Wednesday 24th of April 2024 07:57:23 PM GMT

LANGUAGE - TAMIL
-
பாரம்பரிய கலைகளில் நாட்டுக்கூத்து - நா.யோகேந்திரநாதன்

பாரம்பரிய கலைகளில் நாட்டுக்கூத்து - நா.யோகேந்திரநாதன்


காத்தவராயன் கூத்து எவ்வாறு மக்கள் மயப்பட்ட கலையாக விளங்கியது என்பதையும், கூத்து பழகுவதற்கு ஆரம்பித்த நாள் முதல் மேடையேற்றம் நிறைவு பெறும் வரை நடிகர்கள், கலைஞர்கள் மட்டுமின்றி முழு ஊருமே பங்களிப்பு வழங்கி மகிழ்வார்கள் என்பதையும், கூத்து மேடையேறி பல நாட்கள் சென்ற பின்பும் கூத்துப்பாடல்கள் மக்கள் குரல்களில் மிதக்கும் என்பதையும் நாமறிவோம்.

ஒரு காலத்தில் அம்மை, கொப்புளிப்பான் போன்ற நோய்கள் ஏற்படக்கூடாதென்பதற்காகவே அம்மனுக்கு நேர்த்தியாக இக்கூத்து ஆடப்பட்டுவந்தது. எம் வெய்யில் காலமான பங்குனிகளிலும், ஆடிப்பூரத்திலும் இக்கூத்து ஆடப்பட்டுவருவதிலிருந்து இதன் மரபுசார் நம்பிக்கைகளை புரிந்து கொள்ளமுடியும்.

யாழ்ப்பாணம், மன்னார், முல்லை, வன்னி எனப்பல்வேறு மாவட்டங்களிலும் வெவ்வேறு தனித்துவமான கூத்து வகைகள் நிலவியபோதிலும் காத்தவராயன் வடபகுதி முழுவதுக்கும் பொதுவானதென்பதென்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளையில் காத்தவராயன் நாட்டாரிசை சேர்ந்த பாடல்களைக்கொண்டுதுள்ளதுடன் நடிப்புடன் கூடிய துள்ளுநடையும், பாடல்களும் தாளத்திற்கும் ஏற்ற வகையில் அமைந்திருக்கும். ஆனால் ஏனைய கூத்துக்கள் கடுமையான ஆட்டத்தருக்களையும் பாடல்களையும் கொண்டு அமைந்திருக்கும். அவற்றில் ஆட்டங்கள் முக்கியமானவையாக அமைந்திருக்கும். எப்படியிருப்பினும் எமது கூத்துக்கலை எமது இன அடையாளத்தை தனித்துவத்துடன் அடையாளப்படுத்தும் முக்கியத்துவம் கொண்டதென்பதிலும், அவற்றின் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

இந்நாட்களில் கூத்துக்கலைகள் சாதரண பாமர கிராமிய மக்களாலேயே ஆடப்படும். காலத்துக்குக்காலம் அடிப்படைகளில் மாற்றமின்றி மெருகுபடுத்தப்பட்டும் பாதுகாக்கப்பட்டும் வருகிறது. இவர்கள் முறைப்படி சங்கீதம் கற்றவர்களோ, இசையாற்றல் கொண்டவர்களாகவோ இல்லாதபோதிலும் தாளம், சுருதி பிசகாமல் பாடுவதிலும் தருக்களிற்கேற்ப தாளம் தவறாமல் ஆடவும் வல்லவர்களாயிருப்பர். இதற்கு அவர்கள் பரம்பரை ஆற்றலும் அனுபவமுமே காரணமாகும் என நம்பப்படுகிறது.

கிராமிய மக்களின் பூர்வீக சொத்தாக நாட்டுக்கூத்துக்கள் கருதப்பட்டாலும் கூட தமிழர்களின் நாடகவடிவம் கூத்துக்கலை என அழைக்கப்பட்டமையையும், சங்க காலத்துக்கு முற்பட்ட காலத்திலேயே கூத்துக்கள் சிறப்பான முறையில் அரங்கேற்றப்பட்டமையையும் எமது தொன்மை வாய்ந்த இலக்கியங்கள் எடுத்துக்காட்டுகின்றன. சிலப்பதிகாரத்தில் பல்வகைகூத்துக்கள் பற்றிய தகவல்களை அறியமுடியும். அக்காலத்திலேயே குரவைக்கூத்து, ஆரியக்கூத்து என வெவ்வேறு வகையான கூத்துக்கள் இடம்பெற்று வந்தமையை அறியமுடிகிறது.

தற்சமயம் இவை பல்வேறுவிதமான மாற்றங்களுக்கு உட்பட்டு பலவிதமான கூத்துக்கள் ஆடப்பட்டுவருகின்றன. ஒவ்வொரு கூத்திலும் வரும் ஆடல்கள், பாடல்கள் தனித்துவமான அம்சங்களைக் கொண்டிருந்தபோதிலும் அனைத்திலும் பொதுவான அம்சங்களே மேலோங்கி நிற்கும் அதேவேளையில் இவை எமது தெய்வ வழிபாட்டோடும் மரபுசார் நம்பிக்கைகளுடனும் நெருக்கமாகப் பிணைக்கப்பிட்டிருப்பதால் இது ஒரு சடங்காகவும் கொள்ளப்படுகிறது.

வெவ்வேறு கூத்து வடிவங்களும் வெவ்வேறு நோக்கங்களுக்காகவும் ஆடப்பட்டு வந்தன. நேர்த்திக்கடனுக்காக வாசாப்பு நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இந்நோக்கத்துக்காகக் காத்தவராயனும் ஆடப்படுவதுண்டு. இக்கூத்து சில நோய்கள் வராமல் தடுக்கும் வேண்டுதலின் அடிப்படையிலும் ஆடப்படுவதுண்டு. மழை பெய்ய வேண்டுதல் செய்தே வசந்தன் கூத்து ஆடப்படுகிறது. பூம்புகாரில் இந்திரவிழாவின் போது இந்த வசந்தன் கூத்து ஆடப்பட்டு வந்ததாக சில இலக்கியத்தகவல்கள் தெரிவிக்கின்றன. தங்கள் பெண்பிள்ளைகளுக்கு ஏற்ற மணவாளன் கிடைக்க வேண்டுமெனக்கோரியே காமன் கூத்து ஆடப்படுவதாகச் சொல்லப்படுகிறது. வடமோடி, தென்மோடி என்பன விவசாயிகள் தாம் பெற்ற விளைச்சலுக்காக நன்றி தெரிவிக்குமுகமாகவே ஆடப்பட்டுவருகின்றன.

வடபகுதில் காத்தவராயன் கூத்து எல்லாப்பிரதேசங்களிலும் பொதுவாக ஆடப்பட்டுவந்தபோதிலும் ஒவ்வொரு பிதேசத்துக்குமெனத் தனித்துவமான கூத்துக்கள் உண்டு. யாழ்ப்பாணத்தில் வடமோடி, தென்மோடி, காத்தவராயன், வசந்தன், நாட்டை என்பன ஆடப்படுகின்றன. மன்னாரில் வடபாங்கு, தென்பாங்கு, வாசாப்பு என்பன ஆடப்பட்டுவருகின்றன. மன்னார் தென்பாங்கு கூத்து வடிவத்தையும், கேரள கதகளியையும் இணைத்தே சிங்கள நாடகமேதை சரத் சந்திரா “மனமே” என்ற சிங்கள நாடகவடிவத்தை உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போன்று வன்னியின் கோவலன் கூத்து, முல்லைமோடி என அழைக்கப்படுகிறது. அங்கு காத்தவராயன், தென்மோடி, மகுடி ஆகிய கூத்துக்களும் ஆடப்பட்டு வருகின்றன. மலையகத்தின் தனித்துவமான கூத்து, காமன் கூத்தாகும். அங்கு அர்ச்சுனன் தபசு, பொன்னர் சங்கர் ஆகிய கூத்துக்களும் ஆடப்படுவதுண்டு. திருகோணமலையில் வடமோடியும், வேடன்பன்றி என ஒருவகைக்கூத்தும் ஆடப்பட்டு வருகின்றன. மட்டக்களப்பில் வடமோடி, தென்மோடி, வசந்தன், மகுடி, பறைமேளக்கூத்து என்பன சிறப்பாக ஆடப்பட்டு வருகின்றன.

இவ்வாறு சில கூத்துக்கள் அந்தந்தப் பிரதேசங்களில் மட்டும் ஆடப்படும் அதேவேளையில் சில பல மாவட்டங்களிலும் ஆடப்படுகின்றன. ஒரு சில கூத்துக்கள் சில பிரதேசங்களில் ஆடப்படும் போது சிறிய சிறிய மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளன. ஆனால் பொதுத்தன்மையில் மாற்றம் இருக்காது. குறிப்பாக மட்டக்களப்பில் ஆடப்படும் வடமோடி, தென்மோடிக்கூத்துக்களும் யாழ்ப்பாணத்தில் ஆடப்படும் கூத்துக்களுக்கும் இடையே பலவேறுபாடுகள் காணப்படுகின்றன. அதுபோல் கோவலன் கூத்து, காமன் கூத்து, மகுடி, நாட்டை என்பனவும் பிரதேசத்திற்கு பிரதேசம் சிலவேறுபாடுகளைக் கொண்டிருந்தபோதிலும் பிரதானமான பொதுத்தன்மையில் மாற்றம் எதுவும் இருப்பதில்லை.

அதாவது ஒவ்வொரு பிரதேசமும் ஒவ்வொரு கூத்திலும் தமது பிரதேச பழக்கவழக்கங்களின் வெளிப்பாடுகளைக் கொண்டிருந்தபோதிலும் அந்த கூத்துகளின் அடிப்படைத்தன்மையை விட்டு விலகிச்செல்வதில்லை. அதுபோன்றே பல்வேறு கூத்துவடிவங்கள் இருந்தபோதிலும் அவை தமிழ் கூத்துக்கலை என்ற வட்டத்திற்கு வெளியே செல்வதில்லை.

தற்காலத்தில் இலக்கியம் எழுத்து மொழியாகவும், நாடகம் உடல்மொழியாகவும் சினிமா புகைப்படக்கருவியின் மொழியாகவும் ( காட்சிப்படிமங்களின் ) கருதப்படுகின்றது. ஆனால் தமிழ்; கூத்துக்கலையில் உடல் மொழியும் குரல் மொழியும் ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுக்காத வகையிலும் ஒன்றை மற்றது மெருகுபடுத்தும் வகையிலும் அமைந்துள்ளமை ஒரு சிறப்பம்சமாகும். அதாவது கூத்துக்கலையில் இடையிடையே வசனங்கள் மிகக்குறைந்த அளவிலும் பாடல்கள் கூடிய அளவிலும் இடம்பெற்றாலும் கூட ஆடல்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. அதேவேளையில் ஆடல்களும் பாடல்களுக்கு சமமான முக்கியத்துவம் வாய்ந்தவையாக விளங்குகின்றன.

இன்னும் சொல்லப்போனால் பாடலும், ஆடலும் இல்லாத ஒரு அரங்கநிகழ்வு, கூத்து என்ற வகைக்குள் அடக்கிவிடமுடியாது. அதேவேளையில் அவற்றில் ஆடலும், பாடலும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்துள்ளமை முக்கியமான விடயமாகும். பாடல்கள் சொல்லும் செய்தியை உணர்வுபூர்வமாகவும், அழகியலோடும் கொண்டுசெல்வதில் ஆட்டங்களும் அதேவேளையில் பாடல்களும், ஆட்டங்களுக்கேற்ற வகையிலான மெட்டுக்களும், தாளக்கட்டுக்களும் கொண்டவையாக அமைந்திருக்கும் பாடல்களின் மெட்டுக்கள் கோபம், சோகம், பாசம், பக்தி, காதல், வெறுப்பு போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள நிலையில் ஆட்டங்கள் அவற்றுக்கு ஏற்றவகையில் துரித கதி, மத்திய கதி, மந்த கதி என வெவ்வேறு வெளிப்பாடுகளில் அமைந்திருக்கும்.

தாளங்களுக்கேற்ற உடலசைவுகளே ஆடல்களாக பிரதான கதையையும், அக்கதையின் போக்கில் பாத்திரங்களின் உணர்வுகளையும் அழகியலோடு முன்வைக்கின்றன. அவற்றில் ஆண்களுக்கான ஆட்டம், பெண்களுக்கான ஆட்டம் என பாத்திரங்களுக்கேற்ற வகையில் அமைந்திருக்கும். ஆண், பெண் எனப் பல பாத்திரங்கள் ஒன்றாக மேடையில் தோன்றி ஆடுவதை “கொலு” என அழைப்பதுண்டு.

பெரும்பாலும் பாத்திரங்களுக்கிடையேயான உரையாடல்கள் ஆட்டங்களுக்குப் பொருத்தமான பாடல்களாகவே அமையும். இவை தேவைகளுக்கேற்ப வரவுத்தருக்கள், உரையாடல் தருக்கள், தர்க்கத்தருக்கள், சண்டைத் தருக்கள், சபைத்தருக்கள் எனப்பல்வேறு பாடல் மெட்டுக்கள் கூத்தின் உணர்வுவெளிப்பாடுகளை பார்வையாளர்களிடம் கொண்டு செல்கின்றன. இவை விருத்தம், வெண்பா, அகவல், தாழிசை, கலிப்பா, கொச்சகப்பா எனப்பல்வகைகளில் அமைவதுண்டு. மேற்படி யாப்புக்கு உட்பட்டு கண்ணிகள், சிந்து, கந்தார்த்தம், இறுனி என்ற கூத்துக்கே உடைய மெட்டுகள் பாவிக்கப்படும். இக்கூத்துப்பாடல்களை மெருகூட்டுவதிலும் ஆட்டத்தருக்களுக்குப் பின்னணி வழங்குவதிலும் பக்கவாத்தியக்கருவிகள் முக்கியமானவை. கூத்தின் பிரதான இசைக்கருவிகளாக மத்தளம், சல்லாரி (தாளம்) என்பன விளங்குகின்றன. ஆனால் காத்தவராயன் கூத்தில் மத்தளத்திற்குப்பதிலாக உடுக்கு பாவிக்கப்படுகிறது. உடுக்கு ஒலிக்கும் ஓசை வெறியூட்டும் தன்மை இசைப்பவரையும், பார்வையாளர்களையும் தன்னுடன் கூட்டிச்செல்லும் ஆற்றல் கொண்டது. காத்தவராயன் கூத்தில் ஆர்மோனியம் பாவிக்கப்படும். ஏனைய ஆட்டக்கூத்துகளிலும் சில இடங்களில் ஆர்மோனியம் தபேலா, டோலக் என்பன பாவிக்கப்பதுண்டு. பாரம்பரிய கூத்துக் கலைஞர்கள் இவ்வாத்தியங்கள் பாவிக்கப்படுவதை ஏற்றுக்கொள்வதில்லை.

கூத்து ஆடப்படும் அரங்கு களரி என அழைக்கப்படும். கூத்துக்கான களரி, வட்டக்களரியாகும். அதாவது நடுவில் கூத்து நடக்கும் பார்வையாளர்கள் சுற்றியிருந்து பார்ப்பார்கள். இப்போது மெல்ல மெல்ல வட்டங்களிலிருந்து விடுபட்டு படச்சட்ட மேடையில் கூத்துக்கள் மேடையேற்றப்படுகின்றன. இதற்கேற்ற வகையில் சில மாற்றங்களும் செய்யப்பட்டு வருகின்றன. வட்டக்களரியில் பிற்பாட்டுப்பாடுவோர், பக்கவாத்தியக்காரர் எல்லோரும் களரியில் பாத்திரங்களின் பின்னால் நின்று தங்கள் பங்களிப்பை வழங்குவார்கள். ஆனால் படச்சட்ட மேடையில் அவர்கள் ஒரு பக்கமாக அமர்ந்திருந்து பங்களிப்பார்கள்.

அடிப்படையில் தமிழ் நாடக வடிவமான கூத்து என்பது ஒரு கூட்டு முயற்சி ஆகும். அண்ணாவியார், பிற்பாட்டுக்காரர், ஏடுபார்ப்போர், வாத்தியக்கலைஞர்கள், ஒப்பனைக்கலைஞர்கள், பந்தம் ஏற்றுவோர், நடிகர்கள் ஆகியோரின் கூட்டுமுயற்சியாலும் அதுமட்டுமின்றி கூத்து என்பது முழு ஊரையும் பங்குகொள்ளும் நிகழ்ச்சியாகவும் அமைகிறது. பழகத்தொடங்கிய காலம் தொட்டு அரங்கேரும் நாள் வரை முழு ஊருமே கண்விழித்து ஒத்துழைப்பு வழங்கும்.

மேலும் கூத்து இடம்பெறும் நாளில் அயலூரில் உள்ளவர்களும் வந்து உறவினர்கள் வீடுகளில் தங்கி விருந்துண்டு உறவு கொண்டாடி கூத்தப்பார்த்து அடுத்த நாளில் விடைபெற்றுச்செல்வதுண்டு. அவ்வகையில் கூத்து உறவுகளை மெருகுபடுத்தும் ஒரு பணியிலும் காத்திரமான பங்களிப்பை வழங்குகிறது.

அடிப்படையில் எம்மிடையே வழக்கில் இருந்து வரும் கூத்துகள் தமிழ் நாடகத்தின் பாரம்பரிய வடிவமாக விளங்குவதுடன் எமது பண்பாட்டு வேர்களில் ஒன்றாகவும் மரபார்ந்த அடித்தளத்தை கொண்டுள்ளது.

அருவி இணையத்துக்காக நா.யோகேந்திரநாதன்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE