Friday 29th of March 2024 08:27:58 AM GMT

LANGUAGE - TAMIL
-
முள்ளிவாய்க்காலில் முடிந்த பயணம் - 04

முள்ளிவாய்க்காலில் முடிந்த பயணம் - 04


‘நான் தமிழ் மக்களுக்கு எதிராக போரை நடத்தவில்லை. அமெரிக்க புலனாய்வுப் பிரிவான எவ்.பி.ஐ அமைப்பினால் கொடிய பயங்கரவாத இயக்கமென அறிவிக்கப்பட்ட புலிகளை அழித்தே மனிதாபிமான நடவடிக்கை மூலம் தமிழ் மக்களைப் பாதுகாப்போம் அதன் பின்பு சிறுவர்கள் படையில் சேர்ப்பதற்காக பிடித்துச் செல்லப்படுவதும் இல்லை. அரசியல்வாதிகள் எந்த நேரம் கொல்லப்பட்டுவிடுவோமோ என அச்சமடையும் நிலைமையும் இல்லை.’

இது போர் வெற்றியின் 11ம் ஆண்டு விழாவை முன்னிட்டு பிரதமர் மகிந்த ராஜபக்ச பெருமையுடன் வெளியிட்ட கருத்தாகும். அதாவது முள்ளி வாய்க்கால் மண்ணில் ஒரு லட்சத்து அறுபாதியரம் மக்கள் எறிகனைகளாலும் விமானக்குண்டுகளாலும் கொல்லப்பட்டமையானது. தமிழ் மக்களை புலிகளிடமிருந்து காப்பாற்ற மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கையாம்.

மனிதப் படுகொலைகளாலும், கொட்டப்பட்ட குருதியாலும் சிதறடிக்கப்பட்ட சதைத்துண்டுகளாலும் கட்டமைக்கப்பட்ட விசித்திரமான மனிதாபிமான நடவடிக்கை இது. உலக அகராதிகளின் அர்த்தங்களுக்குள் அகப்படாத அவர்களின் இந்த மனிதாபிமான நடவடிக்கை புலிகளிடமிருந்து மக்களை மீட்பது என்ற பேரில் மனித உயிர்களை வேட்டையாடுவதுடன் மட்டுப்படுத்தப்படவில்லை. அதற்கு அப்பாலும் போர் மரபுகளைக் கடந்த இராணுவ வழிமுறைகளை மீறிய அராஜகங்களால் விரிந்தது.

ஒரு போரின் போதோ அல்லது போர் முடிவடைந்த பின்போ சரணடையும் எதிர்த்தரப்பினர் கைது செய்யப்பட்டு நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவது அல்லது விடுவிக்கப்படுவது காலங்காலமாக பின்பற்றப்படும் போர் மரபாகும்.

விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசன், சமாதானச் செயலக பொறுப்பாளர் புலித்தேவன் உட்பட பல போராளிகள் சரணடையப் போவதாக அறிவித்து விட்டு வெள்ளைக் கொடியுடன் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கிச் சென்றனர். வெள்ளளைக் கொடிi ஏந்தியவாறு சரணடையச் சென்ற போராளிகள் அனைவரும் ஒருவர் கூட எஞ்சவிடப்படாமல் கொல்லப்பட்டனர். சர்வதேசப் போர் மரபும் அவர்களின் உயிருடன் சேர்த்து அழிக்கப்பட்டது.

அவர்கள் ஆயுதம் ஏந்திவாறு படையினர் மேல் தாக்குதல் மேற்கொள்ளவா போனார்கள்? இராணுவத்தை விரட்டிவிட்டு அங்கு புலிக்கொடியை நாட்டவா வெள்ளைக்கொடி கொண்டு போனார்கள்? அப்படி எதுவும் நடக்காமலே சரணடைவதற்கு வெள்ளைக்கொடி ஏந்தி வெறுங்கையுடன் சென்றவர்கள் படுகொலை செய்யப்பட்டு அரச படையினரில் மனிதாபிமான நடவடிக்கை அரங்கேற்றப்பட்டது.

சிங்களத்தின் அதிசயமான மனித உயிர் வேட்டையில் கட்டமைக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கையை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு நியாயமான போர் மரபைக் கடைப்பிடித்து சரணடைந்தவர்களை நீதி மன்றத்தில் நிறுத்தியிருந்தால் என்ன நடந்திருக்கும்?

இந்திய சட்டசபையில் குண்டெறிந்த குற்றச்சாட்டில் மாவீரன் பகத்சிங் கைது செய்யப்பட்டு நீதி மன்றில் நிறுத்தப்பட்டபோது அவர் ஆற்றிய உரை பிரிட்டி~; அரசின் கொடூர முகத்தை உலகெங்கும் அம்பலப்படுத்தியது மட்டுமின்றி ஆயிரக்கணக்கான பாரத இளைஞர்களை எழுச்சி பெற வைத்தது. கியூபா புரட்சியின் போது கைது செய்யப்பட்ட பெடல் கஸ்ரோ நீதிமன்றத்தில் ஆற்றிய உரை கீயூபா விடுதலையை நோக்கி கியூபா மக்களை அணிதிரள வைத்ததுடன் இன்று வரை உலக விடுதலை விரும்பிகளின் வழிகாட்டியாக அவரின் ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’ என்ற நீதிமன்றஉரை விளங்கி வருகிறது.

எனவே விடுதலைப் புலிகளின் சரணடைந்த போராளிகள் கொல்லப்படாமல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருந்தால் அவர்களின் உரைகள் அரச படைகளின் மனிதாபிமான நடவடிக்கைகளின் போலி வடிவத்தை உலகின் முன் அம்பலப்படுத்தியிருக்கும். அவை எதிர்காலத்தில் ஒரு இனத்தின் விடுதலைப் போராட்டத்தின் அசைக்கமுடியாத வரலாற்று ஆவணமாக அமைந்திருக்கும்.

தங்கள் அநீதிகள் அம்பலப்பட்டுவிடும் என்று அஞ்சியதாலும் தமிழ் மக்களின் போராட்டம் பயங்கரவாதமல்ல என்பதும் அது ஒடுக்கப்பட்ட மக்களின் உண்மைப் போராட்டம் என்பதும் கேள்விக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கும் என்பதாலும் அடுக்கடுக்காக சொல்லப்படும் பொய்கள் உதிர்ந்து காற்றில் பறந்துவிடும் என்பதாலும் படுகொலைகளை மேற்கொண்டு போர் மரபை உதாசீனம் செய்தனர்.

அப்படியான ஒரு இராணுவ மரபுகளுக்கு அப்பாற்பட்ட படுகொலையை நடத்தியதுடன் அவர்கள் திருப்தியடைந்துவிடவில்லை. இலங்கை இராணுவத்தின் தளபதியாக போரை வழிநடத்திய தளபதி சரத் பொன்சேகாவை வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பான உண்மைகளை அம்பலப்படுத்திவிட்டார் என்பதற்காக அவரைக் கைது செய்தனர்; சிறையிலடைத்தனர்; அவரின் பட்டம் பதவிகளைப் பறித்ததுடன் அரசியலில் ஈடுபடும் உரிமையையும் தடுத்தனர்.

அவர் செய்த குற்றம் - வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தை ஒரு ஊடக நேர்காணலில் வெளிப்படுத்தியதுதான்.

அது கோத்தா மகிந்த கூட்டு மனிதாபிமான நடவடிக்கையின் இன்னொரு வடிவம். அதே மனிதாபிமான நடவடிக்கையில் அடுத்த இன்னொரு முகம் ஊடகவியலாளர் இசைப்பிரியா உட்பட சரணடைந்த பெண் போராளிகள் மீது தாண்டவமாடியது. சரணடைந்த பெண் போராளிகள் முழு நிர்வாணமாக்கப்பட்டு பாலியல் வல்லுறவு உற்பட பலவித சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டனர். அவர்களின் சிதைக்கப்பட்ட நிர்வாண உடல்கள் வரிசையாகப் படுக்க வைக்கப்பட்டு படம் பிடிக்கப்பட்டு தங்கள் வக்கிர புத்தியை அந்தப் படையினர் வெளிப்படுத்துகின்றனர். பின் இந்த உடல்களை மூடைகளைத் தூக்கியெறிவது போல உழவு இயந்திரப் பொட்டிக்குள் எறிகின்றனர். அரை நிர்வான நிலையில் நீருக்குள் இழுத்துச் செல்லப்படும் இசைப்பிரியா கரையில் பிணமாக எறியப்பட்டிருக்கிறாள்.

இப்படியான ஒரு அதிசயமான மனிதாபிமான நடவடிக்கையை சனல் 4 தொலைக்காட்சி உலகம் முழுவதுக்குமே அம்பலப்படுத்தியது.

இவற்றுக்கெல்லாம் ஆட்சியாளர்கள் வெட்கப்படவில்லை. ஆனால் இவற்றையெல்லாம் மனிதாபிமான நடவடிக்கையெனச் சொல்லி வர்ணம் பூசி உலகை ஏமாற்ற முயன்றார்கள். சிறுவர்கள் படைக்குனு கொண்டு செல்லப்படுவதைத் தடுக்கவும் அரசியல்வாதிகள் உயிர் அச்சுறுத்தலின்றி வாழவும் அவர்கள் கையிலெடுத்த வழிமுறை இதுதான்.

அவர்களின் அன்னொரு மனிதாபிமான முகத்தையும் பார்க்காமல் விட்டுவிடமுடியாது.

ஏராளமான போராளிகளையும் போராளிகளின் நிறுவனங்களில் பணியாற்றியவர்களையும் அவர்களின் உறவினர்கள் வட்டுவாகலில் வைத்து படையினரிடம் ஒப்படைத்தனர். தற்சமயம் 11 வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும் அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்புத புறு;றுPnயுர் அவர்களுக்கு என்ன நடந்து என்பது பற்றியோ எதுவும் வெளிப்படுத்தப்படவில்லை. அவர்கள் இன்றுவரை காணாமல் போனவர்களாகவே உள்ளனர்.

காணாமல் போனோர் தொடர்பாக ஐனாதிபதி கோத்தபாய காணாமல் போனோர் என எவருமில்லை எனவும் அப்படியாராவது காணாமல் போயிருந்தால் அவர்கள் மரணமடைந்திருக்கலாம் அல்லது வெளிநாடுகளுக்கு போயிருக்கலாம் என தெரிவித்துள்ளார். அமைச்சர் விமல் விரவன்சவும் அவர்களை மண்ணுக்குள் தான் தேடவேண்டுமெனக் கூறியுள்ளார்.

இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என்றால் அவர்கள் எப்படி இறந்தார்கள் எனபது வெளிப்படுத்தப்பட வேண்டும். வெளிநாடு போயிருந்தார்கள் என்றால் அவர்கள் எப்போது விடுதலை செய்யப்பட்டார்கள் அவாகளைக் கடல் கடந்து செல்ல அனுமதித்தவர் யார் என்பது வெளிப்படுத்தப்பட வேண்டும். அவர்கள் மண்ணுக்குள் புதைக்கப்பட்டால் அவர்கள் யாரால் எப்போது புதைக்கப்பட்டர்கள் என்பது வெளிப்படுத்தப்பட வேண்டும். அவை எதுவுமே இடம்பெறவில்லை.

வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களை ஒருவர் விடாமல் கொன்றதை சரணடைந்த பெண் போராளிகளை கேவலமான முறையில் சித்திரவதை செய்து கொன்றுவிட்டு இறந்த அவர்களின் உடல்களைக் கூட இழிவு படுத்தியதும். ஊறிவினர்களால் ஒப்படைக்கப்பட்டவர்களைக் காணாமல்போகச் செய்தமை என்பவை எல்லாம் மனிதாபிமான நடவடிக்கை என்ற போர்வைக்குள் அமுக்கப்படுகின்றன.

இனி இனவழிப்பு அரசியலின் வெவ்வேறு வடிவங்களான இவை சிறுவர்கள் படையில் சேர்க்க பிடிக்கப்படுவதை தடுக்கவும் அரசியல்வாதிகள் உயிர் அச்சுறுத்தலின்றி நடமாடவும் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகளாம்.

நா.யோகேந்திரநாதன்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை, வட மாகாணம், முள்ளிவாய்க்கால்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE