Friday 19th of April 2024 09:18:53 AM GMT

LANGUAGE - TAMIL
-
2011 உலகக்கிண்ணம்; “குற்றச்சாட்டும் அரசியலும்” - அகநிலா

2011 உலகக்கிண்ணம்; “குற்றச்சாட்டும் அரசியலும்” - அகநிலா


2011ம் ஆண்டு இடம் பெற்ற உலகக் கிண்ண கிரிக்கட் இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம் பெற்றதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே முன்வைத்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பில் இலத்திரனியல் ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலின் போதே அவர் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்து, இந்த போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றது என்பது தொடர்பில் சந்தேகம் இருப்பதாகவும் தெவித்திருந்தார். அதற்கான வலுவான சான்றுகள் தன்னிடம் உள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். இவ்விடயம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு உண்மையைக் கண்டறிய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

மகிந்தானந்தவின் இந்த சர்ச்சையான கருத்து பலத்த விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்ததுடன், கிரிக்கட் பிரியர்கள் மத்தியில் சலசலப்பினையும் ஏற்படுத்தியிருந்தது. இந்த குற்றச்சாட்டு அரசியல் நோக்கம் கொண்டது என்றும், நாட்டுக்கு பெருமை சேர்த்த வீரர்களுக்கு செய்யப்படும் மாபெரும் துரோகம் என்றும் கிரிக்கெட் ரசிகர்கள் விசனப்பட்டனர்.

இதேவேளை இந்த குற்றச்சாட்டு தொடர்பில் 2011ம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கை அணிக்குத் தலைமை தாங்கிய குமார் சங்கக்காரவும், உப தலைவரான மஹேல ஜயவர்தனவும் ஐ.சி.சி தலையீட்டுடன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். அன்று தெரிவுக் குழு உறுப்பினராக இருந்த அரவிந்த டி சில்வாவும் இவ்விடயத் தொடர்பில் இந்தியாவும் விசாரணைகளை நடத்த வேண்டும் என்று கேட்டிருந்த போதிலும் இந்தியா இதுவரை அதற்கு சரியான பதிலை அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கட் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், தற்போது கிரிக்கட் நிர்வாகத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ள திலங்க சுமத்திபால இவ்விடயம் குறித்து கூறும் போது “ஏன் விளையாட்டு வீர்கள் வீணே பதற்றப்பட வேண்டும்” என்று கேட்டிருந்தார். இதற்கு மஹேல ஜயவர்தன திலங்கவுக்கு காரசாரமான பதில் ஒன்றினை டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். தற்போதைய விளையாட்டுத் துறை அமைச்சரான டளஸ் அழகப்பெரும எமது வீரர்கள் இப்படி செய்திருப்பார்கள் என்று நான் கருதவில்லை என்று கூறியிருந்தார். இவ்வாறு இவ்விடயம் அரசியல் உட்பட சகல மட்டத்திலும் ஓர் கொந்தளிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை மகிந்தானந்தவின் குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் ஏதேனும் உள்ளதா என்று சர்வதேச கிரிக்கட் சபை அவரிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க. ஆட்ட நிர்ணயம் தொடர்பான எட்டு கடிதங்கள் மற்றும் ஆறு பக்கங்கள் அடங்கிய விசேட அறிக்கை என்பனவற்றை பொலிஸ் விசேட விசாரணப் பிரிவுக்கு கடந்த ஜூன் 24ம் திகதி புதன் அன்று அவர் கையளித்திருந்தார். பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் நாவலப்பிட்டியவில் உள்ள அவரது அலுவலகத்திற்கு சென்று இந்த ஆவணங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்;தக்கது. அந்த அறிக்கையில் 24 விடயங்களை முன்வைத்துள்ள அவர் இதன் அடிப்படையில் ஆட்ட நிர்ணயம் நடைபெற்றிருக்கலாம் என்று தாம் சந்தேகப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2011ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்டி நடைப்பெற்று தற்போது 9 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் மகிந்தானந்த இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். இதனால் ஏற்படப் போகும் சர்ச்சைகளையும், எதிர்ப்புகளையும் பற்றி அவர் அறியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. இவ்வாறான கருத்தினை முன்வைக்கும் போது அரசியல் ரீதியில் தனது கட்சிக்கும் தனக்கும் ஏற்படப் போகும் பாதிப்புகள் குறித்தும் அவர் முன்பின் யோசிக்காமல் இருந்திருப்பார் என்று கருதவும் முடியாது.

இதேவேளை ஆட்ட நிர்ணயம் உட்பட கிரிக்கெட் ஊழல் மோசடிகள் தொடர்பில் உலகளாவிய ரீதியில் இலங்கை முதல் இடத்தினை வகிப்பதாக ஐ.சி.சி அண்மையில் அறிவித்திருந்தது. அவர்கள் இலங்கையில் மேற்கொண்ட விசாரணைகளின்படி இதுவரை தக்க சான்றுகளுடன் எந்தவிதமான குற்றச்சாட்டுக்களையும் நிரூபணம் செய்ய முடியவில்லை. ஆனால் இலங்கை வீரர்கள் பலர் மீது விளையாட்டு தடை விதிக்கப்பட்டாலும் அவை அனைத்தும் விசாரணைக்கு ஒத்துழைக்காமை என்ற காரணத்திற்காக விதிக்கப்பட்டதே ஒழிய குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டடையினால் அல்ல. உதாரணத்திற்கு சில சம்பவங்களைக் குறிப்பிட முடியும்.

கிரிக்கெட் மைதானத்தினை ஆட்ட நிர்ணயக்காரர்களின் தேவைக்கு ஏற்ப உருவாக்கினார் என்ற குற்ற்ச்சாட்டுக்குள்ளான ஜயந்த வர்ணவீரவுக்கு மூன்றாண்டுகள் ஆட்ட தடை விதிக்கப்பட்டமை குற்றம் நிரூபிக்கப்பட்டமையினால் அன்றி அதற்கான விசாரணைகளில் அவர் கலந்துகொள்ளாமையினால் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

சனத் ஜயசூரிய தெரிவுக் குழு தலைவராக செயற்படும் போது அணி பற்றிய தகவல்களை வெளி நபர்களுடன் பகிர்ந்துகொண்டார் என்று குற்றம் சுமத்தப்பட்ட போதிலும் அவர் தனது தொலைபேசியை விசாரணைகளுக்கு ஒப்படைக்காமையின் காரணமாக இரண்டு ஆண்டுகள் தடைக்குள்ளானார்.

ஜீவந்த குலதுங்க மற்றும் ஆட்ட நிர்ணய தரகர் ஒருவருக்கு இடையிலான தொடர்பு தொடர்பாக அல் ஜசீரா தொலைக்காட்சி வெளிப்படுத்தியிருந்த நிலையில் அவருக்கு ஆட்ட தடை விதிக்கப்பட்ட போதிலும் மேலதிக தகவல்களைப் பெற முடியாமையினால் அந்த குற்றச்சாட்டுக்களும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை.

டுபாயில் நடைபெற்ற வு 10 போட்டித் தொடரின் போது நிகழ்ந்த சம்பவம் தொடர்பில் அவிஷ்;க்க குணவர்தன, நுவன் சொய்சா மற்றும் தில்ஹார லொக்குஹெட்டி ஆகியோருக்கு போட்டித் தடை விதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் ஐ.சி.சிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்திருந்தனர்.

2011ம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கட் இறுதிப் போட்டியில் நடந்தது என்ன?

2011ம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கட் இறுதிப் போட்டியில் (பகல் இரவுப் போட்டி) இலங்கையும் இந்தியாவும் மோதிக் கொண்டது. இந்த போட்டியில் சில சந்தேகத்திற்குரிய விடயங்களை தான் அவதானித்ததாக மகிந்தானந்த தெரிவித்திருந்தார். அன்று விளையாட்டுத் துறை அமைச்சராக அவரும், பிரதமர் ராஜபக்ஷவும், திலங்க சுமத்திபால, நாமல் ராஜபக்ஷ ஆகியோhரும் விசேட விமானம் ஒன்றின் மூலம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியைக் கண்டு களிக்க விசேட விமானம் மூலம் சென்றிருந்தனர். இந்த போட்டி ஏப்ரல் 2ம் திகதி நடைபெற்றது. இந்த போட்டிக்கு முன்னர் நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் இலங்கை அணி வீரர்கள் சிலர் காயமடைந்தமையினால் இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற முடியாத நிலையில் இருந்தனர்.

அன்ஜலோ மெத்தியூஸின் காயம் மோசமாகியதனால் அவருக்கு பதிலாக முத்தையா முரளிதரன் பெயரிடப்பட்டார். எனினும் அவரும் நிச்சயமற்ற உடல் நிலையிலேயே இருந்துள்ளார். இதனால் இரண்டு வீரர்களை அதாவது சுழல் பந்து வீச்சாளர் சுராஜ் ரன்திவவும் வேகப் பந்து வீச்சாளரான சமிந்த வாஸ{ம் தெரிவுக்குழுவினால் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அணியில் செய்யப்படும் இந்த மாற்றங்களை விளையாட்டுத் துறை அமைச்சருக்கு அறிவிப்பது அதிகாரிகளின் கடமையாகும். ஆனால் தமக்கு இது பற்றி எந்தவிதமான அறிவுறுத்தல்களும் வழங்கப்படவில்லை என்று மகிந்தானந்த தெரிவித்துள்ளார். அணியில் செய்யப்படும் மாற்றங்கள் தொடர்பில் செயலாளரினூடாக ஐ.சி.சிக்கு அறிவிக்கப்பட முடியும் எனில் ஏன் விளையாட்டுத்துறைக்கு பொறுப்பாக உள்ள அமைச்சருக்கு அறிவிக்கவில்லை என்ற கேள்வி இங்கு எழுகின்றது.

பொதுவாக இறுதிப் போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்கள் அரை இறுதிப் போட்டிகளில் பங்குபற்றியவர்களாக இருப்பார்கள். இறுதிப் போட்டியில் விளையாடும் அணியில் ஓரிரு மாற்றங்கள் செய்யப்படுவது பொதுவான விடயமாக இருந்த போதிலும் நான்கு மாற்றங்கள் அணியில் செய்யப்பட்டிருந்தமை அனைவரினதும் கவனத்தினைப் பெற்றிருந்தது. இது குறித்தும் மகிந்தானந்த தனது சந்தேகத்தினை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக சுராஜ் ரன்திவ எந்தவிதமான ஆயத்தங்களும் இன்றி முரளிக்கு பதிலாக சேர்க்கப்பட்டிருந்தமையும் சர்;ச்சைக்குரிய விடயமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (இவர் முழுப் போட்டித் தொடரிலும் விளையாடதவர்).

சாமர சில்வா ஆரம்பப் போட்டிகளில் திறமையை வெளிக்காட்டாத போதிலும் அவருக்கு பதிலாக சாமர கப்புகெதர சேர்க்கப்பட்டமையும் சந்தேகத்திற்குரியது என்று கூறப்படுகின்றது. அனுபவம் மிக்க சமிந்த வாஸை அழைத்து வந்து விட்டு அன்ஜலோ மெத்தியூஸை விளையாட விட்டமையும், திசேர பெரேரா அணியில் இருக்கும் போது நுவன் குலசேகர பயன்படுத்தப்பட்டமையும் பிரச்சினைக்குரிய விடயங்களாகும். அஜந்த மெண்டிஸ் ஆரம்பப் போட்டிகளில் நன்கு பந்து வீசியதுடன் இந்திய துடுப்பாட்ட வீரர்கள் அவரின் பந்து வீச்சின் முன்பு தடுமாறுவதனையும் பொருட்படுத்தாமல் அவரை அணியிலிருந்து விலக்கியமையும் இங்கு சுட்டிக் காட்டப்படுகின்றது.

அத்துடன் நாணய சுழற்சியில் முதலில் பந்து வீச எடுக்கப்பட்ட முடிவும் இங்கு தீர்க்கமான விடயமாகக் குறிப்பிடப்படுகின்றது. இந்த போட்டியில் அணித் தலைவர்கள் இருவரும் இரண்டு முறை நாணயத்தினை சுழற்றியிருந்தனர். முதல் நாணய சுழற்சியின் பினனர்; சங்கங்கார முன்வைத்த கோரிக்கை தோனிக்கு சரியாக விளங்காமையினால் மீண்டும் நாணய சுழற்சி இடம்பெற்றது. அதில் வெற்றிப் பெற்ற சங்கக்கார முதலில் துடுப்பாடும் கோரிக்கையை விடுத்திருந்தார். எனினும் இந்த வான்கடே மைதானம் குறிப்பாக பகலிரவுப் போட்டிகளின் போது இரண்டாவதாக துடுப்பெடுத்தாடுபவர்களுக்கே சாதகமானது என்றும், பனியின் காரணமாக பந்து சுழலும் தன்மையில் பாதிப்பு ஏற்படும் என்றும் குறிப்பிடப்பட்ட நிலையிலேயே சங்கக்கார இந்த தீர்;மானத்தினை எடுத்திருக்கின்றார். இந்த தீர்;மானம் ஒரு கூட்டு தீர்மானம் என்றும் பின்னர் அறிய வந்தது. இந்த போட்டியில் 6வது துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய சாமர கப்புகெதர 5 பந்துகளை எதிர்கொண்டு 1 ஓட்டத்தினையே பெற்றிருந்தார். இந்த போட்டியில் இலங்கை அணி 6 விக்கட்டுக்களுக்கு 247 ஓட்டத்தினைப் பெற்றிருந்தது. இறுதியில் தோனியின் அபாரமான துடுப்பாட்டம் காரணமாக இந்திய அணி 6 விக்கட்டுக்களால் வெற்றியீட்டிருந்தது.

இப்போட்டிக்கு பின்னர் இடம்பெற்ற ஐ.பி.எல் போட்டிகளில் இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர்கள் சிலருக்கு பெருமளவு தொகை கொடுப்பனவாக வழங்கப்பட்டிருந்தது. மேலும் இந்த போட்டியின் பின்பு நாடு திரும்பிய குமார் சங்கக்காரவும், அரவிந்த டி சில்வாவும் தமது பதவிகளை இராஜினாமா செய்திருந்தனர். கடந்த 9 ஆண்டுகளில் இந்த போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக ஐ.சி.சிக்கு எந்தவிதமான முறைப்பாடும் அளிக்கப்படவில்லை. அது பற்றி ஐ.சி.சியும் ஆராய்ந்து பார்க்கவும் இல்லை.

மகிந்தானந்தவின் நியாயங்கள்

“ஐ.சி.சி ஊழல் மோசடி தடுப்பு பிரிவின் அதிகாரியான அலெக்ஸ் மார்ஷல் முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோவுக்கு கடிதம் ஒன்றை அண்மையில் அனுப்பி வைத்திருந்தார். உலகில் டெஸ்ட் போட்டிகள் விளையாடும் 12 நாடுகளில் ஆட்ட நிர்ணயம் தொடர்பில் அதிகளவு முறைப்பாடுகள் இலங்கைக்கு எதிராக உள்ளதாகவும், இது பற்றி விசாரணைகள் நடத்தப்படுவதாகவும் அவர் அக்கடிதத்தில் தெரிவித்திருந்தார். நானும் அந்த அமைச்சுக்கு பொறுப்பாக இருந்தமையினால் எனக்கும் அந்த கடிதம் கிடைத்திருந்தது. விளையாட்டை நேசிக்கும் ஒருவன் என்ற ரீதியில் எனக்கு இது பெரும் கவலையை ஏற்படுத்தியது. நானும் 2011ல் போட்டியைப் பார்க்க சென்றிருந்தேன். போட்டியை பார்த்துக் கொண்டிருக்கும் போதே எனக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டது. நாடு திரும்பியதும் என்னை சந்தித்த பல்வேறு தரப்பினர் - கிரிக்கட் விளையாட்டு வீரர்கள் அனைவரும் - ஆட்ட நிர்ணயம் நடைபெற்றதா என்று விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். நான் அதே ஆண்டு ஒக்டோபர் மாதம் 30ம் திகதி ஐ.சி.சிக்கு இது தொடர்பில் முறைப்பாடு ஒன்றை செய்திருந்தேன். எம்மிடம் அதி சிறந்த விளையாட்டு வீரர்கள் இருந்தாலும் ஆட்ட நிர்ணயம் பெற்றால் போட்டிகளில் வெற்றிப் பெறவே முடியாது. எனவே யாராவது இது பற்றி பேசியே ஆக வேண்டும். இது குறித்து 2014 மற்றும் 2017 காலப்பகுதிகளிலும் நான் பேசியிருந்தேன். இதனை அரசியலாக்காமல் ஆதரவு தாருங்கள்” என்று மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். அதேவேளை தான் விளையாட்டு வீரர்களை குற்றம் சுமத்தவில்லை என்றும், அதனால் அவர்கள் எவரும் இந்த விடயம் தொடர்பில் கருத்துக்களை எதனையும் தெரிவிக்க தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மகிந்தானந்தவின் தன்னிலை விளக்கம் இவ்வாறு இருந்தாலும், இவ்வாறான ஓர் சர்ச்சைக்குரிய விடயத்தினை சுமார் 9 ஆண்டுகள் கழித்து முன்வைத்தமை குறித்து தான் அவருக்கு எதிராக கண்டனம் தெரிவிக்கப்படுகின்றது. 2010ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு விளையாட்டுத்துறைக்கு பொறுப்பு வகித்த அமைச்சராக அவர் இவ்விடயம் குறித்து ஏன் அப்பொழுது கவனம் எடுக்கவில்லை? அதற்கான முழு அதிகாரமும் அவருக்கு அன்று இருந்த நிலையில் இன்று அவர் இவ்வாறான ஓர் சர்ச்சையைக் கிளப்பியிருப்பது வெறுமனே அரசியல் இலாபத்திற்காகவும், இந்த தேர்தல் காலத்தில் தன்னைப் பிரபல்யப்படுத்திக் கொள்ளவும் தானா என்ற ஐயம் எழாமல் இல்லை. மேலும் அவர் இவ்வாறான ஓர் தவறு நடந்துள்ளது என்பதை அறிந்திருந்தும் தனது அமைச்சுக் காலத்தில் அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்காமல் இருந்ததும் ஓர் மிகப் பெரிய தவறாகும். அதற்கான முழுப் பொறுப்பையும் அவரே ஏற்க வேண்டும் என்று விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

எவ்வாறாயினும் தனது குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை அவர் சமர்ப்பித்துள்ள நிலையில் அதன் உண்மை நிலவரத்தினை சரியான முறையில் நீதியான விசாரணைகளை நடத்தி நாட்டுக்கு அறிவிக்க வேண்டியது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கடமையாகும். ஏனெனில் இந்த குற்றச்சாட்டு என்பது உள்நாட்டு ரீதியில் மட்டுமன்றி சர்வதேச ரீதியிலும் கவனத்திற்குரிய விடயமாக உள்ளதுடன் இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டுத் துறைக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தும் விடயமாகவும் அமைந்துள்ளது.

அருவி இணையத்துக்காக அகநிலா


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE