Friday 29th of March 2024 08:26:41 AM GMT

LANGUAGE - TAMIL
-
சர்வாதிகார ஆட்சிக்கு இடமளிக்கவே முடியாது; ரணில்!

சர்வாதிகார ஆட்சிக்கு இடமளிக்கவே முடியாது; ரணில்!


"இன்றைய கால இளைஞர்களுக்கு அரசியல் என்பது வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதில் இளம் தலைமுறையினர் விருப்பமின்றி இருக்கின்றனர். ஆனால், விருப்பமில்லை என்பதற்காக சர்வாதிகார ஆட்சிக்கு நாம் இடமளிக்கக்கூடாது." - இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

"பொருளாதார நெருக்கடி, மிலேனியம் சவால் (எம்.சி.சி.) ஒப்பந்தம் தொடர்பான பிரச்சினைகளுக்கு மாத்திரமின்றி இரண்டாவது அலை மூலம் தாக்கத்தை ஏற்படுத்தவுள்ள கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான முறையான திட்டங்களும் எமது ஆட்சியில் முன்னெடுக்கப்படும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் கட்சித் தலைமையமான சிறிகொத்தாவில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சூம், லிங்ட்இன் போன்ற நவீன தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அவர் உரையாற்றும்போது மேலும் தெரிவித்ததாவது:-

"அரசுடன் ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணி அமைத்துக்கொண்டுள்ளது எனப் போலிப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

நாம் நாட்டு மக்களுடன் மாத்திரமே ஒப்பந்தம் செய்து கொள்வோம். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ஐக்கிய தேசியக் கட்சியால் மாத்திரமே தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியும் என்பதால் எமக்கு ஆட்சி அதிகாரத்தை மக்கள் வழங்க வேண்டும்.

பாதிப்படைந்துள்ள பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காக தற்போதைய அரசிடம் எவ்வாறான திட்டம் காணப்படுகின்றது? பணத்தை அச்சிடுவதால் பொருளாதார சிக்கலுக்குத் தீர்வுகாண முடியாது.

பாதிப்படைந்துள்ள ஏற்றுமதி பொருளாதாரத்துறை, சுற்றுலாத்துறை, சிறுவர்த்தகம் மற்றும் ஆடைத் தொழிற்சாலைகளைப் பாதுகாப்பதுடன் மீண்டும் கட்டியெழுப்ப முறையான திட்டமொன்றைச் செயற்படுத்த வேண்டும். அதற்காக அரசிடம் உள்ள திட்டம் என்ன? ஐ.தே.கவிடம் சிறந்த திட்டங்கள் காணப்படுகின்றன. அதனை எதிர்வரும் காலங்களில் செயற்படுத்திக் காட்டுவோம்.

தற்போது ஜனநாயகத்துக்குப் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எமது அரசில் உருவாக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களை நீக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அரச ஊழியர்களும் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். இவற்றுக்குத் தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமாகும். இன்றைய கால இளைஞர்களுக்கு அரசியல் என்பது வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் செயற்பாடுகளில் ஈடுப்படுவதில் இளம் தலைமுறையினர் விருப்பமின்றி இருக்கின்றனர். ஆனால், விருப்பமில்லை என்பதற்காக சர்வாதிகார ஆட்சிக்கு நாம் இடமளிக்கக்கூடாது.

ஏனையவர்களைப் போன்று கட்சி தலைமையகத்துக்குக் கல்லெறியாது, ஆட்சியைக் கைப்பற்றி நாடு எதிர்நோக்கி வருகின்ற பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு பெற்றுக்கொடுப்பதுடன் மிலேனியம் சவால்கள் ஒப்பந்தத்துக்கான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதே எமது எண்ணம். அதனால் எமக்கான பலத்தைப் பெற்றுக்கொடுக்குமாறு நாங்கள் மக்களிடம் கோரிக்கை முன்வைக்கின்றோம்" - என்றார்.


Category: உள்ளூர, புதிது
Tags: ரணில் விக்கிரமசிங்க, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE