Tuesday 23rd of April 2024 07:59:38 AM GMT

LANGUAGE - TAMIL
அகநிலா
தேஷப்பிரியவுக்கு தலையிடியான ஹூல்! (சமகால அரசியல்)

தேஷப்பிரியவுக்கு தலையிடியான ஹூல்! (சமகால அரசியல்)


பாராளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் 5ம் திகதி நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஆணைக்குழுவின் உறுப்பினர்களான ரத்னஜீவன் ஹூ மற்றும் சட்டத்தரணி நளின் அபேசேகர ஆகியோர் உட்பட அனைவரும் ஏகமனதாக இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளதாக அதன் தலைவர் மகிந்த தேஷப்பிரிய கடந்த புதன்கிழமை (28) நாட்டு மக்களுக்கு அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பின் மூலம் பாராளுமன்றத் தேர்தல்கள் நடைபெறும் திகதியைக் குறிப்பதில் தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்கொண்ட பல்வேறு விமர்சனங்களுக்கும், கண்டனங்களுக்கும் தேர்தல் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேஷப்பிரிய முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் பாராளுமன்றம் மார்ச் மாதம் 2ம் திகதி கலைக்கப்பட்டு புதிய பாராளுமன்றத்தினைத் தெரிவு செய்யும் தேர்தல் ஏப்ரல் 25ம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட போதிலும் கொரோனா நோய்த் தொற்று நெருக்கடி நிலை காரணமாக அத் திகதி பிற்போடப்பட்டு ஜுன் மாதம் 20ம் திகதி தேர்தலுக்கான புதிய திகதியாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் மே 28ம் திகதியும் தேர்தல் திகதியாக பரிசீலனையில் இருந்த நிலையில் (ஜனாதிபதியும் இந்த திகதியை விரும்பியதாக தகவல்கள் வெளியானது.) ஆணைக்குழு உறுப்பினர் ரத்னஜீவன் ஹூல் இந்த திகதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆணைக்குழு தலைவருக்கு அனுப்பிய கடிதம் பகிரங்கமாக ஊடகங்களுக்கு அவரால் வழங்கப்பட்டிருந்தது. ஹூலின் இந்த நடவடிக்கை தென்னிலங்கை அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் சுயாதீனத் தன்மை குறித்தும் பல்வேறு தரப்புகள் மத்தியில் விமர்சனங்கள் எழத் தொடங்கின.

அத்துடன் சுகாதார காரணங்களினால் ஜூன் 20ம் திகதியும் தேர்தல் பிற்போடப்படலாம் என்று ஆணைக்குழுவின் தலைவர் ஊடகங்களுக்குத் தெரிவித்த ஊகங்கள் காரணமாகவும் ஆளும் தரப்பினரின் கடும் கண்டனங்களை ஆணைக்குழு எதிர்கொண்டது. கொரோனா நெருக்கடியிலிருந்து நாடு மெல்ல மெல்ல மீண்டெழுந்துக் கொண்டிருக்கும் நிலையில் தேர்தல்கள் குறித்து ஆணைக்குழு அக்கறையின்றி செயற்படுவதாகவும், எதிர்க்கட்சிகளுக்கு பக்கச் சார்பாக ஆணைக்குழு நடந்துகொள்வதாகவும் ஆளும் தரப்பு உறுப்பினர்கள் கடுமையாக விமர்சனங்களை முன்வைக்க தொடங்கினர். ரத்னஜீவன் ஹூலின் செயற்பாடுகளை உதாரணம் காட்டி அவர்கள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு எதிராக பிரசாரங்களை மிகத் தீவிரமாக முன்னெடுத்திருந்தனர்.

மகிந்த தேஷப்பிரியவுக்கு தலையிடியான ஹூல்

இலங்கையில் கொரோனா நெருக்கடி மே மாதம் முற் பகுதியில் ஓரளவுக்கு தணிந்து வந்த வேளை தேர்தலை நடத்த உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆணைக்குழுவுக்கு பல்வேறு வழிகளில் அழுத்தம் வர ஆரம்பித்தன. குறிப்பாக தேர்தல் திகதி தொடர்பாக ஆராயும் கூட்டங்களில் பெரும்பான்மை இல்லாமையினால் ஓர் முடிவினை எடுக்க முடியாத நிலைக்கு தேஷப்பிரிய தள்ளப்பட்டார். இந்நிலையில் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரத்னஜீவன் ஹூல் திட்டமிட்டு சில கூட்டங்களுக்கு சமூகமளிக்காமல் இருந்து ஆணைக்குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்காமல் தேர்தல் திகதியை தள்ளிப் போடுவதற்காக செயற்படுகின்றார் என்று ஆளும் தரப்பும், சிங்கள ஊடகங்களும் அவர் மீது குற்றம் சுமத்தி பிரசாரங்களை முன்னெடுத்தன. இதனால் ஹூல்ல் சர்ச்சைகளின் நாயகன் ஆக மாறினார்.

இந்த சர்ச்சைகள் மத்தியில் ஹூல் வெளியிட்ட சில அரசியற் சார்பு கருத்துக்களும், தனிமைப்படுத்தல் சட்டங்களை அவர் மதிக்காமல் செயற்பட்ட நிகழ்வும் ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பெற்ற நிலையில் மகிந்த தேஷப்பிரியவுக்கு ஒரு கட்டத்தில் அவர் பெரும் தலையிடியாகவே மாறியிருந்தார். தன் சக உறுப்பினரை பகிரங்கமாக விட்டுக் கொடுக்க முடியாதவராகவும், அவருக்கு கடிவாளம் இட முடியாதவராகவும் திரிசங்கு நிலைக்கு மகிந்த தேஷப்பிரிய தள்ளப்பட்டார்.

ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் ஒரே ஒரு தமிழ் உறுப்பினர் என்ற ரீதியில் ஹ_ல் மீது ஒரு கண் எப்பொழுதும் ஆளும் தரப்புக்கு இருந்து கொண்டே வந்த நிலையில் அவரும் “சுயாதீனமாக செயற்படவில்லை” என்று தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டினை மெய்ப்பிக்கும் வகையிலேயே பல காரியங்களை செய்து கொண்டிருந்தமையை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

குறிப்பாக 2018 ஒக்டோபர் மாதம் அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்த ஜனநாயகத்துக்கு விரோதமான முறையிலான ஆட்சி மாற்ற நடவடிக்கையினை சவாலுக்குட்படுத்தி ஜனாதிபதியின் முடிவினை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அவர் மனுவொன்றை சமர்ப்பித்திருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன் அரசியலமைப்பின்படி தேர்தல்கள் ஆணைக்குழுவால் உயர்நீதிமன்றத்திடம் இவ்விடயம் தொடர்பில் விளக்கம் கோர முடியாது என்று குறிப்பிடப்பட்டது.

மேலும் கடந்த நவம்பர் மாதம் 28ம் திகதி கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கோட்டாபயவின் அமெரிக்க குடியுரிமை குறித்து தனது கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் என்ற ரீதியில் அவர் முன்வைத்த இந்த கருத்துக்கள் தொடர்பிலும் பலத்த விமர்சனங்கள் எழுந்தன.

கடந்த ஜுன் 6ம் திகதி வடபகுதி தமிழ் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் “எனக்கு சிங்களம் தெரியாது. சிங்களத்தில் உள்ள குப்பைகளை எல்லாம் எனக்கு வாசிக்க முடியாது. பொதுஜன பெரமுன கட்சியை ஆதரிக்கின்ற சில நியூஸ் பேப்பர்கள் மற்றும் ஊடகங்கள் பச்சைப் பச்சைப் பொய்யாக எழுதிக் கொண்டு வருகின்றார்கள். இவர்கள் ஜனநாயகத்துக்கு எதிரானவர்கள். இவர்களுக்கு நீங்கள் வாக்களிக்கக் கூடாது. உங்களுடைய வாக்குகளை கெடுப்பதற்கு பிரசாரம் செய்பவர்களை ஏன் ஆதரிக்க வேண்டும்?” என்று அவர் கூறியிருந்தார். ஆளும் தரப்பு கட்சிக்கு எதிராக இவ்வாறு அவர் கூறியிருந்த இந்த கருத்தானது, ஆளும் தரப்பு உறுப்பினர்கள் தொடர்ச்சியாக அவர் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்களின் உண்மை தன்மையை நிரூபிப்பதாகவே இருந்தது. அத்துடன் சிங்களத்தில் உள்ள குப்பைகள் என்று அவர் சிங்கள ஊடகங்களை பொதுவாகக் கூறியமையானது சிங்கள ஊடகவியலாளர்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கிடையே இருக்க வேண்டிய இரகசியம் காக்கும் கூட்டுப் பொறுப்பு தத்துவத்தினை ஹூல் முழுமையாக மீறிய சம்பவமாக மே 28ம் திகதி தேர்தல் திகதி சர்ச்சையைக் குறிப்பிட முடியும். தேர்தல் திகதியாக மே 28 திகதியை அறிவிப்பது தொடர்பாக ஆணைக்குழு தலைவர் மகிந்த தேஷப்பிரிய ஹூலுடன் தொலைபேசியில் சம்பாஷித்த விடயத்தினையும் குறிப்பிட்டு, அந்த திகதியை தான் எதிர்ப்பதாகக் கூறி ஆணைக்குழுவுக்கு தான் அனுப்பிய கடிதத்தினை அவர் ஊடகங்களுக்கு வெளியிட்டு பகிரங்கப்படுத்தியிருந்தார்.

இதேவேளை கடந்த மே 18ம் திகதி தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி தனது மகளை கொழும்பு இராஜகிரிய தேர்தல் திணைக்களத்திற்கு அழைத்து வந்தமை அவர் மீது கடும் அதிருப்தியை அனைவர் மத்தியிலும் ஏற்படுத்தியிருந்தது. வெளிநாட்டிலிருந்து வருகை தந்து நீர்கொழும்பு ஹோட்டலில் 14 நாட்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்தவரை, மேலும் 14 நாட்கள் தனது வசிப்பிடத்தில் தனிமைப்பட வேண்டும் என்று அதிகாரிகள் அவரை பணித்திருந்த நிலையில், யாழிலிருந்து வரும் வழியில் நீர்க்கொழும்பிலிருந்து அவரை ஹூல் அழைத்துக் கொண்டு வந்திருந்தார். இதனால் தேர்தல் திணைக்களத்தினை முழுமையாக கிருமி நீக்கம் செய்து சுத்தப்படுத்தவும் நேர்ந்தது. தேர்தல் திணைக்களத்தினால் அவருக்கு மாதாந்தம் 50 ஆயிரம் ரூபா வாகன அலவன்ஸ் வழங்கப்படும் நிலையில் யாழ் உதவி தேர்தல் ஆணையாளரின் டபிள் கெப் வாகனத்தில் இவர் யாழிலிருந்து பயணித்திருந்ததன் மூலம் பொதுச் சொத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்றும் பலத்த கண்டனங்கள் எழுந்தன.

தமிழ் புத்திஜீவிகளின் அரசியலும் தமிழ் மக்களும்

“அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டே தன் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாகவும், தான் அனைத்து சந்தர்ப்பங்களிலும் சட்ட திட்டங்களுக்கும் உட்பட்டே செயற்பட்டுள்ளதாகவும், சிலரின் அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக தன் மீது குற்றம் சுமத்தப்பட்டு வருவதாகவும்” ஹூல் இந்த குற்றச்சாட்டுக்களுக்கு பதில் அளித்துள்ளார். ‘நான் ஒரு தமிழர் என்பதானாலேயே என்னைத் தாக்குகின்றார்கள்’ என்றும் அவர் கூறியுள்ளார்.

‘தமிழர் என்பதாலாயே தாக்கப்படுகின்றேன்’ என்று கூறியிருப்பதன் மூலம் உணர்வுபூர்வமாக நாம் அவர் மீது பரிதாபப்பட்டாலும், ஓர் தமிழ் புத்திஜீவியாக சுயாதீனமானது என்று கூறப்படும் ஓர் ஆணைக்குழுவில் அங்கம் வகித்துக் கொண்டு அவர் எவ்வாறு தன்னை வெளிப்படுத்திக் கொண்டார் என்பது குறித்து நாம் இங்கு ஆழமாக சிந்தித்துப் பார்க்க வேண்டியுள்ளது. இவரின் செயற்பாடுகள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கான காரணம் இவர் தமிழராக இருப்பதால் மட்டும் நிகழ்ந்தது அல்ல.

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்பட வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும். இதனையே 19வது திருத்தத்தின் மூலம் கடந்த அரசாங்கமும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தது. சுயாதீனமாக செயற்படுவோம், எவருக்கும் பக்கச்சார்பாக செயற்பட மாட்டோம் என்றே ஆணைக்குழு உறுப்பினர்கள் அனைவரும் சத்தியப் பிரமாணம் செய்து விட்டு இந்த பதவிக்கான நியமனங்களைப் பெற்றுள்ளனர். ஆனால் உறுப்பினர்களில் ஒருவர் அதனை மீறி செயற்படுகின்றார் எனில் அதன் காரணம் என்ன?

ஓன்று அது அவருக்கான அரசியல் நிகழ்ச்சி நிரலாக இருக்கலாம் அல்லது தான் ஒரு ஆணைக்குழு உறுப்பினர் என்பதை மறந்து விட்டு செயற்படுவதாக இருக்கலாம். ஒரு ஆணைக்குழுவில் இருக்கும் உறுப்பினர்கள் மூவரும் பல்வேறு அபிப்பிராயங்களைக் கொண்டவர்களாக இருப்பது என்பது ஏற்கத்தக்க விடயமாகும். ஆனால் தீர்மானம் எடுக்கும் செயற்பாடு என்று வரும் போது மூன்றில் இரண்டு என்ற அடிப்படையில் அந்த கூட்டுத் தத்துவத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு உறுப்பினர்கள் அனைவருக்கும் உண்டு. மேலும் ஆணைக்குழுவில் பேசப்பட்ட விடயங்களைப் பகிரங்கப்படுத்தாமல் இரகசியம் காக்கவும் அவர்கள் அனைவருக்கும் பொறுப்பு இருக்கின்றது.

மேலும், தமிழ் மக்களின் அபிலாஷைகள் மற்றும் அவர்களின் தேவைகளுக்காக காத்திரமான பங்களிப்புகளை செய்தவராக ஹூல் பரவலாக அறியப்பட்டவர் அல்லர். இலங்கை வரலாற்றில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட மிகவும் இக்கட்டான துயர் மிகுந்த காலப்பகுதிகளில் அவர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்காமல், இரட்டைக் குடியுரிமையைப் பயன்படுத்திக் கொண்டு காலத்திற்கு காலம் காணாமற்போய்விட்டு திடீரென வந்து தன்னை எப்பொழுதும் பாதுகாத்துக் கொண்டவராகவே தமிழ்ச் சமூகம் இவரை அடையாளம் காண்கின்றது. இந்நிலையில் தன் அரசியல் நிகழ்ச்சி நிரலை தக்க வைத்துக் கொள்ளும் ஓர் உபாயமாக அவர் ‘தான் ஒரு தமிழர்’ என்ற விடயத்தினை கையாள்கின்றாரோ என்ற சந்தேகம் எழாமல் இல்லை.

தென்னிலங்கையில் ஒரு முக்கியமான பதவியில் இருந்து கொண்டு தமிழ் மக்களின் அபிலாஷைகளையும், அவர்களின் தேவைகளையும் மதிப்பவராக அவர் இருந்திருந்தால் அவர் தனது செயல்கள் ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் பாதிக்கக் கூடும் என்ற பொறுப்புணர்வுடன் செயற்பட்டிருப்பார். தனது செயல்களும், கூறும் சர்ச்சைக்குரிய விடயங்களும் ஒட்டுமொத்த தமிழ் மக்களைப் பாதிக்காது என்று அவர் எந்த கருதுகோளின் அடிப்படையில் நினைத்து செயற்படுகின்றார் என்ற கேள்வி எழுகின்றது.

இவ்வாறான தூரநோக்கற்ற இவ்வாறான செயற்பாடுகள் சிங்கள மக்கள் மத்தியில் அனைத்து தமிழ் மக்கள் மீதும் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் அமைந்து விடுகின்றது. இதனால் முற்றிலும் பாதிக்கப்படப் போவது இந்த புத்திஜீவிகள் அல்ல மாறாக எமது அப்பாவி தமிழ் மக்களே என்பதை இங்கு வலியுறுத்திக் கூற வேண்டியுள்ளது.

இந்த வெறுப்புணர்வு இரு இனங்களுக்கிடையிலான முறுகலாக மாறும் போது அதனை அரசியலாக்கி சர்வதேச மட்டத்தில் தமது நலன்களைப் பேணிக் கொள்ளும் அரசியற் நிகழ்ச்சி நிரலும் பல தரப்புகளுக்கு உண்டு என்பதனையும் நாம் மறந்துவிட முடியாது. இலங்கையில் தமிழ் மக்களுக்கும், சிங்கள மக்களுக்கும் இடையில் அரசியற் கொந்தளிப்பு நிலை இருந்தால் தான் இந்த தரப்புகளின் அரசியலும் சர்வதேச மட்டத்தில் வலிதாகும். புலம்பெயர் அரசியலும் வளமடையும்.

“ரத்னஜீவன் ஹூல் விடுதலைப் புலிகளின் காலத்திலும் துணிவாக பல கருத்துக்களைக் கூறியவர். அவ்வாறானவர் இப்பொழுது எப்படி அஞ்சப்போகின்றார். அவருக்கு எதிராக ஆளும் தரப்பு திட்டமிட்டு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றது” என்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் அஜித் பி. பெரேரா கூறியிருந்த கருத்து இங்கு கவனிக்கத்தக்கது. ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களும், அதிலிருந்து பிரிந்து சென்று போட்டியிடும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களும் மற்றும் ஜே.வி.பி உறுப்பினர்களும் ரத்னஜீவன் ஹ_லுக்கு சார்பாக கருத்துக்களைக் கூறி வருகின்றனர். இந்த அரசியல் நகர்வினை நோக்கும் போது சர்ச்சைகளை ஏற்படுத்தி ஆளும் தரப்பின் கொந்தளிப்பு மனநிலையை ஓரளவுக்கு தக்க வைத்துக் கொள்ளும் எதிர்க்கட்சிகளின் தேவையை தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரத்னஜீவன் ஹ_ல் ஏதோ ஒருவகையில் நிறைவேற்றிக் கொண்டே இருக்கின்றார் என்பது மட்டும் தெளிவாக தெரிகின்றது. அருவி இணையத்துக்காக அகநிலா


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை பொதுத்தேர்தல் 2020, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE