Wednesday 24th of April 2024 11:11:06 AM GMT

LANGUAGE - TAMIL
-
ஹொங்கொங் தொடா்பான சர்ச்சைக்குரிய  தேசிய பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றியது சீனா!

ஹொங்கொங் தொடா்பான சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றியது சீனா!


ஹொங்கொங் சிறப்புரிமையை கேள்விக்குள்ளாக்கும் சா்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சீனா நிறைவேற்றியது.

இது செவ்வாய்க்கிழமை காலை பெய்ஜிங்கில் உள்ள தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவால் இந்தச் சட்டத்திருத்தம் ஏகமனதாக ஏற்று அங்கீகரிக்கப்பட்டது.

புதிய சட்டத்திருத்தத்தை நிறைவேற்றுவது குறித்த இறுதிக்கட்ட விவாதங்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இடம்பெற்று வந்த நிலையில் இன்று காலை இச்சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை- 01 முதல் புதிய சட்டம் அமுலுக்கு வருகிறது.

சட்டத்திருத்த யோசனை முன்வைக்கப்பட்டு 40 நாட்களுக்குள் அவசர கதியில் செயற்பட்டு இந்த யோசனை சட்டமாகக்கப்பட்டுள்ளது.

ஹொங்கொங்கின் பிரிவினை கோரிக்கை, தேசிய பாதுகாப்புக்கு எதிரான செயற்பாடுகள், தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் வெளிநாட்டு சக்திகளுடன் கூட்டணி வைப்பது போன்றவற்றை குற்றமாக்கும் வகையில் புதிய சட்டத் திருத்தம் அமைந்துள்ளது.

ஹொங்கொங் விவகாரத்தில் சீனாவின் தலையீடுகளைக் கண்டித்து அங்குள்ள மக்கள் கடந்த ஆண்டு பெரும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்ததை அடுத்து இந்தச் சட்டத் திருத்த யோசனை சீனாவால் முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் ஹொங்கொங் விவகாரத்தில் சீனா நிறைவேற்றியுள்ள தேசிய பாதுகாப்பு சட்டம் ஹொங்கொங்கின் சிறப்புரிமைகளுக்கு பாரிய அச்சுறுத்தல் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.

சீனாவின் பிற இடங்களை விட தன்னாட்சி கொண்ட சுதந்திர பிராந்தியம் என்ற சிறப்புரிமைக்கு இந்த புதிய சட்டத்தின் ஊடாக ஊறு ஏற்பட்டுள்ளதாகவும் அவா்கள் சுட்டிக்காட்டுகின்றனா்.

1997 ஆம் ஆண்டுவரை பிரிட்டனின் கட்டுப்பாட்டிலிருந்து ஹொங்கொங் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. எனினும் தன்னாட்சியுடனான விசேட சிறப்புரிமைகள் கொண்ட பிராந்தியமாக ஹொங்கொங் இருக்கும் என ஒப்பந்தம் செய்யப்பட்டது.

ஹொங்கொங் விவகாரத்தில் சீனாவின் அதீத தலையீடுகளை அங்கீகரிக்கும் வகையிலான சட்டத் திருத்த யோசனையை சீனா முன்வைத்தது முதலே அதற்கு சா்வதேச நாடுகள் கடும் கண்டங்களை வெளியிட்டன.

ஆனால் பிரிவினைவாத நடவடிக்கைகளைத் தடுக்கவும் பயங்கரவாதம் மற்றும் வெளிநாட்டு சக்திகள் சீனாவின் தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பதைத் தடுக்கவும் சட்டத்திருத்தம் அவசியம் என சீனா தெரிவித்துள்ளது.

இது குறித்த சா்வதேச விமா்சனங்களை சீனா நிராகரித்தது. இது தனது உள்ளநாட்டு விவகாரம் எனவும் இதில் வெளிநாடுகள் தலையிடத் தேவையில்லை எனவும் சீனா உறுதியாகக் கூறிவிட்டது.

இதேவேளை, புதிய சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளதை அடுத்து பீஜிங் தனது பாதுகாப்பு அலுவலகம் ஒன்றை ஹொங்கொங்கில் அமைக்கவுள்ளது.

இதேவேளை, புதிய சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து ஹொங்கொங்கில் போராட்டங்களை முன்னெடுத்து வந்த மிக முக்கியமான ஆர்வலர்களில் ஒருவரான ஜோசுவா வோங், தான் இப்போது வரை தலைமை தாங்கிய ஜனநாயக சார்பு குழுவான டெமோசிஸ்டோவை விட்டு விலகுவதாகக் கூறினார்.

சக ஆர்வலர்களான நாதன் லா மற்றும் ஆக்னஸ் சோ ஆகியோரும் குழுவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனா்.

இதேவேளை, புதிய சட்டம் இயற்றப்பட்டதை சீனா அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. மேலும் சட்டத்திருத்தம் மீதான விவாத உரையும் பகிரங்கப்படுத்தப்படவில்லை. எனினும் சீன அரசு சாா்பு ஊடகங்கள் இதனை உறுதி செய்துள்ளன.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE