிராக கேள்வி கேட்க முடியும். ஆனால் நம் ஜனாதிபதியை எவரும் கேள்வி கேட்கவே முடியாத நிலையே இன்று உள்ளது. இராணுவமயப்படுத்தப்பட்ட சூழலே இன்று இலங்கையில் உள்ளது. உதாரணமாக, பொது மக்கள் போக்குவரத்தான புகையிரதத்தில் பாதுகாப்பு கடமையிலீடுபடும் படையினர் துப்பாக்கிகளை ஏந்திக் கொண்டு நிற்கின்றனர். அது ஏன்? பொது மக்களை சுட்டுத்தள்ளவா அந்த துப்பாக்கிகளை அவர்கள் ஏந்திக் கொண்டிருக்கின்றனர்? அந்தளவுக்கு மனித உரிமை நிலைமை படுமோசமாகியுள்ளது.

இங்கு ஒரு விடயத்தினை நான் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். ஒரு நாட்டில் மக்களும் அரசும் இணைந்து பலம் பெற்றால் தான் அந்நாட்டில் மனித உரிமைகள் நிலவரம் சிறப்பாக இருக்கும். மனித உரிமைகள் சிறப்பாக இருந்தால் மக்களும் நல்ல நிலையில் இருப்பர். ஆனால் மனித உரிமைகள் பலவீனமடைந்தால் மக்களும் பலவீனம் அடைந்து அரசு மிகவும் பலம் வாய்ந்த தன்மையைப் பெற்று விடும். இது நாட்டுக்கு நல்லதல்ல. அவ்வாறான ஓர் நிலை தான் இலங்கையில் தற்போது உள்ளது என்பதே என் கருத்தாகும்.

பிரியதர்ஷினி சிவராஜா 29-05-2020


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE