Friday 19th of April 2024 05:53:35 PM GMT

LANGUAGE - TAMIL
மாவை சேனாதிராஜா
போரின் இறுதிக் கட்டத்தில் சரணடைவது தொடா்பில் பசிலுடன் நடந்த பேச்சுக்கு நாங்கள் சாட்சி என்கிறாா் மாவை!

போரின் இறுதிக் கட்டத்தில் சரணடைவது தொடா்பில் பசிலுடன் நடந்த பேச்சுக்கு நாங்கள் சாட்சி என்கிறாா் மாவை!


காணாமல் ஆக்கப்பட்டோாா், சரணடைந்தோர் தொடர்பில் அரசு பொறுப்புக் கூறுயே ஆகவேண்டும் என தமிழரசுக் கட்சித் தலைவா் மாவை சேனாதிராஜா வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பில் அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இல்லை என்றால் இறந்திருக்கக் கூடும் என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா ஞாயிறு 28/06 பத்திரிகைகளில் செய்தி வெளியிட்டுள்ளார். இவ்வறிவிப்பானது எதேச்சையானதும் பொறுப்பற்றதுமாகும்.

இப்பொழுது முக்கியமான கேள்வி என்னவெனில் போர்க்காலத்திலும் போரின் இறுதியிலும் சரணடைந்தவர்கள் பற்றியதேயாகும். 2009ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் திகதிக் காலத்தில் அரசுத் தரப்புக்கும் விடுதலைப்புலிகள் தரப்பின் சார்பிலும் விடுதலைப் புலிகள் சரணடைய விரும்பியவர்களைக் கௌரவமாகவும் பாதுகாப்பாகவும் நடத்துவது பற்றிப் பேச்சுக்கள் இடம்பெற்றன. சம்பந்தப்பட்டவர்கள் பெயர்களையெல்லாம் குறிப்பிடவில்லை.

ஆனாலும் மன்னார் ஆயர் யோசப் இராயப்பு அடிகளார், விடுதலைப்புலிகள் தரப்பில் திரு.நடேசன், அப்போதிருந்த இந்தியத் தூதர், முன்னாள் உள்நாட்டமைச்சராயிருந்த சிதம்பரம் வரை போர் இறுதியில் சரணடைபவர்கள் தொடர்பில் திரு. பசில் இராஜபக்சவுடன் பேச்சுக்கள் இடம்பெற்றன என்பதையும் குறிப்பிட வேண்டும்.

அப்பேச்சுக்களின் போது ஏற்பட்ட இணக்கம் என்னவெனில் விடுதலைப்புலிகள் தரப்பில் சரணடைய விரும்புபவர்கள் வெள்ளைக் கொடிகளுடன் வந்தால் அவர்கள் பாதுகாப்புடன் நடத்தப்படுவர் என அரசு தரப்பில் உத்தரவாதமளிக்கப் பட்டிருந்தது. இதனை நாம் நன்கு அறிவோம். சாட்சியாக இருக்கின்றோம்.

ஆனால் முன்னாள் தமிழீழ விடுதலைப்புலிகள் உட்பட பலர் வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்தனர். விடுதலைப் புலிகள் போராளிகளின் உறவினர்களால் இராணுவத்தினரிடம் கையளிக்கப் பட்டவர்களும் பலர் இருந்தனர். இதற்கான சாட்சியங்களும் இருந்தன. அவ்வாறு சரணடைந்தவர்கள் தற்போது இல்லை. அவர்களைப் பற்றிய தேடுதல்களும் கேள்விகளுமே தற்பொழுது முக்கியமான கேள்வியாகும். இந்த முக்கிய விடயம் பற்றி யாரும் பேசுவதில்லை. இராணுவத் தளபதியும் பொறுப்புடன் பதிலளிக்கவில்லை.

சரணடைந்தவர்கள் இரு வகையினர்

(அ) அரசுக்கும் - விடுதலைப் புலிகள் தரப்பு அனுசரனையாளர் களுக்குமிடையில் ஏற்பட்ட இணக்கத்துடன் வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்தவர்கள்.

(ஆ) அவ்வாறில்லாமல் சரணடைந்தவர்கள். இதற்கு மேலாக போர் நடைபெற்ற இறுதிக்காலத்தில் அரச தரப்பினால், இராணுவத்தினால் பாதுகாப்பான குறிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு வருமாறு அழைக்கப்பட்ட பொழுது அவ்விடங்களில் குவிந்த பொதுமக்கள் மீது போரின் போது போரில் பாவிக்கத் தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் மூலம் வீசப்பட்ட வெடிகுண்டுகள் வெடித்ததனால் ஏற்பட்ட உயிரிழப்புகளும் அழிவுகளும் ஏற்பட்டன. அப்பொழுதும் பலரைக் காணவில்லை.

இந்திய பொதுத் தேர்தல் இறுதிக்காலத்தில் திரு.சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்புத் தலைவர்கள் புதுடெல்லி சென்று இந்திய அரசிடம் இலங்கையில் நடைபெறும் போரை நிறுத்துவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டன. நேரு மண்டபத்தில் அறுபதுக்கு மேற்பட்ட சர்வதேசப் பத்திரிகையாளர் மத்தியில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தோம். மேற்குறித்த விடயங்களைப் பகிரங்கமாகவே அறிவித்திருந்தோம். இலங்கைப் பாராளுமன்றத்திலும் அக்காலத்திலும், பல தடவைகள் பேசியிருக்கிறோம்.

2011 காலப்பகுதியில் பிரதமர் மஹிந்த இராஜபக்ஷ தரப்புடன் இனப்பிரச்சனைத் தீர்வு தொடர்பில் பேச்சுக்கள் இடம்பெற்ற பொழுது காணாமல் ஆக்கப்பட்டவர்கள், சரணடைந்தவர்கள் பற்றிய பேச்சுக்களின் போது திரு.பஸில் இராஜபக்ஷ வவுனியா இராணுவ முகாமில் இவை தொடர்பில் அறியமுடியும். ஆராயந்து பார்க்குமாறு ஒரு நாள் திரு.எம்.ஏ.சுமந்திரனையும், திரு.சுரேஸ் பிரேமச்சந்திரனையும் அனுப்பியிருந்தார். அவர்கள் குறித்த வவுனியா இராணுவ முகாமுக்குச் சென்றபோது அம்முகாமுக்கு அவர்கள் அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டனர்.

அடுத்ததாக 2019 மார்ச் மாதத்தில் மனித உரிமையகத்தில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பச்லெட் சமர்ப்பித்த அறிக்கையில் (அ) "இலங்கையில் சித்திரவதை, காணாமல் ஆக்கப்படல், போர்க்குற்றங்கள், மனிததத்துவத்துக்கு எதிரான குற்ற மீறல்களுக்குப் பொறுப்பானவர்களென குற்றஞ்சாட்டப்பட்டோர் மீது விசாரனைகள் மேற்கொள்ளல், பதிலளிக்கும் கடப்பாடு, மனித உரிமை மீறல்களுக்குத் தீர்வு காணுதல் முதலான விடயங்களை வற்புறுத்தி அறிவித்திருந்தார். இவை மனித உரிமைப் பேரவைத் தீர்மானங்களில் 30/1ன் உள்ளவையாகும். இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இவற்றுக்குப் பதில் சொல்லக் கடப்பாடு உடையவர்.

அத்தோடு ஜெனிவா சாசனத்தின் படி (ஆ) போர்க்குற்றங்கள், மனிதத்துவத்திற்கு எதிரான குற்றம், இன அழிப்பு, பலவந்தமாகக் காணாமல் போதல் முதலான சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறல் தொடர்பில் விசாரனை செய்தல் என்பவற்றையும் வற்புறுத்தப்பட்டுள்ளது. இலங்கை அரசு இதனை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அது மட்டுமல்ல காணாமல் ஆக்கப்பட்டவர்கள், சரணடைந்தவர்கள் இறந்திருக்கலாம் என்பது அரசு பதில் சொல்ல வேண்டிய கடப்பாட்டை குற்றம் சுமத்தப்பட்ட இராணுவத் தளபதி சொல்வதை ஏற்க முடியாது. எங்கே, எப்படி, என்ன விதத்தில் எத்தனை பேர் யாரால் எக்காலப்பகுதியில் இறந்தார்கள் என்பதற்கு அரசு பொறுப்புக் கூற வேண்டும் என வற்புறுத்துகிறோம். ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் வற்புறுத்தியவாறு "பாதுகாப்புக் காரணங்களுக்காக இராணுவம் பயன்படுத்துவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட விஷேட விடயங்களைத் தீர்மானிக்க சுயாதீனமான பொறிமுறையொன்றை ஏற்படுத்த வேண்டியது அவசியம். இவ்விடயங்களில் பதிலளிக்க வேண்டியது அரசும், சுயாதீன பொறிமுறை மன்றுமே தான். இராணுவத் தளபதியல்ல.

2015ஆம் ஆண்டு ஐ.நா.சபையில் இலங்கை உட்பட்ட நாடுகளினால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட 30/1, 34/1, 40/1 தீர்மானங்கள் முக்கியமானவை.

2018ஆம் ஆண்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவும், பின் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி கோத்தபாயவும் அரசும் மேற்படி தீர்மானங்களிலிருந்து வெளியேறிவிட்டாலும் சர்வதேசத்தினால், ஐ.நா.மன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களிலிருந்து இலங்கை விலகியிருக்க முடியாது. அத் தீர்மானங்களை நிறைவேற்ற ஐ.நா. மனித உரிமைப் பேரவை தொடர்ந்தும் முயற்சிகளையும் அழுத்தங்களையும் பிரயோகித்து வருகிறது.

இருப்பினும் இலங்கையில் போர்க்காலத்திலும், போரின் இறுதியிலும் இராணுவத்தினரிடம் சரணடைந்தோர், கைது செய்யப்பட்டோர் விடயத்தில் இறந்துவிட்டார்கள் என்ற பதிலுக்குப் பதிலாக இலங்கை அரசு பொறுப்புக்கூறும் கடப்பாட்டை ஏற்று பொறுப்புள்ள பதிலைக் கூறுமாறு வற்புறுத்துகிறோம்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE