Thursday 25th of April 2024 12:14:45 PM GMT

LANGUAGE - TAMIL
.
ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக மைத்திரியிடம் வழங்கப்பட்ட 93 கோடி எங்கே?

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக மைத்திரியிடம் வழங்கப்பட்ட 93 கோடி எங்கே?


உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக சர்வதேச முஸ்லீம் அமைப்பின் ஊடாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வழங்கப்பட்டிருந்த சுமார் 93 கோடி ரூபா இதுவரை வழங்கப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.

கொழும்பு பேராயர் இல்லத்தின் சமூக நல மேம்பாட்டு நிறுவனமான ´செத்சசரண´ அமைப்பின் பணிப்பாளர் அருட்தந்தை டொன் நிசாந்த லோரன்ஸ் ராமநாயக்க அடிகளார் இந்த விடயத்தை ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கும் போது கூறினார்.

ஊயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று (ஜூன்-26) மாலை அருட்தந்தை டொன் நிசாந்த லோரன்ஸ் ராமநாயக்க அடிகளார் சாட்சியம் வழங்கினார்.

இதன்போது ´செத்சசரண´ அமைப்பின் மூலம் எந்தெந்த ஆலயங்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகின்றது? என ஆணைக்குழு அவரிடம் வினவியது.

இதற்கு பதிலளித்த லோரன்ஸ் அருட்தந்தை, கொச்சிக்கடையில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயம் மற்றும் கட்டுவாபிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயம் ஆகியவற்றுக்கு முன்னுரிமையளித்து நிதியுதவி வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.

அத்துடன் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின் வேண்டுகோளுக்கமைய மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திற்கும் இரண்டு கட்டங்களின் கீழ் நிதியுதவி வழங்கப்பட்டதாக கூறினார்.

இதன்போது ஆணைக்குழு அதிகாரிகள், கொச்சிக்கடை தேவாலயத்தில் நடத்தப்பட்ட தாக்குதலால் எத்தனை பேர் காயமடைந்தார்கள் என வினவினர்.

இதற்கு பதிலளித்த அவர், 121 குடும்பங்களைச் சேர்ந்த 128 பேர் காயமடைந்தவர்கள் என கணக்கிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதேபோல் கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 260 பேர் காயமடைந்தாக அவர் கூறினார். மேலும் பலர் காயமடைந்து சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தாக்குதல் நடத்தப்பட்டு 14 மாதங்கள் கடந்துள்ள போதிலும், இன்னும் 37 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக அருட் தந்தை ஆணைக்குழுவில் குறிப்பிட்டார். அவர்களில் சுகப்படுத்த முடியாதவர்களும் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

மீண்டும் சியோன் தேவாலயத்திற்கு நிதியுதவி வழங்கப்பட்டதா? என ஆணைக்குழு வினவியது.

அதற்கு பதிலளித்த அவர், பேராயரின் அறிவுறுத்தலின் பேரில், தன்னுடன் மேலும் இரு பாதிரியார்களும் சீயோன் தேவாலயத்திற்குச் சென்றதாகவும் அங்கு சென்று ´எகேட்´ நிறுவனத்தின் ஊடாக 50 இலட்சம் ரூபாவை வழங்கியதாக கூறினார்.

மேலும் 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பேராயர் சீயோன் தேவாலயத்திற்கு விஜயம் செய்தபோது, 5 மில்லியனுக்கான காசோலை பிரதான போதகர் ரோசானிடம் கையளிக்கப்பட்டதாக அவர் ஆணைக்குழுவில் தெரிவித்தார்.

அப்போது ஆணைக்குழு அதிகாரிகள் குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்த நிதி வழங்கப்பட்டதா? என வினவினர்.

அதற்கு பதிலளிதத அவர், போதகர் ரோசான் கனடாவில் இருந்து வந்த பின்னர் அவற்றை பகிர்ந்தளிப்பதாகவும் அதன் பின்னர் அது குறித்து அறிவிப்பதாகவும், ஆனால் தான் இலங்கைக்கு வருகைத்தரும் தினத்தை குறிப்பிடவில்லை எனவும் அருட் தந்தை கூறினார்.

இதன்பின்னர் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கிய நிதி உதவிகள் குறித்து ஏற்கனவே அருட்தந்தையால் தெரிவிக்கப்பட்டமை குறித்து ஆணைக்குழு அதிகாரிகள் வினவினர்.

அதற்கு பதிலளித்த அவர், பாதிக்கப்பட்டவர்களுக்காக டுபாய் அரசினால் முஸ்லிம் அமைப்புகள் சிலவற்றின் உதவியுடன் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (சுமார் 93 கோடி ரூபா) நிதி வழங்கப்பட்டதாக கூறினார்.

ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்த நிதியுதவி வழங்கப்படவில்லை என அருட்தந்தை ஆணைக்குழுவில் தெரிவித்தார்.

இது குறித்து தேடி பார்க்குமாறு பேராயர் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் அறிவித்தும் இதுவரையில் அந்த செயற்பாடு முன்னெடுக்கப்படவில்லை எனவும் அருட்தந்தை டொன் நிசாந்த லோரன்ஸ் ராமநாயக்க அடிகளார் மேலும் தெரிவித்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: மைத்திரிபால சிறிசேன, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE