Wednesday 24th of April 2024 07:07:51 PM GMT

LANGUAGE - TAMIL
.
கிழக்கு தொல்லியல் குறித்த ஜனாதிபதி செயலணியை தமிழ், முஸ்லீம் மக்கள் இணைந்து எதிர்ப்போம்!

கிழக்கு தொல்லியல் குறித்த ஜனாதிபதி செயலணியை தமிழ், முஸ்லீம் மக்கள் இணைந்து எதிர்ப்போம்!


கிழக்கு தொல்லியல் குறித்த ஜனாதிபதி செயலணியை தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் இணைந்து எதிர்ப்போம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் விடுத்த ஊடக அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“கிழக்கு மண்ணைக் காவு கொள்ள வரும் ஜனாதிபதி செயலணியை தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் இணைந்து எதிர்ப்போம்”

தமிழர்களுடைய தாயகமான இணைந்த வடக்குக் கிழக்கிலே முக்கியமான பகுதி கிழக்கு மாகாணமாகும். இவ் கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். தமிழர்களின் அடிப்படை அபிலாஷைகளில் ஒன்றான தாயகக் கோட்பாட்டோடு பின்னிப்பிணைந்த ஒன்றாகக் கிழக்கு மாகாணம் காணப்படுகின்றது.

தமிழர்களின் தாயக பூமியான இக் கிழக்கு மாகாணத்தை அடக்கி ஆள்வதற்கும்இ ஆக்கிரமிப்பதற்கும், கைப்பற்றுவதற்கும் திட்டமிட்ட முறையில் தொல்பொருள் விடயங்களைப் பாதுகாக்கின்றோம் என்ற போர்வையில் ஜனாதிபதி செயலணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இவ் ஜனாதிபதி செயலணியானது நிச்சயமாகத் தொல்பொருள் விடயங்களைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட ஒன்றல்ல.

கடந்த காலங்களில் மகாவலி அபிவிருத்தித் திட்டம் வாயிலாக அநேக சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெற்றிருக்கிறது.

திட்டமிட்ட முறையில் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் இணைந்த வடக்கு கிழக்கைப் பிரித்து வைத்துள்ளதோடு வடக்கு மாகாணமும் கிழக்கு மாகாணமும் இணைகின்ற எல்லைப் பகுதியில் திட்டமிட்டு சிங்களக் குடியேற்றங்களைக் குடியமர்த்தி நிலத் தொடர்ச்சியற்ற வகையில் வடக்கையும் கிழக்கையும் பிரிப்பதற்கான முனைப்புக்கள் ஏற்கனவே நடைபெற்று வருகின்றது.

சிங்கள பௌத்த பேரினவாத அரசானது கொரோனா இடர்கால நிலைமையைப் பயன்படுத்தி அனைவரையும் வீடுகளுக்குள் முடக்கித் திட்டமிட்டு தொல்பொருட்களைப் பாதுகாக்கின்றோம் என்ற போர்வையில் ஜனாதிபதி செயலணியை உருவாக்கி இருப்பது தமிழினத்தை அழிக்கும் ஒரு முயற்சியாகும்.

அன்பார்ந்த முஸ்லீம் சகோதரர்களே, தமிழர்களுடைய அடிப்படையானதும் நியாயமானதுமான அபிலாஷைகளுக்கு நீங்களும் உங்கள் ஆதரவைத் தர வேண்டும் இணைந்த வடக்குக் கிழக்கே தமிழர்களுக்கு மட்டுமல்ல முஸ்லீம் மக்களுக்கும் பாதுகாப்பானது. முஸ்லீம் மக்கள் கடந்த காலங்களில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வந்துள்ளார்கள் ஆனால் இவ் பௌத்த சிங்கள பேரினவாத அரசாங்கத்திற்கு நீங்கள் எவ்வளவு தூரம் ஆதரவு கொடுத்தாலும் தம் வேலை முடிந்தவுடன் பௌத்த பேரினவாத அரசாங்கமானது உங்களைத் தூக்கி எறிந்துவிடும். அதற்கு உதாரணமாக திரு ரட்ணஜீவன் கூல் அவர்களை எடுத்து கொள்ளலாம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் கிழக்கு பறிபோவதற்கு எந்தவொரு ஆட்சேபனையையும் தெரிவித்திருக்கவில்லை.

எனவே கிழக்கு மண்ணைக் காப்பாற்றுவதற்கு நாங்கள் தமிழர்களாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இல்லையேல் கிழக்கு மண் பறிபோவதற்கு நாங்களும் உடந்தை ஆகி விடுவோம். ஆகவே ஓர் வரலாற்றுக் கடமையை ஆற்றுவதற்கு ஒரு சந்தர்ப்பம் வந்துள்ளதாகவே இதனை நாம் பார்க்கின்றோம்.

கனகரட்ணம் சுகாஷ் சட்டத்தரணி, சட்டத்தரணி ஆலோசகர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி


Category: செய்திகள், புதிது
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, இலங்கை, கிழக்கு மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE