Wednesday 24th of April 2024 06:16:37 PM GMT

LANGUAGE - TAMIL
-
“முடிவின்றித் தொடரும் ஐ.தே.கவின் அதிகார மோதல் (சமகால அரசியல்)

“முடிவின்றித் தொடரும் ஐ.தே.கவின் அதிகார மோதல்" (சமகால அரசியல்)


எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக பிற கட்சியின் வேட்புமனுக்களில் கையொப்பமிட்ட 99 ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களின் கட்சி அங்கத்துவத்தை இரத்து செய்வதற்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் அக்கில விராஜ் காரியவசம் கடந்த 27ம் திகதி அதிரடியாக நடவடிக்கை எடுத்திருந்தார். இதனை அக்கட்சியின் செயற்குழுவும் ஏகமனதாக அங்கீகரித்திருந்தது.

பொதுத்தேர்தலை எதிர்கொள்வதற்காகக் கூட்டணி ஒன்றை அமைப்பதற்காகவே கட்சியின் செயற்குழு அனுமதி வழங்கியிருந்ததாகவும், கட்சியின் செயற்குழுவின் அனுமதியின்றி வேறு ஒரு கட்சியின் கீழ் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமையினால் கட்சி யாப்பின் பிரகாரம் அவர்கள் அனைவரினதும் கட்சி அங்கத்துவத்தினை நீக்குவதாகவும், சஜித் தலைமையிலான குழு வேறு ஒரு கட்சியைப் பெற்று பதிவு செய்துள்ளதனால், அவர்கள் தனியான ஒரு அரசியற் கட்சியினராகவே கருதப்பட முடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, ஐக்கிய மக்கள் சக்தி ஒரு கட்சியல்ல என்றும், ஒரு கூட்டணி என்றும் கூறியிருந்த அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு பகுதியே ஐக்கிய மக்கள் சக்தி என்றும் சுட்டிக் காட்டியிருந்தார்.

எவ்வாறாயினும், கட்சியில் இருந்து 99 பேர் நீக்கப்பட்டமையினால் ஏற்கெனவே கட்சியில் இரு தரப்புக்கும் இடையில் இருந்த பிரச்சினைகளும், முறுகல் நிலையும் மேலும் தீவிரமடைந்துள்ளது. 99 பேரின் கட்சி அங்கத்துவத்தினை நீக்கி ஐக்கிய தேசியக் கட்சி தவறான செயல் ஒன்றை செய்துவிட்டது என்றும், கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களை தாம் பொறுப்பேற்றுக் கொள்வதாகவும், இந்த செயலுக்கு தேர்தலில் மக்கள் தகுந்த பதிலை வழங்குவார்கள் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசா குறிப்பிட்டிருந்தார்.

நிலைமை இவ்வாறிருக்க, 2004ம் ஆண்டு முதலே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் குறித்து பல்வேறுப்பட்ட விமர்சனங்கள் கட்சியில் உள்ளவர்களினாலும், ஆதரவாளர்களினாலும் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் தலைமைத்துவத்தினைக் கைப்பற்றும் போட்டியும் பல்வேறு தரப்புகளுக்கு இடையே கட்சிக்குள் அதிகரித்திருந்தது. இதன் நீட்சியாகவே கட்சி மோதல்கள் மற்றும் உள்ளகக் குழறுபடிகள் அதிகரித்து கட்சியில் பிளவு என்ற ஓர் கட்டத்தினை அடைந்திருக்கின்றது.

இதனால் ஐக்கிய தேசியக் கட்சியில் ஏற்பட்டுள்ள சஜித் பிரேமதாசா தலைமையிலான பிளவு இந்நாட்டில் பலவீனமான ஒரு எதிர்க்கட்சி மீண்டும் உருவாவதற்கான அடித்தளத்தினை இட்டுள்ளது என்றே கூற முடியும். மக்களின் நலன்களின் அடிப்படையில் ஜனநாயக ரீதியில் சிந்தித்துப் பார்த்தால் இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

அரசியல் சாணக்கியம் மிகுந்தவர் என்று கருதப்படும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை எதிர்த்து சஜித் பிரேமதாசா ஏற்படுத்திக் கொண்ட தனது தனியான அரசியற் பயணமானது உண்மையில் இந்நாட்டு மக்களுக்கு எவ்வாறான நன்மைகளைத் தரப் போகின்றன? அதேவேளை கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் நெகிழ்வு போக்கினைக் கடைப்பிடிக்காமல் பிடிவாதமான போக்கினைக் கடைப்பிடித்துக் கொண்டு இளம் சந்ததியினருக்கு அதற்கான வாய்ப்புகளை வழங்காமல் இருக்கும் ரணில் விக்கிரமசிங்கவின் நிலைப்பாடு நாட்டிற்கு என்ன விமோசனத்தினைத் தரப்போகின்றது?

எதிர்க்கட்சியின் அரசியல் தொடர்கதை

2005ல் மகிந்த அரசாங்கம் பதவிக்கு வந்த நாள் தொடக்கம் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஓர் எதிர்க்கட்சியாக தனது அரசியல் வகிபாத்திரத்தை சரியான முறையில் வகிக்காமையின் காரணமாக ஏற்பட்ட படுமோசமான விளைவுகளை நாடு எதிர்கொண்டது யாவரும் அறிந்த விடயமாகும். 2015ம் ஆண்டு வரை இந்நாட்டில் ஒரு அராஜக ஆட்சியை நடத்துவதற்கான சகல வாய்ப்புகளையும் எதிர்;க்கட்சியே ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. அன்றைய மகிந்த அரசாங்கத்தின் தவறுகளையும், யுத்தம் என்ற பெயரில் நடைபெற்ற படுமோசமான மனித உரிமை மீறல்களையும் சுட்டிக் காட்ட வேண்டிய இடங்களில் சுட்டிக் காட்டாமல், அம்பலப்படுத்த வேண்டிய சந்தர்ப்பங்களில் அம்பலப்படுத்தாமல் அமைதியாக இருந்து விட்டு நழுவல் போக்கினைக் கடைப்பிடித்த ஐக்கிய தேசியக் கட்சி, பின்பு தேர்தல் காலங்களில் மட்டுமே மக்கள் முன் சென்று பதவியிலிருந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் இந்த வரலாற்றுப் பிழையை நன்கு உணர்ந்த மக்களும் தேர்தல்களில் அவர்களுக்கு தகுந்த பாடத்தினைக் கற்பித்திருந்தார்கள். அதனால் தான் 2015 ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுடன் களமிறங்க வேண்டிய நிலைமையும் ஏற்பட்டது. தொடர் தோல்விகளும், அரசியல் ரீதியிலான பின்னடைவுகளும் கட்சிக்குள் உள்ள தலைமைத்துவப் போட்டி நிலையை தீவிரப்படுத்தியதுடன் உட்கட்சி மோதல்களையும் ஏற்படுத்தியிருந்தது. துரதிருஷ்டவசமாக இன்றும் அதே வரலாற்றுப் பிழையினை தான் ஐக்கிய தேசியக் கட்சி பிரதான எதிர்க்கட்சியாக செய்து கொண்டிருக்கின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியைக் கைப்பற்றப் போவது யார்? தக்கவைத்துக் கொள்ளப் போவது யார்?

எவ்வாறாயினும் இந்த பிளவு தொடர்பான பிரச்சினைகள் யாவும் விரைவில் சுமுகமான முடிவை அடைந்து ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் ஒன்றுப்பட்டு வலுப் பெறும் என்பதற்கான எந்தவிதமான அறிகுறிகளும் தென்படவில்லை. இதனால் எதிர்;வரும் பொதுத் தேர்தலின் பின்பு ஒரு பலமான எதிர்க்கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சி நாட்டின் நலனுக்காக தனது பங்களிப்பினை ஆற்றும் என்று நம்பிக்கைக் கொள்ள முடியாத நிலையே காணப்படுகின்றது. ஏற்கெனவே இரு கட்சிகளாக வெவ்வேறாக வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் தேர்தலில் போட்டியிட்டு மக்களுக்கு சேவை செய்வதும், மக்கள் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பதும் போன்ற விடயங்களைப் பிரதானப்படுத்துவதனை விட, எந்த தரப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகாரத்தினைக் கைப்பற்றுவது என்ற அரசியல் நிகழ்ச்சி நிரலே இங்கு பிரதானப்படுத்தப்படலாம்.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமது ஆசனங்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம். தத்தமது அரசியலை முன்னெடுத்துச் செல்லவும் தேவையான இலக்குகளை அமைத்து செயற்பட வேண்டிய கட்டாயம் என்று ரணில் மற்றும் சஜித் தரப்புக்கு பல பிரச்சினைகள் உள்ளன. இந்த இரு தரப்பில் எந்த தரப்பு அதிக வாக்குகளை எடுத்து முன்னணிக்கு வந்தாலும் வந்தவர்களின் குறிக்கோள் ஐக்கிய தேசியக் கட்சியினைக் கைப்பற்றுவதாகவே இருக்கும். தோற்றவர்களின் குறிக்கோள் கட்சியை தக்கவைத்துக் கொள்வதாகவே இருக்கும். அதற்கான திட்டங்கள் வகுக்கப்படுவதிலும், அதற்காக போராடுவதிலும் தான் அவர்கள் ஒவ்வொருவரின் செயற்பாடுகளும் இருக்கப் போகின்றன. மக்கள் பிரச்சினைக்காக குரல் கொடுப்பது என்பது இரண்டாம் பட்சம் தான் என்பதனை ஊகித்தறிய சாதாரண அரசியல் அறிவே போதுமானது. அதாவது மக்கள் நலன்கள் ஒட்டுமொத்தமாக மறக்கப்படலாம் அல்லது புறக்கணிக்கப்படலாம்.

அதற்கான அறிகுறிகள் தற்போதே தென்பட ஆரம்பித்து விட்டன. கடந்த காலம் நடைபெற்ற கோவிட் 19 நிலைமைகள் அடிப்படையிலான சம்பவங்களை எடுத்துக் கொண்டால், 5 ஆயிரம் கொடுப்பனவு தொடர்பான பிரச்சினைகளில் ஆக்கப்பூர்வமான பங்களிப்பினை எதிர்க்கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சி வழங்கியிருக்கவில்லை. ஒப்புக்கு ஊடகங்களில் மட்டும் விமர்சனங்களை முன்வைத்து அரசாங்கத்தினை விமர்சித்தது தவிர, களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக குரல் கொடுக்கும் அளவுக்கு அதன் செயற்பாடுகள் தீவிரமாக அமைந்திருக்கவில்லை. (முஜிபுர் ரஹ்மான் போன்றவர்கள் சிலர் சிற்சில முயற்சிகளை எடுத்திருந்தனர்.) அதேபோன்று இலங்கையின் மருத்துவ நிபுணர்களுக்கே சவால் விடும் அளவுக்கு கோவிட் 19க்கு மருந்தினை பரிந்துரைக்கும் அளவுக்கு சஜித் பிரேமதாசாவின் அரசியல் செயற்பாடும் அமைந்திருந்தது.

மேலும், இந்நிலையில் இலங்கையில் அரசாங்கத்தை விமரிசிப்பவர்கள் கொரோனாவுக்கு பிந்திய காலப்பகுதியில் நெருக்கடியை சந்திப்பதாகவும், இலங்கையில் கருத்துச் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படும் ஆபத்து உள்ளதாகவும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் நேற்று (4) விடுத்துள்ள அறிக்கையில் எச்சரித்திருக்கின்றார் என்பதும் கவனத்திற்குரிய விடயமாகும்.

கோவிட் 19 தொடர்பான அரசாங்கத்தின் குறைபாடுகளை சுட்டிக்காட்டிய பலர் கைது செய்யப்பட்டனர். அரசாங்கத்தினை விமரிசிப்பதன் அடிப்படையில் எவராவது கைது செய்யப்பட்டால் அது அரசியல் அமைப்புக்கு எதிரான செயற்பாடு என்று கடந்த ஏப்ரல் 25ம் திகதி இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவினால் பொலிஸ் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்தளவுக்கு கருத்துச் சுதந்திரம் மீறப்பட்ட நிலையே தற்போது காணப்படுகின்றது. இவற்றையெலாம் உணர்ந்து எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தில் இருப்பவர்கள் செயற்பட்டார்களா என்பது உண்மையில் கேள்விக்குறியாகவே உள்ளது. ஒரு நாட்டின் கருத்துச் சுதந்திரத்துக்கு பாதிப்பு ஏற்படும் போது அல்லது அதற்கான அறிகுறிகள் தென்படும் போது சிவில் அமைப்புகள் மற்றும் மக்கள் ஆதரவினை ஒன்றுத் திரட்டி அவ்வாறான செயல்களுக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டியது எதிர்க்கட்சியின் தலையாய கடமையாகும். இந்த கடமையை ஐக்கிய தேசியக் கட்சி தலையாய ஓர் கடமையாகக் கருதி செயற்பட்டிருக்க வேண்டும்.

எதிர்வரும் காலங்களில் ஆளும் தரப்புக்கு சாதகமான ஒரு அரசியற் சூழலை உருவாக்கிக் கொடுக்கும் வகையில் இனி இந்த மோதல்கள் தீவிரமடையலாம். இவ்வாறான ஒரு மோதல்களும் முறுகல்களும் தொடர்ந்து இருக்கும் ஒரு பலவீனமான எதிர்க்கட்சியினைத் தான் எந்த ஒரு ஆளும் தரப்பும் விரும்பக் கூடும். அத்துடன் பதவியில் இருக்கும் எந்தவொரு ஆளும் தரப்பும் தனது செயற்பாடுகள் மற்றும் திட்டங்கள் தொடர்பில் பலவிதமான நியாயப்பாடுகளை எடுத்துரைக்க முடியும். ஆனால் அந்த நியாயங்களின் உண்மைத் தன்மைகளையும், செயற்பாடுகளின் குறைகளையும் மக்கள் நலன் சார்ந்து சுட்டிக் காட்டவும், களத்தில் போட்டுடைக்கவும் பலமான எதிர்க்கட்சி ஒன்றின் தேவைப்பாடு இன்றியமையாதது. இதுவே மக்களின் எதிர்பார்ப்பாகவும் காலத்தின் தேவையாகவும் உள்ளது.

குறிப்பாக தமிழ் முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை முன்னிறுத்தி செயற்படும் பிரதான சிறுபான்மைக் கட்சிகள் ஏதோ ஒரு எதிர்பார்ப்பில் தம் மக்கள் சார்ந்த நலன்களுக்காக இவர்களிலேயே தஞ்சமடைந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பேரினவாத அரசியற் சிந்தனைகளைப் பலப்படுத்திக் கொண்டு உறுதியான அரசியல் கூட்டாக திகழும் ராஜபக்ஷக்களை எதிர்க்க வேண்டிய சந்தர்ப்பங்களில் எதிர்த்தும், ஆதரிக்க வேண்டிய சந்தர்ப்பங்களில் ஆதரித்தும், அனைத்து மக்களின் ஜனநாயக தேவைகளை நிறைவேற்றும் ஒருமித்த சக்தியாக ரணில்- சஜித் இணைந்த எதிர்க்கட்சிக் கூட்டு காத்திரமான பங்களிப்புகளை செய்ய வேண்டும் என்பதே முற்போக்கான அரசியற் சிந்தனை உள்ளவர்கள் அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.

அருவி இணையத்துக்காக அகநிலா


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE