Thursday 18th of April 2024 02:31:17 PM GMT

LANGUAGE - TAMIL
-
இலங்கை மத்திய வங்கி  அதிகாரிகளை கடுமையாக விமர்சித்த கோட்டபாய!

இலங்கை மத்திய வங்கி அதிகாரிகளை கடுமையாக விமர்சித்த கோட்டபாய!


நாடு பொருளாதா நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் அதிலிருந்து மீள்வதற்கு இலங்கை மத்திய வங்கியிடம் எந்தத் திட்டங்களும் இல்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடுமையாக விமா்சித்துள்ளார்.

நீங்கள் என்ன திட்டங்களை முன்வைத்திருக்கிறீர்கள்? எதனைச் செய்ய சொல்கிறீர்கள்? என்ன ஆலோசனைகளை நீங்கள் எனக்கு வழங்கியிருக்கிறீர்கள்? எதுவும் இல்லை எனவும் மத்திய வங்கி அதிகாரிகளை அவா் நேரில் கடுமையாக விமா்சனம் செய்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு மத்திய வங்கி அதிகாரிகளுக்குமிடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றபோது ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவா் மேலும் கருத்து வெளியிடுகையில்,

சுகாதார பிரச்சினையை பொருளாதார பிரச்சினையாக மாற்றுவதற்கு இடமளிக்க முடியாது. பெரிய நாடுகள் மட்டுமன்றி சிறிய நாடுகளின் மத்திய வங்கிகள்கூட பாரிய நடவடிக்கைகளை எடுக்கின்றன. அமெரிக்காவின் பெடரல் வங்கி 600 பில்லியன் அமெரிக்க டொலர்களை இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு வழங்குகின்றது. அவுஸ்திரேலியாவும் ஜப்பானும் திட்டங்களை அறிவிக்க உள்ளன. அதேபோன்று எம்மை சுற்றியுள்ள சிறு நாடுகளின் மத்திய வங்கிகளும் இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு பங்களிக்கின்றன. சூழல் மற்றும் அபிவிருத்திக்கான அரபு மன்றம் (AFED) முன் எப்போதும் இல்லாத வகையில் பொருளாதாரத்திற்கு உதவுவதற்கு முழு அளவிலான கருவிகளை பயன்படுத்தியுள்ளனர். இப்போது நாம் என்ன கருவியை பயன்படுத்தியுள்ளோம் ஒன்றும் இல்லை. இதற்காக எமது மத்திய வங்கி எதையுமே செய்யவில்லை. மத்திய வங்கியும் திறைசேரியும் தான் நிதி மற்றும் அரசிறை வருமான கொள்கையை தயாரிக்கின்றன. ஆனால் அது நாட்டின் ஜனாதிபதியினது பொருளாதார கொள்கைக்கு ஏற்ற வகையிலேயே அமைக்கப்பட வேண்டும். உங்களிடம் இதற்கென பல்வேறு கருவிகள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்த வேண்டும். எனினும் எமது மத்திய வங்கி எந்தவொரு கருவியையும் பயன்படுத்துவது இல்லை. அவர்கள் நித்திரையில் இருக்கிறார்கள். 150 பில்லியன் ரூபாவை வங்கிகளுக்கு வழங்குமாறு நாம் கூறினோம். இது வர்த்தகத்துறையின் பிழை அல்ல. முன்னர் இடம்பெற்ற தவறுகளின் காரணமாக அனைத்து கம்பனிகளுக்கும் அரசாங்கம் பெருந்தொகையை வழங்க வேண்டியுள்ளது. இப்போது இந்த நிதியை பிணையாக வைத்துக்கொண்டு வங்கிகளிலிருந்து இவர்களுக்கு கடன் பெறுவதற்கு இடமளியுங்கள். அப்போது அவர்களால் பொருளாதாரத்தை கொண்டு நடத்த முடியும். பணசுழற்சி இது தான். இது மிகவும் இலகுவானது. இது தான் பொருளாதாரத்தின் அடிப்படை. எனினும் நீங்கள் என்ன செய்கிறீர்கள். உங்களது தவறுகள் அரசாங்கத்தின் மீது சுமத்தப்படுகின்றன. நீங்கள் இவ்வாறான விடயங்களை பார்ப்பதில்லை. பினான்ஸ் கம்பனிகளுக்கு நடந்துள்ள நிலைமையினை பாருங்கள்.

இந்த நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவது முகாமைத்துவம் செய்வது உங்களுடைய பொறுப்பு. நீங்கள் அதனை செய்வதும் இல்லை. லீசிங் நிறுவனங்களைப் பற்றி பார்ப்பதும் இல்லை. ஈ.ரி.ஐக்கு என்ன நடந்தது? இவற்றை நீங்கள் பிழையாக செய்து இறுதியில் அவர்களால் பணத்தை செலுத்த முடியாதுள்ளது. த பினான்ஸ் நிறுவனம் மூடப்பட்டுள்ளது. அது எமக்கு தெரியாது. இப்போது அதற்கு எப்படி பணம் செலுத்துவது? அவற்றை முகாமைத்துவம் செய்வதும் இல்லை. இங்கு இருப்பவர்கள் அனைவரும் பொருளாதார நிபுணர்கள். இலட்சக் கணக்கில் சம்பளம் பெறுகின்றார்கள். என்ன செய்கின்றீர்கள்? உங்களுக்கென்று ஒரு பொறுப்புள்ளது. உங்களுக்கு நான் ஒரு பொறிமுறையை வழங்கியிருக்கின்றேன். அதனை உங்களால் செய்ய முடியாதென்றால் நாளை காலை ஆகும்போது எனக்கு ஒரு பொறிமுறையை சமர்ப்பிக்க உங்களுக்கு முடியும்.

ஏனைய நாடுகள் சிறிய, நடுத்தர தொழில் முயற்சிகளை பாதுகாப்பதற்கு என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள். இங்கு என்ன செய்யப்படுகின்றது. ஒன்றில் நீங்கள் என்னை கஷ்டத்திற்கு உள்ளாக்கப் பார்க்கிறீர்கள். அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உள்ளாக்க பார்க்கின்றனர். நீங்கள் உங்களது கடமைகளை செய்தால் நான் இவ்வாறு பேச வேண்டிய தேவையில்லை. என்றாலும் நான் தெரிவு செய்யப்பட்டு எட்டு மாதங்கள் ஆகின்றன. வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்புவோம் என அன்றிலிருந்தே கூறி வருகின்றேன்.

கடந்த அரசாங்கத்தின் தவறுகளைப்பற்றி எனக்கு பேசத்தேவையில்லை. ஆனால் நீங்கள் அறிவீர்கள், அந்த வங்கிக் கொள்ளையின்போதும் நீங்கள் இருந்தீர்கள். அவற்றுக்கு அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கினால் ஏன் நான் எதிர்பார்க்கும் நியாயமான விடயத்துக்காக செயற்பட முடியாது. இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்காக எனக்கு மக்கள் மிகப்பெரும் அதிகாரத்தை தந்துள்ளார்கள். நான் கேட்பது இதனை செயற்படுத்த இடமளிக்குமாறு மாத்திரமே ஆகும். கொரோனா வந்தது. அது இன்று முழு உலகிலும் இதுவரை இல்லாத பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. சுகாதார திணைக்களம், இராணுவம், உளவுப்பிரிவு, பொலிஸ் போன்ற நிறுவனங்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதனால்தான் எமக்கு இயலுமாக இருந்தது. உலகின் ஏனைய நாடுகளை விட முதலாவதாக இந்நாட்டை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கு எமக்குள்ள இந்த பொருளாதார நெருக்கடி இன்னும் இன்னும் கீழ் நோக்கி செல்வதற்கு முன்னர் இதனை மீளக்கட்டியெழுப்புவது உங்கள் கைகளிலேயே தங்கியுள்ளது. தற்போது அதனை நடைமுறைப்படுத்த எனக்கு உதவி செய்யுங்கள். நான் கூறும் முறைமைகள் இல்லையென்றால், என்ன முறைமைகளை நீங்கள் முன்வைக்கிறீர்கள்? இவ்வாறான சந்தர்ப்பத்தில் இந்நாட்டில் உள்ள மிகப்பெரிய பொருளாதார நிபுணர்கள் இருக்கும் இடத்தில் இது உங்களது கடமையில்லையா? இந்த நிலைமையில் இருந்து முன்னேறுவதற்கு அவசியமான முறைமையொன்றை முன்வைப்பது? நீங்கள் எதனை முன்வைத்திருக்கிறீர்கள்? எதனைச் செய்ய சொல்கிறீர்கள்? என்ன ஆலோசனைகளை நீங்கள் எனக்கு வழங்கியிருக்கிறீர்கள்? எதுவும் இல்லை. இவற்றை பார்த்து நான் சிந்தித்தேன். நான் கூறுபவைகளை செய்ய எவரும் முன்வருவதில்லை. அதனையும் தடுப்பீர்களாயின் ஒன்றை மாத்திரம் சொல்லிக் கொள்கிறேன். தயவுசெய்து நான் கூறுபவைகளை நடைமுறைப்படுத்தவில்லையென்றால் உங்கள் திட்டங்களை நாளை காலையாகும்போது எனக்கு தாருங்கள். இந்த பொருளாதார நிலையில் இருந்து எவ்வாறு நாம் முன்னேறுவது என்பது பற்றிய உங்கள் கருத்துக்கள் என்ன என்பதை, எவ்வாறு பொருளாதாரத்தை வலுப்படுத்துவது, எவ்வாறு இந்த பொருளாதார நிலையில் வங்கிகளுக்கு உதவுவது, எவ்வாறு சிறிய மற்றும் நடுத்தர வியாபாரங்களை மீளக்கட்டியெழுப்புவதற்கு கைகொடுப்பது, எவ்வாறு என்று நீங்கள் கூறுங்கள். நான் கூறுவது தவறு என்றால் தவறு என்று எனக்குக் கூறுங்கள்.


Category: செய்திகள், புதிது
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE