;

Thursday 24th of September 2020 08:17:00 PM GMT

LANGUAGE - TAMIL
-
பாவத்தைக் கழுவப் பலியான வீரர்கள் - (வரலாற்றுத் தொடர்)

பாவத்தைக் கழுவப் பலியான வீரர்கள் - (வரலாற்றுத் தொடர்)


மகாநாயக்க தேரரால் கி.பி 5ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மகாவம்சம் மூலம் விதைக்கப்பட்ட தமிழர்களுக்கெதிரான இனக்குரோத சிந்தனைகள் பௌத்த பிக்குகளாலும், அடுத்தடுத்து தோன்றிய பாளி சிங்கள இலக்கியங்களாலும், கர்ண பரம்பரைக் கதைகளாலும் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வளாத்தெடுத்தன் பலன் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் எனப் பல அந்நிய நாட்டவர்களாலும் இலங்கையின் கரையோரப் பிரதேசங்கள் மாறி மாறிக் கைப்பற்றப்பட்ட பின்பும் கூட 300 ஆண்டுகளுக்கு மேலாகச் சுதந்திர பூமியாக விளங்கிய கண்டி இராச்சியம் கண்டி ஒப்பந்தத்தின் மூலம் பிரித்தானிய பேரரசுக்கு தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டது.

இலங்கையின் கடைசி மன்னனான கீர்த்தி ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் நாயக்க வம்சத்தைச் சேர்ந்த ஒரு தமிழனாக இருந்த போதும், அவன் தலதா மாளிகையை அபிவிருத்தி செய்தும் விகாரைகளை அமைத்தும் அவற்றைப் பராமரிக்க நிலங்களை ஒதுக்கி பௌத்த மதத்துக்கும் பல சிங்கள இலக்கிய, வைத்திய நூல்களை உருவாக்க ஆதரவு வழங்கியும் சிங்கள மொழிக்கும் அளப்பரிய சேவைகளை வழங்கினான். மல்வத்த அஸ்கிரிய பீடங்களுக்கு உயர் அந்தஸ்து வழங்கியது மட்டுமின்றி அவனின் அரசியலில் ஆலோசகராகவும் ஒரு சங்க நாயக்கரையே நியமித்திருந்தான். அவன் உண்மையான ஒரு சிங்கள பௌத்த மன்னனாகக் கண்டியை ஆட்சி செய்தபோதும் சிங்கள ரதல பிரபுக்களின் இன விரோதக் கொள்கை காரணமாக ஆங்கிலேயருக்குச் சகல விதமான உதவிகளையும் வழங்கி 1803 இலும் 1812 இலும் வீழ்த்தப்படமுடியாத விக்கிரம ராஜசிங்கனின் ஆட்சியை வீழ்த்தினர். கண்டி ஒப்பந்தம் மூலம் கண்டி இராச்சியம் பிரித்தானிய பேரரசின் ஆளுகைக்குள் கொண்டு வரப்பட்டது. தாங்கள் ஆங்கில ஆட்சிக்கு கப்பம் செலுத்தும் ஒரு சிற்றரரசாகக் கண்டியை ஆளலாமென்ற சிங்களப் பிரபுக்களின் கனவு முற்றாகவே சிதைக்கப்பட்டது. தாம் ஏமாற்றப்பட்டதையும், தங்கள் எதிர்பார்ப்புகள் சிதறடிக்கப்பட்டமையும் உணர்ந்த போது தான் கண்டி மன்னனுக்கும் இலங்கை மக்களின் இறைமைக்கும் தாங்கள் செய்த துரோகத்தின் பாரதூரத்தன்மையின் தாக்கத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது.

எனவே தாங்கள் புரிந்த பாவத்தைத் தாங்களே கழுவ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். நயவஞ்சகமான முறையில் கண்டியை ஆங்கிலேயரிடம் ஒப்படைத்து அவர்களே அதை அந்நியர்களிடமிருந்து மீட்கவேண்டிய நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

அதன் காரணமாக 1810ல் இஹாகம என்ற பிக்குவின் அபார முயற்சியால் வில்பாவ எனத் தன்னை அரசன் என்று கூறிக்கொண்ட ஒருவனின் ஒத்துழைப்புடன் ஆங்கில ஆட்சியதிகாரத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சதி ஆரம்பத்திலேயே காட்டிக்கொடுக்கப்பட்டு முறியடிக்கப்பட்டது. 1816-1817 காலப்பகுதியில் எழுச்சி பெற்ற ஊவா வெல்லச கிளர்ச்சியும் சில சிங்களப்பிரபுக்களால் காட்டிக்கொடுக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டது. இப்புரட்சிக்குத் தலைமை தாங்கிய கெப்பிட்டிப்பொல, மடுகல்ல, எல்லப்பொல போன்ற விடுதலை வீரர்கள் சிரச்சேதம் செய்யப்பட்டதுடன், பல விடுதலைப்போராளிகள் தூக்கிலிடப்பட்டனர். பிலிமத்தலாவ, எஹலப்பொல, இஹாகம தேரர் உட்பட பலர் மொரிஷியஸ் தீவுக்கு நாடுகடத்தப்பட்டனர்.

அத்துடன் ஊவா வெல்லச கிளர்ச்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. அவர்கள் தாம் செய்த பாவத்தை தாமே கழுவ மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டது.

இப்பெரும் தோல்வியையடுத்து போராட்டத்தையும், போராளிகளையும் காட்டிக்கொடுத்த பிரபுக்கள் மட்டுமின்றி, வேறுபல சிங்கள நிலபிரபுக்களும் ஆங்கில ஆட்சியின் அரசு பதவிகளைப் பெற்று தமிழ், சிங்கள, முஸ்லீம், பறங்கி இன மக்களை ஒடுக்கவதில் ஆங்கிலேயருக்குத் துணையாகச் செயற்பட்டனர். இன்னொருபுறம் கரையோரப் பகுதியிலுள்ள சில பிரபுக்கள் கிறீஸ்தவ மதத்துக்கு மாறியதுடன், ஆங்கிலக் கல்வியையும் கற்று கறுத்த நிற வெள்ளையர்களாகத் தங்களை மாற்றிக் கனவான்கள் மட்ட வாழ்வை அனுபவித்தனர். ஆனால் மீண்டும் கண்டியை விடுவித்து தாங்கள் செய்த பாவத்தைக் கழுவ வேண்டுமென்ற துடிப்பு மட்டும் இன்னும் ஒருபகுதினரிடம் வலுக்குன்றாமலிருந்தது.

எனவே 1817-1818 ஊவா வெல்லச கிளர்ச்சி தோற்கடிக்கப்பட்ட பின்பும் 1820 தொடக்கம் 1848 வரை சிறிதும் பெரிதுமாகப் பல கிளர்ச்சிகள் ஆங்கில ஆட்சிக்கெதிராக இடம்பெற்றன. அத்தனை போராட்டங்களும் ஏராளமான உயிர்ப்பலிகள் மூலமும், கொடிய தண்டனைகள் மூலமும் ஒடுக்கப்பட்டன. அனைத்துப் போராட்டங்களிலும் பௌத்த பிக்குகள் காத்தரமான பங்கை வகித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களில் சிலர் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டனர். சிலர் நாடு கடத்தப்பட்டனர்; இன்னும் சிலர் சிறைசெய்யப்பட்டனர்.

ஹேவஹெற்றவில் பிறந்த குமாரசாமி என்பவன் தனது பெயரை விமலதர்ம நரேந்திர சிம்மன் என மாற்றிக்கொண்டு பிலிமத்தலாவ, மடுகல்ல் உட்பட ஏழு கொறளைகளின் மக்கள் முன்னிலையில் சிறி மஹாபோதியின் கீழ் வெற்றியின் தங்கவாளைப் பெற்றதாகவும், தான் 1817-1818 கிளர்ச்சியின் போது அரசனாக முடிசூட்டப்பட்ட வில்பாவவின் இடத்துக்கு நியமிக்கப்பட்டதாகவும் தெரிவித்தான். இவன் பிந்தனவில் உள்ள வேடர் மத்தியில் தன்னை அரசனாகப் பிரகடனம் செய்ததுடன் 7000 வேடர்களை அம்பு வில்லுகளால் ஆயுத பாணியாக்கினான். வேடர்கள் படையுடன் சென்று தான் கண்டியை கைப்பற்றப்போவதாக அறிவித்த போதும் அவன் பிந்தனவுக்கு அருகிலுள்ள வெல்லச பிரதேசத்துக்கு நகர்ந்தான். ஆங்கில ஆட்சியினர் இராணுவச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தினர். கனகொடதிசாவ என்ற சிங்கள நிலப்பிரபுவால் காட்டிக்கொடுக்கப்பட்டு கிளர்ச்சித் தலைவன் கைது செய்யப்பட்டான். 12.01.1820ல் அவனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டபோதும் பின்பு அது ஆயுள்தண்டனையாக மாற்றப்பட்டு அவன் மொறிஷியஸ் தீவுக்கு அனுப்பப்பட்டான். இன்னொருபுரம் 1818 கிளர்ச்சியின் போது வில்பாவேயினால் திசாவையாக நியமிக்கப்பட்ட கொப்பேக்கவெ என்பவன் ஒரு பௌத்த பிக்கு, இராணுவத்திலிருந்து வெளியேறிய மூன்று மலே படையினர் ஆகியோரின் துணையோடு மாத்தளை, தமன்கடுவ ஆகிய பகுதிகளின் அரச பிரதானிகளுடன் இணைத்து சில கிளர்ச்சிகளை மேற்கொண்டான். இவர்கள் திருகோணமலை வீதியிலுள்ள ஒரு தபால் நிலையத்தை எரியூட்டியபோது ஒரு தபால் பணியாளர் கொல்லப்பட்டார் அந்தச் சம்பவத்தையடுத்து கண்டியிலும் திருகோணமலையிலுமிருந்து புறப்பட்ட ஆங்கிலப் படையினர் கொப்பேகடுவவை கைது செய்தனர்.

ஆங்கில அரசின் தாணிய வரி அறவிடுபவர்கள் நெல் வயல் குத்தகைக்காக ஆங்கில அரச பணியாளர்கள் போன்றோர் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட துன்புறுத்தல்களை பொறுக்கமாட்டாத மக்கள் கிளர்ச்சியில் இறங்கினர். இப்போராட்டங்களை மாத்தளையைச் சேர்ந்த கஹாவத்த உன்னான்சே தேரர் என்ற ஒரு பிக்கு வேறு இரு பிக்குகளுடன் இணைந்து கொஸ்வித்த ரட்டேறால என்ற சிங்களப்பிரதானியின் தலைமையில் மக்களை வழிநடத்தினர். இத 1823 மே மாதம் பெரும் கிளர்ச்சியாக வெடித்தது. எனினும் ஆங்கிலப்படையணிகள் அனுப்பப்பட்டு அவை ஒடுக்கப்பட்டதுடன் கிளர்ச்சியாளர்கள் யாவரும் கைது செய்யப்பட்டனர். 1823 ஓகஸ்ட் 5ம் திகதி கஹாவத்த உன்னான்சே தேரருக்கும் கொஸ்வந்தரட்ட றாலாவுக்கும் மரணதண்டனை விதிக்கப்படுகிறது. மேலும் 12பேர் மொறிஷியஸ் தீவக்கு நாடுகடத்தப்படுகின்றனர்.

1824இல் கலேகள்ள வன்னிசேகர முதலி என்பவன் தலைமையில் இடம்பெற்ற கிளாச்சியில் நெற்காணிக் குத்தகைக்காரர்களைக் கைது செய்தல், வரி அறவிடுவோரைத் தண்டித்தல் போன்ற நடவடிக்கைகளில் மக்கள் தலைவர்கள் இறங்கினர். எனினும் இவர்களின் கிளர்ச்சியம் ஒடுக்கப்பட்டு 50பேர் கைது செய்யப்பட்டு 12பேர் தண்டிக்கப்பட்டனர். அதில் தலைமை தாங்கிய மூவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இவ்வாறே 1830 இல் ஆரம்பித்த கிளர்ச்சி 1834 இல் மேற்கொள்ளப்பட்ட சதி முயற்சி 1840 இல் இடம்பெற்ற போராட்டங்கள் என அனைத்தும் ஆங்கிலேயருடன் இணைந்து செயற்பட்ட சிங்களப்பிரதானிகளால் காட்டிக்கொடுக்கப்பட்ட ஆங்கில ஆட்சியாளர்களால் முறியடிக்கப்பட்டன.

1943 இல் மேற்கொள்ளப்படவிருந்த பெரிய அளவிலான கிளர்ச்சி ஒன்றுக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டன. ஊவா, மாத்தளை ஹரிஸ்பத்துவ, கம்பளை ஆகிய நான்கு கோறளைகளைச் சேர்ந்த 10,000 மக்கள் தாக்குதல்களை மேற்கொண்டு அப்பிரதேசத்தின் அதிகாரத்தை கைப்பற்றுவது எனவும் பதுளையிலுள்ள ஆங்கிலப் படைத்தளங்களை தாக்கி அழிப்பது எனவும் இன்னொரு படையணி இரண்டாகப் பிரிந்து கொழும்பைக் கைப்பற்றுவது எனவும் திட்டங்கள் வகுக்கப்பட்டன. ஆனால் இத்திட்டங்கள் பற்றிய தகவல்கள் கசிந்துவிடவே கலகொட திசாவவும் சில கிராமத்தலைவர்களும் எதிர்பாராதவிதமாக கைது செய்யப்பட்ட நிலையில் திட்டங்கள் தாமதமடைகின்றன. அதேவேளையில் பெந்தோட்ட உன்னான்சேயும் கைது செய்யப்படுகின்றனர். புரட்சி ஆரம்பிக்கப்படும் முன்னரே நசுக்கப்பட்டு உன்னான்சே தேரருக்கு பதினான்கு வருடங்கள் சிறைத் தண்டனையும் கலகொட திசாவவுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்படுகின்றன.

1815ம் ஆண்டில் தமிழ் மன்னனை ஆட்சியிலிருந்து அகற்ற ஆங்கிலப்படையினருக்கு உதவிய சிங்கள ரதல பிரபுக்கள் கண்டிய ஒப்பந்தம் மூலம் கண்டிய அரசை ஆங்கிலேயர் வசமாக்கினர். அந்தப் பாவத்தைக் கழுவ 1815 தொட்டு 1848 வரை இடம்பெற்ற சதி நடவடிக்கைகள் கிளர்ச்சிகள் என்பனவற்றில் ஏராளமான வீடுதலைவிரர்களின் உயிர்கள் பலிகொள்ளப்பட்டனர். ஆனால் அந்தப் பாவம் 1948 வரை அதாவது இலங்கை சுதந்திரம் பெறும் வரை கழுவப்படவேயில்லை.

இப்போராட்டத்தில் தம்மை அர்ப்பணித்த சிங்களப்பிரதானிகள், மக்கள் ஆகியோரின் தியாகங்கள் என்றும் போற்றப்படவேண்டியவை. ஆனாலும் 2016ல் முன்னாள் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவால் சிலரின் மீதான தேசத்துரோகக் குற்றச்சாட்ட நீக்கப்பட்டு தேசிய வீரர்களாக பிரகடனம் செய்யப்பட்டமை கூட இனவாத அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டமையானது இன்னும் சிங்கள பௌத்த மேலாதிக்கவாதம் ஒவ்வொரு முனையிலும் கூர்மைப்பட்டிருப்பதை மறுத்துவிட முடியாது.

தொடரும் அருவி இணையத்துக்காக நா.யோகேந்திரநாதன்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags:பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE