Wednesday 17th of April 2024 10:13:13 PM GMT

LANGUAGE - TAMIL
-
எங்கே தொடங்கியது இன மோதல் - 10 (வரலாற்றுத் தொடர்)

எங்கே தொடங்கியது இன மோதல் - 10 (வரலாற்றுத் தொடர்)


‘என்னைப்போல் ஆறுபேர் தலைமை தாங்க இருந்திருப்பார்களேயானால் கண்டிய மகாணங்களில் ஒரு வெள்ளையனும் உயிர் தப்பி இருக்கமாட்டான்.’ 1848ம் ஆண்டு ஆங்கில ஆட்சியைக் கலக்கிய ஆயுதக்கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கி அரிய சாதனைகளை நிலைநாட்டிய விடுதலை வீரன் வீரபுறங் அப்பு மரணதண்டனை தீர்மானிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்ட நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது அஞ்சா நெஞ்சுடன் முழங்கிய வார்த்தைகள்.

அக் கிளர்ச்சியின் போது மக்கள் பலபல ஆயிரங்களாக ஏழுகோறளைகளிலும், மாத்தளை பிரதேசத்திலும் கிளர்ந்தெழுந்தனர். அவர்களுக்குத் தலைமையேற்று அவர்களை வழிநடத்தி வெற்றி வரை இட்டுச்செல்ல பகுதித் தலைவர்கள் இருக்கவில்லை. அதன் காரணமாக வீரபுறங் அப்பு, கொங்கொலகொட பண்டா போன்ற ஒரு சில தலைவர்களே மத்திய மலை நாடெங்கும் ஓடித்திரிந்து புரட்சியை முன்னெடுக்க வேண்டியிருந்தது.

1816 தொடக்கம் 1840 வரை இடம்பெற்ற ஆங்கில ஆட்சிக்கெதிரான கிளர்ச்சிகள் அனைத்தும் கண்டிய பெரும் பிரபுக்களின் தலைமையிலேயே இடம்பெற்றன. தமிழன் என்ற ஒரே காரணத்துக்காகக் கீர்த்தி ஸ்ரீ விக்கிரமராஜசிங்கனின் ஆட்சியை வீழ்த்த ஆங்கிலேயருக்கு சகல உதவிகளையும் வழங்கிப் பின் கண்டி ஒப்பந்தந்தம் மூலம் கண்டியின் ஆட்சியை ஆங்கிலேயரிடம் ஒப்படைத்த அதே பிரபுக்களே தாங்கள் ஏமாற்றப்பட்ட நிலையில் கிளர்ச்சியில் இறங்கினர்.

அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட கிளர்ச்சியில் பிரபுத்துவ குடும்பங்களைச் சேர்ந்த பல விடுதலை வீரர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். ஆனால் அவர்களால் வெற்றிபெற முடியவில்லை. அதேவேளையில் பிரபுக்களின் ஒரு பகுதியினர் ஆங்கிலேயருடன் இணைந்து போராட்டங்களைக் காட்டிக் கொடுத்தனர். ஆங்கில ஆட்சியின் அதிகாரிகளாகவும், அவர்களிடம் வசதிகளையும், சன்மானங்களையும் பெற்று செல்வந்தர்களாக வாழ ஆரம்பித்தனர். ஆங்கிலேயரின் ஆட்சியதிகாரம் நிலைபெற ஆரம்பித்த பின்பு மன்னர்களை ஆட்சியாளர்களாகவும், பிரபுக்களை அதிகாரமட்டங்களுமாகக் கொண்டிருந்த நிலப்பிரபுத்துவக் கட்டமைப்பு மெல்ல மெல்ல உடைய ஆரம்பிக்க அதன் பெறுபேறாக உருவாக்கக்கூடிய புதிய வர்க்கங்களும் உருவாகின. பெருந்தோட்டத் தொழில், கோப்பிப் பயிர்ச்செய்கை, சாராயத் தவறணை முறை, ஏற்றுமதி இறக்குமதி, துறைமுகம், போக்குவரத்து வசதிகள் என்பன காரணமாகப் புதிய உள்@ர் முதலாளித்துவ வர்க்கம், தொழிலாளி வர்க்கம், உதிரித் தொழிலாளர்கள் எனப் புதிய வர்க்கங்கள் உருவான நிலையில் சமூகக் கட்டமைப்பும் புதிய பரிணாமத்தை நோக்கி மாற்றமடைந்தது.

1845-1846ல் இங்கிலாந்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி இலங்கைப் கொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அப்போதைய பிரதான ஏற்றுமதியான கோப்பியின் விலை பத்தில் ஒரு பங்காக வீழ்ச்சியடைந்த போது ஆங்கில அரசு அதை ஈடு செய்ய மக்கள் மீது பல்வேறு விதமான வரிகளை விதிக்க ஆரம்பித்தனர்.

காணி வரி, துவக்கு, நாய், மாட்டு வண்டி, குதிரை வண்டி, தோணிகள், கடைகள் என்பவற்றுக்கு வரி விதிக்கப்பட்டதுடன் தென்னை, கமுகு பொன்ற மரங்களுக்கும் வரி விதிக்கப்பட்டன. எல்லாவற்றையும் விட பிக்குமார் தவிர்ந்த ஏனைய 18-55 வயதுக்கு இடைப்பட்டோர் 3 சிலிங் வரி கட்ட வேண்டும் அல்லது ஆறு நாட்கள் இலவசமாக வீதிகளில் வேலை செய்ய வேண்டும் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டபோது மக்களின் எதிர்ப்புப் பொங்கிப் பிரவகிக்க ஆரம்பித்தது. அதே போன்று கடை வரி, முத்திரை வரி, வீதிச்சட்டம் என்பவற்றால் நகர்ப்புற தொழிலாளர்களும் சாதாரண மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

வரிகளுக்கு எதிரான போராட்டங்கள் 1948 மே மாதமே கண்டியிலும் பதுளைப் பகுதியிலும் பெரும் போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்தன. கண்டியில் துவக்கு வரிக்கு எதிரன பொராட்டம் ஏராளமான மக்களால் கண்டிக் கச்சேரிக்கு முன்பாக இடம்பெற்றது. இவ்வாறே பதுளையில் துவக்கு வரி கட்ட மறுத்து ஆர்ப்பாட்டம் செய்த பெருந்தொகையானோர் தங்கள் துவக்குகளை முறித்தெறிந்து தமது எதிர்ப்பை வெளியிட்டனர். கேகாலையிலும் துவக்கு வரி காணி வரி தலை வரி என்பவற்றுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் இடம்பெற்றன. வரிகளுக்கெதிராக கிளர்ந்தெழுந்த மக்களின் ஆர்ப்பாட்டங்களைப் பொலிசாரால் கட்டுப்படுத்த முடியாத நிலையில் இராணுவம் வரவழைக்கப்பட்டுக் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

யூலை மாதத்திற்கு முன்பு நடந்த போராட்டங்கள் மீது ஆங்கிலேயர் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகள், மக்கள் மீதான ஒடுக்குமுறைகள் என்பன காரணமாக மக்கள் மத்தியில் ஏற்பட்ட எதிர்ப்புகள் கொங்கொலகொடபண்டா, புராங் அப்பு, டிங்கிரி லாலா ஆகியோரின் தலைமையிலான ஒழுங்குபடுத்தப்பட்ட புரட்சிகர நடவடிக்கைகளாக எழுச்சி பெற்றன.

முன்னைய கிளர்ச்சிகளுக்கு தலைமையேற்ற பிரபுக்கள் போன்று போராட்டங்களை குறிப்பிட்ட பிரதேசங்களுக்குள் மட்டுப்படுத்தாமல் புரட்சித்தலைவர்கள் மத்திய மலைநாடெங்கும் சுற்றித்திரிந்து தங்கள் ஆதரவை திரட்டியதுடன் கொழும்பு நகர்ப்புற மக்களுடனும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டனர். அதன் காரணமாக சிங்களவர் மட்டுமின்றி கொழும்புத் துறைமுகம் மற்றும் நகர சுத்தி தொழிலாளர்கள் ஆகிய தமிழர்கள் முஸ்லீம் சிறு வியாபாரிகள் போன்ற சக்திகளும் போராட்டங்களில் அணி திரண்டன.

அரசன் ஒருவனைத் தலைமையாகக் கொண்டு செயற்படும் மக்களின் பாரம்பரிய நம்பிக்கை காரணமாக கொங்கொலகொடபண்டா தம்புள்ளவில் வைத்து மன்னனாக முடி சூட்டப்பட்டான்.

யூலை 27ல் மத்திய மலை நாட்டுக்கும் திருகோணமலைக்குமான தபால் தொடர்பு துண்டிக்கப்பட்டது. மாத்தளை, நுவரகெலிய, தம்மன்கடுவ, ஏழு கோறளைகள் மற்றும் ஹரிஸ்பத்துவ ஆகிய பகுதிகளில் கிளர்ச்சியாளர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டனர். எங்கும் ஆயுதம் தரித்த மக்களின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. யூலை 28ம் நாள் மாத்தளையை நோக்கி முன்னேறிய கிளர்ச்சியாளர்கள் அரச கட்டிடங்கள், சிறைக்கூடம், நீதிபதியின் இல்லம், ஓய்வு விடுதி, கோப்பிக் களஞ்சிய சாலைகள், பப்பிரிஸ் தேவாலயம் என்பனவற்றைத் தாக்கி தமது கட்டுப்பாடுகளுக்குள் கொண்டு வந்தனர். சிறைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். தோட்ட பங்களாக்கள் தாக்கப்பட்டு களஞ்சியங்கள் உடைக்கப்பட்டன.

புரட்சியாளர்களின் தாக்குதலில் அரச நிர்வாகம் முற்றாகவே நிலைகுழைந்த நிலையில் ஆங்கில அரசால் கண்டியில் கண்டவுடன் சுடும் சட்டமான மார்ஷல் லோ பிரகடனப்படுத்தப்படுகிறது. எனினும் மக்களின் போராட்ட அலை ஓயவில்லை. பற்பல பகுதிகளை நோக்கி போராட்டங்கள் வரிவடைகின்றன. ஏழு கோரளைகளுக்கும் கிளர்ச்சி பரவிவிட்ட நிலையில் 4000 பேருக்கு மேற்பட்டோர் திரண்டு குருநாகல் கச்சேரியைத் தாக்கி அங்குள்ள ஆவணங்களை கைப்பற்றி எரியூட்டுகின்றனர். சகல சிறைக்கைதிகளும் விடுவிக்கப்படுகின்றனர். சகல அரச கட்டிடங்களும் அந்நிய அதிகாரிகளின் இல்லங்களும் தாக்கி அழிக்கப்படுகின்றன. யூலை 31ம் திகதி குருநாகல் பிரதேசத்திலும் மார்ஷல் லோ பிரகடனப்படுத்தப்படுகிறது.

அதேவெளை வரி அறவீடுகளுக்கெதிரான சிறிய சிறிய குழப்பங்கள் கொழும்பின் பல பகுதிகளிலும் இடம்பெறுகின்றன. வரி அறவீடுகளுக்கு எதிராக பிரித்தானிய மக்கள் சபைக்கு முறைப்பாடொன்று அனுப்பப்படவுள்ளதாகவும் அதில் கையெழுத்து வைப்பதற்கு அனைவரையும் யூலை 26ம் திகதி காலை ஏழு மணிக்கு புறக்கோட்டையில் கூடும்படி சிங்களத்தில் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்படுகிறது. அதேவேளையில் பல்வேறு பகுதிகளிலும் வரிகளுக்கு எதிராக சிறு சிறு பிரசாரக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

அன்று காலை பெருந்தொகையான மக்கள் சுலோகங்களைக் கோசமிட்டவாறு களனிப்பாலத்தைக் கடந்து கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கின்றனர். போகும் பாதையெங்கும் மக்கள் மேலும்மேலும் அணி திரளவே கூட்டம் புறக்கோடடையை அடைந்த போது பிரமாண்டமாக மாறியிருந்தது. கூட்டத்துக்கு தலைமை தாங்கியோரை பொலிசார் கைது செய்ய முயன்றபோது பெரும் கலகம் வெடித்தது. பொலிஸ் மேலதிகாரி கடுமையாகத் தாக்கப்பட்டதுடன் பல பொலிசார் மக்களால் தாக்கப்பட்டு கடத்தப்பட்டனர். கொழும்புக் கோட்டையிலும் பெரும் வன்முறைகள் மூழவிருந்த சந்தர்ப்பத்தில் ஏற்கனவே வரிகளுக்கெதிராக பிரசாரம் செய்து வந்த எலியட் என்ற ஆங்கிலேயரின் தலையீட்டால் மக்கள் கட்டுப்படுத்தப்பட்டு அது தவிர்க்கப்படுகிறது.

வீரபுறங் அப்பு, கொங்கொலகொடபண்டா ஆகியோர் கண்டி, ஊவா, கொழும்பு என பல பகுதிகளுக்கும் மின்னல் வேகப் பயணங்களை மேற்கொண்டு அவ்வப் பகுதிகளில் இடம்பெற்ற போராட்டங்களைத் தீவிரப்படுத்தி ஆங்கில ஆட்சிக்கு எதிராக ஒருமுகப்படுத்தினர்.

அதே காலப்பகுதியில் மரவரி, தலைவரி என்பனவற்றை எதிர்த்து யாழ்ப்பாணத்திலும் வன்னியில் கமுகஞ்சோலைப் போராட்டம் என்ற பெயரில் மரவரியை எதிர்த்தும் போராட்டங்கள் இடம்பெற்றன. கமுகஞ் சண்டை பற்றிய நாட்டார் பாடல்கள் இன்னும் வன்னியில் நிலவி வருகின்றன.

எனினும் ஆங்கில அரசு தன் முழுப்பலத்தையும் பாவித்ததுடன் இந்தியாவிலிருந்து படையணிகளை இறக்கி கண்டவுடன் சுடும் மார்ஷல் லோ சட்டத்தின் மூலம் மக்கள் மீதான கண்மூடித்தனமான படுகொலைகளை மேற்கொண்டது. வீதி வீதியாக பிணங்கள் குவிந்து கிடக்குமளவுக்கு கிளர்ச்சி படுகொடூரமான முறையில் அடக்கப்பட்டது.

ஒடுக்குமுறையும் பலிவாங்களும் மேலோங்கியிருந்த நிலையில் இராணுவ நீதிமன்ற விசாரணை மூலம் விசாரணைகய் மேற்கொள்ளப்பட்டு ஏராளமானோர் மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்படுகின்றனர்.

வீரபுரங்அப்பு, கடஹப்பொல, உன்னான்சே தேரர் ஆகியோர் மரணதண்டனை விதிக்கப்பட்ட சுட்டுக்கொல்லப்படுகின்றனர். கொங்கொலகொடபண்டா மலாக்கா என்ற இடத்துக்கு நாடு கடத்தப்பட்டு அங்கேயே மரணமடைகிறான்.

தாங்கள் எதிர்பார்த்ததை விட முன்னதாகவே மக்கள் கிளர்ந்தெழுந்து விட்டதாகவும் அதன் காரணமாக ஆங்கிலப்படைகள் எச்சரிக்கையடைந்துவிட்டதாகவும் பிரிட்டிஸ் படை முன்னேறும் போது அவை 20,000 பேர் தாக்கியழிப்பது என்ற திட்டம் நிறைவேற முடியாமல் போனதாலுமே கிளர்ச்சி தோல்வியடைந்ததாக விசாரணையின் போது சில கிளர்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர்.

எப்படியிருந்த போதிலும் ஏற்கனவே இடம்பெற்று தோற்கடிக்கபட்ட கிளர்ச்சிகள் யாவும் சிங்கள நிலப்பிரபுக்களால் தங்களின் அதிகாரத்தை மீண்டும் நிலைநாட்ட மேற்கொள்ளப்பட்டவையாகும். ஆனால் 1848ல் இடம்பெற்ற இப்போராட்டம் அவற்றைவிட முற்றிலும் வித்தியாசமானதாகும். இதற்குத் தலைமை தாங்கிய வீரபுறங் அப்பு, கொங்கொலகொட பண்டா ஆகியோர் சாதாரண சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவும் இயல்பான புரட்சிகர குணாம்சங்கள் கொண்டவர்களாகவும் இருந்தனர். அது மட்டுமின்றி இப்போராட்டம் ஒரு மக்கள் கிளர்ச்சியாக எழுச்சி பெற்றது மட்டுமின்றி இதில் சிங்களவர், தமிழர், முஸ்லீம்கள், பறங்கியர் எனப் பல்வேறு தரப்பினரும் இணைந்திருந்தனர். அவ்வகையில் ஏனைய கிளர்ச்சிகளை விட இது ஆங்கில ஆட்சியை தூக்கியெறியும் நோக்கம் கொண்ட புரட்சிகரமானதும் முற்போக்குமானதுமான மக்கள் எழுச்சியாகவே விளங்கியது.

முன்னைய கிளர்ச்சிகளுக்கு தலைமையேற்றவர்கள் தமிழர்களுக்கு எதிராக ஆங்கிலேயருடன் இணைந்து செயற்பட்டு பின்பு தங்களுக்கு அதிகாரம் கிடைக்காத நிலையில் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடியவாகள். ஆனால் 1848 புரட்சியில் இனக்குரோதம் இருக்கவில்லை அனைவரும் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற இலட்சியத்தின் கீழ் ஒன்றுதிரண்டிருந்தனர். ஆனால் 1883ல் வெடித்த அடுத்த கிளர்ச்சி மீண்டும் இனவாதத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு 1848ல் தோன்றிய மாற்றம் முற்றாகவே சிதைக்கப்பட்டுவிட்டது.

தொடரும்

அருவி இணையத்துக்காக நா.யோகேந்திரநாதன்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE