Thursday 18th of April 2024 02:25:21 AM GMT

LANGUAGE - TAMIL
-
மத்திய வங்கியைக் கொள்ளையடித்தவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில்;  இம்ரான் மஹ்ரூப் குற்றஞ்சாட்டு!

மத்திய வங்கியைக் கொள்ளையடித்தவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில்; இம்ரான் மஹ்ரூப் குற்றஞ்சாட்டு!


"ராஜபக்சக்களுடன் டீல் வைத்துள்ளவர்களும் மத்திய வங்கியைக் கொள்ளையடித்தவர்களுமே இன்று ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ளனர். ஆனால், சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடுபவர்களே உண்மையான ஐக்கிய தேசியக் கட்சிகாரர்களாவர்."

- இவ்வாறு திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

திருகோணமலையில் ஊடகங்களுக்கு இன்று கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்று ஊடகங்கள் மூலமாக அறிந்தேன். ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுவே ஐக்கிய மக்கள் சக்தி எனும் கூட்டணி அமைத்துத் தேர்தலில் போட்டியிடவும், அக்கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக சஜித் பிரேமதாஸவை நியமிக்கவும் அனுமதி வழங்கியது.

இது இவ்வாறிருக்க நேற்று முன்தினம் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் என சிறு குழுவினர் கூடி எம்மைக் கட்சியைவிட்டு நீக்கிவிட்டதாக அறிவித்துள்ளமை வேடிக்கையாக உள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் 66 பேரில் 40 பேர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் உள்ளனர். ஆகவே, நாம்தான் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் இருக்க அரசின் செயற்பாடுகளுக்கு எதிராக எந்தவொரு எதிர்ப்பையும் வெளிக்காட்டாமல் ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான சிலர் நடவடிக்கை எடுக்க முயற்சிப்பது அவர்களுக்கும் ராஜபக்சக்களுக்கும் இடையில் டீல் அரசியல் காணப்படுகின்றது என்பதற்குச் சிறந்த உதாரணம்.

இந்தச் செயற்பாடுகள் மூலம் அரசின் அடாவடித்தனமான செயற்பாடுகளுக்கு எதிராக நாம் குரல் எழுப்புவதைத் தடுப்பதே ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இந்தச் சிறு குழுவின் நோக்கம்.

இன்று ஐக்கிய தேசியக் கட்சி எனக் கூறுபவர்கள் யார்? ராஜபக்சக்களுடன் டீல் வைத்துள்ளவர்கள், மத்திய வங்கியைக் கொள்ளையடித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், மக்கள் ஆதரவு இல்லாமல் தேசியப் பட்டியலை நம்பி உள்ளவர்களே தாம் ஐக்கிய தேசியக் கட்சியினர் என்று உரிமை கோருகின்றார்கள்.

ஆனால், இன்று ஐக்கிய மக்கள் சக்தியில் போடியிடும் நாம் அனைவரும் உண்மையான ஐக்கிய தேசியக் கட்சிகாரர்கள். டீல் அரசியல் செய்பவர்கள் யாரும் இங்கில்லை. ஆகவே விரைவில் இவ்வளவு காலமும் டீல் அரசியல் செய்து ஐக்கிய தேசியக் கட்சியை அழித்தவர்களிடம் இருந்து எமது கட்சியைப் பாதுகாத்து ஆட்சியையும் கைப்பற்றி உண்மையான ஐக்கிய தேசியக் கட்சிகாரர்களாக நாம் சிறிகொத்தவுக்குள்ளும் நாடாளுமன்றத்துக்குள்ளும் நுழைவோம்" - என்றார்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE